Sunday 25 December 2011

ராஜபாட்டை-ஒன்ஸ்மோர்!!!

தெய்வத்திருமகள் என்னும் விக்ரமின் அசத்தலுக்குப் பின், அழகர்சாமியின் குதிரை என்னும் அழகான சுசீந்திரனின் படைப்பிற்குப் பின் இருவரும் மாறுதலான பாதையில் பயணிக்க முயற்சித்து பஞ்சர் ஆன பாதை தான் ராஜபாட்டை.



இது கமர்ஷியல் மாஸ் மசாலா படம் என அழைக்கப்படுவதால் அந்த வகையறாவைக் கொண்டே விமர்சிப்பதுதான் பொருத்தமாக இருக்கும். திரைப்படத் துறையில் ஜிம் பாயாக (வில்லனோட அல்லக்கைக்கு அல்லக்கை) வேலை பார்ப்பவர் தான் நம்ம கதாநாயகன் அனல் முருகன்.சினிமாவில் மாபெரும் வில்லனாக வர வேண்டும் என்பது அவர் இலட்சியம். நீண்ட நாட்களாக தான் தங்கும் மேன்ஷனுக்கு எதிரில் மகளிர் விடுதியில் தங்கி இருக்கும் தர்ஷினியை (தீக்‌ஷா சேத்) தூரத்தில் இருந்தே டாவடிக்கிறார்.



இதற்கிடையில் தஷினாமூர்த்தி என்னும் நகைக்கடை உரிமையாளர் தன் மனைவியின் நினைவாக நடத்தி வரும் அனாதை இல்லத்தை அவருடைய மகன் அரசியல் ஆசை காரணமாக நில அபகரிப்பு துறை மந்திரியாகிய அக்கா என்னும் ரங்கநாயகியாக்கு தாரைவார்க்க முயல்கிறார்.அதற்கு தாத்தா மறுத்து வீட்டை விட்டு வெளியேற அனல் முருகன் அவருக்கு அடைக்கலம் தருகிறார்.தாத்தாவை ஏமாற்றி சொத்தை பறித்தார்களா? “நான் முடிவு பண்ணிட்டா அக்கா இல்ல அந்த ஆண்டவனே வந்தாலும் விட மாட்டேன்” என சீறிக் கிளம்பும் அனல் முருகன் நில அபகரிப்பால் தவிக்கும் தமிழகத்தை காப்பாற்றினாரா? என்பது தான் கதை.ஸ்ஸ்ஸ்... அப்பாடா கதைய சொல்லி முடிச்சுட்டேன்...


 கமர்ஷியல் சினிமா எடுக்க வேண்டும் என்கிற ஆசை எல்லா இயக்குனர்களுக்கும் நிச்சயம் இருக்கும்.ரசிகர்களிடம் சீனுக்கு சீன் கை தட்டலும், விசிலும் வாங்கி சூப்பர் தலைவா என்று பாராட்டப்பட எந்த இயக்குனருக்கு தான் ஆசை இருக்காது.அதை இந்த திரைப்படத்தில் நிறைவேற்ற முயற்சித்திருக்கிறார் சுசீ. ஆசை எல்லாம் சரி தான் நம்ம ஊர்ல பெருசா ஒரு படம் எடுக்கனும்னா அது சம்பந்தமா எல்லா இங்கிலீஷ் படத்தையும் பாத்துட்டு அதிலிருந்து ரெஃபரன்ஸ் எடுப்பாங்க.அதாவது இந்த சீன் இப்படி இருந்தா ஒர்க் அவுட் ஆகும்னு மனசுல நிர்மானிச்சுடுவாங்க. நம்ம சுசீ இந்த ரெஃபரன்ஸ எல்லாம் தமிழ் திரையுலக மசாலா படங்கள்ல இருந்தே எடுத்து படம் எடுத்துருக்கிறது தான் பிரச்சனை. ஹீரோ கிட்ட முதல் காட்சிலயே அடி வாங்கிட்டு ”அண்ணா நீங்க இருப்பீங்கன்னு தெரிஞ்சா இந்த ஏரியா பக்கமே வந்திருக்க மாட்டேனுங்கன்னா” என்று பம்மி கிளைமாக்ஸ் வரை அதை அப்படியே மெயிண்டெயின் பண்ணி அப்பீட்டாகிற அடியாள் இதிலும் உண்டு. வில்லன் ஆவேசமாக கிளம்பும் போது “உனக்கு வெக்க போறாண்டி ஆப்பு” ரீதியிலான வசனங்கள் சாட்சாத் மேற்படியார் வாயிலிருந்து உதிர்கிறது.வழக்கமாக காதலுக்கு ஐடியா குடுக்கும் நண்பன்,சித்தப்பா,மாமா இடத்தில் இந்த முறை தாத்தா இருப்பது தனிச்சிறப்பு.வில்லனை மிரட்ட வில்லனின் குடும்பத்த கடத்தி அவனுக்கே ஆப்பு வைக்கும் ஷாக் ட்ரீட்மெண்ட் முறை தமிழக கமர்ஷியல் படங்களின் குலவழக்கம் என்பதால் அதையும் மறக்காமல் சேத்திருக்காரு.





 பீச் ல ஒரு பாட்டு. ஃபாரின்ல ஹீரோயினுக்கு சிக்குன்னு சேலை,ஹீரோக்கு டீக்கா சூட்டு போட்டுட்டு ஃபாரின் மரம்,ஃபாரின் தூண் எல்லாத்தையும் பிராண்டி,பிராண்டி ஒரு பாட்டு. குத்து பாட்டு வெக்காட்டி சாமி கண்ண குத்திருமேன்னு எங்க வெக்கறதுன்னு குழம்பி போயி தியேட்டரிலிருந்து எல்லாரும் எந்திரிச்சு போனப்புறம் ஒரு பாட்டு (இதுவும் ஃபாரின்ல நடுரோட்ல தான்).சாமி சத்தியமா எல்லா பாட்டும் சிட்வேஷனுக்கு சம்பந்தமே இல்லாம தான் வருது.தப்பு பண்ணும் மந்திரி (அக்கா) மேல ஆதாரம் இருந்தா நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்னு சொல்ற நேர்மையான முதலமைச்சர்.மந்திரி மேல வழக்கு நடந்ததும் மக்கள் எல்லாம் “அக்காவ தூக்கிட்டாங்க போல”, “இனி அக்கா அவ்ளோதான்’ என பத்து,பதினைஞ்சு லொக்கேஷன்ல பேசுறதும் உண்டு(ஆமா இஸ்திரி கடைக்காரர், பொட்டி கடைக்காரர் எல்லாம் வர்றாங்க).கிளைமேகஸ்ல வில்லிய கொலை பண்றக்கு கத்திய தூக்கிட்டு ஓடி வர்ற பரிதாப பொதுஜனம் உண்டு.இவரோட பையன முதல் பாதில வில்லனுங்க கொன்னுடறாங்க.ஏன்னா அவர் உண்மைய நேர்மையா வெளில சொன்னாரு.இதே பொன்னா இருந்தா கற்பழிச்சு கொன்னிருப்பாங்க.(ஒரு செண்டிமெண்டல் வேல்யூவ இயக்குனர் தவறவிட்டுட்டார்).இப்படி நாம 10 வருசமா என்னென்ன எழவ பாத்து வளர்ந்தோமோ அது எல்லாத்தையும் இதுலையும் கொட்டிருக்காங்க. நல்ல வேளை கிளைமேக்ஸ்ல மக்கள் எல்லாரும் மைக்க கடிச்சு திங்கப் போற மாதிரி உணர்ச்சிவசப்பட்டு பேசற டி.வி பேட்டி இதுல இல்ல சாமி. புதுசா எதுவுமே இல்லையானு நினைக்காதீங்க மேல சொன்ன விசயங்களுக்கு இடைப்பட்ட கேப்புல சில புதிய விசயங்களும் இருக்கு. கரண்ட கட் பண்ணி கடத்தப்பட்ட ஹீரோயின கண்டுபிடிக்கறது, சி.பி.ஐ என்கொயரி உண்மைதானோனு நினைக்கும் போது அது சினிமா செட்னு காமிக்கறது இப்படி சில இடங்கள்ல சுவாரசியப்படுத்தறாங்க.ஆனா இதெல்லாம் பத்தலயே மக்களே.இந்த சுவாரசியத்த படத்தோட கதைய சிந்திக்கறதுல காமிச்சிருந்தா நல்லாயிருந்திருக்கும்.



விக்ரம் குடுத்த பாத்திரத்த நியாயப்படுத்தியிருக்கார். அடிதடி தூள். மூஞ்சில சுருக்கம் நல்லா தெரியும் போது இன்னும் நானும் லவ் பன்றேன் நானும் லவ் பன்றேன்னு சுத்தறாரு.சி.பி.ஐ ஆபீசரா விசாரனை பண்ணும் போது ஃபேன்ஸி ட்ரெஸ் காம்பிடீஷன் நடத்தறாரு.சிங் வேஷம் நச். ஆனா காமெடி பண்றக்கு அவர் பண்ற முயற்சிகள் படு காமெடி ஆயிடுது. தீக்‌ஷா சேத் பொண்ணுக்கு டயலாக்க எல்லாம் கட் பண்ணிருந்தா கூட ஒண்ணும் வித்தியாசம் இருந்திருக்காது.விஸ்வநாதன் தாத்தா தான் முதல் பாதிக்கு எஞ்சின் ஆயில்.டீக்கா ட்ரெஸ் பண்ணி தமிழ்நாட்டையே எழுதி வாங்குற சனா (அக்கா) அவங்களுக்காக வாதாடற வக்கீல் உட்பட எல்லாரையும் முறைச்சுகிட்டே இருக்காங்க.கஜினி வில்லன் பிரதீப் ராவத்கு 2 ஃபைட்ட தவிர பெருசா ஒண்ணும் இல்லாதனால அவரே தற்கொலை பண்ணிக்கறாரு.மைனாவ கலகலக்க வெச்ச தம்பி ராமையா வர்றாரு.

இயக்குனர் கிட்ட என்ன கேட்கனும்னா நம்ம ஆளுங்க எல்லாம் யதார்த்த படங்கள்ல அடுத்தடுத்த நிலைக்கு போறாங்க.காட்சி அமைப்பு,கதை சொல்லும் விதம் எல்லாத்துலயும் பட்டைய கிளப்புறாங்க சுசீந்திரனும் அப்படி பட்டைய கிளப்பினவர் தான்.ஆனா கமர்ஷியல் படம் எடுக்கும் போது மட்டும் ஏன்யா இந்த கோட்ட தாண்டி வர மாட்டேன்னு அடம் புடிக்கறீங்க? இதுலயும் வேற தளத்துக்கு போங்களேன்யா.

தலைப்புக்கும் விமர்சனத்துக்கும் சம்பந்தம் இல்லையேனு யோசிக்க வேணாம்.புளிச்சு போன மாவ தான் ஒன்ஸ்மோர் அரைச்சிருக்காங்க அப்படிங்கறத தான் பொதுக்குழுவில பேசி இப்பிடி தலைப்பா வெச்சோம்.

No comments:

Post a Comment