Wednesday, 30 November 2011

ஒரு காதலனின் கடுப்பு கவிதை
காதலித்துப் பார்...
தூக்கம் தூரமாகும்
அதிகாலை கண் எரியும்
ரீசார்ஜ் கடைக்காரன் உனக்கு நண்பனாவான்
ஏ.டி.எம் தேயும்
பெட்ரோல் டேங்க் புள்ளத்தாச்சி ஆகும்
பர்சுக்கு அடிக்கடி பிரசவம் நடக்கும்
நைட் ஷோ குறையும்
எச்.பி.ஓ மருவி சன்மியூசிக் ஆகும்
டி சர்ட்டுகள் துவைக்கப்படும்
கண்ணாடி காறித் துப்பும்
மேட்சிங் கலர் சட்டை தேடியே பீரோ சரியும்
உனக்கு பிடித்த கலர் மறந்து போகும்


படிப்பு பப்ளிக் ஆகும்
சரக்கு சீக்ரெட் ஆகும்
ஆல் லேடீஸ் ஆர் மை எல்டெர் சிஸ்டர்,யங்கர் சிஸ்டர் ஆவார்கள்
நண்பர்கள் ஒண்ணு விட்ட ரிலேசன் ஆவார்கள்
"அவ கிட்ட கேட்டுட்டு சொல்றேன்"
கமிட்மெண்டுகளுக்கு இதுவே விடையாகும்
ஓட்டல் மெனுக்கள் மனப்பாடம் ஆகும்
முதல் நாள் முதல் ஷோ-பழைய கதை ஆகும்
பலமுறை கண்ணம் கிள்ளி
கொஞ்சப்பட்ட குழந்தைகள் டார்ச்சராகும்
நாய்குட்டிகள் தெறித்து ஓடும்

வானம், நிலா, பூ , காற்று, இதயம், கடல், மேகம்
எல்லாம் உன் கவிதைக்கு கண்டனக் கூட்டம் போடும்
மட்டமான காதல் படங்களை கூட
ஃபீலிங்கோடு பார்க்க வேண்டி வரும்
ஆமாம் போட்டு கழுத்து வலிக்கும்
பெண் நண்பர்களுக்கு ஆண் பெயர் வைக்கப்படும்
மொத்தத்தில் லைஃப் நல்லாருக்கும்...


Sunday, 20 November 2011

வஞ்சம்-பகுதி 2
                                              வஞ்சம் பகுதி 2- நல்ல விசயம்

காதலோடு உறவாடியது போதும் இனி கணிணியோடு உறவாடலாம் என சன்னமாய் விடிந்த அந்த காலைப் பொழுதில் அலுவலகம் நோக்கி விரைந்தனர் சிவாவும், ஐசுவர்யாவும்.365x24 மணிநேரமும் வாகனங்கள் புதுவெள்ளமாய் பெருக்கெடுக்கும் பெங்களூரு சாலைகளில் முடிந்தவரை வேகமாய் ஊர்ந்தனர் இருவரும்.

ஒருவழியாக கரை கண்டு அலுவலகத்தை அடைந்தனர். சிலநூறு கணிணிக் காதலர்கள் நிரம்பிய இடத்தில் தன்னுடைய மேசை அலுவலகத்தின் ஒரு மூலையில் இருந்தது சற்று அசௌகரியமாய் இருந்தது.தெரிந்த முகங்களுக்கு புன்னகையும், உயர் அலுவலர்களுக்கு காலை வணக்கமும் சொல்லிச் சொல்லியே அலுத்தான்.சம்பளம் வாங்காத வேலையாக அது ஒரு சங்கடம்.ஒரு வழியாக மேசையை அடைந்து இருக்கையில் அமர்ந்தான்.

“குட்மார்னிங் சிவா” சுதாகரின் குரல் அவனை அழைத்தது. கறுப்பு நிறம், தடித்த உருவம்,பெரிய கண்கள், அளவான உயரம் என பார்ப்பதற்கு கறுப்பு கமலஹாசனைப் போல இருப்பான். சிவாவின் உண்மையான நண்பன் அவனுடைய நாட்குறிப்பு என்றே சொல்லலாம் அதே போலத்தான் சுதாகருக்கும் சிவா இருந்தான்.

“குட்மார்னிங் மச்சி, விக்கி வந்துட்டானா?” பதில் தெரிந்தே கேட்டான் சிவா.

“அவனா, நேத்து அவன் ஆளுக்கு பிறந்தநாள்னு சொல்லிட்டு ஸ்டார் ஹோட்டல்ல சரக்கு பார்ட்டி வெச்சிருக்காப்ல. நல்லா தண்ணி அடிச்சிட்டு இப்ப ஹேங்ஓவர்ல தலைவலினு படுத்துட்டு ஆபீஸ் வரல” இருவரும் ஒரே வீட்டைப் பகிர்ந்திருப்பதால் விக்கியால் சுதாகர் படும் தொல்லை கொஞ்சம் நஞ்சம் இல்லை.

“தெரியும், நாயி நேத்து இராத்திரி 2 மணிக்கு போன் பண்ணி ஒளறு ஒளறுனு ஒளறினான்.அவன சமாளிச்சுட்டு போன வெக்கறக்கு 3 மணி அயிடுச்சு” சிவா அலுத்துக் கொள்ள வழக்கமாய் நடக்கும் இந்த கூத்தை நினைத்து இருவரும் சிரித்தனர்.

“ஹரிணி எப்படி இருக்கா?” சற்று தணிந்த குரலில் சுதாகர் கேட்ட பொழுது பெருமூச்செறிந்து தங்களுடைய இயலாமையுடன் கலந்து பரவாயில்லை என்பது போல தலையாட்டினான்.

சிறிது நேரம் கணிணியை நோண்டியவன் சட்டென்று சுதாகரிடம் திரும்பி வாய் நிறைய புன்னகையுடன் “உனக்கு ஒரு சர்ப்ரைஸ் மச்சி” என்றான். சிவாவை நோக்காமலே அசிரத்தையாக ”என்னடா அப்பாவாக போறியா?” என சுதாகர் கேட்க “ஆமா” என குதூகலத்துடன் பதில் சொல்லிவிட்டு தன் பணியை தொடர்ந்தான் சிவா. “டேய் நான் கிண்டலுக்கு கேட்டேண்டா, நிஜமாவே டாடி ஆகிட்டியா?” இன்ப அதிர்ச்சியில் அலுவலகத்துக்கே கேட்கும்படி கத்தினான் சுதாகர்.இப்படி ஒரு எதிர்வினையை எதிர்பார்க்காத சிவா சுற்றி இருக்கும் அனைவரும் தன்னை கலவையான பார்வையுடன் பார்த்து சிரிக்க கேணை போல் ஓரவாய் மட்டும் கோணும்படி ஒரு சிரிப்பை உதிர்த்து விட்டு கடித்து விடுவது போல் சுதாகரைப் பார்த்தான். “இப்பிடியாடா கத்துவ?” சிவா நெளிந்ததில் சுதாகரும் தலையை சொரிந்து கொண்டே ”சாரிடா” என்க சிவா சிறிய புன்னகையுடன் சமாளித்தான். ”சிரிக்கறதெல்லாம் இருக்கட்டும் ட்ரீட் எப்படா?”

“பாக்கலாம்” கிண்டலாக பதிலளித்தான் சிவா.

“டேய் குறைமாசத்துல பொறந்தவனே, கல்யாணத்துக்கு முன்னாடியே அப்பா ஆயிட்டு பாக்கலாம்னு சொல்றியா? டபுள் ட்ரீட் வெச்சே ஆகணும்”

“தாராளமா”

“லீலா பேலஸ்?”

“டீல்”

இருவரின் பேச்சுவார்த்தை முடியவும் அலுவலக ஒலிபெருக்கியில் பொது மேலாளர் விசயராகவன் குரல் ஒலிக்கவும் சரியாக இருந்தது.

“குட்மார்னிங் மை டியர் ஸ்டாஃப்ஸ் உங்களுக்கு சில நல்ல விசயங்கள் சொல்லணும்னு விரும்பறேன்.எல்லாரும் லஞ்ச் ப்ரேக்ல கான்ஃபரன்ஸ் ஹால்ல கூடிடுங்க, சரியா 1:15 மணிக்கு, தேங்க் யூ”

“நல்ல விசயமா? இந்தாள் வாயிலிருந்தா?” சுதாகர் நக்கலடிக்க மெலிதாய் சிரித்துவிட்டு தன்னுடைய அன்றைய டார்கெட்டை முடிக்க வேகமாய் வேலை செய்யத் தொடங்கினான்.

கண்கள் கணிணி திரையை நோட்டமிட்டுக் கொண்டிருக்க விரல்கள் கீ-போர்டில் தாளம் தட்டியது.மனம் மட்டும் ஏதேதோ நினைவுகளைத் தேடி சுற்றிக் கொண்டிருந்தது. 3 பேர் இறந்ததற்கும் பஷீர் காணாமல் போனதற்கும் தொடர்பு இருக்குமோ? அவங்களுக்கும் யாருக்காவது பிரச்சனை இருக்குமோ? கடன் அந்த மாறி ஏதாவது? அப்படி இருந்தா சொல்லியிருப்பானே... என சிந்தனை சுழற்றி வீச மேலும் அவ்வப்போது அவன் பார்த்த ஆங்கில திகில் படக்காட்சிகள் நினைவுக்கு வந்தது.ஒரு சைக்கோ வில்லன் வரிசையாக சிலரை கொடூரமாக சித்திரவதை செய்து கொலை செய்யும் காட்சிகள் பளீரிட சட்டென கண்மூடி நிதானித்தான்.

“தேவயில்லாததெல்லாம் ஏண்டா நினைக்கற பஷீருக்கு ஒன்னும் ஆயிருக்காது.எங்காவது வெளியூர் போயிட்டு எதுலயாவது மாட்டிருப்பான். எப்படியும் வந்திடுவான் இல்ல எப்ப வேனா போன் பண்ணுவான்” என தனக்குத்தானே சமாதானப்படுத்திக் கொண்டான்.

கைபேசி மணி அடித்தது. பஷீராக இருக்குமோ என வேகவேகமாக எடுத்தவன் ஐசுவர்யா அழைப்பது கண்டு தளர்ந்தான்.வழக்கமாய் தேன் போல் ஒலிக்கும் குரல் தற்பொழுது சாதாரணமாய் பட்டது அவனுக்கு.

“டே அத்தான்ஸ், இங்க ஒரு புள்ளத்தாச்சி பசியோட காத்திட்டிருக்கா அங்க கம்ப்யூட்டர வெச்சிகிட்டு என்ன பண்ணிட்டிருக்க?”
அதற்குள்ளாகவா மதியமாகி விட்டது என கடிகாரத்தைப் பார்த்த போது மணி 12:30 ஆகிவிட்டிருந்தது.நினைவுகள் நேரத்தை வேகமாக விழுங்கி விட்டதை உணர்ந்தான்.அரைகுறை பசிதான் இருந்தது, உணவகம் சென்று காதலியைக் கண்டதும் இருந்த பசியும் அடங்கிவிட கெஞ்சல்களுக்காகவும் கொஞ்சல்களுக்காகவும் கொஞ்சமாய் சாப்பிட்டான்.தன் இடது கை புஜத்தை ஆதரவாய் பிடித்து தன் மார்புடன் சேர்த்துக் கொண்டு தோள் மீது தலை சாய்த்து படுத்தபடி கொஞ்சம் கொஞ்சமாய் சாலட் ஐ கடித்த  அழகில் எங்கிருந்து அவனுக்கு பசி வரும்?
“பாஸ் எதுக்காக கூப்பிட்டிருப்பாருன்னு நினைக்கற?” ஐசுவர்யா.
“4 பேர் மேட்டரா இருக்கலாம்” சிவா
“நானும் அதான் யோசிச்சேன் ஆனா ஏதோ நல்ல விசயம்னு சொன்னாரே?”
“மே பி ஏதாவது தகவல் கிடைச்சிருக்கலாம், பாப்போம்”

மணி 1:15 தாண்டி கால் மணி நேரம் ஆனது.சிவா உட்பட அவன் தோழர்கள் அனைவரும் சுற்றி அமர்ந்து அரட்டையடித்துக் கொண்டிருந்தனர்.பாதி பொறியாளர்கள் இன்னும் வரவில்லை பொது மேலாளர் உட்பட.ஒரு வழியாக 1:45 மணிக்கு அனைவரும் ஆஜராகிவிட பொது மேலாளரும் வந்தார்.சலசலவென இருந்த பேச்சு சத்ததிற்கு இடையே விசயராகவன் தன்னுடைய சன்னமான குரலில் பேச ஆரம்பித்தார்.

“குட் ஆஃப்டர்நூன் மை டியர் ஸ்டாஃப்ஸ். உங்க எல்லாரையும் சந்திக்கறதுல ரொம்ப சந்தோசம்.நம்ம நிறுவனம் கடந்த 10 வருசமா மிகச்சிறப்பா இயங்கிட்டிருக்கு.அதுக்கு மேலும் மகுடம் வெக்கற மாதிரி...”

எதையோ மறந்தவர் மேலங்கியின் பையில் இருந்த காகிதத்தை எடுத்துப் பார்த்தார்.கூடத்தில் இருந்து சிரிப்பொலி கிளம்பியது.தொண்டையை கனைத்துக் கொண்டு மீண்டும் பேச்சைத் தொடங்கினார்.

“ஃபிரான்சிலிருந்து வெளிவரக்கூடிய டெக்ஃபோர்ப்ஸ் என்கிற பத்திரிக்கை ’க்விக்கஸ்ட் சாஃப்ட்வேர் சொல்யூசன்ஸ் 2010’ விருதை நமக்கு குடுத்திருக்காங்க.இதுக்கு மூல காரணம் நீங்கதான்.இந்த கூட்டத்தின் மூலமா உங்களுக்கும் டெக்ஃபோர்ப்சுக்கும் நன்றியை தெரிவிச்சுக்கறேன்”

கூட்டத்தினர் கைதட்டி ஆர்ப்பரித்தனர் ஐசுவர்யாவைத் தவிர...

“உனக்கு இதுல சந்தோஷம் இல்லையா?” சிவா

“அப்படினு இல்ல நான் இங்க வேலைக்கு சேர்ந்தது 2011 சனவரில” ஐசுவர்யாவின் அசட்டு நேர்மையை எண்ணி சிரித்தவனை லேசாக கண்ணத்தில் தட்டினாள்.ஆர்ப்பரிப்பில் பூத்த நீளமான புன்னகையை சுருக்கிக் கொண்டு மீண்டும் பேச்சைத் தொடர்ந்தார்.

“இது நமக்கு சந்தோசமான விசயம் தான் இருந்தாலும் இதை விட முக்கியமான விசயம் இருக்கு. சமீபத்துல நம்ம நிறுவனத்துல நடந்த கசப்பான விசயங்கள் உங்களுக்கு தெரியும்.அதுக்குக் காரணம் கம்பெனியில அதிக பணிச்சுமையும் மனழுத்தமும் தான்னு பலர் முக்கியமா மீடியா தவறா பிரச்சாரம் பண்றாங்க.அதுல உண்மையில்லனு உங்களுக்கே தெரியும்.உங்க உழைப்பை மட்டுமல்ல உணர்வையும் நாங்க மதிக்கறோம்னு புரிஞ்சுக்கங்க.பஷீர போலீஸ் கிட்டத்தட்ட நெருங்கிட்டதா காலையில எனக்கு கால் பண்ணி சொன்னாங்க” எனப் புளுகினார்.
சிவா மற்றும் நண்பர்களின் முகம் சட்டென்று மலர்ந்தது உடனே அவரிடம் பேசி மேலும் விபரங்கள் கேட்க வேண்டும் எனத் துடித்தான் சிவா.
”கம்மிங் டு த பாயிண்ட். அரசாங்கத்தோட அறிவுறுத்தலின்படி இனிமேல் இரண்டு மாசத்துக்கு ஒருமுறை மூன்று வொர்க்கிங் டேஸ்ல கம்பெனி ஸ்பான்சர்டு ட்ரிப் உண்டு ” பேச்சை நிறுத்தும் முன்னரே விசில் சத்தமும் கை தட்டலும் காதைப் பிளந்தது.

“நீங்க எங்க போகனும்னு விரும்பறிங்களோ உங்க சிஸ்டம்ல லோட் ஆகியிருக்குற ‘ரிக்ரியேஷன் டேஸ்’ ங்க்கிற அப்ளிகேஷன்ல எண்டர் பண்ணிடுங்க.வி வில் அரேஞ்ச் பார் இட்.தட்ஸ் இட் பார் நவ், தேங்க் யூ”

சிரிப்பும் பேச்சுமாக அனைவரும் கலைந்து செல்ல சிவா மட்டும் விசயராகவனை நோக்கி முன்னேறினான்.
“சார் பஷீர எங்க இருக்கன்னு ஏதாவது சொன்னாங்களா? ஏதாவது பிராப்ளம்ல மாட்டிருக்கானா? சொன்னீங்கன்னா நாங்களே போய் கூட்டிட்டு வந்துடறோம் சார்” நண்பனை பிடிக்க வழி தெரிந்ததில் ஆர்வமாய் பொங்கினான் சிவா.

“நீங்க சிவா? ரைட்?”
“ஆமா சார்” தேவையில்லாத கேள்வி எனத் தோன்றியதால் வேகமாய் பதிலளித்துவிட்டு தன் கேள்விக்கான பதிலை எதிர் பார்த்தான்.
“லொக்கேஷன் எல்லாம் எதுவும் அவங்க சொல்லல இன்னைக்கு சாயங்காலம் கண்டிப்பா பஷீரோட வந்திருவோம்னு சொன்னாங்க” சாவாதானமாய் பதிலளித்தார்.”பை தி வே, பஷீர் விசயம் சால்வ்ட்.அத எங்ககிட்ட விட்டுடுங்க நீங்க உங்க வெக்கேஷன பிளான் பண்ணுங்க.ஹூ நோஸ் பஷீரும் கூட வந்தாலும் வருவார்” தோளில் தட்டிக் கொடுத்துவிட்டு நகர்ந்தார்.தனக்குத் திருப்தியான பதில் கிடைக்காததால் மெலிதான புன்னகையோடு நிறுத்திக் கொண்டான்.

ஐசுவர்யாவிற்கும்,சிவாவிற்கும் சற்று மனத்தாங்கல்.சுற்றுலாவிற்கு ஏற்காடு செல்ல வேண்டுமென்பது ஐசுவர்யாவின் அவா. பஷீர் தான் கிடைக்கப் போகின்றானே பிறகு ஏன் தயங்க வேண்டுமென்பது அவள் வாதம். தன் காதலனோடு 3 நாள் ஆனந்தமாய் கழிக்க எந்தப் பெண்ணுக்கும் ஆவலாய் இருக்கும் அதுவும் கணிணித் துறையில் கிடைக்கும் இந்த அபூர்வமான வாய்ப்பை இழக்க ஐசுவர்யா தயாராக இல்லை.பஷீர் கிடைக்காமல் எந்த முடிவும் எடுப்பதாய் இல்லை என சிவா உறுதியாக இருக்க இருவரும் விட்டுக்கொடுத்த பாடில்லை. நடுஇரவு வரை முதுகைக் காட்டிக் கொண்டு படுத்திருந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் நெருங்கி கட்டி அணைத்துக் கொண்டு படுத்தனர்.

அதே நேரம்....
விசயராகவன் இல்லம்...
தன் படுக்கையில் மடிக்கணிணியை வைத்துக் கொண்டிருந்த விசயராகவன் தன் திட்டப்படி சிவா இன்னும் ஏற்காடை சுற்றுலாவிற்காக தேர்வு செய்யவில்லையே என பதற்றமாய் இருந்தார்.யாருக்கோ அழைக்க அலைபேசியை எடுத்தவர் இது உகந்த நேரமல்ல என விட்டுவிட்டு அடுத்தது செய்ய வேண்டியது குறித்து யோசித்தார்.
                                                                                                     -காத்திருங்கள்

அலைவீசும் வாழ்வு

                                                   

 சீறிச்சென்ற படகு உருண்டு வந்த அலையை கிழித்து முன்னேற சிதறிய கடல் நீர் முகத்தில் அடித்தது ஆபிரகாமிற்கு.மறையும் சூரியனின் கடைசி சுவடுகளும்,விழித்தெழும் நிலவின் இளம் ஒளியும் கலந்த அந்த மாலைப் பொழுதில் படகின் நுனியில் இந்திய தேசிய கொடி கட்டிய கம்பைப் பிடித்தபடி நின்றிருந்த ஆபிரகாமின் முகத்தில் தெளித்த கடல் நீரின் துளிகள் அவன் சிந்தனையை கலைத்தது. சிந்தித்தது போதும் போய் தொழிலைப் பார் என அன்னை தன் கண்ணத்தில் தட்டி சொன்னது போல் இருந்தது.படகைக் கட்டி கடலில் இறங்கி நிலம் மறந்து நீரில் வலை வீசும் மீனவர் அனைவருக்கும் கடல் தானே அன்னை.
அதிகாலையே தன் சகாக்கள் பழனி, ஜெயக்குமார் இருவருடனும் படகை தயார் செய்து வலையை தூக்கி போட்டு கிளம்பி விட்டான். வலையை செப்பனிட்டுக் கொண்டிருந்த பழனி அருகில் போய் அமர்ந்தான்.சீமெண்ணை அடுப்பில் போட்ட டீயை எடுத்து ஆபிரகாமிற்கு கொடுத்தான் பழனி.தலை முடியை கிளறிவிட்டு சட்டையையும்,லுங்கியையும் பிரித்து எடுத்துக் கொண்டு போக நினைப்பது போல வேகமாய் அடித்தது கடல் காற்று.எதையோ தேடிச் செல்லும் குழந்தை போல தத்தித் தத்தி கடலில் போனது படகு.
                                 “என்னடே அங்க போய் நின்னு என்ன ரோசனை?” வலையிலிருந்து கண்ணெடுக்காமல் கேட்டான் பழனி.
                                 “ஒன்னும் இல்லடே சும்மாதான்” கடலையே பார்த்துக் கொண்டிருந்தான் ஆபிரகாம்
                                  “என்ன சந்தோஷ பத்தி நினைப்பா? இல்ல எலிசா பத்தியா?” கடலுக்கு நடுவே ஓடும் ஒவ்வொரு மீனவனுக்கும் பெண்டாட்டியும்,பிள்ளையும்  தான் முதல் நினைப்பு என்பதால் அவ்வாறு கேட்டான்.
                                   “சந்தோஷ் தான்டே.பய என்னமா படிக்கிறான் தெரியுமா? என்னென்னமோ பேசரான்டே.பாட புத்தகம் போக எதேதோ புத்தகமெல்லாம் படிக்கிறான்.8 வது தான அந்த பய படிக்கிறான்.இந்த வயசுல அவன் செட்டு பசங்க வீட்டுல காச திருடிட்டு போயி சினிமா பாக்கறானுவோ,பீடி குடிக்கறானுவோ,தண்ணி அடிக்கறானுவோ ஆனா இந்த பய கிட்ட என்ன வேணும்னு கேட்டா புத்தகமா வாங்கியார சொல்றான்டே.எனக்கும்,எங்கப்பனுக்கும்,அவங்கம்மா வகையறாக்கும் படிப்பு வாசனையே இல்லடே இவனுக்கு மட்டும் எப்பிடி இப்பிடி தோணுதுனு தெரிலடே.முந்தாநேத்து ஒரு புத்தகம் வாங்கித் தர சொன்னான்டே நானும் போய் வாங்கிப் பாக்கறேன் அம்மாந்தண்டி இருக்குடே ”   என தன் கைகளை அகல விரித்து மகிழ்ச்சியும்,பெருமையும் உந்தித்தள்ளி முகத்தில் வழிந்த புன்னகையுடன் அவன் சொன்னதைப் பார்த்த பழனிக்கும் பெருமிதமாய் இருந்தது.

                                      “எடே இன்னும் மேக்க போனாத்தேன் மீனு மாட்டும் போல.சி.பி.எஸ்ஸு அப்பிடித்தேன் காட்டுது” படகை ஓட்டிக் கொண்டிருந்த ஜெயக்குமார் சொல்ல அப்படியே ஓட்டச் சொல்லி சைகை காட்டிவிட்டு பேச்சைத் தொடர்ந்தான் பழனி.

                                      “எல்லாம் நீ கும்பிடற சாமி குடுத்ததுடே, எலிசாவும் அப்பிடி வளத்திருக்கு பையன” என பழனியும் உடன் பேச அவன் கையை அமர்த்தி ஆச்சர்யம் கலந்த ஒரு குற்ற உணர்ச்சியுடன் அடுத்த சேதி சொன்னான் ஆபிரகாம்.

                                     “நேத்து போதைல அவங்கம்மாவ போட்டு மிதிச்சுட்டேன்டே.உடனே வந்து என் கையப் புடிச்சி இழுத்து அடிக்காதீங்கனு சொன்னான்.ஏதோ அதிகாரமா சொன்னான்டே.அது அப்படியே எங்கப்பு வந்து தடுத்த மாரி இருந்துதுடே” குரல் தளர்ந்து போக கண்களில் கண்ணிர் வழிந்தது.துடைத்துக் கொண்டான். “அன்னைக்கு ஒரு நாள் அவன் சின்ன பையனா இருந்தப்ப அவங்கம்மா கூட சண்டை வந்து அடிச்சு, அவ தீ வெச்சுக்க போயி ஊரே வந்து ஏசுச்சே அப்ப நான் எவன் பேச்சாவது கேட்டனாடே? ஏன் நம்ம தலைவர் ஜார்ஜ் அண்ண கூட வந்து சொல்லுச்சே கேட்டனாடே? இவன் சொன்னதும் என் மூளைக்கு எட்டுச்சோ இல்லையோ அப்படியே அடங்கிட்டன்டே” புல்லரித்த கைகளை தடவிக் கொண்டே சொன்னான்.
“அவுகள ராமநாதபுரத்துல பெரிய பள்ளிக்கூடமா கொண்டு போய் வுடனும், அப்புறம் அந்த சாராயத்தையும் தொடக்கூடாதுடே அவுகளுக்கு பிடிக்கலனா அப்புறம் எதுக்கு அந்த கருமத்த குடிச்சிட்டு”
அபிரகாம் குடியை நிறுத்தப் போவதாய் சொன்னதும் தலையை கவிழ்த்து நக்கலாய் சிரித்தான் பழனி.
“என்ன வழக்கமா குடிகாரனுக சொல்றதுதான நெனச்சு சிரிக்கீகளோ?” ஆம் என்பது போல் தலையாட்டி அடக்க மாட்டாமல் சிரித்தான்.
“நீ பாக்க தான போற” கைகளை நீட்டி நெட்டி முறித்து எழுந்தான்.

மிக அருகில் தெரிந்தது ஒரு தீவு.மீன்கள் அதிகமாய் இருப்பதாய் ஜி.பி.எஸ் காட்ட வலைகளை கடலில் வீசிவிட்டு அமர்ந்தனர்.
“இந்த தீவு இருக்கே இங்கன எல்லாம் எங்கப்பு இருக்கைல குடிசை போட்டு தங்கி ஒரு வாரம் மீன் பிடிப்பாகளாம்.இப்பல்லாம் அப்பிடியா நடக்கு? கரைகிட்டயே மீன புடிச்சுகிட்டு வீட்டுக்கு போங்கடானு சொல்றானுவ.எல்லாம் தலையெழுத்து.எவனோ எவனுக்கோ எழுதி குடுத்துட்டானாம்.பாட்டன்,பூட்டன் காலத்துல இருந்து நம்ம சொத்துடே.நம்மல வரக்கூடாதுனு எவனெவனோ சொல்லுதான்” ஜெயக்குமார் வெறுப்புடன் பேசினான்.

“இந்தத் தீவு மட்டுமா? கெழக்க கடல தாண்டி இருக்க பல நாடு நம்ம தமிழ் ராசாங்க தான் வெச்சிருந்தாகளாமா.இந்த சிங்கப்பூர் இருக்குல்லடே.நம்ம தினேசு கூட பெயிண்ட்டு வேலை பாக்க போனானே அது நம்ம ராசா கைல இருந்துச்சாம்.இதையும் என் பையந்தான்டே சொன்னான்’ பெருமிதத்துடன் கூறினான் ஆபிரகாம்.
“அதெல்லாம் இப்ப இருந்திருந்தா கடலே நம்முளுதா இருந்திருக்குமே மக்கா” பேராசையில் பொருமினான் பழனி.
“நம்மள அங்க மீன் புடிக்காத இங்க மீன் பிடிக்காதனு எந்த சிறுக்கி மவனும் சொல்லிருக்க முடியாதுல்லடே” ஜெயக்குமாரும் ஆமோதித்தான்.
முதல் வட்டம் வலையை இழுத்த பொழுது அதில் ஓர் நீண்ட ஒரு உறை போன்று இருந்தது.தங்கமோ என சோதித்துப் பார்க்க அது வெண்கலத்தால் ஆன பழங்காலத்து வாள் எனத் தெரிந்தது.வலையைப் போட்டது ஆபிரகாம் என்பதால் அந்த வாள் அவனுக்குத் தான் என முடிவானது. அதை பத்திரமாய் கொண்டு போய் படகடியில் வைத்து விட்டு வந்தான்.மீண்டும் வலையை வீசிவிட்டு அமர்ந்தனர்.அந்த வாளைக் கொண்டு போய் மகனிடம் கொடுக்கும் போது அவன் முகம் எவ்வாறு மலரும் என நினைத்து பார்க்கையிலே அவனுக்கு சிலிர்ப்பாய் இருந்தது.அந்த வாளை வைத்துக் கொண்டு இன்னும் நிறைய மன்னர்களின் கதைகளை அவன் சொல்லுவான்.அவன் அந்தக் கதை சொல்லும் பாங்கை இரசித்து இரசித்து ஊருக்கே சொல்லலாம் என கனவு கண்டான்.

“சிங்களன் வாராண்டே” எங்கிருந்தோ வந்த குரல் அவன் கனவைக் கலைத்து பரபரப்பைப் பற்ற வைத்தது.முகத்தில் கலவரம் தெறிக்க மூவரும் சுறுசுறுப்பாய் இயங்கினர்.உடன் மீன் பிடித்த மற்ற படகுகள் எல்லாம் சிட்டாய் பறந்து இந்தியாவை நோக்கி பயணித்தனர். ”குமாரு நீ படக ஸ்டார்ட் பண்ணுடே நா வலைய இழுக்குதேன்” ஜெயக்குமார் ஓடிச்சென்று என்ஜினை இயக்கினான்.இயங்க மறுத்தது.இதயம் படபடவென அடிக்க மீண்டும் இழுத்தான் என்ஜின் பழுதாகிவிட்டதாய் தோன்றியது.இம்மி அளவு கூட இயங்கவில்லையாதலால் உயிரே போனது குமாருக்கு. “இன்னும் என்னடே பண்ற?” கோபவெறியுடன் கத்திக் கொண்டு என்ஜின் இருக்கும் படகின் அடித்தளத்திற்கு வந்த பழனி குமாரை தள்ளிவிட்டு என்ஜினை பார்க்க அது ஈவு இரக்கமற்றதாய் இருந்தது.இருவருக்கும் குலையே நடுஙியது.பழனி உடனே மேலே ஓடிச்சென்று வலையை இழுத்துக் கொண்டிருந்த ஆபிரகாமிடம் சொல்ல அவன் முகம் வெளிறியது.பழனி அழத் தொடங்கி விட்டான்.சிங்கள கடற்படையின் ரோந்துப் படகு அவர்களுக்கு வெகு அருகில் வந்தது.இருவரும் ஓடிச்சென்று படகின் அடித்தளத்தில் ஒளிந்து கொண்டனர். ஜெயக்குமார் தலையில் அடித்துக் கொண்டு அழுதான்.படகின் அருகில் வந்த சிங்களர்கள் படகிற்குள் உருட்டுக் கட்டையுடன் இறங்கினர்.துப்பாக்கியை தேவைப்பட்டால் மட்டும் பயன்படுத்தும்படி அவர்கள் அரசாங்கம் சொன்னதால் உருட்டுக்கட்டை ஆயுதமானது.

வலையை அறுத்துவிட்டு படகினுள் சென்றனர்.அடித்தளத்தில் ஒளிந்து கொண்டிருந்த மூவரையும் கண்டு ஆத்திரத்துடன் அருகில் வந்தான் அவர்களில் பெரிய அதிகாரியாய் இருப்பவன்.உடனிருந்த மற்றொரு அதிகாரி படகின் எரிபொருளாக வைக்கப்பட்டிருந்த டீசலை எடுத்து தங்கள் படகில் வைக்குமாறு சிப்பாயிடம் பணித்தான்.அவனும் அவ்வாறே செய்தான்.உருட்டுக்கட்டையுடன் வந்த அதிகாரி அதை அவர்கள் முகத்துக்கு நேராய் நீட்டி “உங்களுக்கெல்லாம் எவ்வளவு தடவ சொன்னாலும் புரியாதாடா பரதேசி நாய்களா. கச்சத்தீவு எங்களோடது. இங்க எந்த தமிழ் நாயும் வரக்கூடாது.சொல்லுங்கடா சிங்கள மாதாவுக்கு தமிழன் அடிமை.மூணு பேரும் சொல்லுங்க.சிங்கள மாதாவுக்கு தமிழன் அடிமை.ம்... சொல்லுங்கடா” சிங்களத்தில் அவன் பெசியது ஏதும் புரியாமல் விழித்தனர்.ஆனால் அவன் கோபமாய் பேசியதால் என்னவோ விபரீதம் என மட்டும் புரிந்தது.பயத்தில் மூவரும் திகிலடைந்து கை தூக்கி கும்பிட்டபடி அழுதனர்.”சொல்லமாட்டிங்களாடா திமிர் புடிச்ச பன்னிகளா” என கட்டையை ஆபிரகாம் முகத்தில் வீசினான் அதிகாரி. பெரும் அடி கன நேரத்தில் விழ முகம் உடைந்து இரத்தம் தெறிக்க பழனியின் மீது சரிந்தான் ஆபிரகாம்.சற்று முன் உயிரோடிருந்த நண்பனின் இரத்தம் அரை முழுதும் தெறித்தது கண்டு அரற்றினான் பழனி.ஜெயக்குமாரோ புத்தி பேதலித்தது போல் பார்வை குத்திட்டு ஆபிரகாமையே பார்த்து வாய் பிளந்தபடி அமர்ந்தான்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு ஆபிரகாம் வலையில் கண்டெடுத்த அவன் இரத்தம் தோய்ந்த  வாளை சந்தோஷிடம் தந்தான் பழனி.
                                         
“கச்சத்தீவு முடிந்து போன விடயம் அதற்கும் இந்தியாவிற்கும் சம்பந்தமில்லை.அது இலங்கையின் ஒரு பகுதி.தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்கக் கூடாது”- பாரதப் பிரதமர்

எவன் சொத்துக்கு எவன் நாட்டாமை?

                                                                                                    -மு.சுந்தர பாண்டியன்

Saturday, 19 November 2011

மேலோரும் கீழோரும்

சீர்மிகு கலாச்சாரம்


பன்னெடுங்காலத்திற்கு முன் இந்த உலகின் ஒரு மூலையில் ஒரு மனித குழு வாழ்ந்து கொண்டிருந்தது. கல்,ஈட்டி என குறுகிய விஞ்ஞானத்தோடு வேட்டைக்காரர்களாய் அந்த மனிதர்கள் வாழ்ந்தனர். இயற்கையோடு வாழ்ந்த பொழுது அம்மக்களின் வழிபாட்டு முறைகள் எளிமையானதாகவும், அடிப்படை நியாயங்கள் உடையதுமாய் இருந்தது. அந்த முறையில் கடவுளாக வழிபடப் பட்டவர்கள் யார் என காண்கையில் உளவியல் ரீதியான உண்மைகள் வெளிவரும்.தான் கண்டு பயந்த விடயங்களிடமே தனக்கு பாதுகாப்பு கோரினான், தன்னை காப்பதாய் உணர்ந்த விடயங்களை போற்றி வணங்கினான். நெருப்பு, ஒளியின் ஆதார்மான சூரியன், இரவில் ஒளி தரக் கூடிய நிலவு, வாழ்க்கை ஆதாரமான பூமி,கால்நடைகள்,கடல்,ஆதி காலத்தில் மனிதனின் உறைவிடமாய் இருந்த ஆலமரம் உள்ளிட்ட மரங்கள், தன்னை பயமுறுத்திய இடி,மழை ஆகியவற்றிற்கு தன்னை அடிமை ஆக்கிக் கொண்டான், உனக்கு வேண்டியதெல்லாம் நான் தருகிறேன் என்னை தீமை அண்டாமல் காப்பாற்று என வேண்டினான்.தன்னுடைய தேவைகள் நிறைவேற வேண்டும் என்ற ஆசைக்கு நம்பிக்கை பிடிப்பினையாக அந்த சக்திகளை வணங்கத் தொடங்கினான்.தனக்கு தேவயானதை கேட்டு வேண்டுதல்களை வைக்கத் தொடங்கினான்.இவ்வாறு அவன் வழிபட்ட இயற்கை சக்திகள் பரிமாணம் பெற்று வளர்ந்து கடவுள்களாக உருவம் பெற்றன.தான் உயர்ந்ததாக கருதியவற்றை கடவுளுக்கும் படைத்தான். மேலும் குழு குழுவாக பிரிந்து வாழ்ந்த மக்கள் தங்களுடைய மக்களுக்காக வாழ்ந்து அளப்பரிய செயல்கள் புரிந்த முன்னோர்களையும் வணங்கத் தொடங்கினர்.அவர்களே அந்தக் குழுவின் காவல் தெய்வங்கள் ஆயினர்.அந்த மக்களில் தொழில் ரீதியான பிளவுகள் பெரிதும் இல்லை. குழுவில் வீரத்தில் சிறந்தவன் தலைவன் ஆனான், வேட்டையாடவும்,போர் புரியவும் தெரிந்தவன் போர் வீரன் ஆனான்,பானை முதலியவற்றை செய்யத் தெரிந்தவன் அதை செய்தான்.ஒருவன் பானை பிடிக்கும் தந்தைக்குப் பிறந்து போரில் சிறந்து விளங்கினால் அவன் போர் வீரன் ஆனான்.அதற்கு எந்தத் தடையும் இருந்ததில்லை.தகுதிகள் அடிப்படையில் தான் தொழில் செய்தான்.திருமணங்களுக்கும் பெரிதாய் கட்டுப்பாடுகள் இல்லை.பெற்றோர்கள் பார்த்தும் நடந்தது,ஒரு ஆண் ஒரு பெண்ணை விரும்பி பெண்ணுக்கும் விருப்பம் இருப்பின் அவளை அழைத்து ஊருக்கு அறிவித்துவிட்டும் குடும்பம் நடத்தலாம்.இவ்வாறு வாழ்ந்த அந்த பெரும் பண்புடைய மக்கள் வானியல்,கடல் பயணம், மருத்துவம் போன்ற பல கலைகளை உணர்ந்து தெரிந்து கொண்டனர்.இதே ரீதியில் தான் எல்லா நாகரீகமும் வளர்ந்திருந்தாலும் மற்ற எல்லா நாகரீகத்திற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சீரிய சமுதாயமாய் வாழ்ந்த அந்த மக்கள் யார் தெரியுமா? தமிழர் தான்,நம்புங்கள் தமிழர் தான்.

ஏனிந்த வெறி?

எதற்காக இதை எல்லாம் இப்பொழுது சொல்ல வேண்டும் எனக் கேட்டால் எல்லாம் ஒரு ஆதங்கமும்,கோபமும் தான். எனக்குத் தெரிந்த சில நண்பர்களின் வீட்டில் நடந்த விடயங்கள் தான் அதற்குக் காரணமும். ஒன்றுமில்லை வழக்கம் போல காதல் தான் பிரச்சனை.சாதி மாறி காதலிப்பது அதை விட பெரும் பிரச்சனை அல்லவா.மகனோ,பேரனோ வேறு சாதி பெண்ணைக் காதலித்தால் அவன் முகத்தில் கூட முழிக்க மாட்டேன் என வாழ்கின்ற பெற்றோரைக் கண்டேன், அவனிடம் பேசக் கூட மாட்டேன் என அவன் வீட்டில் இருக்கின்ற நேரத்தையெல்லாம் நரகமாக்கிவிடுகின்ற பெற்றோரையும் கண்டேன்.இவ்வளவுக்கும் மேலாக “அவன் சத்தியாமா நல்லாவே இருக்க மாட்டான்” என வயிறெரிந்து சாபமிடும் பெரியோரையும் நேரில் கண்டேன். அதே மக்கள் தங்கள் பிள்ளைகள் மீது அளவற்ற பாசம் பொழிந்ததையும் கண்டிருக்கின்றேன். அதனால் அர்த்தமில்லாத சாதி என்னும் பெயரால் தங்கள் அன்பையெல்லாம் அடியோடு கரைத்துவிட்டு ஒரு வெறியோடு கரைத்துக் கொட்டியது எனக்கு அதிர்ச்சி தரக் கூடியதாய் இருந்தது.காலங்கள் கடந்தால் காயங்கள் மாறும் என நினைத்ததும் பொய்யாய் போனது.(சாதிக்காக பிள்ளைகளை கொன்று எறிந்தவர்கள் பற்றிக் கூட கேள்விப்பட்டிருப்பீர்கள்.) அந்த சாதியின் மீது அவர்களுக்கு ஏன் அவ்வளவு பாசம்? ஏன் இவ்வளவு வெறி? அந்த காதல் திருமணத்தின் மூலம் பேரப்பிள்ளைகள் கிடைத்த பின் கூட அவர்கள் கோபம் குறைவதில்லை ஏன்? வார்த்தைகளால் சித்திரவதை செய்யும் போக்கு ஏன்? இளைய தலைமுறையினர் பலர் காதல் திருமணம் செய்ய வீட்டினை நாடும் பொழுது 100 ல் 80 பேர் இந்த பிரச்சனைகளை எதிர்கொள்வர் அல்லது எதிர் கொண்டிருப்பீர்கள். அவர்கள் சொல்லும் ஒரு காரணம் ”சொந்தக்காரங்க யாரும் நம்மல மதிக்க மாட்டாங்க”. ஒரு மனிதனை ஏமாற்றுவதும்,குழி பறிப்பதும்,துரோகம் செய்வதும் யார் என உற்று நோக்கினால் அதில் பெரும்பான்மையினர் சொந்தக்காரர்களாக இருப்பார்கள் என்பது தான் உண்மை. அப்படியிருக்க அவர்களுக்காக பிள்ளைகளை எதிர்ப்பது முழுமுதல் முட்டாள்த்தனமான செயல் என்பதே உண்மை.ஆழமான காரணம் வேறு உள்ளது “கீழ்சாதியை சேந்தவங்களா இருந்தா ஒழுக்கம் இருக்காது,நம்ம பழக்கவழக்கம் இருக்காது”. 

வரலாற்று குற்றவாளிகள்
இப்படி சொல்பவர்களை என்ன சொல்லலாம்? மனசாட்சியற்ற குற்றவாளிகள் என்று தான் சொல்ல வேண்டும். சாதாரண குற்றவாளிகள் அல்ல வரலாற்று குற்றவாளிகள்.முதல் பத்தியில் விட்ட இடத்திலிருந்து தொடருவோம். அவ்வாறு சீரும் சிறப்புமாய் பிரிவினையின்றி வாழ்ந்த சமுதாயத்தில் வந்து சேர்ந்தனர் ஆப்கானிசுத்தானுக்கானில் பிழைப்புத் தேடி வந்த ஆரியர்கள்.புதிதாய் வந்த இடத்தில் நிலையாய் பிழைக்க ஓர் வழியோடு தான் வந்தனர்.மன்னர்களை சந்தித்து தாங்கள் கடவுளின் பிரதிநிதிகள் என பறைசாற்றினர். இயற்கையை வணங்கி தமிழ் மக்கள் கட்டி வைத்திருந்த கோவில்களில் தீயசக்திகள் இருப்பதாக கதை கட்டினர்.அவற்றை விரட்ட யாகங்கள் நடத்த வேண்டும் என முறையிட்டனர்.சாத்திரம்,சடங்கு என அவர்கள் காட்டிய கண்கட்டு வித்தையில் மன்னர்கள் மயங்கினர்.மேலும் பல பல யாகங்கள் செய்தால் போர்களில் இணையில்லாத வெற்றிகள் பெற்று மாபெரும் சக்கரவர்த்தி ஆகலாம் என ஆசை காட்டி மன்னர்கள் அருகிலேயே நிரந்தரமாக அடைக்கலம் புகுந்தனர்.வேதங்கள்,உபநிடதங்கள் என பலவற்றை போதித்தனர்.தங்களுக்கு நிரந்தரமாய் அடிமைகள் வேண்டும் என பிறப்பால் சாதிகளைப் பிரித்தனர்.நாடாளும் மன்னனே மணியாட்டும் பார்ப்பானுக்குக் கீழ்தான் என விதிகள் வகுத்தனர்.அடிமைகள் விழித்துக்கொள்ளக் கூடாது என அவர்களுக்குக் கல்வியை மறுத்தனர்.அடிமைகள் அடிமைகளாகவே இருந்தனர்.இது தான் சீர்மிகு தமிழ் சமுதாயம் பார்ப்பன கும்பலால் சீர்குலைக்கப்பட்டது.அன்று பிழைப்புக்காக அந்த அட்டைப் பூச்சிகள் செய்த சாதி என்னும் சூழ்ச்சியால் இன்று நம் மக்கள் ஒருவரை ஒருவர் விரும்பக் கூட முடியாத நிலை, விரும்பினால் பாசமாய் வளர்த்த பெற்றோர் தன்னை எதிரியாய் கருதும் வேதனை.பெரியாரும்,அண்ணாவும் வளர்த்த பெருந்தீயில் பார்ப்பனப் பூச்சிகளின் ஆதிக்கம் பொசுங்கியது. ஆனால் அவர்கள் வளர்த்த சாதி என்னும் சனியன் இன்னும் நம் மக்களைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்க நாமே தானே காரணம்.ஆதிக்க சாதியினரை வரலாற்றுக் குற்றவாளிகள் என்று சொன்னேனல்லவா. ஆம், ஒரு பெரும் சனத்தின் பரம்பரைக்கே காலம் காலமாய் கல்வியை மறுத்த இழிவான புத்தி யாருக்கு? கோவிலிருக்கும் வீதியின் அருகே கூட வரக் கூடாது என தடுத்து நிறுத்திய மட்டமான புத்தி யாருக்கு? ஒரு மனிதனை தொடுவது கூட பாவம் என சொல்லி, தான் மனிதனா இல்லை வெறும் புழுவா என அவனுக்கே புரியாத அளவுக்கு தீண்டாமை செய்த அயோக்கியர்கள் யார்? சக மனிதனை மனிதனாகக் கூடப் பார்க்காத இழிவானவர் யார்? மாடு போல உழைப்பதும்,அரை வயிறு உண்பதும்,உயர் சாதிக்கு முறைவாசல் செய்வதுமே உன் பனி என 5000 ஆண்டுகளாய் ஒரு சமுதாயத்தையே அடக்கி வைத்த கொடூர புத்தி கொண்ட பாவிகள் யார்? வேறு யாருமில்லை சாதி பற்றிப் பெரிதாய் பேசும் ஒவ்வொருவனும் தான். கீழ்சாதி என நீங்கள் சொல்பவர்களுக்கு உங்களைப் போலவே 5000 ஆண்டு கல்வி,இறை வழிபாடு,பண்பாட்டு கல்வி போன்றவை கிடைத்திருந்தால் உங்கள் ஆதிக்க முகம் என்னும் கொடூர சனியன் இந்த இனத்தைப் பீடித்திருக்காது. அவ்வாறு கிடைக்கவிடாமல் தடுத்த வரலாற்று குற்றவாளிகள் நீங்கள் தானே? இன்று இந்த இனமே ஒன்றினைய முடியாமல் தடுமாறிப் போவதற்கு சத்தியமாய் நீங்கள் தான் காரணம். உங்கள் உயர்சாதியில் மட்டும் என்ன ஒழுக்கம் கண்டீர்கள்? 2 படி நெல் கூடுதலாய் கூலி கேட்டதற்காக 52 பேரை ஒரே குடிசையில் வைத்து எரித்தீர்களே கீழ்வெண்மணியில்.நினைவிருக்கிறதா?இந்த ஒரு சோறு பதம் என நினைக்கின்றேன். இது தான் நீங்கள் வளர்த்துக் கொண்ட ஒழுக்கம்.இன்னும் சாதியை பிடித்து வைத்துக் கொண்டு பிள்ளைகளை இழக்காதீர்கள்.சாதி உங்களுக்கு சொந்தமானது அல்ல ஆனால் உங்கள் பிள்ளைகள் உங்களுக்குப் பிறந்ததற்காக வெட்கப்படும்படி வைத்துக் கொள்ளாதீர்கள்.உங்கள் அறிவை நீங்களே வளர்த்துக் கொள்ளுங்கள். மேலும் மேலும் குற்றம் புரியாதீர்கள். எதிர்காலத்தில் உங்கள் முகம் வரலாற்றின் மோசமான பக்கங்களில் பதிவு செய்யப்படும் ஜாக்கிரதை!
                                                                                 -கோபத்துடன் சுந்தர பாண்டியன்

Thursday, 17 November 2011

ஜோசியக்காரன்

இவங்க 2 பேரையும் என்ன செய்ய?

விளையுதுங்கோ!!!

என் இனிய தமிழ் மக்களே!!!!
பால் விலை 7 ரூபா ஏறிப் போச்சு!
பயண சீட்டு பல மடங்கு மாறிப் போச்சு!
மின்சாரம் சீக்கிரமா அதிர்ச்சி கொடுக்கும்!”என்னடா நாராயணா சட்டை இல்லாம வர்ற?”
 இப்படித்தான் கேட்கத் தோனுது நம் மக்களைப் பார்த்தா. நேத்து மதியம் தீடீர்னு முதல்வர் ஆத்தா ஜெயா தொலைக்காட்சில வந்து காங்கிரச அரச திட்ட ஆரம்பிச்சப்பவே பொறி தட்டுச்சு கருணாநிதி வாய்க்கு அவல் கிடைக்க போகுதுனு.மம்தா அரசுக்கு 21,000 கோடி ரூபா சும்மாவே குடுக்கறாங்க நமக்கு 6 மாசமா நிதி கேட்டும் குடுக்கலனு ஆரம்பிச்சு பாலையும்,பேருந்து கட்டணத்தையும் உசத்தி விட்டதோடு நிப்பாட்டாம உங்கள விட்டா எனக்கு வேற யார் இருக்கானு கேட்டு செம செண்டிமெண்ட்டு பா. சன் நியூஸ் முழுக்க முழுக்க மக்கள் கருத்து, கண்டனம்னு ஜாலி பண்றாங்க. இதுக்கெல்லாம் காரணம் மத்திய காங்கிரசு அரசும், முந்தைய மைனாரிட்டி தி.மு.க (இன்னுமா?) அரசும் தான்னு அம்மா சொல்ல. மக்களே அத முடிவு பண்ணட்டும்னு கருணாநிதி சொல்ல, மத்திய அரசு கொடுக்கற நிதிய மாநில அரசு ஒழுங்கா பயன்படுத்தலனு தமிழக காங்கிரசின் புது டம்மி பீசு தலைவர் ஞானதேசிகன் சொல்ல... அப்பப்பபபா... உண்மையில இதுக்கு யார் காரணம்னு நமக்கு தெரியாதா பாஸு? தெரியலியா? போய் கண்ணாடில மொகரைய பாருங்க நல்லா தெரியும்.

“இப்பிடி எல்லாம் விலை ஏத்தினா நாங்க எப்படி வாழ்க்கை நடத்த முடியும்?”
“நாங்க வாங்கற சம்பளத்துல இதெல்லாம் எப்படி சமாளிக்கறுதுனே தெரியல”

அடேய் அடேய்.... இதெல்லாம் மக்கள் பேட்டில சொல்றத கேட்கும் போது எரிச்சலா வருதுங்க அதுவும் சன் டி.வி ல யே சொல்றாங்க அது தான் காலத்தின் கொடுமை.2001-2006 ஆட்சி காலத்துல ஆத்தாவோட ஆட்சில எந்த ஊழல் குற்றச்சாட்டும் வரல அதுமில்லாம தமிழகத்தின் எந்த முதல்வரும் செய்யத் தயங்குற, துணியாத பல விசயங்கள அனாயாசமா செஞ்சு முடிச்சுது ஆத்தா.உதாரணமா லாட்டரிய ஒழிச்சது, மணல் அள்ளுவத அரசுடைமை ஆக்குனது, ஒரு சிலர் வரமுறை இல்லாம சம்பாதிச்ச மது தொழில அரசாங்கத்துக்காவது காசு வரட்டும்னு எடுத்துகிட்டது,கிராமப்புற மாணவர்களுக்காக தொழிற்கல்விகளுக்கு நுழைவுத் தேர்வ தூக்கினதுனு இன்னும் சொல்லிட்டே போகலாம். நமக்கு இதெல்லாம் பத்தல. அடுத்த தேர்தல்ல கருணாநிதிய ஆட்சில உட்கார வெச்சோம். சத்தியமா சொல்றேன் அதுல எந்த தப்பும் இல்ல சாமி. ஆனா நாம எதுக்காக கருணாநிதிய தேர்ந்தெடுத்தோம்? அங்க தான ஆப்பு காத்துகிட்டு இருந்துது.நல்ல நிர்வாகம் தரேன்னு சொன்னாரா? சட்டம் ஒழுங்க காப்பாத்தறேன்னு சொன்னாரா? கல்வி தரத்த உயர்த்தறேன்னு சொன்னாரா? இல்லையே... இலவச கலர் டி.வி, 2 ஏக்கர் நிலம் இலவசம்,எரிவாயு அடுப்பு இலவசம்- இந்த வார்த்தைகள கேட்டதும் எப்படி பிரகாசமா பல்பு எரிஞ்சுது மூஞ்சி? அப்ப கொஞ்சமாவது யோசிச்சீங்களா இதெல்லாம் நடந்தா நிதி நிலைமை என்னாகும்? அரசாங்க வரவு செலவு என்னாகும்? பத்தாத காசுக்கு என்ன பண்ணுவாங்க? இதெல்லாம் நமக்கெதுக்கு கருணாநிதி வந்ததும் கலர் டி.வி குடுத்தாரா சன் டி.வி, கலைஞர் டி.வி ல அவர பாராட்டி பல்ல இளிச்சுகிட்டு பேட்டி குடுத்தமானு  ஜாலியா இருந்துட்டோம். அதோட விட்டமா நாம? நடந்த இடைத்தேர்தல்ல எல்லாம் 500,1000 ம்னு வாங்கிட்டு ஒரு சிறந்த ஜனநாயக பாதைய வெளிச்சம் போட்டு காமிச்சீங்க. நிர்வாகத்த பத்தி கவலைப் பட வேண்டிய அவசியமே இல்ல காசு இருந்தா ஆட்சினு சொல்லிட்டிங்க. நிர்வாகம் சீர்குலைய ஆரம்பிச்சுது.அரசின் அடி முதல் முடி வரை காசு சேர்க்கவே எல்லரும் அலைஞ்சாங்க.மின்சாரம் பத்தலையா ரெடிமேடா வங்கிக்கலாம் எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல. புது உற்பத்தி எல்லாம் வேண்டாம் அந்த காசுல வேற ஏதாவது இலவசமா குடுக்கலாம்னு தாத்தாவும் செட்டில் ஆயிட்டாரு. இதனால என்னாச்சு? பெருசா ஒன்னும் நடக்கல மச்சி. நம்மளோட கடன் தொகை 1,00,000 கோடி ஆச்சு, 4000 கோடியா இருந்த மின் வாரிய கடன் 5 வருசத்துல 40,000 கோடி ஆச்சு, போக்குவரத்துக் கழகம் பஞ்சர் ஆகிப் போச்சு.

நீங்க போன தேர்தல்ல பண்ண அடாவடிய பாத்து பயந்து இந்த தேர்தல்ல ஆத்தாவும் மிக்ஸி, கிரைண்டர்னு குடுத்து உங்க பாரம்பரியத்த காப்பாத்த வேண்டியதா போச்சு. அனகோண்டாவ எடுத்து அண்டர்வேர்ல விட்டுட்டு இப்ப குத்துதே குடையுதேனா? கொத்தோட புடுங்காத வரை சந்தோசப் பட்டுக்கங்க. குசராத்து குசராத்து னு ஒரு மாநிலம் இருக்கு. அங்க நடந்த தேர்தல்ல காங்கிரசு இப்படித் தான் கலர் டி.வி, அடுப்புனு அளந்து விட்டுச்சு.அப்ப மோடி என்ன சொன்னார் தெரியுமா? “எங்கள் மக்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” னு சொன்னாராம். எல்லா இலவசத்துக்கும் ஒரு விலை உண்டு மக்களே! முற்பகல் செய்தோம் பிற்பகல் விளையுதுங்கோ...
                                                                                         -மு.சுந்தர பாண்டியன்

வஞ்சம்- பகுதி 1

                                                                 வஞ்சம்

இன்று முதல் உங்களுடைய பார்வைக்காக ஏதோ எனக்கு தோன்றிய ஒரு கதையை முன்வைக்கின்றேன். பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டதுதான் இந்த கதை. சாத்தியமில்லா நிகழ்வுகள் நிறைய வரலாம். அதனால் முன்பே சொல்லிவிடுகிறேன் இது முழுக்க முழுக்க கற்பனைக் கதை தான். 


பகுதி 1- நட்பும் காதலும்

பெங்களூரு நகரம்- உலகின் மற்ற எல்லா நகரங்களையும் போல பணக்காரர்களுக்கு மட்டுமே வளர்ந்து நிற்கும், வளைந்து கொடுக்கும் நகரம். இந்த ஊரில் வெளிநாட்டவரின் பட்டறைகள் அதிகம். அங்கே கணிணியை பற்றி மெத்தப் படித்த கூலியாட்களும் அதிகம். அப்படி ஓர் பட்டறை தான் வின்க்ராக்ஸ் டெக் இன்ஃபோ லிமிட்டட்.

கடந்த 10 நாட்களாக இந்தியா முழுக்க இந்த நிறுவனத்தின் பெயர் அடிபடாத செய்தி சேனல்களே இல்லை என சொல்லலாம். கரீனா கபூருக்கு கால் வலி, ராத்திரி 10 மணிக்கு தூங்கிய ராகுல் காந்தி காலைல 7 மணிக்கே எழுந்து விட்டார் போன்ற செய்திகளுக்கு நடுவே வின்க்ராக்ஸ் அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் 3 பேர் கடந்த 10 நாட்களுக்குள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டதும் 2 நாட்களுக்கு முன் பஷீர் என்னும் அதே நிறுவனத்தை சேர்ந்த கணிப்பொறி பொறியாளர் காணாமல் போனதும் மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது ஒன்றும் ஆச்சரியம் இல்லை. ஏனெனில் உடனடி பணம் பார்க்க ஆசைப்படும் பெற்றோர் அனைவரும் மூலை முடுக்கில் உள்ள பொறியியல் கல்லூரியில் எல்லாம் சேர்த்து விட்டு எப்படா மகன்/மகள் வேளைக்கு போவார்கள் என காத்துக் கொண்டிருக்கையில் இப்படி ஓர் செய்தி வந்தால் எப்படி இருக்கும்? ஏற்கனவே பிள்ளைகளை கணிணிக்குக் கட்டிக் கொடுத்த பெற்றோர்கள் அனைவரும் பொங்கி எழுந்து போராட்டம், மறியல் என இறங்கி விட்டனர். அதற்கு தூபம் போடும் விதமாக மனநல மருத்துவர்களின் பேட்டியும் அமைந்தது “தொடர் பணிச்சுமை காரணமாக மன அழுத்தத்தினால் தான் தற்கொலை செய்வதும், காணாமல் போவதும் நடக்கின்றன” என அவர்கள் கூற “கணிப்பொறி நிறுவனங்கள் தொழிலாளர் சட்டங்களை மதிப்பதில்லை, பணி நேர வரன்முறை இல்லாமல் ஈவு இரக்கமின்றி உழைப்பை உறிஞ்சுகின்றன” என கம்யூனிஸ்டுகள் சொல்ல மாநிலமே பற்றியது. தற்கொலைக்கு கடிதங்களும், காரணங்களும் சிக்காததால் இதையே திரும்பத் திரும்ப அரைத்துக் கொண்டிருந்தன செய்தி நிறுவனங்கள்.

காவல் துறையினர் நிறுவனத்தையே புரட்டிப் போட்டு விசாரணை செய்தும் ஒன்றும் கிட்டவில்லை. இன்று இரண்டாவது முறையாக அனைவரையும் விசாரித்துக் கொண்டிருந்தனர். மேலாளர் அறை விசாரணை அறையாக மாற்றப் பட்டிருந்தது. அலுவலக நேரம் முடிந்தும் விசாரணை நீண்டது...

விசாரனை அதிகாரி ஜெகராஜன் எதிரில் அமர்ந்திருந்தான் சிவா. காணாமல் போன பஷீரின் நெருங்கிய நண்பன். 2 நாட்களாக அவனைக் காணாமல் தேடித் திரிந்த அலுப்பும், அயர்வும் கண்களில் தெரிந்தது. காவலர்களிடமிருந்தாவது ஏதாவது தெரியவரும் என காத்திருந்தான். விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் மண்டைவலியுடன் மேசையை உற்றுப் பார்த்தபடி வினவினார் ஆய்வாளர்.

“பஷீர் காணாம போனப்ப நீங்க எங்க இருந்தீங்க? என்ன பண்ணிட்டு இருந்திங்க?”

“ 2 நாள் முன்னாடி ஆபீஸ் ல வேலை பாத்துட்டு இருந்தப்ப ஹரிணி கால் பண்ணி சொன்னா. அப்ப தான் எனக்கு தெரிய வந்தது”

“ஹரிணி பஷீரோட மனைவி தான?”

“ஆமா”

“அவங்களுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்?”

“ஹரிணி ஸ்கூல்ல படிக்கறப்ப இருந்தே என்னோட தோழி தான்”

“பஷீர எவ்வளவு நாளா உங்களுக்கு தெரியும்?”

“ஒரு 3 வருஷமா. இங்க வேலைல சேந்த அப்புறம் தான் அவன எனக்கு தெரியும்”

“ஹரிணி, பஷீர்க்குள்ள ஏதாவது பிரச்சனை?”

“எனக்கு தெரிஞ்சு இல்ல. அதெல்லாம் நான் கேட்டுக்கறதும் இல்ல”

“ஹரிணி இப்ப எங்க இருக்காங்க?”

“எங்க வீட்டுலதான்”

“நீங்களும் ஹரிணியும் மட்டும் ஒரே வீட்டுலையா?” ஜெகராஜன் புருவம் உயர்த்த அந்த கேள்வியின் அர்த்தத்தை சகிக்க முடியாத சிவா பதிலில் எரிச்சலைக் கூட்டினான்.

“நான், என் மனைவி, ஹரிணி மூணு பேரு இருக்கோம், அவ அவங்க வீட்டில தனியா விட மனசில்ல அதான் எங்க வீட்டுக்கு கூட்டி வந்துட்டோம்” அதற்கு மேல் அவனுக்கு அங்கே உட்காரப் பிடிக்கவில்லை. இருந்தாலும் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் விட்டால் பஷீர் கிடைப்பது தாமதமாகி விடுமோ என்ற அச்சத்தில் அப்படியே அமர்ந்திருந்தான்.

“நாளைக்கு அலுவலகத்துக்கு வரும் போது ஹரிணிய கூட்டிட்டு வாங்க. அவங்க கிட்ட நிறைய விசாரிக்கணும். நீங்க போலாம் ” சிவா மேல் குற்றம் ஏதும் இருக்க வாய்ப்பில்லை என்றே அவருக்கும் தோன்றியதால் அனுப்பி விட்டார்.வேகமாக எழுந்து விரைவாக வெளியேறி கதவை படார் என வேகமாக சாத்தினான். அதையெல்லாம் ஜெகராஜன் பொருட்படுத்தவில்லை. தற்கொலை செய்து கொண்ட மூவருக்கும், தொலைந்து போன பஷீருக்கும் இடையே எந்த ஒற்றுமையும் இல்லை, ஒரு சின்ன தகவலோ, கடிதமோ இல்லை. ஆகையால் ஜெகராஜனுக்கு இருந்து இருந்த கவலைகளில் எதிலுமே கவனம் செலுத்த முடியாமல் தடுமாறினார்.

மணி 6 அடித்து விட்டதால் மகிழ்வுந்தை விரட்டிக் கொண்டு காந்தி நகரில் உள்ள தன் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றான். மகிழ்வுந்துக்கு வீடுகளைக் கூரையாக்கி வைத்திருக்கும் அடித்தளப் பகுதியில் நிறுத்தி விட்டு மூன்றாவது தளத்தில் உள்ள தன் வீட்டிற்கு விரைந்தான்.

சிவா- ஆறடி உயரம், தொப்பை எட்டிப் பார்க்காத வாலிப தேகம், தெளிவான பேச்சு, தின்னமான பார்வை என ஒரு கதாநாயகனுக்குரிய தோற்றம் கொண்டவன்.கண்ணை உறுத்தாத மாநிறமும் அதற்கேற்ற ஆளுமையுடனும் இருப்பவனிடம் ஐசுவர்யா மனதைப் பறி கொடுத்ததில் அச்சர்யம் ஏதுமில்லை.

ஐசுவர்யா சிவாவின் அழகுக் காதலி.அவனுக்கு ஏற்ற உயரம், பளிங்கு தேகம்,ஈர்க்கும் புன்னகை என ஒவ்வொரு அம்சமும் சிவாவின் காதலை சிதறாமல் அணைத்தது.இருவரும் காதலின் எல்லைகளைத் தாண்டி எங்கோ சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றனர் எனினும் திருமணம் செய்து கொள்ளவில்லை. சிறிது காலம் போகட்டும் எனக் காத்திருக்கின்றனர் உல்லாசப் பறவைகள். காலணிகளைக் கழற்றிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தவுடன் இன்முகத்துடன் வரவேற்றாள் காதலி. கையில் வைத்திருந்த பையை வாங்கி விட்டு “போய் கை,கால் கழுவிட்டு வா” துண்டை கையில் கொடுத்து கழிவறைக்கு அனுப்பினாள். உடை மாற்றிக் கொண்டு சோபா வில் வந்து அமர்ந்தான். அவனருகில் வந்து அமர்ந்த ஐசுவர்யா துண்டு சீட்டில் மடிக்கப் பட்டிருந்த விபூதியை நெற்றியில் இட்டாள்.

”கோவிலுக்கு போனியா?”

“ஆமா, ஹரிணி ரொம்ப டிப்ரெஸ்டா இருந்தா அதனால நாந்தான் ஒரு மாறுதலா இருக்குமேனு கோவிலுக்கு கூட்டிட்டு போனேன். அங்கையும் அழுதுட்டே இருந்தா.பாவம்”

“இப்ப ஹரிணி எங்கே?” வெறுமையாய் கேட்டான்

“தூங்கிட்டு இருக்கா”

“இன்னைக்காவது தூங்கினாளே” இரண்டு நாளாக அவள் தூங்காதது நினைத்து வருத்தப்பட்டான். வாடிய முகத்துடன் இருந்த காதலனை தேற்றுவதற்காக அவன் மார்பில் சாய்ந்தாள். சில நாட்களாய் விட்டுப் போயிருந்த ஸ்பரிசம் மீண்டும் கிடைத்த போது புதிதாய் உணர்வது போல் மேனி சிலிர்த்தது.அப்படியே அவளை இறுக்கி அணைத்தான். 

“டேய், என்ன இது பையன் முன்னாடி இப்படியெல்லாம்?” பொய்க்கோபம் காட்டி அவனை விலக்கி விட்டாள்.சட்டென்று அவள் சொன்னதை விளங்கிக் கொள்ள முடியாமல் தவித்தவன் முகம் மலர்ந்து அவள் உதடுகளில் அழுத்தமாய் முத்தமிட்டான். ஆழமான முத்தத்தை விலகவே வேண்டாமென அவனை தன்னருகே இழுத்து பிடித்து அனுபவித்தாள்.

உதடுகள் ஓய்ந்த பின் வெட்கச்சிரிப்புடன் அவன் மார்பில் சரிந்தாள் “சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கடா, ஏமாத்திடாத” என அவன் கண்களை ஏறிட்டுப் பார்த்தாள்.

“பார்க்கலாம்” ஒற்றை வரியில் சிரத்தையே இல்லாதது போல் கள்ளத்தனமாய் பதில் சொன்னதற்காக இரண்டு கொட்டு வாங்கினான்.

“ஹரிணிகிட்ட இன்னும் சொல்லல, சொல்லவா வேணாமா?” ஐசுவர்யா

“வேணாம் ஐசு, பஷீர் கிடைக்கட்டும் ட்ரீட் வெச்சு சொல்லிடலாம்” அதுதான் இருவருக்கும் சரியெனப் பட்டது.

ஐசுவர்யாவிற்கு முன்னரே ஹரிணியை சிவாவிற்குத் தெரியும். இருவரும் 6 வருடமாய் நண்பர்கள்.இவர்கள் வாழ்வில் ஐசுவர்யா நுழைவதற்கு முன்பு ஹரிணியின் மனதில் முழுதாய் அமர்ந்திருந்தான் சிவா. சிவாவிற்கோ நட்பைத் தவிர வேறு எண்ணமில்லை. அவளும் அழகிலும்,அன்பிலும் அளவற்றவள் எனினும் காதல் சிவாவிற்குள் எட்டிப் பார்க்கவில்லை ஆனால் ஹரிணியை வதைத்தது. திடீரென்று வந்தாள் ஐசுவர்யா, சிவாவிடம் காட்டிய அன்பு,அக்கறை எல்லாமே அவனை சிறைபிடித்தது.காதலை கலங்கடித்து விட்டு தனிமை விரும்பியான ஹரிணியை பஷீரின் அன்னை ஒப்ப அன்பு கட்டிப்போட்டது. தன்னை விரும்புபவனிடம் தன்னை ஒப்படைத்துவிட்டாள் இன்றோ அவனையும் இழந்து தவிக்கின்றாள். 
                                                                         
                                                                                                                            -  காத்திருங்கள்

Tuesday, 15 November 2011

புதிய தொடர்கதை

நாளை (17.11.11) முதல் உங்களை வசீகரிக்க வருகின்றது வஞ்சம்.... தயாராகுங்கள் ஒரு அமானுஷ்யத்திற்கு...