Monday 19 December 2011

வெடித்த அணுஉலை-தவிக்கும் அரசு.



ஒரு அணுஉலை வெடித்ததால் தவித்துக் கொண்டிருக்கிறது அரசு.மக்களுக்காக நம்ம அரசாங்கம் தவிக்குதா என்று ஆச்சரியப்பட வேண்டாம் நடப்பது இங்கே அல்ல ஜப்பானில்.கடந்த மார்ச் மாதம் ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் புகுஷிமா டாய்ச்சி அணு உலை விபத்துக்குள்ளானது நம் அனைவருக்கும் தெரியும்.அந்த விபத்திலிருந்து தான் உலக நாடுகள் தங்களுடைய அணுசக்தி தொடர்பான கொள்கைகளை மறுபரிசீலனை செய்யத் தொடங்கினர்.இந்த விபத்தை முன்னிட்டு தான் கூடங்குளத்திலும் அணு உலை வேண்டாம் என்று அனுதினமும் போராட்டங்களும்,ஆர்ப்பாட்டங்களும்,உண்ணாவிரதங்களும் நடைபெற்று வருகின்றன.சரி அந்த அணுஉலை விபத்திற்கு பிறகு என்ன நிலை என்பதை சற்று பார்ப்போம்.

ஒரு அணுஉலை சரியாக செயல்பட அதைச் சுற்றி சீரான தட்பவெட்பம் தேவை அதற்காகத் தான் அணுஉலையை சுற்றி குளிர்ந்த நீர் தொடர்ந்து பாய்ச்சப்பட்டு சீரான சூழ்நிலை பராமரிக்கப்படும்.ஜப்பானில் மார்ச் மாதம் அடித்த சுனாமி முதலில் உடைத்தது இந்த குளிர்நீர் பகுதியைத் தான்.மேலும் மின்சார வசதிகளும் தூள்தூளானது.இதனால் தான் கட்டுப்படுத்த முடியாத அணுவினை வெடித்து சிதறியது.அப்போது ஜப்பான் அரசு 20 கி.மீ சுற்றளவில் உள்ள மக்களை உடனடியாக வெளியேற்றியது சில நாட்கள் கழித்து 30 கி.மீ சுற்றளவில் உள்ள மக்களையும் அப்புறப்படுத்தியது.அந்த பகுதியின் மண் உட்பட அனைத்து விடயங்களும் கதிர்வீச்சு தாக்குதலுக்கு உள்ளானது. 

பிறகு நாள் கணக்காக பொறியாளர்களும், உழைப்பாளிகளும் உயிரைப் பணயம் வைத்து கதிர்வீச்சு அளவைக் குறைக்க படாதபாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.தற்சமயம் ஓரளவு கதிர்வீச்சை குறைக்கவும் செய்துள்ளனர்.வேலை முடியவில்லை மக்களே இன்னும் அந்த இடத்தை பழைய நிலைக்கு கொண்டுவர 40 வருடங்கள் ஆகும் என அந்நாட்டு அரசே அறிவித்துள்ளது.அது மட்டுமல்ல நிலைமையை சீராக்க இனிமேல் தான் புதிய புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.சரி இதே போன்றதொரு விபத்து நம் நாட்டில் முக்கியமாக கூடங்குளத்தில் நடந்தால் என்னாகும்? சற்று கற்பனைகளை விரித்தால் கொடூரமான காட்சிகள் தான் தாண்டவமாடுகிறது. அணுஉலை வெடித்தவுடன் நடவடிக்கை வருகிறதோ இல்லையோ நஷ்டஈடு தான் வரும். மக்களைக் காக்கும் முன் அணுஉலையில் பணி செய்யும் வெளிநாட்டினர் இலவச பயணச்சீட்டில் அவரவர் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவர். அதெல்லாம் கூட பரவாயில்லை ஜப்பான் அரசைப் போல இந்திய நாட்டு அரசாங்கம் அவ்வளவு வேகமாக நிலைமையை சீர் செய்யுமா? கண்டிப்பாக இல்லை. 40 ஆண்டு காலம் ஒரு தரிசில் நிலத்தை கதீர்வீச்சு இல்லாத இடமாக மாற்ற செலவு செய்யும் காசுக்கு காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடத்தலாம் என கொள்கை முடிவெடுத்து கூடங்குளத்தை அபாயகரமான பகுதியாக அறிவித்துவிட்டு தமிழ்நாட்டுக்கு டெல்லியில் இருந்தே அஞ்சலி செலுத்திவிடும். சரி நடக்கப் போவது இருக்கட்டும் அணுஉலையில் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதா என வினவினால் நிச்சயமாக உண்டு என சொல்லத்தான் முடிகிறது.

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் விளைவுகளை நாம் இன்றும் மறக்க முடியாது.அத்தகைய ஒரு சுனாமி தான் ஜப்பான் அணுஉலையை புரட்டிப் போட்டது.2004 ஆம் ஆண்டுக்கு முன் சுனாமி என்றால் என்னவென்றே இங்கு பலருக்கும் தெரியாது வந்த பின்பு பட்ட அவஸ்தை சொல்லிமாளாது.அத்தகையதோர் நிலநடுக்கமோ சுனாமியோ மீண்டும் வரவே வராது என அப்துல் கலாம் உட்பட எந்த விஞ்ஞானியாலும் அடித்துச் சொல்ல முடியாது என்பது தான் உண்மை.அதை விட வீரியமான நிலநடுக்கங்கள் இந்தியாவில் வர அதிக வாய்ப்புள்ளது என புவியியலாளர்கள் எச்சரித்துள்ளது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. 

அடுத்து தீவிரவாதம் கடல் வழியே வந்து மும்பை நகரத்தை துவம்சம் ஆக்கியது போல கடல் அருகே உள்ள அணுமின் நிலையங்களை வெடிக்கச் செய்தால் நம் நிலைமை என்ன? அணுஉலைக்கு உச்சபட்ச பாதுகாப்பு வழங்கப்படும் என நினைத்தோமானால் தன் பாராளுமன்றத்தையே தீவிரவாதிகளிடமிருந்து பாதுகாக்க முடியாத சூழ்நிலை தான் இந்திய உளவுத் துறையின் லட்சனம். சரி நம் அப்துல் கலாம் சொல்வது போல நவீன தொழில்நுட்பத்துடன் உருவான இந்த அணுஉலையில் உலகிலேயே இரண்டாவது முறையாக (முதல் உலை சீனாவில் உள்ளது) ”கோர் கேட்சர்(core catcher)” எனப்படுகிற தொழில்நுட்பம் நிறுவப்பட்டுள்ளதாம். அந்த கோர் கேட்சர் என்ன தெரியுமா? வழவழவென இருக்கும் செராமிக் கான்கிரீட் தான் இந்த அதிநவின தொழில்நுட்பம்.விபத்து ஏற்பட்டால் இந்த கான்கிரீட் அப்படியே அணுவின் மீது விழுந்து கதிரியக்கத்தை வெளியேற விடாதாம்.இந்த தொழில்நுட்பத்தின் நம்பகத்தன்மை எந்த அளவுக்கு உள்ளது என்பது இதுவரை நிரூபிக்கப்படவில்லை.எரிகிற நெருப்பை பரோட்டா மாவைப் போட்டு அணைப்பது போன்றது தான் இது.அணுவை இந்த தொழில்நுட்பம் தற்காலிகமாக மூடிமறைக்குமே தவிர அணு இயக்கத்தை நிறுத்திவிடாது. நெருப்பு எல்லை மீறினால் எந்த தொழிநுட்பத்தாலும் அதைக் கட்டுப்படுத்த முடியாது.அவ்வாறு அணுவைக் கட்டுப்படுத்தலாம் என யாராவது சொன்னால் அது சூரியனை சுவிட்ச் ஆஃப் செய்யலாம் என சொல்வதைப் போலத் தான்.

இந்தியாவின் மின்சாரத் தேவைக்கு அணுமின்சாரம் அத்தியாவசியம் அது இல்லாவிட்டால் நாடே இருளில் மூழ்கிவிடும் என பதறுவது வடிகட்டிய கயமைத்தனம். உண்மையை சொன்னால் மரபு வழி மின்சாரங்களான சூரிய ஒளி,காற்று ஆகியவற்றை இந்திய அரசு எந்த அளவுக்கு பயன்படுத்த முனைந்திருக்கிறது என பார்த்தால் அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.ஒரே ஒரு அணுஉலையை கட்டி முடிக்க 15 முதல் இருபது வருடங்கள் வரை ஆகின்றது.அதற்கு 15,000 முதல் 20,000 கோடி வரை செலவு செய்யப்படுகிறது.இந்த காலகட்டத்தில் சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் பெறுவதை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.ஒரு சராசரி புத்தகத்தை விட சற்று சிறியதாக உள்ள ஒரு சூரியஒளி செல்லிலிருந்து 45 மில்லி வாட்ஸ் மின்சாரம் கிடைக்கிறது.இதை நவீன தொழில்நுட்பங்கள் மூலம் செழுமைப்படுத்தினால் நாட்டின் பெருவாரியான மின்சாரத் தேவைகளை அளவில்லாத,மாசற்ற சூரியஒளி மூலமே பெற்றுவிடலாம்.வருடந்தோரும் உட்சபட்ச வெப்பத்தை உள்வாங்கும் தார் பாலைவனம் இதற்கு ஒரு வரபிரசாதம்.ஆனால் இத்தகைய முயற்சிகளுக்கு அரசு பிடிவாதமாக மறுத்து வருகிறது.யார் என்ன சொன்னாலும் என்ன உறுதிப்பாடு கொடுத்தாலும் அணுவினை என்பது மனிதனால் கட்டுப்படுத்த முடியாத ஒன்று.அத்தகைய விபத்திலிருந்து நம்மை காத்துக் கொள்வது நம் கையில் தான் உள்ளது என்பதே நிதர்சனம்.மேலும் பல அணு உலைகளை நிறுவப்போவதாக அரசு அறிவித்துள்ளது.அவற்றை எல்லாம் தடுத்து நிறுத்தி, செயல்படும் அணுஉலைகளை செயலிழக்கச் செய்ய மத்திய அரசை நிர்பந்திக்க வேண்டும்.
அணுஉலை அவசியம் வேண்டும் என தூபம் போடும் தினமலர் போன்ற போலி தேசியவாதிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும். நம் சந்ததிகளை காக்க மத்திய அரசை தீவிரமாக எச்சரிக்க வேண்டும்.

பின்குறிப்பு: எனக்கும் அமெரிக்காவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.அவ்வப்பொழுது ஹாலிவுட் திரைப்படங்கள் மட்டும் பார்ப்பேன்.

No comments:

Post a Comment