Thursday, 19 January 2012

இரயிலும் நானும் அவளும்

சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம்...

என்னடா மறுபடியும் ட்ரெயினு,ஜன்னலு,காத்து,மழைனு ஒரு கதையானு கடுப்பாகாதீங்க.தினமும் தமிழ்நாடு முழுக்க லட்சக்கணக்கான பேர் ட்ரெயின்ல போறான்.எல்லா பயலுக்குள்லயும் ஒவ்வொரு கதை இருக்கு.அப்ப எனக்கு மட்டும் இருக்க கூடாதா? வந்தது வந்துட்டீங்க கொஞ்சம் பொறுமையா கேட்டுட்டு போங்க.
நாகர்கோவில் செல்வதற்காக சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தின் நடைமேடையில் நின்று கொண்டிருக்கிறேன்.இன்னும் இரயில் வரவில்லை.சிறிது நிமிடங்களில் வந்து விடுமென வெகு நேரமாய் அறிவிப்பாளர் நம்பிக்கையை விதைத்துக் கொண்டிருந்தார்.அவரை நம்பி போர்களத்தில் முன்வரிசையில் நிற்பது போல எல்லோரும் பெட்டியை கையில் ஏந்தியவாறு நடைபாதையின் முனையில் ஆயத்தமாக காத்துக் கொண்டிருந்தனர்.இரயில் கொல்கத்தாவிலிருந்து ஊர்ந்து கொண்டே வருவதால் மிகவும் அயர்வாக வந்து சேர்ந்தது.எனக்கான பெட்டியை தேடி கண்டுபிடித்து உள்ளே நுழைந்தவுடன் வழக்கமாக ஏற்படும் அந்த அனுபவம் தலையை கிறுகிறுக்கச் செய்தது.வீட்டில் குளிர்சாதன பெட்டியில் தக்காளி சாதத்தையும்,இடலி மாவையும்,தயிரையும்,காய்கறிகளையும் வைத்துவிட்டு ஸ்விட்சை போடாமல் விட்டு பத்து நாள் கழித்து திறந்தால் எப்படி குப்பென்று ஒரு துர்நாற்றம் அடிக்குமே அதே போல ஒரு துர்நாற்றம் இந்த இரயில் பெட்டியிலும் வீசியது.வழக்கமாய் வடநாட்டு மக்களின் உடலில் ஒரு வித்தியாசமான வாசம்(???) வீசும்.அதுவே எனக்கு ஏக அலர்ஜி இதில் இவர்கள் 2 நாள் குளிக்காமல் கொல்கத்தாவிலிருந்து வந்தால் எப்படி இருக்கும்?.இந்திய தேச ஒருமைப்பாட்டுக்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டு என்னுடைய படுக்கையை தேடி ஓடினேன்.படுக்கை எண் 38, நடு படுக்கை, சட்டென ஏறி படுத்துக் கொண்டேன்.உடை மாற்றிக் கொள்ள மனதில்லை பெட்டிக்குள் அலுவலகத்திடம் சமர்ப்பிக்க வேண்டிய ரூ.2,00,000 காசோலை உள்ளது ஆதலால் பாதுகாப்பு காரணங்களுக்காக பெட்டியை தலைமாட்டில் வைத்துக் கொண்டேன்.சிறிது நேரத்தில் துர்நாற்றங்களை சிதறடிக்கும் ஒரு வசந்தம் வீசியது.நான் படுத்திருந்த படுக்கைக்கு நேர் எதிரே ஜன்னலோரம் அமைந்திருந்த இரண்டு படுக்கைகளில் மேல் படுக்கையில் ஒரு சிறகில்லாத தேவதை அமர்ந்திருந்தாள்.அவள் கண்கள் எத்தனை நேரமாய் ஊடுருவிக் கொண்டிருந்தது எனத் தெரியவில்லை இருப்பினும் என் இதயத் துடிப்புகள் ஒவ்வொன்றும் அவளின் விழியசைவுக்கு இசைவாய் துடித்தது.வங்காளப் பெண்களுக்கு உரிய பால் நிறம்,உடலை ஒட்டிய சுடிதார் அணிந்தபடி அளவான ரசகுல்லா போன்ற தேகம்,குலாப் ஜாமூனின் சுவை ஒன்றிய இதழ்கள்.இதில் என்னை மிகவும் நெருக்கியது அவள் விழிகள், சத்தியமா.
ஏனோ தெரியவில்லை அவள் கண்கள் எனக்கு கயல்விழியை நினைவுபடுத்தியது.
கயல்விழி... அலுவலகம் செல்வதற்காக விடிந்தும் விடியாத அப்பொழுதில் எழுந்து மொட்டைமாடியில் நின்று பல்விளக்கிக் கொண்டிருந்தேன்.அது ஏன் மொட்டைமாடியில் என கேட்கலாம்.கேட்காவிட்டாலும் சொல்வேன்.காலை கடன்களில் ஒவ்வொருவருக்கும் சில வினோத பழக்கவழக்கங்கள் இருக்கும் நாளிதழ் படித்துக் கொண்டு பல்விளக்குவது,கடன் கழிப்பது,பல் விளக்கியவுடன் சிகரெட் பிடிப்பது,காபி குடித்த பின் கழிவறை செல்வது என. இப்படி எனக்கு சுற்றுப்புறத்தை வேடிக்கை பார்த்தபடி மொட்டை மாடியில் நின்று பல்விளக்குவது பிடித்தமான ஒன்று. அன்றும் அப்படி பல்துலக்கையில் கயல்விழி கண்ணில் பட்டாள்.வாயிலிருந்து பல்துலக்கி தவறி விழுந்தது கூட தெரியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.அப்படி ஒரு நேர்த்தியான அழகை என் பாட்டன் காலத்திலிருந்து யாரும் பாத்திருக்க மாட்டார்கள்.பொதுவாக நேர்த்தியான விடயங்களின் உவமைக்கு ஓவியத்தையும்,கவிதையையும் புனைவதுண்டு.ஆனால் இவளிடம் அடியும்,சீரும்,நிறங்களும் பிச்சையெடுக்க வேண்டும்.ஈரத்துணியுடன் தலையில் கொண்டையிட்டு துணி உலர்த்திக் கொண்டிருந்தவள் சட்டென என்னை நிமிர்ந்து பார்த்தாள்.பள்ளிக்கூட சிறுவனின் முதல் பரவசம் போல உடல் நடுங்கியது.என்ன ஒரு கூர்மையான கண்கள்.மாரை மறைத்த சேலையை இழுத்து மேலும் மறைத்தவள் “என்னங்க” என விளித்தாள்.
“என்னடீ?” அவள் வீட்டினுள் இருந்து ஒரு ஆண் குரல்.
அய்யய்யோ அவளுக்கு திருமணமாகிவிட்டதா? இவ்வளவு நேரம் இரசித்தவன் அவள் கழுத்திலிருந்த தாலியை கவனிக்க மறந்துவிட்டேன். கிழே விழுந்திருந்த பல்துலக்கியை அப்படியே எடுத்து வாயில் வைத்து குடுகுடுவென கீழே இறங்கினேன்.நான் வீட்டுக்குள் நுழைவதற்கு முன் ஒரு ஆஜானபாகுவான ஆண்மகன் வரவேற்பறையில் புருவத்தை சுருக்கிக் கொண்டு நின்றிருந்தான்.வாயில் நுரையுடன் நான் அவனருகே செல்ல
”நீதான் மொட்டமாடில நின்னு என் பொண்டாட்டிய பாத்தியா?”
எடுத்த எடுப்பிலேயே மானம் போனதால் நானே முன்வந்து சமாதானம் அறிவித்தேன்.

”பக்கத்து வீட்டுல யாரோ புதுசா வந்திருக்காங்கன்னு தாங்க பார்த்தேன்.தப்பா எல்லாம் பாக்கலங்க” முடிந்தவரை தணிந்த குரலில் பம்மினேன்.

”ஓ புதுசா வந்தா பாப்பியோ? அதுக்கு தான் பொண்டாட்டிய கூட்டீட்டு இங்க குடி வந்தமா.நானும் ஏரியாக்கு புதுசுதான் உன் வீட்டுல இருக்குற எல்லாரையும் கூப்பிடு நான் நல்லா பாத்துட்டு போறேன்” அவன் இதை சொல்லி முடிக்கவும் என் மனைவி சமையலறையிலிருந்து வரவேற்பறைக்கு வரவும் சரியாய் இருந்தது.

”வாங்க உட்காருங்க” என் மனைவி வந்தவனை வரவேற்றாள்.
உடனே அவன் அருகிலிருந்த சோபாவில் அமர்ந்தான்.

”என்னாச்சுங்க ஏதாச்சு பிரச்சனையா?” மீண்டும் அவனிடம் விசாரித்தாள்.

”ஒன்னுமில்ல மேடம்.என் வொய்ஃப் வேலையா இருக்கும் போது உங்க ஹஸ்பெண்ட் மாடில இருந்து முறைச்சு பாத்திருக்காரு.அவ பயந்து போய் என்கிட்ட வந்து சொன்னா.அது தான் வந்து கேட்க வேண்டிதா போச்சு” இப்படி திடீரென தொலைபேசியில் க்ரெடிட் கார்ட் விற்க முயலும் கால் செண்டர் மக்களை போல அவன் ஆங்கிலத்தில் குழைந்ததும் எனக்கு ஏதோ தவறாகப்பட்டது.
என் மனைவி என்னை முறைத்து பார்த்ததில் இன்னும் ஒரு வார சண்டைக்கு தேவையான திடமான மனநிலைக்கு இப்பொழுதே பயிற்சியை தொடங்கினேன்.

”அவர் தெரியாம பாத்திருப்பார்.இனிமேல் அப்படி எதும் நடக்காம பாத்துக்கறேன் மன்னிச்சிருங்க” கல்யாணமான புதிதில் மட்டும் நான் கண்ட அந்த முழுநீள புன்னகையுடன் அவள் பதிலளித்தது என் உள்ளத்தை குடைந்து கிளறியது.

”அய்யோ அதெல்லாம் ஒண்ணுமில்ல மேடம்.வொய்ஃப் சொன்னதுக்காக வரவேண்டிதா போச்சு மத்தபடி நோ ப்ராப்ளம்” என மேலும் குழைந்தவன் வாசல் அருகே சென்றதும்
“நாமெல்லாம் பக்கத்து பக்கத்து வீடு ஒருத்தருக்கொருத்தர் ஒத்தாசையா இருக்கணும்.நீங்களும்,சாரும் நாளைக்கு எங்க வீட்டுக்கு லஞ்சுக்கு வாங்களேன்” அடப்பாவி என்னை போட்டு அந்த கிழி கிழித்தானே இப்பொழுது நான் வேலையிலிருக்கும் சமயம் பார்த்து மதிய உணவுக்கு கூப்பிடுகிறானே.மூளை சூடாகி காது புகைந்தது.கண்டிப்பாக வருகிறேன் என அவள் சொல்லித் தொலைத்ததில் குற்ற உணர்ச்சியிலிருந்த என் மனம் சந்தேக உணர்ச்சிக்கு தாவியது.கொஞ்ச நாட்களாக எனக்கு நிலை கொள்ளவில்லை.என் மனைவியையும் பக்கத்து விட்டுக்காரனையும் கண்கானிப்பதே வேலையாய் போனது.மனைவிக்கு தெரியாமல் அவள் கைபேசியை பலமுறை குடைந்தேன் பெரிதாய் எதும் கிட்டவில்லை.அவள் துணி உலர்த்த,துணி துவைக்க,வீடு பெறுக்க என வெளியே செல்லும் பொழுதெல்லாம் அவளுக்கே தெரியாமல் கண்கானித்தேன்.அப்படித்தான் ஒருமுறை பக்கத்து வீட்டை பார்த்து அமைந்திருக்கும் காம்பவுண்ட் அருகே என் மனைவி காய்ந்த துணிகளை எடுத்துக் கொண்டிருந்தாள் நான் ஒரு மூலையில் மொட்டை மாடிக்கு செல்லும் படிக்கட்டின் அருகே நின்று அவளையும் பக்கத்து வீட்டு புல்வெளியில் நின்று புத்தகம் படித்துக் கொண்டிருந்த அந்த தடிமாடையும் கண்கானித்தேன்.அவன் வெறும் முண்டா பனியனோடு நின்று படித்துக் கொண்டிருந்தது வேறு என்னை ஏகத்துக்கும் எரிச்சல்படுத்தியது.நான் அந்த தடிமாடை வெகுநுட்பமாக கண்கானிக்கும் பொழுது சட்டென என் மனைவி என்னை கவனித்துவிட்டாள்.வேகவேகமாக வீட்டுக்குள் சென்றவள் பால் பாத்திரத்தை அடுப்பில் படாரென வைத்தாள்.நான் அமைதியாய் வீட்டினுள் நுழைந்து அவள் அருகே சென்று அமைதியாய் நின்றேன்.

”நான் உங்களுக்கு என்னங்க குறை வெச்சேன்?” கலங்கிய கண்களுடன் அவள் சொன்னது எனக்கு புரியவில்லை.பிறகுதான் விளங்கியது அந்த தடிமாடின் அருகே கயல்விழி நின்றிருந்திருக்கிறாள்.இவள் நான் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என நினைத்து பொங்கிவிட்டாள்.அட ஆண்டவா ஒரு வாரத்துக்கு நான் மூளைச்சாவடைய முடியாதா?
அடுத்து வந்த நாட்கள் முற்றிலும் வேறாய் இருந்தது.கயல்விழி இப்பொழுதெல்லாம் சிநேகமாய் என்னை பார்க்கிறாள்.நான் மொட்டைமாடியில் நிற்பது தெரிந்தால் அவள் புல்வெளிக்கு வந்து என்னுடன் சங்கேத விழிமொழியில் பேசுகிராள்.பார்க்கும் ஒவ்வொரு நொடியும் புன்னகைக்கிறாள்.எனக்கு உலகமே மாறிவிட்டதாய் தோன்றியது.சில நாட்கள் கழித்து அவளை என் அலுவலகத்தின் அருகே ஏதேச்சையாக சந்தித்தேன்.உடனே காஃபி சாப்பிட சென்றோம்.பிறகு திட்டமிட்ட சந்திப்புகள் தொடர்ந்தது.ஒருவரை விட்டு ஒருவர் லஞ்ச் சாப்பிடாத நிலைமைக்கு சென்றோம்.இப்பொழுதெல்லாம் என் மனைவியை நான் வீணாக சந்தேகப்படுவதில்லை.



கயல்விழியின் குடும்ப சுழ்நிலைகளெல்லாம் அத்துப்படியானது எனக்கு.அவளுக்கு பலமுறை நிறைய அறிவுரைகளை மானிடவியல்,அறிவியல் ரீதியாக அள்ளிவிட்டு நான் புத்திசாலியாகியிருந்தேன்.அவள் வீட்டில் கயல் மட்டும் தான் வேலைக்கு செல்கிறாள்,தனிக்குடித்தனம்,காதல் திருமணம்,பெற்றோர் ஆதரவு இல்லை,கணவன் வேலைக்கு செல்வதில்லை.அவளை பார்க்கும்போதே பாவமாய் இருந்தது.ஒரு பெண்ணுக்கு எத்தனை சோதனைகள்? ஆண்டவனை இந்த சமயங்களில்தான் நிற்க வைத்து கேள்வி கேட்க தோன்றுகிறது.திடீரென ஒரு நாள் கயல் என்னை கடைசியாய் பார்க்க வேண்டுமேன அழைத்தாள்.என்ன ஏதென புரியாமல் அவளை சந்திக்க சென்றேன்.கயல் தன் கணவனுக்கு தெரியாமல் ஏதோ வார சீட்டு எடுத்து அதை கட்ட முடியாமல் வட்டி கிட்டி என 3 இலட்சம் ஆகிவிட்டதாம்.நிலைமை மிகவும் மோசமாகிவிட்டதாகவும் கணவனுக்கு தெரிந்தால் கொன்று விடுவார் எனவும் ஆதலால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் சொன்னாள்.நான் அவளுக்கு முழுமுதல் உரிமையோடு திட்டு,அறிவிரை என அளித்து அரவணைத்தேன்.என் மனைவிக்கு தெரியாமல் தனிப்பட்ட என் அக்கவுண்டில் பத்து வருடமாய் சேமித்த ரூ.5,00,000 வைத்திருந்தேன்.என் சம்பளம் என்ன என்பது என் மனைவிக்கு தெரியாது குறிப்பிட்ட தொகையை கொடுத்துவிட்டு மீதியை இரகசிய அக்கவுண்டில் போட்டு வைத்திருந்தேன்.பாஸ் புக் கூட அலுவலகத்தில் தான் இருக்கும்.ஆகையால் எந்த பிரச்சனையும் இல்லாமல் கயலுக்கு உதவ முடிந்தது.கயல் சொன்னது சரிதான் அதுதான் நான் அவளை சந்தித்த கடைசி சந்திப்பு.

பெங்காலி பெண்ணின் கண்கள் அந்த கயலை நினைவுபடுத்தி என்னுள் கிளர்ச்சியை உண்டு பண்ணியது.நான் சொல்வதையெல்லாம் என் கண் வழியாக படிப்பது போல அவள் என்னையே பார்த்து கொண்டிருந்தாள்.எங்களிருவரை தவிர எல்லோரும் தூங்கிய நடுஇரவு என்னை பார்த்தபடியே அவள் படுக்கையிலிருந்து கீழிறங்கினாள்.என்னை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே கதவினருகே சென்றாள்.சட்டென புரிந்தது எனக்கு நானும் இறங்கி அவள் பின்னே நடந்தேன்.கழிவறை அருகே சென்றவள் என்னை பார்த்து சிரித்துவிட்டு உள்ளே நுழைந்து தாளிட்டுக் கொண்டாள்.நான் படபடக்கும் இதயத்துடன்,சலசலக்கும் காற்றில் நின்றிருந்தேன்.அவள் வெளியே வந்து என்னை ஆழமாய் பார்த்து உள்ளே போய் பார்க்கும்படி சைகை செய்துவிட்டு அதே மாயப்புன்னகையுடன் தன் படுக்கையை நோக்கி நகர்ந்தாள்.நான் வேகமாய் உள்ளே சென்றேன்.ஏதேனும் எழுதியிருகிறாளா?குறிப்புகள் இருக்கிறதா? முகவரி எழுதியிருக்கிறாளா? என 15 நிமிடம் கழிவறையை அலசினேன், பார்வையால்தான்.
ஏதும் கிடைக்கவில்லை.ஏமாற்றத்துடன் அவளைத் தேடி படுக்கையருகே சென்றேன்.அவள் இல்லை.ஏதோ மாயத்தை செய்துவிட்டு மறைந்த தேவதை போல மறைந்துவிட்டாள்.என் படுக்கைக்கு திரும்பினேன்.அதிர்ச்சியில் உறைந்தேன்.அவள் செய்த மாயம் என் பெட்டியை காணாமல் போக வைத்துவிட்டது.லுங்கி,பனியன் உட்பட எதுவும் அவளுக்கு பயன்படப்போவதில்லை ஆனால் அலுவலகத்துக்கு தர வேண்டிய அந்த ரூ.2,00,000 காசோலை?
கயலுக்கு குடுத்தது போக மிச்சமிருந்த இரகசிய கணக்கு நினைவுக்கு வந்தது.
நானெல்லாம் எப்ப திருந்தறது?









4 comments:

  1. நல்ல அனுபம் சார்,
    மனைவியை நேசி,மாற்றங்கள் தானக வரும்!


    உண்மைவிரும்பி.
    மும்பை.

    ReplyDelete
  2. சபலம் ஆணோடு ஒட்டி பிறந்தது...
    கருத்து அருமை...

    எனக்கு கொஞ்சம் அந்நியமான நடையாய் தெரிந்ததால் சில இடங்கள் கதையோடு ஒட்டாததாய் தோன்றியது..என் கணிப்பு தவறாய் கூட இருக்கலாம்..
    தொடரட்டும் உங்கள் மைப்பணி..

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி மயிலன் சார்...

      Delete