Sunday, 25 December 2011

தமிழக அரசியல்:திசை மாறும் பயணங்கள்-பாகம் 1

உத்திரபிரதேசம்,தமிழகம் இந்த இரு மாநிலங்களில் நடக்கும் மாற்றங்கள் இந்திய அரசியலில் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணுகிறது என்றால் அதுதான் உண்மை,வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தின் அரசியல் இந்தியாவின் முக்கியமாக பார்க்கப்படும் அரசியல் தளங்களில் ஒன்று.பலமுறை இந்திய அரசியலை ஆட்டிப்படைத்திருக்கின்றது தமிழக அரசியல் என்று சொன்னால் அது கொசுறுதான்.அந்த அரசியலின் நிகழ்வுகள் எல்லாம் பெரும்பாலும் தி.மு.க, அ.தி.மு.க என்ற இரு அசுர பலம் கொண்ட கட்சிகளை மையப்படுத்தித்தான் நடந்து கொண்டிருக்கின்றது. ஆனால் இன்று தமிழகத்தின் அரசியல் போக்கின் எதிர்காலம் வேகமாக பல மாற்றங்களை நோக்கி செல்கிறது.அதற்கு முக்கியமான கட்சிகளின் எதிர்காலம் என்னவென பார்த்தல் அவசியம்.

தி.மு.க

1949 ஆம் ஆண்டு தி.மு.க அறிஞர் அண்ணாதுரையால் கொட்டும் மழையில் துவக்கப்பட்ட பொழுது அளப்பரிய தொண்டர்கள் உணர்ச்சிவயப்பட்டு கூடியிருந்தனர்.அன்று கூடிய தொண்டர் பெருமக்கள் தான் இன்று வரை தி.மு.க வின் அடித்தளம்.அண்ணாவின் ஆணை ஏற்று ஆளும்வர்க்கத்தை அடித்து துவம்சம் செய்ய திசை தோறும் தளபதிகள் இருந்தனர்.நெடுஞ்செழியன்,கருணாநிதி,எம்.ஜி.ஆர்,ஈ.வி.கே.சம்பத்,கண்ணதாசன்,அன்பழகன் என அந்த பட்டியல் வெகு நீளம்.அண்ணாவின் கட்டளையை சிரமேற்கொண்டு இவர்கள் முன் செல்ல இவர்கள் பின்னால் தன்னலம் மறந்து, தான் வாழும் தமிழ்குடி மேன்மையடைய வேண்டும்,ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேற வேண்டும் என்னும் வெறி கொண்ட தொண்டர்படை செல்லும்.தி.மு.க வின் போராட்டம் நடக்கின்றது என்றால் அது ஆளும் காங்கிரசு கட்சிக்கு பெரும் நெருக்கடியாக இருந்தது.தி.மு.க வை அடக்குவதாகத் தெரிந்தால் மாணவர்கள்,கலைஞர்கள்,பொதுமக்கள், பத்திரிக்கைகள் என பல முனையிலிருந்து கண்டன அம்புகள் பாயும்.


அத்தகையதோர் மாற்று சக்தியாக தி.மு.க சீறிப்பாய்ந்து 1967 ல் ஆட்சியைப் பிடித்தது தமிழை உயிரென சுவாசித்து இந்தி எதிர்ப்புப் போரட்டத்தில் தமிழுக்காக உயிர் நீத்த மாணவர்களால்.தி.மு.க வின் தொடக்க காலத்தில் அதன் சமூக நீதிப் பயணங்கள் ஒடுக்கப்படோரை தலைநிமிர வைத்தது.மத்திய அரசு இடஒதுக்கீடு 50% க்கும் மேல் செல்லக் கூடாது என சொன்ன போது 69% குடுத்தே தீருவோம் என உறுதியாய் நின்று வென்று காட்டிய கட்சி தி.மு.க.அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் நிமிர்ந்து நின்று தொண்டாற்றிய இயக்கம் அது.தன் பிள்ளைகளுக்கு உதயசூரியன்,கருணாநிதி,அண்ணாதுரை,செழியன் என பெயர் வைப்பது மிக சாதாரணமாக நடந்தது. எது வரை? கருணாநிதி என்னும் மனிதர் அதன் தலைவராகும் வரை.


 பதவி சுகமும்,அதிகார வாய்ப்பும் கிடைத்ததும் அதை விடாமல் ருசிக்கத் துடித்தவர் அதற்குத் தேவையான காரியங்களை இயற்றி தன்னையே நிரந்தர தலைவராக நிலை நிறுத்தியிருக்கிறார்.அவருடைய இந்த கபட நாடகம் தொண்டர்களுக்கும் வழிகாட்டுதலாக அமைந்தது.பணம் சேர்க்க தலைவர் பல வழிகளில் பூந்து விளையாடிய பொழுது அதில் சில வழிகளை தொண்டர்களும் பின்பற்றினர்.சந்தர்ப்பம் கிடைத்த இடத்தில் எல்லாம் திருடுவதில் தொடங்கி அதிகாரத்தை பயன்படுத்தி திருடுவதற்கான வழிகளை தாங்களே உருவாக்கத் தொடங்கினர்.எம்.ஜி.ஆரால் 14 ஆண்டு காலம் வனவாசம் கண்ட பின்பு மீண்டும் அத்தகைய நிலை தனக்கு வந்துவிடக்கூடாதென தமிழகம் முழுக்க தன் கட்சியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க தன் பிள்ளைகளையே தனக்கு தளபதியாக்கினார்.வை.கோ என்னும் மாபெரும் சக்தி இதனால் கட்சியிலிருந்து விலக்கப்பட்ட போது தி.மு.க வே கிடுகிடுத்தது. வடக்குக்கு ஒருவர் தெற்குக்கு ஒருவர் என பிரித்து வைத்துத் தொடங்கிய பின் கொஞ்சம் கொஞ்சமாக மருமகன்,மகள்,மனைவிகள் என விடாமல் அனைவரையும் கட்சிக்குள் திணித்தார்.அதிகார மையங்கள் பல இடங்களில் உருவானது. தலைவரின் இதே பாணியை மாவட்ட அளவில் அனைவரும் பின்பற்றினர்.தமிழினம் மீட்கப்படும் என நம்பி கட்சிக் கொடியை தூக்கிப் பிடித்த தொண்டர்கள் எல்லாம் மனமொடிந்து ஒதுங்கினர்.

தொடக்கத்தில் தமிழர் வாழ்வே தன் இலட்சியம் என ஆணைகள் பிறப்பித்த அரசு கருணாநிதியின் காலத்தில் தன் மீது எழும் விமர்சனங்களையும்,குற்றச்சாட்டுகளையும் திசைதிருப்பும் ஓர் கேடயமாக தமிழர் நலனுக்கான அறிவிக்கப்புகளை பயன்படுத்திக் கொண்டது.கட்சியின் அடிமட்ட தொண்டர்களின் உழைப்பால் வளர்ந்த கட்சியாகையால் அத்தொண்டர்களும் கருணாநிதியின் சந்தர்ப்பவாத தமிழர் பாசத்தால் மதிமயங்கி அவரை தமிழினத் தலைவராக கொண்டாடி மகிழ்ந்தனர்.கருணாநிதியின் தமிழாலும்,அவரின் புனை பேச்சுக்களிலும் மயங்கிய தமிழறிஞர்களும் அவ்வாறே அவரை ஏற்றுக் கொண்டனர். தி.மு.க வின் ஆட்சியில் எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என்னும் தோற்றப்பாடு வந்து விட்ட பின் பண வெறி கொண்ட ரவுடிகள்,முதலாளிகள்,முறைகேடுகளில் ஈடுபடுவோர் அனைவரும் முடி முதல் அடி வரை உள்ள அனைத்து அதிகார மையங்களில் இணைந்து தங்களை கட்சி விசுவாசி போல காட்டி பணத்தை கொள்ளை கொள்ளையாக சுருட்டினர்.அதிகார மையங்களும் பணமே குறிக்கோள் என இருந்ததால் அத்தகையோரின் இருப்பை விரும்பினர்.கொள்கைக்காக பதவியை துச்சமென உதறிய தி.மு.க, கருணாநிதி காலத்தில் எப்பாடு பட்டாவது பதவியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு வந்தது.ஈழ விவகாரத்தில் தி.மு.க வின் செயல்பாடு இதற்கு உதாரணம். கொள்கைக்கு வாக்கப்பட்ட தொண்டர்கள் எல்லாம் ஒதுங்கிவிட்ட படியால் அதிகார மையங்களில் ஒட்டிக் கொண்ட தொண்டர்கள் தான் இப்பொழுது தி.மு.க வில் பல்கி பெருகியிருக்கின்றனர்.பெயிலில் வந்த கனிமொழிக்கு கிடைத்த வரவேற்பு ஒரு உதாரணம்.மெதுவாக விழித்துக் கொண்ட தமிழுணர்வாளர்கள் கருணாநிதியின் துரோகத்தை தோலுரித்துக் காட்டிக் கொண்டிருப்பது கண்கூடு.உண்மையான தொண்டர்களை இழந்ததால் இக்கட்சி எப்படிப்பட்ட நிலையை அடைந்திருக்கிறது என பார்த்தோமானால் தொடக்க காலத்தில் தி.மு.க ஆளுங்கட்சியையோ,மத்திய அரசையோ எதிர்க்க வேண்டுமானால் எதிர்ப்போடு நிறுத்த மாட்டார்கள் அரசாங்கத்தையே அதிர வைக்கும்படி போராட்டங்களை நடத்துவார்கள்.ஆனால் தமிழரின் உயிராதார பிரச்சனையான முல்லைப் பெரியாறு விவகாரத்தில் அரை நாள் உண்ணாவிரதம்,மனித சங்கிலியோடு முடித்துக் கொண்டிருக்கின்றது.கட்சியின் தலைமைக்கு தொண்டர்கள் மேல் நம்பிக்கை இல்லை.காசுக்கும்,பதவிக்கும் கட்சியில் சேர்ந்தவர்கள் போராட்டம் எல்லாம் செய்யமாட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் தான்.மாவட்ட தலைமைகளும் ஆளுங்கட்சியின் நடவடிக்கை பாயுமோ என்ற பயத்தில் பதுங்கிக் கொண்டிருப்பது வெட்ட வெளிச்சம்.

எதிர்காலம்:
#தி.மு.க வின் அடிநாதமான விசுவாசமான தொண்டர்கள் இப்பொழுது இல்லை.
#குறைந்தபட்சம் 10 அதிகார மையங்கள் இருப்பதால் கருணாநிதிக்குப் பிறகு அந்த கட்சி ஒற்றுமையாய் இருப்பது போல தோற்றத்தை உருவாக்க முயன்று  தோற்கும்.கட்சி உடையாமல் ஒற்றுமையாய் இருந்தாலும் அது இன்னுமொரு தமிழக காங்கிரசு கட்சி போல கோஷ்டி அரசியலில் சீரழியும்.தலைமையிடத்துக்கு போட்டி தொடங்கி பின் அது மாவட்ட செயலாளர் நியமனம்,வேட்பாளர் தேர்வு,போராட்டம் நடத்துதல் என பல்வேறு நிலைகளில் வெளிப்படையான மோதல் நடக்கும்.
#இருக்கும் கொஞ்ச நஞ்ச சுயநல தமிழுணர்வாளர்களின் ஆதரவும் கருணாநிதிக்குப் பின் இருக்காது.
#தேசிய அரசியலில் 15 வருடங்களாக தி.மு.க செலுத்தி வரும் ஆதிக்கம் கருணாநிதிக்குப் பின் நடக்காது.
#கருணாநிதி மேல் குறைந்த பட்ச பாசத்தோடு இருக்கும் பெரியவர்களும்,முதலாளிகளும் அவருக்குப் பின் கழன்று கொள்வர்.
#கருணாநிதிக்குப் பின் ஒரு தலைமையில் தொண்டர்கள் ஒருங்கினைவது எக்காலத்திலும் நடக்காது.தான் சார்ந்த ஒரு மரத்தை விட்டு இன்னொரு மரத்திற்கு எந்த மிருகமும் அவ்வளவு எளிதில் தாவாது அப்படியே தாவினாலும் மரியாதை இருக்காது என்பது அதற்குத் தெரியும்.ஆகையால் தன்னுடைய மரத்தை கொம்பு சீவி விட்டு தன்னுடைய இருப்பை உறுதி செய்து கொள்ளவே எல்லா மிருகங்களும் முனையும்.அதற்குப் பெயர் தான் SURVIVAL OF THE FITTEST.

அ.தி.மு.க

நிகழ்காலம்-ஜெயலலிதா
எதிர்காலம்-ஜெயலலிதா

ஜெயலலிதாவுக்குப் பின்?

பார்ப்பன கும்பல் தலைமையில் ஆரிய சமாஜமாக மாறலாம் அல்லது தேவரின மக்களின் ஜாதி சங்கமாக சுருங்கலாம். ஆனால் ஒரு கட்சியாக வெகுஜன ஆதரவோடு இயங்க வைப்பது நிச்சயம் வாய்ப்பில்லை.ஏனெனில் எம்.ஜி.ஆருக்குப் பின் ஜானகியா? ஜெயலலிதாவா? என்னும் கேள்வி எழுந்தது ஆனால் ஜெயலலிதா உள்ள வரை வாரிசு என யாரும் உருவாகப் போவதில்லை.அவருக்குப் பின் யார் என கேள்வியில் பொருத்திப் பார்க்கக் கூட மக்கள் ஆதரவு பெற்ற தலைவர்கள் அங்கே இல்லை இனியும் வரப்போவதில்லை.

அப்படியானால் இவர்கள் இருவருக்கு பின்னால் என்ன நடக்கும்?

அடுத்த பாகத்தில் பார்ப்போம்.
                                                                                                                       -தொடரும்

No comments:

Post a Comment