Wednesday 8 February 2012

அடுத்த சுற்று தமிழனுக்கா?



காங்கிரசுக்கு
மன்மோகன் ‘சிங்’
பி.ஜே.பி க்கு
’அப்துல்’ கலாம்
அவரவர் செய்த பாவத்துக்கு
இவர்கள் முகமூடிகளெனில்
அடுத்த சுற்று தமிழனுக்கா?

Saturday 28 January 2012

நானும் கடவுள்





பிள்ளைகளின் மரணம்
நடுரோட்டில் இரத்ததால்
குதறப்படும் குடும்பங்கள்
உலகம் கண்டுகளித்த
இனப்படுகொலைகள்
கொடூரர்களின் ஆட்சி
முன்ஜென்ம பாவங்கள்
ஏதுமறியா அகால மரணங்கள்
போராளிகளின் வீழ்ச்சி
விவசாயிகளின் கண்ணீர்
ஏழைகளின் வயிற்றடுப்பு
பணம் பணமென
பேயாய் அலையும் பதர்கள்
தீயின் நாக்குக்கு
தவறாது பலியாகும் குடிசைகள்(மட்டும்)
பிஞ்சுகளை சிதறடிக்கும்
குண்டுகள்
அப்பாவிகளை நோக்கியே
நீளும் ஆயுதங்கள்
காமத்திற்கு இரையாகும்
பால்முகங்கள்
கழுத்தறுக்கப்பட்ட கனவுகள்
இவற்றைக் கண்டு
நாணாதவன் கடவுளெனில்
நானும் கடவுள்...

Wednesday 25 January 2012

காமம் பிழையா?




காமம் என்றால்
காதை பொத்தும் கனவான்களே...
சற்று பொத்திய காதை திறவுங்கள்
உயிரின் பிறப்பு
இயற்கையின் புதிப்பிப்பு
சேர்க்கையின்றி வாழுமோ உலகு?
ஆதி முதல்
ஆணும் பெண்ணும்
உன் சாத்திரங்கள் கண்டா
கூடினர்?
ஒழுக்கமென்று பசப்பி
உணர்வை கொல்ல
நீ யார்?
கற்பு நெறியும்
ஒழுக்க விதியும்
உனக்கான இரையை
உறுதியாய் பற்றிக்கொள்ளத் தானே?
காதலென்னும் வெற்று மொழி
அதற்கு புனிதமென்னும் கோட்டை...
கேடிலும் கேடு...
உணர்வு கொண்டு
கூடுதல் மட்டுமே இயற்கை...
காதல்
ஒழுக்கம்
கற்பை
உன் சாத்திரங்களோடு சேர்த்து
நெருப்பில் வீசு
உணர்வுக்கு தலைவணங்கும்
புதிய சமூகம் மலரட்டும்!!!
இப்படிக்கு
ஆதிமனிதன்.

இப்படி ஒரு கவிதை எனது...
நல்லவேளை
இதுவரை எதிலும் பிரசுரமாகவில்லை
எழுதிவைத்து 4 வருடங்கள் இருக்கும்
எரித்துக் கொண்டிருக்கின்றேன்
ஏனெனில்
நேற்றெனக்கு
திருமணமாகிவிட்டது...
இப்படிக்கு
குடும்பஸ்தன்...

Monday 23 January 2012

வஞ்சம்-பகுதி 8

பகுதி 8 - அன்றோர் காலம்



தட்டுடன் நடந்து சென்றவள் தான் சற்று முன் உப்பரிகையிலிருந்து விழுந்தவள் என தெரிந்ததும் ஐவரும் திடுக்கிட்டனர்.நீரில் மூழ்க இருந்த தங்களை வழிகாட்டி அழைத்து வந்த அவளை பின்தொடர்ந்தனர்.யாரையோ தேடிக் கொண்டு அவள் ஒய்யாரமாக நடந்து சென்றாள்.முகமெங்கும் பருவத்தின் உற்சாகமும்,துள்ளலான புன்னகையும் அவளின் அழகை மென்மேலும் மெருகூட்டியது.இதற்கு முன் தாங்கள் இதே அரண்மனையில் கட்டப்பட்டு கிடந்த பொழுது இவ்வளவு பொலிவுடன் இந்த அரண்மனை இல்லை.ஆங்காங்கே இடுப்பில் வேட்டியும்,தலையில் முண்டாசும் கட்டிய பணியாட்கள் தரை,சுவர்,சிலைகள் என எல்லாவற்றையும் சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.முறுக்கேரிய உடம்பும்,காது வரை படர்ந்த மீசையும்,அகலமான தொடைகள் தெரியும்படி முறுக்கிக் கட்டிய வேட்டியும்,கையில் ஆளுயர வேலும்,இடுப்பில் குறுவாளும் கொண்டு ஆங்காங்கே காவல் வீரர்கள் காவல் புரிந்து கொண்டிருந்தனர்.யாருமே இவர்கள் ஐவரையும் கவனித்ததாகத் தெரியவில்லை.இவர்கள் அங்கு இல்லாதது போலவே அவரவர் வேலையை கவனித்துக் கொண்டிருந்தனர்.ஐவரும் மிகுந்த குழப்பத்துக்குள்ளாயினர்.என்ன நடக்கிறது இங்கே? நாம் முன்பு பார்த்த மாதிரி இந்த இடம் இல்லையே? எப்படி இத்தனை பேர் திடீரென வந்தனர்? நம்மையும் யாரும் கண்டுகொள்ளவில்லையே? எல்லாவற்றிற்கும் நம்மை அழைத்து வந்த பெண்ணை பிடித்தால் தான் விடை தெரியுமென அவளை நெருங்க முயன்றனர். ஊஹும் அவளைத் தொட முடியவில்லை சீரான இடைவெளியில் அவள் பின்னே செல்ல முடிந்ததே தவிர நெருங்க முடியவில்லை.என்ன நடக்கின்றது என கவனிப்பதைத் தவிர வேறு வழியில்லாமல் போனது...

200 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த அந்த காட்சிகளை ஐவரும் பார்வையாளராய் கண்டனர்
”திருநங்கை” துள்ளலாய் சென்று கொண்டிருந்த இளம்பெண் சோமசுந்தரம் தாத்தாவின் குரலுக்கு திரும்பினாள்.திருநங்கை 15 வயதே பூர்த்தியான பட்டாம்பூச்சி.அந்த அரண்மனைக்கே அழகு சேர்க்கும் நங்கை.அவள் இட்ட சொல்லை கட்டளையாய் செய்வது தான் அங்கிருக்கும் வேலையாட்களின் முதல் பணி.திருநங்கைக்கு தாய்,தந்தை இல்லை.சிறு வயதிலேயே காலமாகிவிட்டனர்.தாத்தாவின் அரவணைப்பில் தான் வாழ்ந்து வருகிறாள்.சோமசுந்தர தாத்தா திருநங்கையுடைய தாத்தா ராஜசிவத்தின் நீண்ட கால நண்பர்.இருவருடைய குடும்பமும் 4 தலைமுறைகளாக நெருக்கம்.பெருத்த உடல்,சிவந்த நிறம்,தளர்ந்த நடை கொண்டு வெளுக்காத வேட்டியும்,சட்டையும் போட்டுக் கொண்டு பாசமாய் பேசும் சோமசுந்தர தாத்தாவை திருநங்கைக்கு மிகவும் பிடிக்கும்.தன்னுடைய தாத்தாவிடமாவது அவளுக்கு கொஞ்சம் பயமிருக்கும் ஆனால் சோமசுந்தர தாத்தாவிடம் எந்த பயமுமின்றி சகஜமாய் பழகுவாள்.
“என்ன தாத்தா?” தவளும் புன்னகையுடன் பாந்தமாய் கேட்டாள் திருநங்கை.
“சமையல் பண்ணுறவங்க எல்லாரும் இன்னைக்கு மதியத்துக்கு உனக்கு என்ன செய்யட்டும்னு கேட்டுகிட்டே இருக்காங்களாமே நீ எதுமே சொல்ல மாட்டேங்குறியாம் அவங்க வேலை ஆரம்பிக்கணும்லமா ஏதாவது சொல்லுடா கண்ணு” திருநங்கையின் கன்னம் தடவி கேட்டார் சோமசுந்தர தாத்தா.
தன்னை போன்ற சின்னப் பெண்ணின்  கட்டளைக்காக காத்திருக்கும் வேலையாட்களை நினைத்து சிரிப்பு மேலிட்டாலும் அதை காட்டிக் கொள்ளாமல்”எத வேணாலும் செய்ய சொல்லுங்க தாத்தா” என சொல்லி விட்டு சிட்டாக விரைந்தாள்.
”எங்கடா கண்ணு போற?”
”தாத்தாவ பாக்க போறேன்” திரும்பாமல் பதில் சொன்னாள்.
 ”இரும்மா நானும் வரேன்” இருவரும் சேர்ந்து ராஜசிவ பூபதியை காண சென்றனர்.
அவளுடைய தாத்தா ராஜசிவ பூபதி தான் இந்த அரண்மனைக்கே அதிபதி.அவருக்கு சொந்தமாக இந்த மலையை சுற்றியுள்ள மலை கிராமங்கள் எல்லாம் வெள்ளைக்காரர்களின் அரசாங்கத்தால் தரப்பட்டிருந்தது.அதன் மூலம் வரும் வருமானத்தில் அவர் ஒரு குறுநில மன்னர் போல அரசாண்டு வந்தார்.லண்டனுக்கு சென்று படித்து சிறுவயதிலேயே பல முனைவர் பட்டங்களைப் பெற்றவர் ராஜசிவ பூபதி.ஆறடி உயரம்,பாதி முகம் மறைக்கும் கலையாத வெள்ளை தாடி,பட்டுடை உடுத்தி மிடுக்காக அவர் நடந்து வந்தால் சத்தியமாய் 60 வயதென யாரும் சொல்ல மாட்டார்கள்.தன் மகளையும்,மருமகனையும் பெயர் தெரியாத வியாதிக்கு பலி கொடுத்து விட்டு பேத்தியை இளவரசி போல செல்லம் கொடுத்து வளர்த்து வருகிறார்.இப்பொழுது தோட்டத்தில் தன்னுடைய அந்தரங்க உதவியாளன் விஜயசேகரனுடன் அமர்ந்து அளவளாவிக் கொண்டிருந்தார்.

விஜயசேகரன் ராஜசிவத்துடைய தூரத்து உறவினன்.23 வயதான இளைஞன்.5 1/2 அடி உயரமும், கருத்த நிறமும்,கட்டான உடல்வாகும் கொண்டவன்.வெளிநாட்டுக் கல்வி இல்லாவிடினும் உள்ளூரில் பயின்று பல நூல்களை கற்றுத் தேர்ந்தவன்.ராஜசிவத்தின் ஆராய்ச்சிக்கு உதவியாய் இருப்பானென கருதியதால் தன்னுடன் சேர்த்துக் கொண்டார்.தீர்க்கமான சிந்தையுடையவன் எந்த விடயமாக இருந்தாலும் தடுமாறாமல் செயல்படும் ஆற்றல் உடையவன்.ஆராய்ச்சியின் போது சிக்கலான விடயங்களில் எளிதாக தீர்வு கண்டுபிடித்த இவனின் ஆற்றலை பலமுறை ராஜசிவம் பாராட்டியும்,வியந்துமிருக்கிறார்.கல்வியறிவு மட்டுமின்றி வாள்வீச்சிலும் வல்லவன்,வேலை எறிந்தால் ஆலமரத்தை கூட பிளந்துவிடும் ஆற்றல் படைத்தவன்.உடன் யாருமில்லாத அந்த தோட்டத்தின் தனிமை தங்களுடைய ஆராய்ச்சியை பற்றி பேச ஏதுவான இடமென்பதால் காலாற நடந்தவாறே பேசிக் கொண்டிருந்தனர்.

”நேத்து நீங்க பண்ணினது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல” விஜயசேகரன் ஏதோ மனக்கலக்கத்துடன் தலைகுனிந்தபடி கூறினான்.

”எத சொல்ற சேகரா?” அவன் பேசப்போகும் விசயம் அவருக்கு தெரிந்துதான் இருந்தது.

“நீங்க கிட்டதட்ட 10 வருசமா ஆராய்ச்சி பண்றீங்க.நான் 5 வருசமா உங்களுக்கு உதவியா இருக்கேன்.இந்த ஆராய்ச்சில நாம 2 பேரும் காட்ற ஆர்வம்,அக்கறைய விட ரெவரண்ட் ஃபெர்னாண்டஸ் எவ்ளோ அக்கறையா இருக்காரு.நாம சில சமயம் துவண்டு போனா கூட அவர் எத்தன முறை நமக்கு உதவிருக்காரு.அவர் கிட்ட நீங்க இப்படியா பண்றது?” நேற்று மாலையிலிருந்து அடக்கி வைத்த கோபத்தையெல்லாம் பொங்கித் தீர்த்தான்.

ராஜசிவம் பதில் எதுவும் சொல்லாமல் பரிகாசமாய் உதட்டோரத்தை இழுத்து லேசாக புன்னகைத்தார்.இந்த அலட்சியம் விஜயசேகரனை மேலும் ஆத்திரமூட்டியது சற்று பலமாகவே பொங்கினான்.

“அவர் என்ன அவ்வளவு சாதாரண ஆளா? அவர் ஒரு வார்த்தை சொன்னா இந்த ஜில்லாவே நடுங்கும்.அவரோட கட்டளை ஒண்ணு போதும் இந்த நாட்டொட எந்த மூலையையும் இல்லாம பண்ணிடுவாரு.ஆனா உங்க கிட்ட மட்டும் எவ்வளவு கனிவா இருக்காரு அதுக்கு காட்ற நன்றி தானா இது? இத்தன நாளா செஞ்ச ஆராய்ச்சிகள எல்லாம் அவர்கிட்ட இருந்து மறைச்சுட்டு ஏதோ சின்ன புள்ளைகளுக்கு வேடிக்கை காட்ற மாதிரி சின்ன விசயங்கள காட்டிட்டு அவர ஏமாத்திட்டீங்க.பாவம் மனுசன் ரொம்ப நொந்திருப்பாரு” ரொம்பவே வேதனைப்பட்டான். 


”ஆமா ஆராய்ச்சிக்கு காசு குடுக்கறவன் எதிர்பார்க்குற அளவு ரிசல்ட் கிடைக்கலனா நோகத்தான் செய்வான்.இட்ஸ் நேச்சுரல்” அலட்டிக் கொள்ளாமல் பதில் சொன்னார் ராஜசிவம்.

”எனக்கு தெரியும் நீங்க நேத்து அவர்கிட்ட காமிச்சதெல்லாம் வெறும் சின்ன சின்ன வேலைகள் அதுக்கு மேல நிறைய செஞ்சீங்களே அதெல்லாம் ஏன் அவர்கிட்ட காமிக்கல.இதெல்லாம் நன்றி கெட்டத்தனமா தெரியல?” விஜயசேகரன் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனான்.

’’கொஞ்சம் மூச்சு விடு விஜயா” அவரின் அலட்டலில்லாத உட்பொருள் பொதிந்த பதிலோடு ஏதோ சொல்லப் போகும் பரவசம் அவரிடம் இருந்தது. ”உனக்கு சில விசயங்கள் நேரம் வரும் போது தெரிஞ்சா போதும்னு நினைச்சேன்.ஆனா அது எதையும் உனக்கு தெரியப்படுத்தாம போயிடுவனோனு எனக்கு பயமா இருக்கு.அதனால இப்ப உனக்கு தெரிய வேண்டிய எல்லா விசயத்தையும் சொல்றேன் கேளு.ரெவரண்ட் ஃபெர்ணாண்டஸ்ஸ 30 வருசத்துக்கு முன்னாடி நான் லண்டன்ல படிச்சுட்டு இருந்தப்ப இருந்தே தெரியும்.அந்த சமயம் லண்டன்ல அவர் சர்ச்சோட சமயப் பள்ளில படிச்சிட்டிருந்தாரு அவரோட மதத்துல தீவிர பற்று கொண்டவரு.எப்படியாவது உலகம் முழுக்க தன்னுடைய மதத்த பரப்பணும்னு ஆசைப்பட்டவரு.என்னோடயும் பல தடவ விவாதம் பண்ணிருக்காரு.எனக்கு அவரோட தீவிரமான பற்று பிடிச்சிருந்தது.அதே நேரம் நான் பாரானார்மல் சயின்ஸ்ல முனைவர் பட்டத்துக்காக படிச்சுட்டு இருந்ததால என்னோட ஆராய்ச்சி முடிவுகள் அவருக்கு பயன்படும்னு என்னோட நட்பாயிட்டாரு.படிப்பு முடிச்சதும் நான் இந்தியாவுக்கு திரும்ப வந்துட்டேன்.ஆராய்ச்சி,ஆராய்ச்சினு செலவு பண்ணி அரண்மனைய கவனிக்காம விட்டதால கடன் தலைக்கு மேல போயி 10 வருசத்துக்கு முன்னாடி என்னோட ஜமீன் சொத்துக்கள் எல்லாம் வெள்ளையர்கள் கைக்கு போயிடுச்சு.என் மகள்,மருமகன்,பேத்தி எல்லாரும் நடுத்தெருவுக்கு வந்துட்டோம்.அப்ப ஃபெர்னாண்டஸ் இந்தியாவுல மாபெரும் மதத்தலைவர். எப்படியோ என்ன தேடிபுடிச்சு வந்து பார்த்தாரு.என்னோட நிலைமைய புரிஞ்சுகிட்டு அரசாங்கத்து கிட்ட என்னுடைய அரண்மனை மட்டுமில்லாம,10 மலை கிராமங்களும் எனக்கு குடுக்க வெச்சாரு.அதுக்கு பிரதிபலனா என்னை பாரானார்மல் சயின்ஸ்ல ஆராய்ச்சி செய்ய சொன்னாரு”

“பாரானார்மல் சயின்ஸா? நீங்க ஆவிகள பத்திதான ஆராய்ச்சி பண்றீங்க?” விஜயன்.

”ஆமா.அதுவும் ஒரு சயின்ஸ்தான்.நார்மலா நடக்குற ஆராய்ச்சிகளுக்கு அப்பாற்பட்ட சயிண்ஸ்.இட்ஸ் டோட்டலி டிஃபெரெண்ட்” ராஜசிவம் தன்னுடைய ஆராய்ச்சிய ஆழத்தை உள்ளூர சிலாகித்து மேம்போக்காய் பதில் சொன்னார்.

”இவ்ளோ நாள் வேலை வாங்கினீங்க அப்பப்போ ஏதாவது இத்துனூண்டு சமாச்சாரம் மாயமந்திரம் மாதிரி சொல்லி குடுத்தீங்க.இப்ப தான் தெரியுது நீங்க எங்கிட்ட இதுவர எதுவும் சொன்னதில்லனு.அவர் உங்களையும் உங்க ஆராய்ச்சியையும் காப்பாத்தறக்கு தான எல்லாம் செஞ்சாரு அவர் கிட்ட ஏன் மறைக்கனும்?” விஜயனுக்கு அவரிடம் எதையாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் மேலிட்டது.

”நான் கண்டுபிடிச்ச விசயங்கள தெரிஞ்சுகிட்டா உனக்கு தலை வெடிச்சுடும்” என சொல்லிவிட்டு வானத்தை நிமிர்ந்து பார்த்து மெல்ல சிரித்தார் “நீ மட்டுமில்ல இந்த உலகமே என்னை நோக்கி படையெடுக்கும் அதுக்கு முன்னாடி இந்த கண்டுபிடிப்ப பாதுகாக்கனும்.இத உனக்கு படிப்படியா புரிய வெச்சு இத உலகத்தின் புதிய சக்தியா உருவாக்கனும்.அதனால தான் யாருக்கும் இத பத்தி நான் சொல்லல.இன்னும் ஃபெர்னாண்டஸ்க்கு கூட நான் என்ன செய்யறேன்னு தெரியாது.அவனுக்கு என் மேல சந்தேகம் வர ஆரம்பிச்சிடுச்சு.அவன் முழிக்கறக்கு முன்னாடி நாம வேகமா செயல்படணும்”

”என்னமோ சொல்றீங்க.ஆனா எனக்கு சுத்தமா புடிபடல” விஜயன் சலித்துக்கொண்டான்.

”அது...” ராஜசிவம் ஏதோ சொல்லத் தொடங்கும் பொழுதே தூரத்தில் திருநங்கையும், சோமசுந்தர தாத்தாவும் வந்து கொண்டிருந்தனர்.ஆகையால் உரையாடலை உடனடியாக நிறுத்தினார்.துள்ளி வந்த நங்கை தாத்தாவின் மடியில் அமர்ந்து கொண்டாள்.

”என்னமா மாப்பிள்ளை முன்னாடி இப்படி உட்காரலாமா?” விஜயசேகரனை மாப்பிள்ளையென விளித்து நங்கையை கேலி செய்வது சோமசுந்தர தாத்தாவுக்கு விருப்பமான பொழுதுபோக்கு.

”இந்த கருவாயன யார் கட்டிப்பா?” இடது கையை காற்றில் இடமும் வலமுமாய் ஆட்டி பல்லை கடித்துக் கொண்டு விரிந்த இதழ்களுடன் கேலியாய் அவள் சொன்ன அழகில் சொக்கித்தான் போனான் சேகரன்.இருப்பினும் அவள் அழகுக்கு தான் பொருத்தமானவன் இல்லை என அவனுக்குள் ஓர் தாழ்வு மனப்பான்மை உண்டென்பதால் அவன் என்றைக்கும் தன் ஆசையை வெளிப்படுத்தியதில்லை.

”ஓகோ... அம்மனிக்கு கரடு மாதிரி நல்லா தின்னு கொழுத்த வெள்ளைக்கார துரைய கூட்டி வரேன்.மாட்டு கறி,பன்னி கறினு சீதனம் கொடுத்து கட்டிக்குங்க ”  அவனும் தன் அன்பை பரிகாசத்தில் மறைத்தான்.
                                                                                                             -காத்திருங்கள்

இதற்கு முன் நடந்தவற்றை தெரிந்து கொள்ள கீழே சொடுக்கவும்...

வஞ்சம்


Saturday 21 January 2012

மூன்றே நாளில் பாஸ்போர்ட் பெறுவது எப்படி?

என் இனிய தமிழ் மக்களே நம்ம ஊர்ல இருந்து வெளிநாட்டுக்கு போக கடவுச்சீட்டு அதாங்க பாஸ்போர்ட்டு ரொம்ப ரொம்ப முக்கியம்னு நம்ம எல்லாருக்கும் தெரியும்.அதுமில்லாம அது பல இடங்கள்ல ஒரு அடையாள சான்றா பயன்படுத்திக்கலாம்.அந்த பாஸ்போர்ட் எடுக்கறது பெரிய வேலை,ரொம்ப செலவாகும்,ரொம்ப நாளாகும்னு நினக்கறவங்களுக்கெல்லாம் 3 நாள்ல எப்படி பாஸ்போர்ட் எடுக்கறதுன்னு சொல்றதுதான் இந்த பதிவு.என்னது 3 மணிநேரத்துல ரெடி பண்ணிருவீங்களா? அலோ நான் ஒரிஜினல் பாஸ்போர்ட்ட பத்தி பேசறனுங்க...



1) முதல்ல பாஸ்போர்டுக்கு விண்ணப்பம் போடனும்ல அதுக்கு மிக எளிதான வழி இணைய வழில போட்றதுதான்.மருத்துவ அவசரநிலை,நெருக்கடியான நிலை தவிர மத்த நேரங்கள்ல நேரடி விண்ணப்பங்கள ஏத்துக்க மாட்டோம்னு இணையத்துல போட்டுருக்காங்க.விண்ணப்பிக்க முதல்ல www.passportindia.gov.in என்கிற இணையதளத்துக்குள்ள நுழைங்க.

2) ஃபேஸ்புக்குல அக்கவுண்ட் வெச்சிருக்குற மாதிரி இதிலயும் அக்கவுண்ட உருவாக்கனும்.பயனர் பெயர்(username),கடவுச்சீட்டு(password) எல்லாம் மறக்காம நினைவுல வெச்சிக்குங்க.

3) APPLY FOR A FRESH PASSPORT அப்படிங்கற ஒரு தேர்வு முதல் பக்கத்துல இருக்கும் அத தேர்ந்தெடுங்க.

4) விண்ணப்பத்த நிரப்பறக்கு முன்னாடி கவனிக்க வேண்டிய விசயம் நீங்க என்னென்ன சான்றிதழ்கள குடுக்க போறீங்களோ அதுல இருக்குற விவரங்களுக்கும் விண்ணப்பத்துல போட்ற விவரங்களுக்கும் முட்டல் மோதல் இல்லாம பாத்துக்கங்க.பெயரொட எழுத்துக்கள் கூட மாற கூடாதுங்க.ஒவ்வொரு வட்டாரத்துக்கும் ஒவ்வொரு கடவுச்சீட்டு அலுவலகம் இருக்கும் அத சரியா தேர்ந்தெடுங்க.

5) பல கட்டங்களைக் கொண்ட ஒரு விண்ணப்ப படிவம் வரும்.அத பொறுமையா நிரப்புங்க.முகவரிய தெரிவிக்கும் பொழுது சரியான முகவரிய போடுங்க.சின்ன வீடா? பெரிய வீடா?னு குழப்பத்துல தப்பு தப்பா அடிச்சறாதீங்க.

6) இந்த விவரத்த நிரப்புறதுல முக்கியமான விசயம் REFERENCE FOR ADDRESSனு கேட்டிருப்பாங்க அதுல உங்களுக்கு தெரிஞ்ச பக்கத்து வீட்டுகாரங்களோட பெயர்,முகவரி,தொலைபேசி எண் குறிப்பிடனும்.கல்லூரி விடுதில தங்கிருக்குற மாணவர்கள் விடுதி முகவரிய தற்காலிக முகவரிங்கற இடத்துல குடுத்துட்டு REFERENCE கு உங்க லோக்கல் கார்டியன் பெயர குடுங்க.

7) வாக்காளர் அடையாள அட்டை எண் கேட்டிருப்பாங்க அதையும் குடுத்துட்டீங்கன்னா இனிதாக விண்ணப்பம் முழுமையா முடிஞ்சுடும்.நீங்க விண்ணப்பத்த பூர்த்தி செய்யறப்ப மின்சாரம் புஸ்ஸாச்சுன்னா கவலைபடாதீங்க நீங்க பாதில நிப்பாட்டினா கூட எப்ப வேணாலும் விட்ட இடத்துல இருந்து ஆரம்பிக்கலாம.

8) அடுத்துதான் முக்கியமான விசயம்.விண்ணப்பத்த மட்டும் பூர்த்தி பண்ணிட்டா பாஸ்போர்ட்ட குடுத்துட மாட்டாங்கோ.நேர்முக விண்ணப்ப பரிசீலனை நடக்கும் (இண்டர்வியூ).அதுக்கு நாம ஒரு அப்பாயின்மெண்ட் நேரத்த தேர்ந்தெடுக்கனும்.விண்ணப்பம் பூர்த்தி ஆனப்புறம் உங்க அக்கவுண்ட திறந்து பாத்தா MANAGE MY APPOINMENTனு ஒரு தேர்வு இருக்கும் அதுல போயி உங்களுக்கான தேதியும் நேரத்தையும் தேர்ந்தெடுக்க போனீங்கன்னா உடனே கிடைச்சுடாது.இத்தனை தேதி சாயங்காலம் 6 மணிக்கு வாங்க அப்பதான் அப்பாயின்மெண்ட் தருவோம்னு இணையதளம் சொல்லும்.உதாரனத்துக்கு 30.1.2012,6 PM க்கு தான் அப்பாயின்மெண்ட் குடுப்போம்னு சொல்லுச்சுன்னு வெச்சிக்கங்க நீங்க 5.55 கே அக்கவுண்ட திறந்து வெச்சு உட்கார்ந்துக்கங்க.சரியா 6 மணிக்கு திறந்து உடனே அப்பாயின்மெண்ட்ட போட்டுடுங்க.ஒரு தேதி தான் இருக்கும் அதுல காலை 9 மணில இருந்து மாலை 4 மணி வரை நேரம் குடுத்திருப்பாங்க.உங்களுக்கு வசதியான நேரத்த உடனே தேர்ந்தெடுங்க ஏன்னா இதெல்லாம் தேர்வு செஞ்சு முடிக்கறக்கு உங்களுக்கு 5 நிமிஷம்தான் கிடைக்கும் அதுக்குள்ள அப்பாயின்மெண்ட் காலி ஆயிடும்.அதுக்கு மேல காலண்டர்ல நல்ல நேரம் பாத்துட்டு உட்காந்திருந்தா இன்னும் 3 நாள் கழிச்சு வாங்கனு சொல்லிடும்.

9) கடவுச்சீட்டு அலுவலகத்துக்கு போகறக்கு முன்னாடி நீங்க சமர்பிக்க போற சான்றிதழ்கள் (DATE OF BIRTH PROOF,ADDRESS PROOF,BONAFIDE IF STUDENT,IF THERE IS TEMPORARY ADDRESS PROOF FOR THE SAME) எல்லாத்துலயும் உங்க பேரோட ஸ்பெல்லிங்,முகவரி எல்லாம் சரியா இருக்கானு பாருங்க.சின்ன பிழை இருந்தாலும் தூக்கி கடாசிடுவாங்க.எதுக்கும் ஒவ்வொன்னுக்கும் 2 சான்றிதழ் எடுத்து வெச்சிக்குங்க.சான்றிதழ்களுக்கு ஒவ்வொரு பிரதி எடுத்து அதுல நீங்க கையெழுத்தும் போட்டு வெச்சிக்கனும்.வங்கி கணக்கு புத்தகம் மட்டும் பத்தாது பேங்க் ஸ்டேட்மெண்டும் அது கூட இருக்கனும்.10th அல்லது 12th மதிப்பெண் சான்றிதழ் முக்கியம்.

9) அப்பாயின்மெண்ட் கிடைச்சதும் உங்களுக்கு APPLICATION RECEIPT கிடைக்கும் அத பிரதி எடுத்து வெச்சிக்கங்க.அத காட்டினாதான் உள்ள விடுவாங்க வாட்ச்மேனுக்கு சம்திங் குடுத்தெல்லாம் உள்ள போக முடியாது.

10)  உங்களுக்கு அப்பாயின்மெண்ட் இருக்கற தேதிக்கு,குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னாடியே போய் உட்காந்துக்கங்க.உங்க நேரத்துக்கு உங்கள உள்ள விடுவாங்க.

11) உள்ள போனதும் 4 அல்லது 5 கவுன்டர் இருக்கும் அதுல ஏதாவது ஒரு வரிசைல நில்லுங்க.அங்க இருக்குற ஒரு தம்பியோ இல்ல பாப்பாவோ (பாஸ்போர்ட் அலுவலகம் எல்லாம் இப்ப TCS கைல இருக்கு அதனால எல்லாரும் சின்ன பசங்களா தான் இருப்பாங்க) இருக்கும்.அவங்க கிட்ட உங்க APPOINMENT RECEIPT,சான்றிதழ்களோட அசல்,பிரதி எல்லாத்தையும் குடுங்க.அவரு அதுல நொல்ல,நொட்டையெல்லாம் பார்த்து எதெது சரிபட்டு வரும்னு பாத்துட்டு உள்ள போனா இந்தாளு பாஸ் பண்ணிடுவாருன்னு தோனிச்சுனா ஒரு டோக்கனும்,உங்க சான்றிதழ்கள ஒரு கோப்புல போட்டும் குடுப்பாங்க.அத பத்திரமா வெச்சிக்கங்க.காத்திருப்பு அறைக்குள்ள உட்காரச் சொல்லுவாங்க.அசல் சான்றிதழ் உங்க கைல குடுத்திருவாங்க அத அடுத்த கட்டங்கள்ல கேட்கும் போது மட்டும் குடுங்க.

12) இதுக்கப்புறம் நீங்க A,B,C என 3 இடத்துல நேர்முக பரிசிலனை நடத்துவாங்க.ஒவ்வொன்னையும் முடிச்சாதான் பாஸ்போர்ட்டு கிடைக்கும்.காத்திருப்பு அறைல கலர் கலரா TCS பொன்னுங்க இருப்பாங்க அவங்களையெல்லாம் பாக்காம அங்க இருக்குற டி.வி ய மட்டும் கன் மாதிரி பாக்கணும்.அதுல தான் டோக்கன் எண்கள் போடுவாங்க.உங்க எண் முதல்ல A கவுன்டர்ல வரும்.குடுகுடுனு ஓடிப்போய் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட கவுன்டர்ல உட்கார்ந்துக்கங்க.அங்கயும் TCS பணியாளர் தான் இருப்பாங்க.அவங்ககிட்டயும் எல்லா சான்றிதழ்களையும் குடுங்க.உங்கள புகைப்படம் எடுப்பாங்க அதனால தலைய சீவிட்டு மூஞ்சிய துடைச்சிட்டு போய் உட்காருங்க.ரூ.1000 பணம் கேட்பாங்க அதயும் குடுங்க (தட்காலுக்கு ரூ.1500). உங்க விண்ணப்பத்த திறந்து அதுல எல்லா விவரங்களும் சரி பார்பாங்க.அதுல நீங்க கடலை போட்றக்காக எக்கச்சக்கமா பேசி மாட்டிக்காதீங்க.ஏன்னா ஏதாது சின்ன மாறுதல் இருந்தாலும் குடைஞ்செடுப்பாங்க.

13) இவங்க கிட்ட தப்பிச்ச பிறகு அடுத்த அறைல டி.வி பாருங்க.B கவுன்டர்ல உங்கள கூப்பிட்டதும் போங்க.அவங்கதான் மத்திய அரசோட சான்றிதழ் சரிபார்ப்பு அலுவலர்.அவங்களும் உங்க விண்ணப்பம்,சான்றிதழ் எல்லாம் சரிபார்த்துட்டு கையெழுத்து போடுவாங்க.

14) அடுத்து இதே மாதிரி C கவுன்டர் அவர் தான் பெரிய ஆபீசர்-பாஸ்போர்ட் குடுகறவரு அவரும் எல்லாம் பாத்துட்டு பொன்னான கையெழுத்த போட்டு குடுப்பாரு.

15) பிரதிகளையும்,ஆபீசர்கள் கையெழுத்து போட்ட கோப்பயும் கடைசி கவுன்டர்ல குடுத்தீங்கன்னா அந்த புள்ள எல்லாத்தையும் வாங்கிட்டு ஒரு கடுதாசி குடுக்கும் அத பத்திரமா எடுத்துகிட்டு ஊருக்கு கிளம்பி போங்க.

16) 15 நாள் கழிச்சு உங்களுக்கு காவல் நிலையத்துல இருந்து அழைப்பு வரும்.அங்க போய் சுத்துபட்டு 18 பட்டில உத்தமபுத்திரன் நாந்தானுங்கனு சொல்லிட்டு அப்படியே முகவரிக்கான சான்றையும் காமிச்சுட்டு வந்திருங்க.

17) இன்னொரு 15 நாள் கழிச்சு உங்க வீடு தேடி பாஸ்போர்ட் தபால்ல வரும்.உங்க கைல மட்டும்தான் குடுப்பாங்க அதனால நீங்க எங்காவது கொலை கிலை பண்ணிட்டு தலைமறைவா இருந்தா நேரடியா தபால் அலுவலகத்துல போய் வாங்கிக்கங்க.

என்னடா 3 நாள்னு சொல்லிட்டு மாசக்கணக்குல இழுக்கறானேன்னு பாக்கறீங்களா.விண்ணப்பிக்க ஒரு நாளு,நேர்முகத் தேர்வுக்கு ஒரு நாளு, காவல் நிலையத்துல ஒரு நாளு ஆக மொத்தம் மூணு நாளு எப்புடீ....
திட்டறதுன்னா தாராளமா கீழ திட்டிட்டு போங்க...

Thursday 19 January 2012

வணக்கம் வாழவைக்கும் சென்னை

வணக்கம் வாழவைக்கும் சென்னைனு மெரினா படத்துல ஒரு பாட்ட போட்டு அத டி.வி ல போட்டாங்க.சென்னைல வாழ்ற ஒவ்வொருத்தருக்கும் அவங்களுக்கு ஏத்தபடி சென்னை பத்தின ஒரு பார்வை இருக்கு.நான் 2 வாரத்துக்கு முன்னாடி சென்னை போனேன் எனக்கும் சென்னை பத்தி சில பார்வைகள் இருக்கு.ஏனோ தெரில சென்னை என்னை ஈர்க்கல.நான் பார்த்த சில விஷயங்கள எழுதறேன் அவ்ளோதான்...



சென்னைல சாயுங்காலம் மாநகர பேருந்துல போறது எவ்வளவு பெரிய அனுபவம்னு அரிதா போறவங்களுக்கு தான் தெரியும் அடிக்கடி போறவங்க அதையெல்லாம் பொருட்படுத்தறது இல்ல.நானும் நண்பனும் எங்க ஊர் நியாபகத்துல கடைசில இருக்குற நீளமான இருக்கைல நாங்க 2 பேரும் இன்னும் சில ஆண்மகன்களும் உட்கார்ந்தோம்.ஒரு 4 நிறுத்தம் தள்ளி ஒரு 40 வயசு ஆண்டி ஏறுனாங்க.நேரா எங்ககிட்ட வந்து “கொஞ்சம் எந்திருக்கறீங்களா”னு கேட்டாங்க.அப்புறம் தான் தெரிஞ்சுது இடது பக்கம் இருக்கற இருக்கைகளெல்லாம் பொம்பளைங்களுக்காம். (இந்த ரூல்செல்லாம் யாருய்யா போட்டது? )அமைதியா எந்திரிச்சோம்.2 ஆண்டிங்க எங்க இடத்துல உட்கார்ந்தாங்க.கொஞ்ச நேரத்துல இன்னும் 2 பெண்கள் வந்து அடுத்த 2 ஆண்கள எழுப்பிவிட்டுட்டாங்க.இடது பக்கம் இருக்கற சீட்டுகள் (அதாவது கடைசி சீட்டுல பாதி) எல்லாம் பெண்கள்தான் உட்காந்தாங்க.அதெல்லாம் பரவால்லங்க அடுத்து வலது பாதில இருக்குற 2 பேர எழுப்பிவிட்டு 2 பெண்கள் உட்காந்துட்டாங்க.நாங்க பெண்ணுரிமை பயங்கரமா வேலை செய்யுது போலனு நினைச்சோம்.அந்த கடைசி சீட்டுலயும் 2 பசங்கதான் இருந்தாங்க.நாங்க கூட்டத்துல பிழியப்பட்டுகிட்டு இருந்தோம்.அந்த ஸ்டாப்புல ஏறுன ஒரு காலேஜ் பொண்ணு உடனே அந்த 2 பசங்க கிட்ட போய் “எந்திரிங்க”னு சொல்லி துரத்தி விட்டுடுச்சு.அவங்க பேசாம எந்திரிச்சு வந்துட்டாங்க.இப்ப கடைசி சீட்டு முழுசுமே பெண்கள்தான் அதுலயும் அந்த காலேஜ் பொண்ணு உட்கார்ந்த கையோட கைபேசிய எடுத்து கடலை போட ஆரம்பிச்சுருச்சு.இறங்கற வரைக்கும் செம வறுவல் ஓடுச்சு.இதுக்குதான் பசங்கள எழுப்பிவிட்டாங்களானு நினைக்கும் போது செம கடுப்பா இருந்துச்சு.இவிங்க ஜாலியா ட்ராவல் பண்ண அப்பாவி பசங்க தான் கிடைச்சாங்களா? மொதல்ல ஆணுரிமைய மீட்டெடுக்கனும்யா...





அடுக்குமாடி கட்டடங்கள் எல்லாம் சென்னைல பளபளனு இருந்துச்சு இன்னும் நிறைய பிரமாண்ட கட்டிட வேலைகளும் நடந்துட்டிருந்துச்சு.ஆனா ஒரே ஒரு தகர கூரை, இரண்டு கைய பக்கவாட்டுல நீட்டுனா இடிக்கற அளவுக்கு இடம்,கிடைச்சத எல்லாம் வெச்சு ஒப்பேத்தி வெச்சிருக்கிற 4 சுவர்.இதுதான் பெரும்பாலான சென்னை வாசிகளுக்கெல்லாம் வசிப்பிடமா இருக்கு.தூக்கம்,வாழ்க்கை,பிறப்பு,இறப்பு,பூப்படைவது,காதல்,திருமணம்,குடும்பம், மாதவிலக்கு,உணவுனு 6,7 பேர் இருக்குற ஒரு குடும்பத்துக்கு இந்த இடம்தான் எல்லாம்னு சொன்னா அது கொடுமையா தெரிலயா இந்த அதிகாரவர்க்கங்களுக்கு? மழை,பனி,வெயில்னு எதுக்கும் பாதுகாப்பில்லாத கூடு கட்டி வாழ்றது சென்னை வாழ் அதிகாரிகளுக்கு உறுத்தலையா? தினமும் கண் முன்னாடி பாக்கற இந்த விசயத்தியே இவங்களால சரி பண்ண முடியலனா இவங்க என்னத்த ஆண்டு என்னத்த கிழிக்க போறாங்க?





தமிழினத் தலைவர் அவர்கள் ஏதோ திராவிட பாரம்பரியத்தோட கட்டிருக்கேனு சொல்லி பெருசா ஒரு சட்டமன்றத்த கட்டி வெச்சாரு அத ஆத்தா வந்து ஆஸ்பத்திரி ஆக்கறேன்னு சொல்லிச்சு.ஆனா 2 பேருமே இந்த கட்டிடம் நாறிப் போன கூவத்து கரைல கட்டி வெச்சிருக்கோம்ங்கிறத ஏன் வசதியா மறக்கிறாங்க? ஒரு மாநிலத்தோட ஆட்சிமன்றம் மிகவும் மோசமாக சீரழிக்கப்பட்ட ஆற்றின் கரையில் இருப்பதே இவங்க ஆட்சிகளுக்கு சாட்சியா இருக்கும்னு தோனலையா இவங்களுக்கு? அங்க மருத்துவமனை அமைஞ்சா அது உயர்சிகிச்சை மையமா இருக்காது நோய் பரப்பும் மையமா தான் இருக்கும்.இதுவே இப்படினா அந்த கரையில வாழ்ற மக்கள நினைச்சா மனசு கொதிக்குது.ஆற்றங்கரை நாகரீகம் இப்ப சாக்கடையோர நாகரீகம் ஆகிப்போனது இந்த புத்திசாலிங்களுக்கு ஏறலயா? ஒருவேளை ஆற்றை சுத்தப்படுத்தினா அந்த ஆற்றோர மக்கள விரட்டிவிட்டுட்டு  அந்த இடத்தயெல்லாம் பெருமுதலாளிகளுக்கு பங்கு போட்டு குடுத்துடுவாங்கங்கிறது உண்மைதான்.ஆனா மலேரியாவின் தாயகமா இருக்குற இந்த கூவத்த சீர் செய்ஞ்சா எத்தனையோ வியாதிகளிலிருந்து மக்கள காப்பாத்தலாம்.இதெல்லாம் செய்யாம எங்கிருந்து முதல் மாநிலமாகிறது?



சென்னையோட பொருளாதார ஏற்றத்தாழ்வு எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்கனும்னா நேரா ஏதாவது பெரிய ஷாப்பிங்க் மாலுக்கு போக வேண்டியதுதான்.வீணா போற நேரத்தையும்,பணத்தையும் என்ன பண்றதுனு தெரியாம கும்பல் கும்பலா சுத்துற பணக்கார இளைஞர்கள்,பார்க்கிங்கு ஒரு மணி நேரத்துக்கு 20 ரூபாயனு வாய பொளக்குற நடுத்தர இளைஞர்கள், சென்னையை சுத்தி பாக்குறேன்னு சொல்லிட்டு குருந்தாடி,மொழுக் முகம்,கலரிங் தலை,சுமார் ஜீன்ஸ்னு ஷாப்பிங்க் மாலுக்கு உள்ளயே சென்னைய தேடுற வெளியூர் இளைஞர்கள்,துணிக்கடை,தையல் கடை,டிபார்ட்மெண்டல் ஸ்டோர்னு வாரம் முழுக்க வேலை செஞ்ச காசுல வாங்கின மலிவான ஜீன்ஸும்,ஷால் போடாத டாப்ஸும்,தலைக்கு குளிச்சு அப்படியே முடிய விரிச்சு போட்டுட்டு பரவசத்துடன் வரும் ஏழை இளைஞிகள்னு இன்னும் பல முகங்களை அந்த பெருங்கடைகளில் பார்க்கலாம்.இந்த ஏற்றத்தாழ்வு விரிந்து கொண்டே போனால் வரும் விளைவுகள் பல பெருங்கடைகளின் அஸ்திவாரங்களை இடிக்கத் தொடங்கும் என்பது வெளிச்சம்.ஏனெனில் சென்னையின் புழுக்கம் எல்லையில்லாதது.

அப்புறம் இன்னொன்னு சொல்ல மறந்துட்டனே சென்னைல நான் சாப்பிட்ட உணவு விடுதியோட முதலாளிங்க எல்லாம் மலையாளிங்க வேலை செய்யுற பசங்க எல்லாம் ஹிந்திகாரனுங்க.நம்ம இளைஞர்கள் எல்லாருமே மல்டிநேஷனல் கம்பெனிலயும்,உட்கார்ந்தே வேலை செய்யுற இடத்துலயும்தான் வேலை பாப்பேன்னு அடம்புடிச்சு உட்கார்ந்திருந்திருந்தா இருக்குற தொழில்வளம் எல்லாம் பறிபோயிட்டிருக்கு.

இரயிலும் நானும் அவளும்

சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம்...

என்னடா மறுபடியும் ட்ரெயினு,ஜன்னலு,காத்து,மழைனு ஒரு கதையானு கடுப்பாகாதீங்க.தினமும் தமிழ்நாடு முழுக்க லட்சக்கணக்கான பேர் ட்ரெயின்ல போறான்.எல்லா பயலுக்குள்லயும் ஒவ்வொரு கதை இருக்கு.அப்ப எனக்கு மட்டும் இருக்க கூடாதா? வந்தது வந்துட்டீங்க கொஞ்சம் பொறுமையா கேட்டுட்டு போங்க.
நாகர்கோவில் செல்வதற்காக சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தின் நடைமேடையில் நின்று கொண்டிருக்கிறேன்.இன்னும் இரயில் வரவில்லை.சிறிது நிமிடங்களில் வந்து விடுமென வெகு நேரமாய் அறிவிப்பாளர் நம்பிக்கையை விதைத்துக் கொண்டிருந்தார்.அவரை நம்பி போர்களத்தில் முன்வரிசையில் நிற்பது போல எல்லோரும் பெட்டியை கையில் ஏந்தியவாறு நடைபாதையின் முனையில் ஆயத்தமாக காத்துக் கொண்டிருந்தனர்.இரயில் கொல்கத்தாவிலிருந்து ஊர்ந்து கொண்டே வருவதால் மிகவும் அயர்வாக வந்து சேர்ந்தது.எனக்கான பெட்டியை தேடி கண்டுபிடித்து உள்ளே நுழைந்தவுடன் வழக்கமாக ஏற்படும் அந்த அனுபவம் தலையை கிறுகிறுக்கச் செய்தது.வீட்டில் குளிர்சாதன பெட்டியில் தக்காளி சாதத்தையும்,இடலி மாவையும்,தயிரையும்,காய்கறிகளையும் வைத்துவிட்டு ஸ்விட்சை போடாமல் விட்டு பத்து நாள் கழித்து திறந்தால் எப்படி குப்பென்று ஒரு துர்நாற்றம் அடிக்குமே அதே போல ஒரு துர்நாற்றம் இந்த இரயில் பெட்டியிலும் வீசியது.வழக்கமாய் வடநாட்டு மக்களின் உடலில் ஒரு வித்தியாசமான வாசம்(???) வீசும்.அதுவே எனக்கு ஏக அலர்ஜி இதில் இவர்கள் 2 நாள் குளிக்காமல் கொல்கத்தாவிலிருந்து வந்தால் எப்படி இருக்கும்?.இந்திய தேச ஒருமைப்பாட்டுக்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டு என்னுடைய படுக்கையை தேடி ஓடினேன்.படுக்கை எண் 38, நடு படுக்கை, சட்டென ஏறி படுத்துக் கொண்டேன்.உடை மாற்றிக் கொள்ள மனதில்லை பெட்டிக்குள் அலுவலகத்திடம் சமர்ப்பிக்க வேண்டிய ரூ.2,00,000 காசோலை உள்ளது ஆதலால் பாதுகாப்பு காரணங்களுக்காக பெட்டியை தலைமாட்டில் வைத்துக் கொண்டேன்.சிறிது நேரத்தில் துர்நாற்றங்களை சிதறடிக்கும் ஒரு வசந்தம் வீசியது.நான் படுத்திருந்த படுக்கைக்கு நேர் எதிரே ஜன்னலோரம் அமைந்திருந்த இரண்டு படுக்கைகளில் மேல் படுக்கையில் ஒரு சிறகில்லாத தேவதை அமர்ந்திருந்தாள்.அவள் கண்கள் எத்தனை நேரமாய் ஊடுருவிக் கொண்டிருந்தது எனத் தெரியவில்லை இருப்பினும் என் இதயத் துடிப்புகள் ஒவ்வொன்றும் அவளின் விழியசைவுக்கு இசைவாய் துடித்தது.வங்காளப் பெண்களுக்கு உரிய பால் நிறம்,உடலை ஒட்டிய சுடிதார் அணிந்தபடி அளவான ரசகுல்லா போன்ற தேகம்,குலாப் ஜாமூனின் சுவை ஒன்றிய இதழ்கள்.இதில் என்னை மிகவும் நெருக்கியது அவள் விழிகள், சத்தியமா.
ஏனோ தெரியவில்லை அவள் கண்கள் எனக்கு கயல்விழியை நினைவுபடுத்தியது.
கயல்விழி... அலுவலகம் செல்வதற்காக விடிந்தும் விடியாத அப்பொழுதில் எழுந்து மொட்டைமாடியில் நின்று பல்விளக்கிக் கொண்டிருந்தேன்.அது ஏன் மொட்டைமாடியில் என கேட்கலாம்.கேட்காவிட்டாலும் சொல்வேன்.காலை கடன்களில் ஒவ்வொருவருக்கும் சில வினோத பழக்கவழக்கங்கள் இருக்கும் நாளிதழ் படித்துக் கொண்டு பல்விளக்குவது,கடன் கழிப்பது,பல் விளக்கியவுடன் சிகரெட் பிடிப்பது,காபி குடித்த பின் கழிவறை செல்வது என. இப்படி எனக்கு சுற்றுப்புறத்தை வேடிக்கை பார்த்தபடி மொட்டை மாடியில் நின்று பல்விளக்குவது பிடித்தமான ஒன்று. அன்றும் அப்படி பல்துலக்கையில் கயல்விழி கண்ணில் பட்டாள்.வாயிலிருந்து பல்துலக்கி தவறி விழுந்தது கூட தெரியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.அப்படி ஒரு நேர்த்தியான அழகை என் பாட்டன் காலத்திலிருந்து யாரும் பாத்திருக்க மாட்டார்கள்.பொதுவாக நேர்த்தியான விடயங்களின் உவமைக்கு ஓவியத்தையும்,கவிதையையும் புனைவதுண்டு.ஆனால் இவளிடம் அடியும்,சீரும்,நிறங்களும் பிச்சையெடுக்க வேண்டும்.ஈரத்துணியுடன் தலையில் கொண்டையிட்டு துணி உலர்த்திக் கொண்டிருந்தவள் சட்டென என்னை நிமிர்ந்து பார்த்தாள்.பள்ளிக்கூட சிறுவனின் முதல் பரவசம் போல உடல் நடுங்கியது.என்ன ஒரு கூர்மையான கண்கள்.மாரை மறைத்த சேலையை இழுத்து மேலும் மறைத்தவள் “என்னங்க” என விளித்தாள்.
“என்னடீ?” அவள் வீட்டினுள் இருந்து ஒரு ஆண் குரல்.
அய்யய்யோ அவளுக்கு திருமணமாகிவிட்டதா? இவ்வளவு நேரம் இரசித்தவன் அவள் கழுத்திலிருந்த தாலியை கவனிக்க மறந்துவிட்டேன். கிழே விழுந்திருந்த பல்துலக்கியை அப்படியே எடுத்து வாயில் வைத்து குடுகுடுவென கீழே இறங்கினேன்.நான் வீட்டுக்குள் நுழைவதற்கு முன் ஒரு ஆஜானபாகுவான ஆண்மகன் வரவேற்பறையில் புருவத்தை சுருக்கிக் கொண்டு நின்றிருந்தான்.வாயில் நுரையுடன் நான் அவனருகே செல்ல
”நீதான் மொட்டமாடில நின்னு என் பொண்டாட்டிய பாத்தியா?”
எடுத்த எடுப்பிலேயே மானம் போனதால் நானே முன்வந்து சமாதானம் அறிவித்தேன்.

”பக்கத்து வீட்டுல யாரோ புதுசா வந்திருக்காங்கன்னு தாங்க பார்த்தேன்.தப்பா எல்லாம் பாக்கலங்க” முடிந்தவரை தணிந்த குரலில் பம்மினேன்.

”ஓ புதுசா வந்தா பாப்பியோ? அதுக்கு தான் பொண்டாட்டிய கூட்டீட்டு இங்க குடி வந்தமா.நானும் ஏரியாக்கு புதுசுதான் உன் வீட்டுல இருக்குற எல்லாரையும் கூப்பிடு நான் நல்லா பாத்துட்டு போறேன்” அவன் இதை சொல்லி முடிக்கவும் என் மனைவி சமையலறையிலிருந்து வரவேற்பறைக்கு வரவும் சரியாய் இருந்தது.

”வாங்க உட்காருங்க” என் மனைவி வந்தவனை வரவேற்றாள்.
உடனே அவன் அருகிலிருந்த சோபாவில் அமர்ந்தான்.

”என்னாச்சுங்க ஏதாச்சு பிரச்சனையா?” மீண்டும் அவனிடம் விசாரித்தாள்.

”ஒன்னுமில்ல மேடம்.என் வொய்ஃப் வேலையா இருக்கும் போது உங்க ஹஸ்பெண்ட் மாடில இருந்து முறைச்சு பாத்திருக்காரு.அவ பயந்து போய் என்கிட்ட வந்து சொன்னா.அது தான் வந்து கேட்க வேண்டிதா போச்சு” இப்படி திடீரென தொலைபேசியில் க்ரெடிட் கார்ட் விற்க முயலும் கால் செண்டர் மக்களை போல அவன் ஆங்கிலத்தில் குழைந்ததும் எனக்கு ஏதோ தவறாகப்பட்டது.
என் மனைவி என்னை முறைத்து பார்த்ததில் இன்னும் ஒரு வார சண்டைக்கு தேவையான திடமான மனநிலைக்கு இப்பொழுதே பயிற்சியை தொடங்கினேன்.

”அவர் தெரியாம பாத்திருப்பார்.இனிமேல் அப்படி எதும் நடக்காம பாத்துக்கறேன் மன்னிச்சிருங்க” கல்யாணமான புதிதில் மட்டும் நான் கண்ட அந்த முழுநீள புன்னகையுடன் அவள் பதிலளித்தது என் உள்ளத்தை குடைந்து கிளறியது.

”அய்யோ அதெல்லாம் ஒண்ணுமில்ல மேடம்.வொய்ஃப் சொன்னதுக்காக வரவேண்டிதா போச்சு மத்தபடி நோ ப்ராப்ளம்” என மேலும் குழைந்தவன் வாசல் அருகே சென்றதும்
“நாமெல்லாம் பக்கத்து பக்கத்து வீடு ஒருத்தருக்கொருத்தர் ஒத்தாசையா இருக்கணும்.நீங்களும்,சாரும் நாளைக்கு எங்க வீட்டுக்கு லஞ்சுக்கு வாங்களேன்” அடப்பாவி என்னை போட்டு அந்த கிழி கிழித்தானே இப்பொழுது நான் வேலையிலிருக்கும் சமயம் பார்த்து மதிய உணவுக்கு கூப்பிடுகிறானே.மூளை சூடாகி காது புகைந்தது.கண்டிப்பாக வருகிறேன் என அவள் சொல்லித் தொலைத்ததில் குற்ற உணர்ச்சியிலிருந்த என் மனம் சந்தேக உணர்ச்சிக்கு தாவியது.கொஞ்ச நாட்களாக எனக்கு நிலை கொள்ளவில்லை.என் மனைவியையும் பக்கத்து விட்டுக்காரனையும் கண்கானிப்பதே வேலையாய் போனது.மனைவிக்கு தெரியாமல் அவள் கைபேசியை பலமுறை குடைந்தேன் பெரிதாய் எதும் கிட்டவில்லை.அவள் துணி உலர்த்த,துணி துவைக்க,வீடு பெறுக்க என வெளியே செல்லும் பொழுதெல்லாம் அவளுக்கே தெரியாமல் கண்கானித்தேன்.அப்படித்தான் ஒருமுறை பக்கத்து வீட்டை பார்த்து அமைந்திருக்கும் காம்பவுண்ட் அருகே என் மனைவி காய்ந்த துணிகளை எடுத்துக் கொண்டிருந்தாள் நான் ஒரு மூலையில் மொட்டை மாடிக்கு செல்லும் படிக்கட்டின் அருகே நின்று அவளையும் பக்கத்து வீட்டு புல்வெளியில் நின்று புத்தகம் படித்துக் கொண்டிருந்த அந்த தடிமாடையும் கண்கானித்தேன்.அவன் வெறும் முண்டா பனியனோடு நின்று படித்துக் கொண்டிருந்தது வேறு என்னை ஏகத்துக்கும் எரிச்சல்படுத்தியது.நான் அந்த தடிமாடை வெகுநுட்பமாக கண்கானிக்கும் பொழுது சட்டென என் மனைவி என்னை கவனித்துவிட்டாள்.வேகவேகமாக வீட்டுக்குள் சென்றவள் பால் பாத்திரத்தை அடுப்பில் படாரென வைத்தாள்.நான் அமைதியாய் வீட்டினுள் நுழைந்து அவள் அருகே சென்று அமைதியாய் நின்றேன்.

”நான் உங்களுக்கு என்னங்க குறை வெச்சேன்?” கலங்கிய கண்களுடன் அவள் சொன்னது எனக்கு புரியவில்லை.பிறகுதான் விளங்கியது அந்த தடிமாடின் அருகே கயல்விழி நின்றிருந்திருக்கிறாள்.இவள் நான் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என நினைத்து பொங்கிவிட்டாள்.அட ஆண்டவா ஒரு வாரத்துக்கு நான் மூளைச்சாவடைய முடியாதா?
அடுத்து வந்த நாட்கள் முற்றிலும் வேறாய் இருந்தது.கயல்விழி இப்பொழுதெல்லாம் சிநேகமாய் என்னை பார்க்கிறாள்.நான் மொட்டைமாடியில் நிற்பது தெரிந்தால் அவள் புல்வெளிக்கு வந்து என்னுடன் சங்கேத விழிமொழியில் பேசுகிராள்.பார்க்கும் ஒவ்வொரு நொடியும் புன்னகைக்கிறாள்.எனக்கு உலகமே மாறிவிட்டதாய் தோன்றியது.சில நாட்கள் கழித்து அவளை என் அலுவலகத்தின் அருகே ஏதேச்சையாக சந்தித்தேன்.உடனே காஃபி சாப்பிட சென்றோம்.பிறகு திட்டமிட்ட சந்திப்புகள் தொடர்ந்தது.ஒருவரை விட்டு ஒருவர் லஞ்ச் சாப்பிடாத நிலைமைக்கு சென்றோம்.இப்பொழுதெல்லாம் என் மனைவியை நான் வீணாக சந்தேகப்படுவதில்லை.



கயல்விழியின் குடும்ப சுழ்நிலைகளெல்லாம் அத்துப்படியானது எனக்கு.அவளுக்கு பலமுறை நிறைய அறிவுரைகளை மானிடவியல்,அறிவியல் ரீதியாக அள்ளிவிட்டு நான் புத்திசாலியாகியிருந்தேன்.அவள் வீட்டில் கயல் மட்டும் தான் வேலைக்கு செல்கிறாள்,தனிக்குடித்தனம்,காதல் திருமணம்,பெற்றோர் ஆதரவு இல்லை,கணவன் வேலைக்கு செல்வதில்லை.அவளை பார்க்கும்போதே பாவமாய் இருந்தது.ஒரு பெண்ணுக்கு எத்தனை சோதனைகள்? ஆண்டவனை இந்த சமயங்களில்தான் நிற்க வைத்து கேள்வி கேட்க தோன்றுகிறது.திடீரென ஒரு நாள் கயல் என்னை கடைசியாய் பார்க்க வேண்டுமேன அழைத்தாள்.என்ன ஏதென புரியாமல் அவளை சந்திக்க சென்றேன்.கயல் தன் கணவனுக்கு தெரியாமல் ஏதோ வார சீட்டு எடுத்து அதை கட்ட முடியாமல் வட்டி கிட்டி என 3 இலட்சம் ஆகிவிட்டதாம்.நிலைமை மிகவும் மோசமாகிவிட்டதாகவும் கணவனுக்கு தெரிந்தால் கொன்று விடுவார் எனவும் ஆதலால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் சொன்னாள்.நான் அவளுக்கு முழுமுதல் உரிமையோடு திட்டு,அறிவிரை என அளித்து அரவணைத்தேன்.என் மனைவிக்கு தெரியாமல் தனிப்பட்ட என் அக்கவுண்டில் பத்து வருடமாய் சேமித்த ரூ.5,00,000 வைத்திருந்தேன்.என் சம்பளம் என்ன என்பது என் மனைவிக்கு தெரியாது குறிப்பிட்ட தொகையை கொடுத்துவிட்டு மீதியை இரகசிய அக்கவுண்டில் போட்டு வைத்திருந்தேன்.பாஸ் புக் கூட அலுவலகத்தில் தான் இருக்கும்.ஆகையால் எந்த பிரச்சனையும் இல்லாமல் கயலுக்கு உதவ முடிந்தது.கயல் சொன்னது சரிதான் அதுதான் நான் அவளை சந்தித்த கடைசி சந்திப்பு.

பெங்காலி பெண்ணின் கண்கள் அந்த கயலை நினைவுபடுத்தி என்னுள் கிளர்ச்சியை உண்டு பண்ணியது.நான் சொல்வதையெல்லாம் என் கண் வழியாக படிப்பது போல அவள் என்னையே பார்த்து கொண்டிருந்தாள்.எங்களிருவரை தவிர எல்லோரும் தூங்கிய நடுஇரவு என்னை பார்த்தபடியே அவள் படுக்கையிலிருந்து கீழிறங்கினாள்.என்னை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே கதவினருகே சென்றாள்.சட்டென புரிந்தது எனக்கு நானும் இறங்கி அவள் பின்னே நடந்தேன்.கழிவறை அருகே சென்றவள் என்னை பார்த்து சிரித்துவிட்டு உள்ளே நுழைந்து தாளிட்டுக் கொண்டாள்.நான் படபடக்கும் இதயத்துடன்,சலசலக்கும் காற்றில் நின்றிருந்தேன்.அவள் வெளியே வந்து என்னை ஆழமாய் பார்த்து உள்ளே போய் பார்க்கும்படி சைகை செய்துவிட்டு அதே மாயப்புன்னகையுடன் தன் படுக்கையை நோக்கி நகர்ந்தாள்.நான் வேகமாய் உள்ளே சென்றேன்.ஏதேனும் எழுதியிருகிறாளா?குறிப்புகள் இருக்கிறதா? முகவரி எழுதியிருக்கிறாளா? என 15 நிமிடம் கழிவறையை அலசினேன், பார்வையால்தான்.
ஏதும் கிடைக்கவில்லை.ஏமாற்றத்துடன் அவளைத் தேடி படுக்கையருகே சென்றேன்.அவள் இல்லை.ஏதோ மாயத்தை செய்துவிட்டு மறைந்த தேவதை போல மறைந்துவிட்டாள்.என் படுக்கைக்கு திரும்பினேன்.அதிர்ச்சியில் உறைந்தேன்.அவள் செய்த மாயம் என் பெட்டியை காணாமல் போக வைத்துவிட்டது.லுங்கி,பனியன் உட்பட எதுவும் அவளுக்கு பயன்படப்போவதில்லை ஆனால் அலுவலகத்துக்கு தர வேண்டிய அந்த ரூ.2,00,000 காசோலை?
கயலுக்கு குடுத்தது போக மிச்சமிருந்த இரகசிய கணக்கு நினைவுக்கு வந்தது.
நானெல்லாம் எப்ப திருந்தறது?