Saturday 31 December 2011

காதலும் கடவுள் போல

தன்னால் புரிந்து கொள்ள முடியாத
அறிதலுக்கு அப்பாற்பட்ட
புலப்படாத விடயங்களை
தனக்கு மீறிய சக்தியாய் எண்ணி
ஆராதிப்பது மானிட சுபாவம்...



நானும் அப்படித்தான்
உன்னை
தூரத்தில் மட்டுமே தரிசித்து
புரிந்து கொள்ள விழையாது ரசித்து
காதலால் ஆராதித்தேன்...
தற்பொழுது நாத்திகனானேன்...





Wednesday 28 December 2011

2011 ஆம் ஆண்டு அரசியல் விருதுகள்

2011 ஆம் ஆண்டு காலண்டர தூக்கி போட்டுட்டு 2012 காலண்டர மாட்ட போற உன்னதமான செயலுக்கு வழி வகுக்கும் புத்தாண்டு வேளையிலே இந்த ஆண்டுக்கான அரசியல் விருதுகள் வழங்கும் விழாவுக்கு உங்களை வருக வருக என வரவேற்கிறேன்...

”வந்தாச்சு வந்தாச்சு விருது” 


கடல்லயே கிடைக்காத ஜாமீனை கோர்ட்டில் வாங்கி திராவிட இனத்தின் போர்வாளாக எண்ணிய கம்பிகளை எட்டி உதைத்துவிட்டு வெளியே வந்து ஐ.சி.யூ வில் இருந்த தி.மு.க விற்கு புது இரத்தம் பாய்ச்சிய கனி அக்காவுக்கு “வந்தாச்சு வந்தாச்சு விருது”.



கனி: ”ஜாமீனில் வெளில வந்ததுக்காகவே ஊரெல்லாம் ஃபிளக்ஸ் கட்டி,மோளம் அடிச்சு,கூட்டத்த கூட்டி அகில இந்திய அளவில் அசிங்கப்பட்ட தி.மு.க வினருக்கு இந்த விருது சமர்ப்பனம் செய்கிறேன்”

”சிறந்த ’அப்பா’டக்கர் விருது” 


கூடங்குளத்துல குண்டு வெடிச்சாலும்,முல்லைப் பெரியாறு நாசமா போனாலும்,கட்சிக்காரன் எத்தன பேர் ஜெயிலுக்கு போனாலும் கண்டுக்காம கனிக்கு ஜாமீன் கிடைக்கறது தான் முக்கியம்னு தினமும் டி.வி ஃபிளாஷ் நியூஸ் பார்த்துக் கொண்டே காலத்தை கழித்த தமிழினத் தலைவர் கருணாநிதி அவர்களுக்கு ”சிறந்த ’அப்பா’டக்கர் விருது”


கரு: “இந்த விருது பெற்றமைக்காக ’அப்பாடக்கரான அன்புத் தலைவன்’ என ஒரு பாராட்டு விழா தம்பி ரஜினி,கமல் தலைமையில் ஜெகத்ரட்சகன் நடத்த இருப்பது கேட்டு பேருவகை கொள்கிறேன்”

ஜெகத்: ”தலைவா ஆட்சி போயி ஆறு மாசம் ஆச்சு.”




”தாத்தா பிஸ்கோத்து விருது”


முதல் இன்னிங்சுல வெறித்தனமா ஆடிட்டு இரண்டாவது இன்னிங்சுல மொக்கை அடி வாங்குற இந்திய கிரிக்கெட் அணி மாதிரி.ஊர் முழுக்க கூடி உண்ணாவிரதம் இருந்து அடுத்த காந்தினு பேர் வாங்கி “சரத்பவாருக்கு ஒரு அடிதான் விழுந்துச்சா?”னு கேட்டு தான் டெரர் காந்தினு நிரூபிச்சு இப்ப உண்ணாவிரதம் இருந்து உடனே வாபஸ் வாங்கி. இப்படி பல ட்விஸ்டுகள குடுத்து பிஸ்கோத்தாகிப் போனா ஹசாரே தாத்தாவுக்கு “தாத்தா பிஸ்கோத்து விருது”


ஹசாரே: ”ஏக் காவ் மே ஏக் கிஸான் ரஹ தாத்தா”

”இது வாயா? கால்வாயா? விருது”


’காங்கிரச எதுத்து யார் பேசினாலும் அவங்க நாசமா போயிடுவாங்க,புள்ள குட்டி எல்லாம் நாசமா போயிடும்,ரத்த வாந்தி எடுத்து சாவாங்க’ என ஒவ்வொரு பேட்டியிலும் காங்கிரசை எதிர்க்குறவங்கல சாமகோடங்கி ரேஞ்சுக்கு சாவடிக்கும் திக்விஜய் சிங்கிற்கு “இது வாயா? கால்வாயா? விருது”


திக்விஜய்: இந்த ப்ளாக் எழுதறவருக்கும் ஆர்.எஸ்.எஸ் கும் சம்பந்தம் இருக்கு. இவருக்கு நாட்டுபற்று இல்ல.

நான்: அததாண்டா நானும் சொல்றேன் எனக்கு நாட்டுப்பற்று இல்ல.

“பல்பு வாங்கலியோ பல்பு விருது”

எந்த ஸ்டேட்டுல எலக்‌ஷன் நடந்தாலும் உடனே போயி ஆஜராகி அங்க உள்ள ஏழை பாழைங்க வீட்டுல இருக்குற சோத்தையெல்லாம் புடுங்கி தின்னு,ஊர் கிணத்துல கலீஜ் பண்ணி,ஹெலிகாப்டர்ல போய் இறங்கி விவசாயம் பண்ணி எதிர்கட்சிக்காரங்கள நாராசமா திட்டிட்டு திரும்பி வரப்ப மறக்காம பல்பு வாங்கிட்டு வர்ற ராகுல் காந்திக்கு “பல்பு வாங்கலியோ பல்பு விருது” 


ராகுல்: “மாயாவதி எல்லா கசையும் பிக்பாக்கட் அடிச்சுட்டார் எங்க கைல ஆட்சிய குடுங்க உங்க பணத்தையெல்லாம் இத்தாலி பேங்குல பத்திரமா போட்டு வெக்கறோம்”

கபில் சிபல்: “ராகுலுக்கு பிரதமராகும் முழுதகுதி வந்திவிட்டது”
பிரணாப்: “வெளிநாட்டு வங்கிகளில் வட்டி அதிகம் என்பதால் ராகுலின் இந்த முடிவு பொருளாதார மறுமலர்ச்சியை உண்டு பண்ணும்”
நிருபர்: “யாருக்கு?”
பிரணாப்: “யாருக்கோ.....”

“வாயில புண்ணு விருது”

எத்தன வருசம் ஆனாலும் சரி பல்லு விளக்கறக்கும்,பக்கோடா திங்கறக்கும் மட்டுமே வாய திறக்கும் மன்மோகன் சிங்குக்கு ”வாயில புண்ணு விருது”


மன்மோகன்: “................................................................”

நிருபர்:”எதிர்பார்க்காதீங்க”

”ஆத்தா முறைச்சு பாத்தா விருது”


”ஜெயிப்பாங்கன்னு தெரியும் ஆனா இவ்ளோ பெரிசா ஜெயிப்பாங்கன்னு எதிர்பார்க்கலபா” என சட்டமன்ற மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் எதிர்கட்சிகளுக்கு ரிவிட் அடித்தவர் இவர். ஒரு கட்சிக்கு பக்கத்து மாநிலத்துல கிளை ஆரம்பிக்கலாம் தேசிய அளவுல கிளைகள் ஆரம்பிக்கலாம் ஏன் ஃபாரின் ல கூட ஆரம்பிக்கலாம் ஆனா வரலாற்றில் முதல் முறையா தி.மு.க வுக்கு ஜெயிலில் கிளை ஆரம்பிக்க வெச்சவர் இவர்.கட்சத்தீவு,ஈழம்,3 பேரின் தூக்கு தண்டனை என எல்லா விசயத்துலயும் மத்திய அரசை புரட்டி போட்டு கும்மியடித்தவர் இவர். ”விரோதிய கூட மன்னிச்சுடுவேன் ஆனா கூடவே இருந்து குழி பறிக்கறவன மன்னிக்கவே மாட்டேன்” என இத்தன நாளா ஒன்னுமன்னா ஆட்டய போட்ட தோழிய விரட்டி விட்ட நம் முதல்வர் அம்மா அவர்களுக்கு “ஆத்தா முறைச்சு பாத்தா விருது”



ஜெ:  “அண்ணா நாமம் வாழ்க,புரட்சித் தலைவர் நாமம் வாழ்க, மக்களுக்கு போட்ட நாமம் வாழ்க”


இவ்வளவு நேரம் நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவருக்கும் மிக்க நன்றி.





Tuesday 27 December 2011

தமிழக அரசியல்:திசை மாறும் பயணங்கள்-பாகம் 2

தமிழகத்தின் 2 பிரதான கட்சிகளான தி.மு.க, அ.தி.மு.க என்ற இரு கட்சிகளின் எதிர்காலம் எப்படி இருக்குமென பார்த்தோம்.இனி அடுத்த தலைமுறை அரசியலுக்காக முன்னணியில் இருக்கும் கட்சிகளைக் காண்போம்.

தே.மு.தி.க

வெள்ளித்திரையில் வாசிம் கான் உட்பட பாகிஸ்தான் தீவிரவாதிகளை பந்தாடி பந்தாடி இந்தியாவிற்கு பெருமை சேர்த்த கேப்டனின் கட்சி. இந்த கட்சியின் சுருக்கமான வரலாற்றைக் காண்போம்.தி.மு.க, அ.தி.மு.க என்ற இரு கட்சிகளுமே மாறி மாறி தமிழ்நாட்டை உருட்டி விளையாடிக் கொண்டிருந்த காலம் அது.இருவரிடமும் எந்த வித்தியாசத்தையும் உணராத ஒரு பகுதி மக்கள் ஒரு மாற்று கிடைக்காதா என ஏங்கிக் கொண்டிருந்த சமயம்.



ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என பொதுஅறிவுமிக்க பொதுஜனம் விரும்பிக் கொண்டிருந்த போது அவர் வானத்தை நோக்கி ஆள்காட்டி விரலை காட்டி விட்டு இமயமலைக்கு ஓடிக் கொண்டிருந்த நேரம்.ரசிகர் மன்றத்தில் பிரியாணி,தையல் இயந்திரம், மூன்று சக்கர சைக்கிள் என சிறிய அளவில் அரசியல் செய்து கொண்டிருந்த விஜயகாந்த ரசிகர் மன்ற உறுப்பினர்களை உள்ளாட்சித் தேர்தலில் களமிறக்கினார்.ஓரளவு ஆதரவும் பெற்றார்.திடீரென செப்டம்பர் மாதம்,2005 ஆம் ஆண்டு மதுரையில் மாநாடு நடத்தி கட்சியை துவங்கினார்.தலைவர் கட்சியின் பெயரையே மாநாடு அன்று காலையில் தான் முடிவு செய்தார் என்பது கொசுறு.தேசியத்தையும்,திராவிடத்தையும் கட்சியின் பெயரில் ஒன்று சேர்த்தது மாபெரும் சாதனை (முடியலடா சாமி).தமிழகத்தில் புதிய கட்சி அதுவும் பிரபலமான நடிகர் என்பதால் மீடியாக்கள் வளைத்து வளைத்து செய்தி வெளியிட்டன.மக்களோடும்,தெய்வத்தோடும் தான் கூட்டணி என எம்.ஜி.ஆரின் வேனில் ஏறி தமிழகம் முழுக்க சுற்றிச் சுற்றி மாற்று தேடிக் கொண்டிருந்த மக்களிடம் ஒரு சிறிய அபிப்ராயத்தை உருவாக்கியதால் 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஓட்டு சதவிகித அளவில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தார்.



தி.மு.க, அ.தி.மு.க ஆகியவை செய்யாத அரசியலை நான் செய்து காட்டுகிறேன் என சொன்னவர் அச்சு அசல் அவர்களைப் போலவே இவரும் எதிர்க்கட்சி வரிசையில் இருந்ததால் சட்டசபைக்கு செல்லவில்லை இன்று வரை.மேடைப் பேச்சில் திராவிட கட்சிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்களைப் போல பேசுவது இவருக்கு கூட்டம் கூட்டியது.ஆனால் மாற்றாக உருவாகியிருக்க வேண்டியவர் இன்று ஓட்டு சதவிகிதத்தை தக்க வைத்துக் கொள்ளவே அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கிறார் என்பது கடந்த உள்ளாட்சித் தேர்தலில் வெட்ட வெளிச்சமானது.மக்களுக்கு நல்லது செய்வது தான் கொள்கை என கூறி வந்தாலும் தெளிவான கொள்கை இல்லாமல் பிற கட்சிகளை சாடுவதே தன் முழுநேர வேலையாக வைத்துக் கொண்டிருக்கின்றார்.




அவரின் மேடைப் பேச்சைக் கேட்டவர்கள் ஒரு வரியாவது புரிந்தது என்று சொன்னால் அது அவர்கள் செய்த பாக்கியம்.முழுக்க முழுக்க விஜயகாந்தின் பிரபலமும், சினிமா பாணி பேச்சும் தான் இக்கட்சியின் பலமாக உள்ளது.தொண்டர்கள் பெரும்பாலும் ரசிகர் மன்றத்தினர் தான்.ஆனால் தலைவர்களாக உள்ளவர்கள் யாரென பார்த்தால் விஜயகாந்தால் ஊழல் கட்சி என பட்டம் சூட்டப்பட்ட திராவிடக் கட்சிகளில் இருந்து ஒரம்கட்டப்பட்டவர்களும்,உள்ளுரில் இரு கட்சிகளிலும் சேர முடியாத ஆனால் அரசியல் பலம் பெற விரும்பியவர்களும் தான்.குடும்ப அரசியலை சாடும் இவர் கட்சியிலும் மனைவியும்,மச்சானும் தான் முக்கிய சக்திகளாக விளங்குகின்றனர்.பண்ருட்டி இராமச்சந்திரன் மட்டுமே இந்த கட்சியில் தமிழக அரசியலின் நீண்ட கால வரலாற்றை உள்வாங்கி அதன் பாரம்பரியத்தில் திளைத்தவர் அவரின் வழிகாட்டுதல் இல்லாமல் போனால் கட்சி கண்டபடி தள்ளாடுவது உறுதி.மற்ற அனைவருமே தமிழக அரசியலின் வரலாற்றில் ஆனா ஆவன்னா கூட அறியாதவர்கள் என்பதே உண்மை.அதற்கு ஒரு எடுத்துக்காட்டு கட்சிக் கூட்டம் ஒன்றில் பிரேமலதாவின் பேச்சு “தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடந்ததென்றால் அது பெரியாரின் ஆட்சி தான்”.



விஜயகாந்தின் அரசியல் முதிர்ச்சியின்மை சமீபத்தில் மதுரையில் நடந்த அவர் கட்சிக் கூட்டங்களில் வெளிப்பட்டது.மதுரை மக்களிடம் மிகச்சிறப்பான செயல்பாடுகளால் நற்பெயர் பெற்றிருக்கும் ஆட்சியர் சகாயம்,காவல்துறை ஆணையர் ஆஸ்ரா கார்க் ஆகிய இருவரையும் மேடையில் விளாசி எடுத்தார்.அதற்குக் காரணம் தன் கட்சிக் காரர்களை ஃபிளக்ஸ் பேனர் கட அனுமதிக்கவில்லை என்பதால்.குறைந்தபட்சம் இவர்களுக்கு தமிழர் நலன் சார்ந்த விடயங்களிலாவது கொள்கை இருக்குமா என்றால் ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது.2009 ஆம் ஆண்டு தமிழகமே ஈழப் பிரச்சனைக்காக கொந்தளித்துக் கொண்டிருந்த போது தலைவர் ‘விருத்தகிரி’ திரைப்பட படப்பிடிப்பில் தான் முழு கவனம் செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. அச்சமயம் ஒரே ஒரு கூட்டம் மட்டும் போட்டு ஒபாமாவிற்கு தந்தி அனுப்புங்கள் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.அதை அவர்கள் கட்சிக்காரர்கள் கூட செய்யவில்லை.தி.மு.க விற்கு எதிரான அலையில் எதிர்க்கட்சி அந்தஸ்து தற்சமயம் கிடைத்தாலும் தொடர்ந்த உள்ளாட்சித் தேர்தலில் குறைந்தபட்ச இடங்களைக் கூட பிடிக்கவில்லை என்பது இவருடைய கட்சி பலத்திற்கு எடுத்துக்காட்டு.கட்சி தொடங்கிய 6 வருடங்களில் இப்பொழுது தான் முதன்முறையாக போராட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.அதுவும் பிரதமருக்கு எங்கோ கறுப்புக் கொடி காட்டியதற்காக.விஜயகாந்தின் வளர்ச்சிக்குக் காரணம் சரியான நேரத்தில் அவர் கட்சியை தொடங்கியது மட்டும் தான் என கூறப்படுவதிலும் உண்மை இருக்கத் தான் செய்கிறது.

எதிர்காலம்

#ஆளுங்கட்சி அசுர வலிமையுடன் இருந்த போதே கோவையில் கூட்டிய ஒரு கூட்டத்தில் அரசியலில் மாபெரும் திருப்புமுனையை உருவாக்கியது அ.தி.மு.க. இப்பொழுது ஆளுங்கட்சி அத்தகைய வலிமையுடன் திகழுமானால் அதற்கு எதிராக நின்று நிலைக்க தேவையான வலு இந்த கட்சிக்கு இல்லை.
#இன்று வரை மக்களின் ஏகபோக நம்பிக்கையை வெல்ல முடியாததால் இனி வரும் காலங்களில் அதன் செயல்பாடுகளைப் பொறுத்தே அரசியலில் நிலைக்க முடியும்.
#ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாவிட்டாலும் பதவியை மட்டுமே இலக்காக கொண்ட இரண்டாம் கட்டத் தலைவர்களால் ஒரு வலுவான அடிப்படைக் கட்டமைப்புக்கு உதவ முடியாது.மேலும் தோல்விகள் தொடருமாயின் அவர்களும் கட்சியை விட்டுச் செல்ல வாய்ப்புகள் அதிகமாகும்.
#திராவிட கட்சிகளுக்கு தான் மாற்று என சொல்லும் அளவுக்கு இன்னும் எந்த காரியத்தையும் விஜயகாந்த் செய்யவில்லை.அதே திராவிட கட்சிகளை பிரதி எடுத்தது போல் தான் இன்று வரை செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

இவரை பற்றி பேசவே நிறைய எழுத வேண்டியதாகி விட்டது.அடுத்த பாகத்தில் முடித்துக் கொள்ளலாம்.
                                                                                                 -தொடரும்.

Sunday 25 December 2011

தமிழக அரசியல்:திசை மாறும் பயணங்கள்-பாகம் 1

உத்திரபிரதேசம்,தமிழகம் இந்த இரு மாநிலங்களில் நடக்கும் மாற்றங்கள் இந்திய அரசியலில் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணுகிறது என்றால் அதுதான் உண்மை,வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தின் அரசியல் இந்தியாவின் முக்கியமாக பார்க்கப்படும் அரசியல் தளங்களில் ஒன்று.பலமுறை இந்திய அரசியலை ஆட்டிப்படைத்திருக்கின்றது தமிழக அரசியல் என்று சொன்னால் அது கொசுறுதான்.அந்த அரசியலின் நிகழ்வுகள் எல்லாம் பெரும்பாலும் தி.மு.க, அ.தி.மு.க என்ற இரு அசுர பலம் கொண்ட கட்சிகளை மையப்படுத்தித்தான் நடந்து கொண்டிருக்கின்றது. ஆனால் இன்று தமிழகத்தின் அரசியல் போக்கின் எதிர்காலம் வேகமாக பல மாற்றங்களை நோக்கி செல்கிறது.அதற்கு முக்கியமான கட்சிகளின் எதிர்காலம் என்னவென பார்த்தல் அவசியம்.

தி.மு.க





1949 ஆம் ஆண்டு தி.மு.க அறிஞர் அண்ணாதுரையால் கொட்டும் மழையில் துவக்கப்பட்ட பொழுது அளப்பரிய தொண்டர்கள் உணர்ச்சிவயப்பட்டு கூடியிருந்தனர்.அன்று கூடிய தொண்டர் பெருமக்கள் தான் இன்று வரை தி.மு.க வின் அடித்தளம்.அண்ணாவின் ஆணை ஏற்று ஆளும்வர்க்கத்தை அடித்து துவம்சம் செய்ய திசை தோறும் தளபதிகள் இருந்தனர்.நெடுஞ்செழியன்,கருணாநிதி,எம்.ஜி.ஆர்,ஈ.வி.கே.சம்பத்,கண்ணதாசன்,அன்பழகன் என அந்த பட்டியல் வெகு நீளம்.அண்ணாவின் கட்டளையை சிரமேற்கொண்டு இவர்கள் முன் செல்ல இவர்கள் பின்னால் தன்னலம் மறந்து, தான் வாழும் தமிழ்குடி மேன்மையடைய வேண்டும்,ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேற வேண்டும் என்னும் வெறி கொண்ட தொண்டர்படை செல்லும்.தி.மு.க வின் போராட்டம் நடக்கின்றது என்றால் அது ஆளும் காங்கிரசு கட்சிக்கு பெரும் நெருக்கடியாக இருந்தது.தி.மு.க வை அடக்குவதாகத் தெரிந்தால் மாணவர்கள்,கலைஞர்கள்,பொதுமக்கள், பத்திரிக்கைகள் என பல முனையிலிருந்து கண்டன அம்புகள் பாயும்.


அத்தகையதோர் மாற்று சக்தியாக தி.மு.க சீறிப்பாய்ந்து 1967 ல் ஆட்சியைப் பிடித்தது தமிழை உயிரென சுவாசித்து இந்தி எதிர்ப்புப் போரட்டத்தில் தமிழுக்காக உயிர் நீத்த மாணவர்களால்.தி.மு.க வின் தொடக்க காலத்தில் அதன் சமூக நீதிப் பயணங்கள் ஒடுக்கப்படோரை தலைநிமிர வைத்தது.மத்திய அரசு இடஒதுக்கீடு 50% க்கும் மேல் செல்லக் கூடாது என சொன்ன போது 69% குடுத்தே தீருவோம் என உறுதியாய் நின்று வென்று காட்டிய கட்சி தி.மு.க.அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் நிமிர்ந்து நின்று தொண்டாற்றிய இயக்கம் அது.தன் பிள்ளைகளுக்கு உதயசூரியன்,கருணாநிதி,அண்ணாதுரை,செழியன் என பெயர் வைப்பது மிக சாதாரணமாக நடந்தது. எது வரை? கருணாநிதி என்னும் மனிதர் அதன் தலைவராகும் வரை.


 பதவி சுகமும்,அதிகார வாய்ப்பும் கிடைத்ததும் அதை விடாமல் ருசிக்கத் துடித்தவர் அதற்குத் தேவையான காரியங்களை இயற்றி தன்னையே நிரந்தர தலைவராக நிலை நிறுத்தியிருக்கிறார்.அவருடைய இந்த கபட நாடகம் தொண்டர்களுக்கும் வழிகாட்டுதலாக அமைந்தது.பணம் சேர்க்க தலைவர் பல வழிகளில் பூந்து விளையாடிய பொழுது அதில் சில வழிகளை தொண்டர்களும் பின்பற்றினர்.சந்தர்ப்பம் கிடைத்த இடத்தில் எல்லாம் திருடுவதில் தொடங்கி அதிகாரத்தை பயன்படுத்தி திருடுவதற்கான வழிகளை தாங்களே உருவாக்கத் தொடங்கினர்.எம்.ஜி.ஆரால் 14 ஆண்டு காலம் வனவாசம் கண்ட பின்பு மீண்டும் அத்தகைய நிலை தனக்கு வந்துவிடக்கூடாதென தமிழகம் முழுக்க தன் கட்சியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க தன் பிள்ளைகளையே தனக்கு தளபதியாக்கினார்.வை.கோ என்னும் மாபெரும் சக்தி இதனால் கட்சியிலிருந்து விலக்கப்பட்ட போது தி.மு.க வே கிடுகிடுத்தது. வடக்குக்கு ஒருவர் தெற்குக்கு ஒருவர் என பிரித்து வைத்துத் தொடங்கிய பின் கொஞ்சம் கொஞ்சமாக மருமகன்,மகள்,மனைவிகள் என விடாமல் அனைவரையும் கட்சிக்குள் திணித்தார்.அதிகார மையங்கள் பல இடங்களில் உருவானது. தலைவரின் இதே பாணியை மாவட்ட அளவில் அனைவரும் பின்பற்றினர்.தமிழினம் மீட்கப்படும் என நம்பி கட்சிக் கொடியை தூக்கிப் பிடித்த தொண்டர்கள் எல்லாம் மனமொடிந்து ஒதுங்கினர்.





தொடக்கத்தில் தமிழர் வாழ்வே தன் இலட்சியம் என ஆணைகள் பிறப்பித்த அரசு கருணாநிதியின் காலத்தில் தன் மீது எழும் விமர்சனங்களையும்,குற்றச்சாட்டுகளையும் திசைதிருப்பும் ஓர் கேடயமாக தமிழர் நலனுக்கான அறிவிக்கப்புகளை பயன்படுத்திக் கொண்டது.கட்சியின் அடிமட்ட தொண்டர்களின் உழைப்பால் வளர்ந்த கட்சியாகையால் அத்தொண்டர்களும் கருணாநிதியின் சந்தர்ப்பவாத தமிழர் பாசத்தால் மதிமயங்கி அவரை தமிழினத் தலைவராக கொண்டாடி மகிழ்ந்தனர்.கருணாநிதியின் தமிழாலும்,அவரின் புனை பேச்சுக்களிலும் மயங்கிய தமிழறிஞர்களும் அவ்வாறே அவரை ஏற்றுக் கொண்டனர். தி.மு.க வின் ஆட்சியில் எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என்னும் தோற்றப்பாடு வந்து விட்ட பின் பண வெறி கொண்ட ரவுடிகள்,முதலாளிகள்,முறைகேடுகளில் ஈடுபடுவோர் அனைவரும் முடி முதல் அடி வரை உள்ள அனைத்து அதிகார மையங்களில் இணைந்து தங்களை கட்சி விசுவாசி போல காட்டி பணத்தை கொள்ளை கொள்ளையாக சுருட்டினர்.அதிகார மையங்களும் பணமே குறிக்கோள் என இருந்ததால் அத்தகையோரின் இருப்பை விரும்பினர்.கொள்கைக்காக பதவியை துச்சமென உதறிய தி.மு.க, கருணாநிதி காலத்தில் எப்பாடு பட்டாவது பதவியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு வந்தது.ஈழ விவகாரத்தில் தி.மு.க வின் செயல்பாடு இதற்கு உதாரணம். கொள்கைக்கு வாக்கப்பட்ட தொண்டர்கள் எல்லாம் ஒதுங்கிவிட்ட படியால் அதிகார மையங்களில் ஒட்டிக் கொண்ட தொண்டர்கள் தான் இப்பொழுது தி.மு.க வில் பல்கி பெருகியிருக்கின்றனர்.பெயிலில் வந்த கனிமொழிக்கு கிடைத்த வரவேற்பு ஒரு உதாரணம்.மெதுவாக விழித்துக் கொண்ட தமிழுணர்வாளர்கள் கருணாநிதியின் துரோகத்தை தோலுரித்துக் காட்டிக் கொண்டிருப்பது கண்கூடு.உண்மையான தொண்டர்களை இழந்ததால் இக்கட்சி எப்படிப்பட்ட நிலையை அடைந்திருக்கிறது என பார்த்தோமானால் தொடக்க காலத்தில் தி.மு.க ஆளுங்கட்சியையோ,மத்திய அரசையோ எதிர்க்க வேண்டுமானால் எதிர்ப்போடு நிறுத்த மாட்டார்கள் அரசாங்கத்தையே அதிர வைக்கும்படி போராட்டங்களை நடத்துவார்கள்.ஆனால் தமிழரின் உயிராதார பிரச்சனையான முல்லைப் பெரியாறு விவகாரத்தில் அரை நாள் உண்ணாவிரதம்,மனித சங்கிலியோடு முடித்துக் கொண்டிருக்கின்றது.கட்சியின் தலைமைக்கு தொண்டர்கள் மேல் நம்பிக்கை இல்லை.காசுக்கும்,பதவிக்கும் கட்சியில் சேர்ந்தவர்கள் போராட்டம் எல்லாம் செய்யமாட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் தான்.மாவட்ட தலைமைகளும் ஆளுங்கட்சியின் நடவடிக்கை பாயுமோ என்ற பயத்தில் பதுங்கிக் கொண்டிருப்பது வெட்ட வெளிச்சம்.

எதிர்காலம்:
#தி.மு.க வின் அடிநாதமான விசுவாசமான தொண்டர்கள் இப்பொழுது இல்லை.
#குறைந்தபட்சம் 10 அதிகார மையங்கள் இருப்பதால் கருணாநிதிக்குப் பிறகு அந்த கட்சி ஒற்றுமையாய் இருப்பது போல தோற்றத்தை உருவாக்க முயன்று  தோற்கும்.கட்சி உடையாமல் ஒற்றுமையாய் இருந்தாலும் அது இன்னுமொரு தமிழக காங்கிரசு கட்சி போல கோஷ்டி அரசியலில் சீரழியும்.தலைமையிடத்துக்கு போட்டி தொடங்கி பின் அது மாவட்ட செயலாளர் நியமனம்,வேட்பாளர் தேர்வு,போராட்டம் நடத்துதல் என பல்வேறு நிலைகளில் வெளிப்படையான மோதல் நடக்கும்.
#இருக்கும் கொஞ்ச நஞ்ச சுயநல தமிழுணர்வாளர்களின் ஆதரவும் கருணாநிதிக்குப் பின் இருக்காது.
#தேசிய அரசியலில் 15 வருடங்களாக தி.மு.க செலுத்தி வரும் ஆதிக்கம் கருணாநிதிக்குப் பின் நடக்காது.
#கருணாநிதி மேல் குறைந்த பட்ச பாசத்தோடு இருக்கும் பெரியவர்களும்,முதலாளிகளும் அவருக்குப் பின் கழன்று கொள்வர்.
#கருணாநிதிக்குப் பின் ஒரு தலைமையில் தொண்டர்கள் ஒருங்கினைவது எக்காலத்திலும் நடக்காது.தான் சார்ந்த ஒரு மரத்தை விட்டு இன்னொரு மரத்திற்கு எந்த மிருகமும் அவ்வளவு எளிதில் தாவாது அப்படியே தாவினாலும் மரியாதை இருக்காது என்பது அதற்குத் தெரியும்.ஆகையால் தன்னுடைய மரத்தை கொம்பு சீவி விட்டு தன்னுடைய இருப்பை உறுதி செய்து கொள்ளவே எல்லா மிருகங்களும் முனையும்.அதற்குப் பெயர் தான் SURVIVAL OF THE FITTEST.

அ.தி.மு.க

நிகழ்காலம்-ஜெயலலிதா
எதிர்காலம்-ஜெயலலிதா

ஜெயலலிதாவுக்குப் பின்?

பார்ப்பன கும்பல் தலைமையில் ஆரிய சமாஜமாக மாறலாம் அல்லது தேவரின மக்களின் ஜாதி சங்கமாக சுருங்கலாம். ஆனால் ஒரு கட்சியாக வெகுஜன ஆதரவோடு இயங்க வைப்பது நிச்சயம் வாய்ப்பில்லை.ஏனெனில் எம்.ஜி.ஆருக்குப் பின் ஜானகியா? ஜெயலலிதாவா? என்னும் கேள்வி எழுந்தது ஆனால் ஜெயலலிதா உள்ள வரை வாரிசு என யாரும் உருவாகப் போவதில்லை.அவருக்குப் பின் யார் என கேள்வியில் பொருத்திப் பார்க்கக் கூட மக்கள் ஆதரவு பெற்ற தலைவர்கள் அங்கே இல்லை இனியும் வரப்போவதில்லை.

அப்படியானால் இவர்கள் இருவருக்கு பின்னால் என்ன நடக்கும்?

அடுத்த பாகத்தில் பார்ப்போம்.
                                                                                                                       -தொடரும்

சுனாமியின் 7 ஆம் ஆண்டு நினைவு நாள்




ராஜபாட்டை-ஒன்ஸ்மோர்!!!

தெய்வத்திருமகள் என்னும் விக்ரமின் அசத்தலுக்குப் பின், அழகர்சாமியின் குதிரை என்னும் அழகான சுசீந்திரனின் படைப்பிற்குப் பின் இருவரும் மாறுதலான பாதையில் பயணிக்க முயற்சித்து பஞ்சர் ஆன பாதை தான் ராஜபாட்டை.



இது கமர்ஷியல் மாஸ் மசாலா படம் என அழைக்கப்படுவதால் அந்த வகையறாவைக் கொண்டே விமர்சிப்பதுதான் பொருத்தமாக இருக்கும். திரைப்படத் துறையில் ஜிம் பாயாக (வில்லனோட அல்லக்கைக்கு அல்லக்கை) வேலை பார்ப்பவர் தான் நம்ம கதாநாயகன் அனல் முருகன்.சினிமாவில் மாபெரும் வில்லனாக வர வேண்டும் என்பது அவர் இலட்சியம். நீண்ட நாட்களாக தான் தங்கும் மேன்ஷனுக்கு எதிரில் மகளிர் விடுதியில் தங்கி இருக்கும் தர்ஷினியை (தீக்‌ஷா சேத்) தூரத்தில் இருந்தே டாவடிக்கிறார்.



இதற்கிடையில் தஷினாமூர்த்தி என்னும் நகைக்கடை உரிமையாளர் தன் மனைவியின் நினைவாக நடத்தி வரும் அனாதை இல்லத்தை அவருடைய மகன் அரசியல் ஆசை காரணமாக நில அபகரிப்பு துறை மந்திரியாகிய அக்கா என்னும் ரங்கநாயகியாக்கு தாரைவார்க்க முயல்கிறார்.அதற்கு தாத்தா மறுத்து வீட்டை விட்டு வெளியேற அனல் முருகன் அவருக்கு அடைக்கலம் தருகிறார்.தாத்தாவை ஏமாற்றி சொத்தை பறித்தார்களா? “நான் முடிவு பண்ணிட்டா அக்கா இல்ல அந்த ஆண்டவனே வந்தாலும் விட மாட்டேன்” என சீறிக் கிளம்பும் அனல் முருகன் நில அபகரிப்பால் தவிக்கும் தமிழகத்தை காப்பாற்றினாரா? என்பது தான் கதை.ஸ்ஸ்ஸ்... அப்பாடா கதைய சொல்லி முடிச்சுட்டேன்...


 கமர்ஷியல் சினிமா எடுக்க வேண்டும் என்கிற ஆசை எல்லா இயக்குனர்களுக்கும் நிச்சயம் இருக்கும்.ரசிகர்களிடம் சீனுக்கு சீன் கை தட்டலும், விசிலும் வாங்கி சூப்பர் தலைவா என்று பாராட்டப்பட எந்த இயக்குனருக்கு தான் ஆசை இருக்காது.அதை இந்த திரைப்படத்தில் நிறைவேற்ற முயற்சித்திருக்கிறார் சுசீ. ஆசை எல்லாம் சரி தான் நம்ம ஊர்ல பெருசா ஒரு படம் எடுக்கனும்னா அது சம்பந்தமா எல்லா இங்கிலீஷ் படத்தையும் பாத்துட்டு அதிலிருந்து ரெஃபரன்ஸ் எடுப்பாங்க.அதாவது இந்த சீன் இப்படி இருந்தா ஒர்க் அவுட் ஆகும்னு மனசுல நிர்மானிச்சுடுவாங்க. நம்ம சுசீ இந்த ரெஃபரன்ஸ எல்லாம் தமிழ் திரையுலக மசாலா படங்கள்ல இருந்தே எடுத்து படம் எடுத்துருக்கிறது தான் பிரச்சனை. ஹீரோ கிட்ட முதல் காட்சிலயே அடி வாங்கிட்டு ”அண்ணா நீங்க இருப்பீங்கன்னு தெரிஞ்சா இந்த ஏரியா பக்கமே வந்திருக்க மாட்டேனுங்கன்னா” என்று பம்மி கிளைமாக்ஸ் வரை அதை அப்படியே மெயிண்டெயின் பண்ணி அப்பீட்டாகிற அடியாள் இதிலும் உண்டு. வில்லன் ஆவேசமாக கிளம்பும் போது “உனக்கு வெக்க போறாண்டி ஆப்பு” ரீதியிலான வசனங்கள் சாட்சாத் மேற்படியார் வாயிலிருந்து உதிர்கிறது.வழக்கமாக காதலுக்கு ஐடியா குடுக்கும் நண்பன்,சித்தப்பா,மாமா இடத்தில் இந்த முறை தாத்தா இருப்பது தனிச்சிறப்பு.வில்லனை மிரட்ட வில்லனின் குடும்பத்த கடத்தி அவனுக்கே ஆப்பு வைக்கும் ஷாக் ட்ரீட்மெண்ட் முறை தமிழக கமர்ஷியல் படங்களின் குலவழக்கம் என்பதால் அதையும் மறக்காமல் சேத்திருக்காரு.





 பீச் ல ஒரு பாட்டு. ஃபாரின்ல ஹீரோயினுக்கு சிக்குன்னு சேலை,ஹீரோக்கு டீக்கா சூட்டு போட்டுட்டு ஃபாரின் மரம்,ஃபாரின் தூண் எல்லாத்தையும் பிராண்டி,பிராண்டி ஒரு பாட்டு. குத்து பாட்டு வெக்காட்டி சாமி கண்ண குத்திருமேன்னு எங்க வெக்கறதுன்னு குழம்பி போயி தியேட்டரிலிருந்து எல்லாரும் எந்திரிச்சு போனப்புறம் ஒரு பாட்டு (இதுவும் ஃபாரின்ல நடுரோட்ல தான்).சாமி சத்தியமா எல்லா பாட்டும் சிட்வேஷனுக்கு சம்பந்தமே இல்லாம தான் வருது.தப்பு பண்ணும் மந்திரி (அக்கா) மேல ஆதாரம் இருந்தா நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்னு சொல்ற நேர்மையான முதலமைச்சர்.மந்திரி மேல வழக்கு நடந்ததும் மக்கள் எல்லாம் “அக்காவ தூக்கிட்டாங்க போல”, “இனி அக்கா அவ்ளோதான்’ என பத்து,பதினைஞ்சு லொக்கேஷன்ல பேசுறதும் உண்டு(ஆமா இஸ்திரி கடைக்காரர், பொட்டி கடைக்காரர் எல்லாம் வர்றாங்க).கிளைமேகஸ்ல வில்லிய கொலை பண்றக்கு கத்திய தூக்கிட்டு ஓடி வர்ற பரிதாப பொதுஜனம் உண்டு.இவரோட பையன முதல் பாதில வில்லனுங்க கொன்னுடறாங்க.ஏன்னா அவர் உண்மைய நேர்மையா வெளில சொன்னாரு.இதே பொன்னா இருந்தா கற்பழிச்சு கொன்னிருப்பாங்க.(ஒரு செண்டிமெண்டல் வேல்யூவ இயக்குனர் தவறவிட்டுட்டார்).இப்படி நாம 10 வருசமா என்னென்ன எழவ பாத்து வளர்ந்தோமோ அது எல்லாத்தையும் இதுலையும் கொட்டிருக்காங்க. நல்ல வேளை கிளைமேக்ஸ்ல மக்கள் எல்லாரும் மைக்க கடிச்சு திங்கப் போற மாதிரி உணர்ச்சிவசப்பட்டு பேசற டி.வி பேட்டி இதுல இல்ல சாமி. புதுசா எதுவுமே இல்லையானு நினைக்காதீங்க மேல சொன்ன விசயங்களுக்கு இடைப்பட்ட கேப்புல சில புதிய விசயங்களும் இருக்கு. கரண்ட கட் பண்ணி கடத்தப்பட்ட ஹீரோயின கண்டுபிடிக்கறது, சி.பி.ஐ என்கொயரி உண்மைதானோனு நினைக்கும் போது அது சினிமா செட்னு காமிக்கறது இப்படி சில இடங்கள்ல சுவாரசியப்படுத்தறாங்க.ஆனா இதெல்லாம் பத்தலயே மக்களே.இந்த சுவாரசியத்த படத்தோட கதைய சிந்திக்கறதுல காமிச்சிருந்தா நல்லாயிருந்திருக்கும்.



விக்ரம் குடுத்த பாத்திரத்த நியாயப்படுத்தியிருக்கார். அடிதடி தூள். மூஞ்சில சுருக்கம் நல்லா தெரியும் போது இன்னும் நானும் லவ் பன்றேன் நானும் லவ் பன்றேன்னு சுத்தறாரு.சி.பி.ஐ ஆபீசரா விசாரனை பண்ணும் போது ஃபேன்ஸி ட்ரெஸ் காம்பிடீஷன் நடத்தறாரு.சிங் வேஷம் நச். ஆனா காமெடி பண்றக்கு அவர் பண்ற முயற்சிகள் படு காமெடி ஆயிடுது. தீக்‌ஷா சேத் பொண்ணுக்கு டயலாக்க எல்லாம் கட் பண்ணிருந்தா கூட ஒண்ணும் வித்தியாசம் இருந்திருக்காது.விஸ்வநாதன் தாத்தா தான் முதல் பாதிக்கு எஞ்சின் ஆயில்.டீக்கா ட்ரெஸ் பண்ணி தமிழ்நாட்டையே எழுதி வாங்குற சனா (அக்கா) அவங்களுக்காக வாதாடற வக்கீல் உட்பட எல்லாரையும் முறைச்சுகிட்டே இருக்காங்க.கஜினி வில்லன் பிரதீப் ராவத்கு 2 ஃபைட்ட தவிர பெருசா ஒண்ணும் இல்லாதனால அவரே தற்கொலை பண்ணிக்கறாரு.மைனாவ கலகலக்க வெச்ச தம்பி ராமையா வர்றாரு.

இயக்குனர் கிட்ட என்ன கேட்கனும்னா நம்ம ஆளுங்க எல்லாம் யதார்த்த படங்கள்ல அடுத்தடுத்த நிலைக்கு போறாங்க.காட்சி அமைப்பு,கதை சொல்லும் விதம் எல்லாத்துலயும் பட்டைய கிளப்புறாங்க சுசீந்திரனும் அப்படி பட்டைய கிளப்பினவர் தான்.ஆனா கமர்ஷியல் படம் எடுக்கும் போது மட்டும் ஏன்யா இந்த கோட்ட தாண்டி வர மாட்டேன்னு அடம் புடிக்கறீங்க? இதுலயும் வேற தளத்துக்கு போங்களேன்யா.

தலைப்புக்கும் விமர்சனத்துக்கும் சம்பந்தம் இல்லையேனு யோசிக்க வேணாம்.புளிச்சு போன மாவ தான் ஒன்ஸ்மோர் அரைச்சிருக்காங்க அப்படிங்கறத தான் பொதுக்குழுவில பேசி இப்பிடி தலைப்பா வெச்சோம்.

Friday 23 December 2011

பெரியாருக்கு வீரவணக்கம்



எங்கள் பகுத்தறிவு பகலவனோடு
எம் மக்களின் பகுத்தறிவும் சேர்ந்து மறைந்த தினம் இன்று...

பார்ப்பனன் எம் எதிரி,அவன் சொன்ன சாதி மட்டுமல்ல
சாமியே தேவையில்லை என வீசி எறிந்த வீரன்...

எவனாயிருந்தால் எனக்கென்ன?
என பட்டதைப் பேசும் பகுத்தறிவாளி...

திராவிட நாடு இல்லையேல் நீயும்,நானும் அடிமை
என உண்மையை உறக்கச் சொன்ன உத்தமன்...

சாதி என்னும் வஞ்சத்தை
தன் சினம் கொண்டு எரித்த சிங்கம்...

மலையாளி கோவிலுக்குள் செல்ல வைக்கம் சென்றார்
இன்று அவர் இருப்பின் மலையாளியை
கேரளாவிலிந்து விரட்டியிருப்பார்...

பணமும் பதவியும் பிச்சைக்காரனுக்கு என
இறுதி வரை போராடியே வாழ்ந்த போராளி...

நீயும் நானும் சாணி அள்ளாமல் கணிணி தட்ட
தன் வாழ்வை ஈந்த வள்ளல்...

இந்த சமூகத்தின் ஆணிவேர் அவர்
அதன் கிளைகள் இன்று பட்டுப்போய் சீரழிகிறது
அது வேரின் தவறல்ல
வேருக்கு வெந்நீர் ஊற்றிய நம் தவறு...

Thursday 22 December 2011

கடவுளும் தூதுவனும்



ஆசை
காதல்
மோகம்
பற்று
எதிர்காலம்
துன்பம்
பேரின்பம்
அதிகாரம்

இவற்றைக் கட்டுப்படுத்தியவன்
கடவுளாகிறான்...

இவற்றை மற்றவரிடத்தில்
கட்டுப்படுத்தத் தெரிந்தவன்
கடவுளின் தூதுவனாகிறான்...

தேர்


வடம்பிடித்து இழுத்தால்
முறைத்து விட்டுப் போகிற
தேர்...
நீ மட்டும்தான்...

நெஞ்சுக்கு நீதி


அதிர்ஷ்டம் கதவை தட்டுவது மட்டுமல்லாமல் திறந்துவிடவும் செய்கிறது.தொடக்கத்தில் நாயகனின் பாவங்களற்ற நடிப்பும் இறுதிக் காட்சியில் திகிலடைந்த முகமுமாக அசத்தியிருக்கிறார்.

பன்னையாரும் பத்மினியும்

கலக்கல் நகைச்சுவை...
பன்னையார்,முருகேசன்... இருவரும் நேசிக்கும் பத்மினி என்னும் மகிழ்வுந்து... நெகிழ்வான காட்சிகளிலும் இயக்குனர் கலக்குகிறார்.

முண்டாசுபட்டி


நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான நகைச்சுவை குரும்படம். முண்டாசுபட்டியின் சித்தரிப்பும்,புகைப்படக் கருவியை கண்டதும் ஊராரின் எதிர்வினைகளும் அருமை...

வாழ்த்துக்கள்!!!

நீண்ட நாட்களாக வாசிக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்த புத்தகம் இப்பொழுது தலைப்புச் செய்திகளில்... சாகித்ய அகாதமி விருது பெற்ற வெங்கடேசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...


Wednesday 21 December 2011

ஈழத்தமிழருக்கு இந்தியாவின் மற்றுமொரு துரோகம்


சென்னையில் நடக்கும் பச்சைத் துரோகம்: அம்பலமாகும் சனல் 4 விடையம் !
21 December, 2011 by admin
இந்திய அரசின் மற்றுமொரு போலி முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது. ஈழத்தில் தமிழர்கள் அழியக் காரணமான சோனியாவின் அரசாங்கம் இன்றுவரை ஈழத் தமிழர்களை விட்டுவைத்தபாடாக இல்லை. தொடர்ந்து பழிவாங்கும் நடவடிக்கையைத் தொடர்வதோடு சீனா இலங்கைக்கு உதவுவதுபோல இந்தியா தானும் தமிழர்களைப் பலிகடாவாக்கி உதவிவருகின்றது. இதன் உச்சக்கட்ட சம்பவம் ஒன்றும் தற்போது நடந்துள்ளது. புலம்பெயர் நாடு ஒன்றில் இருந்து ஒரு குழு தன்னை சனல் 4 தொலைக்காட்சி எனக் கூறிக்கொண்டு இந்தியா சென்றுள்ளது. சென்னையில் இவர்கள் தம் கைவரிசையைக் காட்ட ஆரம்பித்துள்ளனர். கமரா மற்றும் பதிவுசெய்யும் கருவிகளோடு சென்ற இவர்களை நம்பி பல இலங்கைத் தமிழர்கள் தமது வாக்குமூலங்களைக் கொடுத்துள்ளனர். மேலும் சிலர் இவர்களைப் பரிபூரணமாக நம்பியும் உள்ளனர்.

இதனால் தமக்கு முள்ளிவாய்க்காலில் நடந்த அவலங்கள் பற்றி பல பொதுமக்களும் அதிகாரிகளும் இவர்களுக்கு கூறியுள்ளனர். இதற்கு ஒரு படி மேலே போய் சில போராளிகளும் விடுதலைப் புலிகளின் முது நிலைத் தளபதிகள் சிலரும் தமது மறைவிடங்களில் இருந்து வெளியே வந்து இவர்களுக்கு தமது வாக்குமூலங்களைக் கொடுத்துள்ளனர். ஆனால் மறுகணமே அவர்களைப் பின் தொடர்ந்த ரோ அதிகாரிகள் அவர்களில் பலரை இரகசியமாகக் கைதுசெய்துள்ளனர். முள்ளிவாய்க்காலில் யுத்தம் நடந்தவேளை மனித நேய அமைப்புகளில் வேலைசெய்தோர் ரெட் கிராஸ் அமைப்பில் வேலைசெய்தோர் மற்றும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் எனப் பலர் தற்போது இந்திய உளவுப் பிரிவான ரோவால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரையும் இலங்கைக்கு விசேட விமானம் மூலம் நாடுகடத்த உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் இரகசியச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்திய அரசானது இலங்கையைக் காப்பாற்ற முனைவதும் மற்றும் போர்குற்ற சாட்சிகளைப் பிடித்து மீண்டும் இலங்கைக்கு அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதனூடாக எவ்வளவு இழிவான செயலை இந்திய மத்திய அரசு செய்யமுடியுமோ அவ்வளவு இழிவான செயல்களை அது செய்துவருகிறது. இதற்கு புலம்பெயர் தமிழர்கள் சிலரும் உதவுகிறார்கள் என்பதே பெரும் வெட்க்கக்கேடான விடையமாக உள்ளது. இவர்கள் விரைவில் அடையாளம் காணப்படுவார்கள்.

புலம்பெயர் நாடுகளில் இருந்து இத் திட்டத்திற்காக இந்தியா சென்ற நபர்களது புகைப்படங்களை பெறும் முயற்ச்சியில் அதிர்வு இணையம் ஈடுபட்டுள்ளது. புகைப்படங்கள் கிடைக்கும் பட்சத்தில் அவை ஆதாரத்தோடு வெளியிடப்படும்.

                                                                                 நன்றி-அதிர்வு.காம்

இச்செய்தியை அதிர்வு இனையதளத்தில் காண கீழே சொடுக்கவும்...

வஞ்சம்-பகுதி 5


               பகுதி 5-வலையில் விழும் நேரம்

“ஒரு நிமிசம்”
கதவு திறக்கப்பட்டது.
கிறிஸ்டியுடன் ஆறரை அடி உயரத்தில் சிவப்பாக தடிமனாக ஒருவர் நின்று கொண்டிருந்தார்.யார் இந்த புது மனிதர் என ஐசுவர்யா நோக்க அவரே முந்திக் கொண்டு தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் “என் பெயர் அப்துல் நாசர். போலீஸ் இன்ஸ்பெக்டர்”
“வாங்க சார், உள்ள வாங்க” இருவரையும் ஐசுவர்யா வரவேற்றாள்”
“மிசஸ் ஹரிணி உங்க வீட்டுக்காரர கண்டுபிடிச்சாச்சு.இங்கதான் கவர்மெண்ட் ஆசுபத்திரில இருக்காரு.இரண்டு நாள் முன்னாடி ரோட்ல விபத்துல அடிபட்டு இருந்திருக்காரு.சார் தான் கூட்டிட்டு போய் ஆசுபத்திரில சேர்த்திருக்காரு.இப்ப அவரு ஐ.சி.யூ ல இருக்காராம்.” கிறிஸ்டி
“ஐ.சி.யூ வா? சார் உடனே என்ன அங்க கூட்டிட்டு போங்க சார் ப்ளீஸ்” கணவன் கிடைத்ததற்கு மகிழ்வதை விட அவனுக்கு நேர்ந்த விபத்து ஹரிணியை புரட்டிப் போட்டது.
“சரிங்கம்மா… ஆனா உங்க நண்பர்கள் ரூம்ல இல்ல எங்கயோ வெளில போயிருக்காங்கனு நினைக்கறேன்.அவங்க வந்ததும் போகலாமே” தன் திட்டம் சரியான திசையில் பயணிப்பதை கிறிஸ்டி உறுதி செய்து கொண்டான்.
“நான் அவங்களுக்கு ஃபோன் பண்றேன்” ஐசுவர்யா தன் கைபேசியை எடுத்து சிவாவிற்கு அழைத்தாள்.
மறுமுனையில் கணிணி குரல் கைபேசி தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாக அறிவித்தது.சுதாகர், விக்கி இருவருக்கும் அவ்வாறே பதில் வந்தது.
“நாட் ரீச்சபிள்னு வருது.3 பேருக்கும் லைன் போகல” ஐசுவர்யா குழம்பினாள்.முன்பின் தெரியாதவர்களுடன் தனியாக செல்வது அவளுக்கு சரியாகப்படவில்லை.உள்ளுக்குள் பயம் எட்டிப் பார்த்தது. ஹரிணி கலவையான உணர்ச்சிகளின் உச்சத்தில் இருந்ததால் ஒவ்வொரு நொடி தாமதமும் அவளை துன்புறுத்தியது.
“சார் எங்களை கூட்டிட்டு போங்க சார்.அவங்கள அப்புறமா ஃபோன் பண்ணி கூப்பிட்டுக்கலாம்.ப்ளீஸ் சார்” கைகூப்பி அழுதாள்.
“அவங்க வந்துடட்டும் ஹரிணி” ஐசுவர்யாவின் அறிவுரை எடுபடவில்லை.எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் கிறிஸ்டியுடன் வெளியேறினாள்.அவளைத் தனியாக விடமுடியாது என்பதால் அவளுடனே ஐசுவர்யாவும் சென்றாள்.இடையிடையே ஐசுவர்யா மூவருக்கும் மாற்றி மாற்றி கைபேசியில் முயற்சித்தாள்.ஏமாற்றமே மிஞ்சியது.

ஐசுவர்யாவும்,ஹரிணியும் கிறிஸ்டியுடன் மகிழ்வுந்தை நோக்கி செல்வதையும் கூடவே இன்னொருவன் செல்வதையும் மாடியிலிருந்து சுதாகர் கவனித்துவிட்டான்.இருவரையும் நிறுத்தி அவர்களோடு போக வேண்டாம் என எச்சரிக்க எவ்வளவோ முயன்றும் அடித்த காற்றில் அவர்கள் சத்தம் ஒன்றுமில்லாமல் போனது.விக்கி தன் கைபேசியை எடுத்து ஐசுவர்யாவிற்கு அழைத்தான்.ஐசுவர்யாவும் தற்சமயம் முயற்சி செய்து கொண்டிருந்ததால் பிஸியாகவே இருந்தது.ஹரிணியின் கைபேசிக்கு அழைத்த பொழுது மணி அடித்துக் கொண்டே இருந்த போதும் யாரும் எடுக்கவில்லை.
வெறுத்துப் போய் அவர்கள் கீழே வந்து பார்த்த போது மகிழ்வுந்து வாசலைத் தாண்டி வெகுநேரமாகியிருந்தது.
வாசலில் ஒரே ஒரு கால் டாக்ஸி மட்டும் வாசலில் நின்று கொண்டிருந்தது.சிவா வேகவேகமாக கால் டாக்ஸியை நோக்கி ஓடினான்.இருவரும் பின்தொடர்ந்தனர்.கால் டாக்ஸியில் ஏறும் முன் சிவா சுற்றும் முற்றும் அவர்கள் சென்ற மகிழ்வுந்தைத் தேடினான்.நேராய் சென்ற சாலையின் மலைமுகட்டோடு சேர்ந்து இடதுபுறம் வளைந்து சென்றதால் ஒரு மைல் தூரத்திற்கு சாலையில் செல்லும் வாகனங்கள் எல்லாம் தெரிந்தது.நேற்று இரவு சிவாவும்,சுதாகரும் ஏறி வந்த மகிழ்வுந்து சற்று தொலைவில் சென்றது.ஓட்டுனரிடம் அந்த மகிழ்வுந்தை வேகமாக பின்தொடரச் சொல்லிவிட்டு மூவரும் கால் டாக்ஸியில் ஏறினர்.அவர்களின் பதட்டத்தைப் பார்த்து ஏதோ விபரீதம் என உணர்ந்த ஓட்டுனர் வெகு வேகமாக வாகனத்தை விரட்டினார்.100 அடி இடைவெளியளவில் இரு மகிழ்வுந்துகளும் சீறிச்சென்றன. சிவா ஆருயிர் காதலியை இப்படி ஓர் நிலைக்கு வந்தது தன்னால்தான் என நினைத்து கண்களும் உதடுகளும் துடித்தது.கண்ணீர்த் துளிகள் படபடத்துக் கொட்டிய வியர்வையில் கரைந்தது.விக்கி மீண்டும் மீண்டும் முயற்சி செய்தும் பலனில்லை.இது வரை பிஸியாக இருந்த ஐசுவர்யாவின் கைபேசி இப்பொழுது முழுமையாக மணி அடித்து நின்றது.இருப்பினும் அவள் எடுத்துப் பேசவில்லை.முன்னே சென்ற கிறிஸ்டியின் மகிழ்வுந்து பாதைகள் மாறி மாறி வனங்கள் அடர்ந்த ஒற்றையடி பாதையில் சென்றது சிவா சென்ற மகிழ்வுந்தும் அவர்களை விடாமல் துரத்தியது.பாதையெங்கும் சருகுகள் மண்டியிருந்தது.சுற்றிலும் 3 பனைமர அளவு மரங்களும்,ஆளுயர புதர்களும் மண்டியிருந்தது.கிறிஸ்டியின் மகிழ்வுந்து சட்டென்று சக்கரம் வெடித்து நின்றது.என்ன ஆனது என பார்க்க கிறிஸ்டி கீழே இறங்கினான்.ஆணிப்பலகையில் குத்தி 2 சக்கரங்கள் வெடித்திருந்தது.மூவரும் கீழே இறங்கினர். பின்னே விரட்டி வந்த சிவாவின் மகிழ்வுந்தும் அவர்களை பிடித்துவிட்ட மகிழ்ச்சியில் நெருங்க அதன் சக்கரங்களும் வெடித்து முன்னிருந்த வண்டியின் மீது மோதி நின்றது.இந்த இரு வாகனங்களையும்,அதில் வந்தவர்களையும் தவிர வேறு ஆள் அரவமில்லாத இடம் அது.மகிழ்வுந்தை விட்டு இறங்கிய சிவா ஒரே பாய்ச்சலில் கிறிஸ்டியின் சட்டையைப் பிடித்து முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான்.சுதாகரும்,விக்கியும் நாசரை மடக்கி பிடித்தனர்.

“சிவா என்ன பண்ற?” ஐசுவர்யாவும் ஹரிணியும் பதறினர்.
கிறிஸ்டியை கீழே தள்ளி கையில் கிடைத்த ஒரு கட்டையை எடுத்து அவனை விளாச சிவா கையை ஓங்கினான்.எங்கிருந்தோ மின்னல் வேகத்தில் வந்த கல் ஒன்று சிவாவின் நெற்றியில் தாக்கியது.எதிர்பாராத தாக்குதலால் சிவா நிலைகுழைந்தான்.புதர்மறைவிலிருந்தும்,மரங்கள் மேலிருந்தும் குட்டையாய்,அழுக்கேறிய உடை அணிந்து வினோதமான மொழியில் கத்தியபடி ஐம்பதுக்க்கும் மேற்பட்ட காட்டுவாசிகள் வெளிப்பட்டனர்.ஈட்டி முனையில் அனைவரையும் சிறைபிடித்தனர்.கீழே விழப்போன சிவாவைத் தாங்கிப் பிடிக்க சென்ற சுதாகரையும்,விக்கியையும் தலையில் கட்டையைக் கொண்டு அடித்தனர்.
ஹரிணி,ஐசுவர்யாவின் அலறலுக்கு நடுவே மூவரும் மயக்கமடைந்தனர்.

சிறிது நேரம் கழித்து…
லேசாக மயக்கம் தெளிந்தது சிவாவிற்கு.மங்கலாக தெரிந்த பார்வையில் வானமும் கண்கூசிய சூரியனும் தெரிந்தது.உடல் குலுங்கியபடி சென்றதால் யாரோ தன்னை சுமந்து செல்வது தெரிந்தது.சட்டென ஐசுவர்யாவின் நினைப்பு வர எழ முயன்று நிமிண்டினான்.அவனை சுமந்து சென்ற காட்டுவாசிகளின் கூட வந்த ஒருவன் சிவாவின் முகத்தில் ஒரு துணியை வைத்து அழுத்தினான்.சிவா மீண்டும் மயக்கமடைந்தான்…
                                      -காத்திருங்கள்




இதுவரை நடந்தது என்னவென்று அறிய கீழே சொடுக்குங்கள்...


வஞ்சம்...

Tuesday 20 December 2011

பிரிந்தோம்... சந்திப்போமா?

வாசம்...
உன் கழுத்தொடு வீசிய
உன் வாசம்...
பல இரவுகள்
சில பொழுதுகள்
என் ரோமங்களை குத்திடச் செய்த
உன் வாசம்...
மறக்கவில்லை...
இன்னும் நாசியில் அமர்ந்து
என் நினைவுகளை சீண்டுகிறது...



என்ன பெரிய நினைவுகள்?
பெரிதுதான்...
நான் பெரிதாய்
எண்ண மறந்த பெரிது...

மதுவும் மாதுவும்
கரைந்து நீந்திய
பல இரவுகளைத் தாண்டிய
பின்னிரவுகளில்
உனக்குத் தெரியாமல்
உன்னருகே வந்து படுத்தேன்
ஒவ்வொரு முறையும்
உடனே என்னை அணைத்து
நாய் குட்டிபோல
என் தோளில் குழைந்த
கலைந்த கேசமும்,குழைத்த கண்ணங்களும்
நினைவுகளில் பெரியவைதான்...

வரவேற்பறையில்...
காய்கறி நறுக்கியபடியே நீ அமர்ந்திருக்க
உன் மடியில் சாய்ந்து
வியர்வை வடிந்த உன் வயிற்றில்
என் கண்ணம் பதிய
முந்தானையில் முகம் மூடி
கனவில்லா உறக்கம் கொண்டது
கனவின் மடியில் உறங்கியதால்
அது நினைவுகளில் பெரியவைதான்...

காலையில்
உன் முகம் கண்டு சென்றேன்


மாலையில்
என் முகம் அடையாளம் காட்ட
சாலை விபத்தருகே
நீ வந்தாய்...
இந்த காதலைத் தாண்டியும்
போதை தேடிய மனதால்
நினைவுகளோடு மட்டும்
பிரிந்தது என் பிழை...

காதலை சாதலாக்கும்
போதை...

சாராயப் போக்கு
சவப்போக்கு...








Monday 19 December 2011

வஞ்சம்-பகுதி 4


                                                              பகுதி 4- சதிவலை   





முட்டாள்த்தனமா எதுக்கு அவங்கள அங்க கூட்டிட்டு போன?” அப்துல் நாசர்.
நானா கூட்டிட்டு போகல.ஏதோ வேலை இருக்குன்னு அட்ரஸ டிரைவர்ட்ட குடுத்துட்டாங்க.அங்க போனதும் என்ன பண்றதுன்னு எனக்கே தெரிலகிறிஸ்டி.
“தெரிஞ்சிருக்குமா?” அப்துல் நாசர்
“இருக்கலாம்” கிறிஸ்டி
“எப்படி சொல்ற?”
“அந்த கடைக்காரன் என்ன பார்த்து அவங்ககிட்ட ஏதோ சொன்னான்.அவங்க அதிர்ச்சியா என்ன பாத்தாங்க.தெரிஞ்சிருக்கும்னு தான் நினைக்கறேன்”
“ப்ச்…” பெருமூச்சு விட்டு தலையில் கை வைத்தபடி வேகமாக குறுக்கும் நெடுக்கும் நடந்தார் கிறிஸ்டியின் நெருங்கிய நண்பரான அப்துல் நாசர் ”இப்ப அவங்க எங்க?”
“கீழ ரூம்ல தூங்க சொல்லிட்டு வந்துட்டேன்.ரூம் செர்வீஸ் ல காஃபி ஆர்டர் பண்ணிருந்தாங்க.நம்ம வேலு தான் எடுத்துட்டு போனான்.அதுல தூக்க மாத்திரை கலந்திட்டேன்.காலையில எந்திரிக்க நேரமாகும்.அதுக்குள்ள மத்தவங்களும் வந்திடுவாங்க.” கிறிஸ்டி
“சரி காலையில அவங்க முட்டாள்த்தனமா ஏதும் செய்யறக்கு முன்னாடி நாம முந்திக்கணும்” கிறிஸ்டியை அறைக்கு செல்லச் சொல்லிவிட்டு அப்துல் நாசர் தன் தொலைபேசியில் யாருக்கோ அழைத்து நாளை காட்டுப் பாதையில் அனைவரும் தயாராய் இருக்கும்படி அறிவுருத்தினார்.

இரவெல்லாம் கொட்டித் தீர்த்த அழுகை வறண்டு விட மனிதனின் ஒரே அழுக்காத  சுகமாய் உள்ள தூக்கத்தில் ஹரிணி ஆழ்ந்திருந்தாள்.அவளுக்கு ஆதரவாய் தோள் கொடுத்திருந்த ஐசுவர்யாவும் தூங்கியிருந்தாள்.விக்கி,ஹரிணி,ஐசுவர்யா மூவரும் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனத்தில் ஏற்காடு மலை சாலையில் பயணித்துக் கொண்டிருந்தனர்.

முற்பகல் வெய்யில் கூட மெல்லிய கீற்றாய் படர்ந்திருந்தது.சிவாவையும், சுதாகரையும் கைபேசியில் அழைக்க விக்கி முயற்சித்துக் கொண்டிருந்தான்.வெகுநேரம் அழைப்புமணி அடித்தும் இருவரும் எடுத்துப் பேசாதது அவனுள் கலக்கத்தை ஏற்படுத்தியது.இன்னும் தூங்கிக் கொண்டிருப்பார்கள் இல்லையேல் ஏதேனும் முக்கியமான வேலையாக இருப்பார்கள் என சமாதானப்படுத்திக் கொண்டாலும் மனம் அமைதியடையவில்லை.ஜன்னல் வழியாக மலைகளின் மேனியெங்கும் வேரூன்றிய பச்சை வெள்ளத்தை இரசிக்க முயன்றான்.
மலைமுகடுகளின் இடுப்பு வரை தேயிலைத் தோட்டங்கள் மாபெரும் புல்வெளியைப் போல இருந்தது.உச்சிப் பகுதியில் அடர்ந்து படர்ந்திருந்த மரங்கள் பார்வைக்கு குளிரூட்டியது.பனியோடு மிதமான குளிரும் சூழலின் ரம்மியமும் மனதை போதையேற்றியது.இயற்கையின் இந்த அழகிய பிரமாண்டத்திற்கு துருஷ்டி வைக்கப்பட்டது போல ஓரிடத்தில் மட்டும் மலை உச்சிக்கு சற்று கீழே பொட்டு வைத்தது போல ஒரு பெரிய வட்டம் நெருப்பும் புகையுமாய் எரிந்து கொண்டிருந்தது.

“அதென்ன காட்டுத் தீயா?” விக்கி ஓட்டுனரிடம் பேச்சுக் கொடுத்தான்.
“இந்த சீசன்ல எல்லாம் காட்டுத் தீ வராது தம்பி.இது பண்டிசால்காரனுங்க வேலையா இருக்கும்” ஓட்டுனர்.
“பண்டி…..?” புரியாமல் விழித்தான்.
“பண்டிசால்காரனுங்க தம்பி.பீகார்ல இருந்து வந்த நாடோடி கூட்டம்.30 வருசத்துக்கு முன்னாடி அவங்க ஊர்ல பஞ்சம்னு சொல்லிட்டு பொழப்புக்காக வந்தானுங்க.மலை மேலயே தங்கிட்டானுங்க.கொள்ளையடிக்கிறது,கொலை பண்றது இந்த மாதிரி வேலை தான் அவங்க குலத் தொழிலே.சிலசமயம் மரதையெல்லாம் விக்கறதுக்காக வெட்டிட்டு இந்த மாதிரிதான் தீ வெச்சுட்டு போயிடுவானுங்க.ஃபாரஸ்ட் ஆபீசர்கள எல்லாம் எக்கசக்கமா கவனிச்சுடுவானுக.இவனுகளுக்காக இந்த டிரான்ஸ்ஃபர் கேட்டு எத்தன பேர் முண்டியடிக்கறாங்க தெரியுமா? எல்லாம் நேரம் தம்பி”
‘’இவங்க ஆள்கடத்தல் எல்லாம் செய்வாங்களா?” விக்கி
“சிலசமயம் செய்வானுங்க” ஓட்டுனர்

பஷீரை இவர்கள் கூட கடத்தியிருக்கலாம் என்று மனக்கணக்கு போட்டாலும் எங்கோ பெங்களுரில் இருக்கும் முகம் தெரியாத பொறியாளரை இந்த ஆளுங்க வந்து எதுக்கு கடத்தப் போறாங்க? அப்படின்னா பஷீர் இங்கே வர என்ன காரணமாயிருக்கும் என சிந்தனை சிறகு விரிக்கும் முன்னரே கைபேசி அலறியது.சிவா அழைத்தான்.
“இவ்ளோ நேரம் என்னடா பண்ணிட்டிருந்தீங்க? மணி 11 ஆகுது.ஹரிணி தொல்லை பொருக்க முடியாம நாங்க காலைல நேரத்துல கிளம்பிட்டோம்” அவசரத்தில் பேசிவிட்டதால் பின்னே திரும்பி ஹரிணி இன்னும் உறங்கிக் கொண்டு தான் இருக்கிறாள் என உறுதிப்படுத்திக் கொண்டு மேலும் தொடர்ந்தான்.
“இப்ப தான்டா எந்திரிச்சோம்.இப்ப எங்க இருக்கீங்க?” சிவா
“இன்னும் 15 நிமிஷத்துல அங்க இருப்போம்” விக்கி
“ப்ச்… சரி பரவால்ல.நான் சொல்றதுக்கு உம் னு மட்டும் சொல்லு.வேற ஏதும் பேசாத” சிவா
“உம்” விக்கி  
“குட், இங்க இருக்கற ஈவண்ட் மேனேஜர் கிறிஸ்டிக்கும் பஷீர் காணாம போனதுக்கும் தொடர்பு இருக்கு.எதுக்காக இப்படி பண்றான்னு தெரில.அவன்ட்ட ஜாக்கிரதையா இருக்கணும்.ஐசுவர்யா,ஹரிணிய உன் கூடவே வெச்சுக்க எங்கயும் தனியா விட்றாத.ராத்திரியே உங்களுக்கு ஃபோன் பண்ணி வர வேண்டாம்னு சொல்லலாம்னு நினைச்சோம் அதுக்குள்ள காபில எதையோ கலந்து எங்கள தூங்க வெச்சிட்டான் நாயி ” சிவா
“உம்”
“பத்திரமா இங்க வந்திடுங்க.யார்ட்டயும் அதிகமா பேச்சு குடுக்க வேணாம் மத்ததெல்லாம் நேர்ல பேசிக்கலாம்”
“உம்”
இணைப்பு துண்டிக்கப்பட்டது.
ஏதோ பொறி வலைக்குள் மாட்டிக் கொண்ட எலிகள் போலத் தான் இருந்தனர்.அடுக்கடுக்காய் விடைக்கு ஆதி கூட புலப்படாத பல கேள்விகள் மூளையை துளைத்தது.என்ன நடக்க போகிறது? என்ன நடந்தது? என்பதற்கான வரைபடத்தில் சிறுபுள்ளி மட்டுமே தென்படுகிறது.இரு பெண்களை கூடவே வைத்துக் கொண்டு அவர்களுக்கு ஆபத்து வராமல் பார்த்துக் கொள்வதே பெரிய வேலையாக இருக்கப் போகிறது.வண்டி லீ கிராண்ட் உண்வகத்தின் பிரமாண்ட கதவுகள் வழியே நுழைந்தது.வாசலில் சிப்பந்திகளிடம் பேசிக் கொண்டிருந்த ஜோனத்தன் கிறிஸ்டி வண்டி எண்ணைப் பார்த்ததும் கையில் சிரிப்பும் வாயில் பொக்கேவுமாக வந்து வரவேற்க நின்றான்.தூக்கம் கலைந்து எழுந்த ஐசுவர்யாவும்,ஹரிணியும் கேசத்தை சரி செய்து கொண்டு இறங்கினர்.மூவருக்கும் தனித்தனியே பொக்கே குடுத்து கிறிஸ்டி வரவேற்றான்.
“என் பேர் ஜோனத்தன் கிறிஸ்டி.உங்க ஈவண்ட் மேனேஜர்.பயணம் நல்லாயிருந்துதா?”
அவன் பேரைக் கேட்டதும் விக்கி உஷாராணான்.இவனிடம் அதிகம் பேச வேண்டாம் சிவா,சுதாகரைப் பார்த்த பின்பு இவனை கவனித்துக் கொள்ளலாம் என முடிவு செய்தான்.
“ரொம்ப நல்லாயிருந்தது.சரியான இடத்துக்கு கரக்டா வந்துட்டோம்” கிறிஷ்டியின் கண்களைப் பார்த்து அழுத்தமாக விக்கி சொன்ன இந்த பதிலை எதிர்பார்க்காத கிறிஷ்டி சற்று தடுமாறினாலும் புன்னகையை சுருக்காமல் சமாளித்துக் கொண்டான்.
“ஹரிணி,ஐசுவர்யா 2 பேரும் ஃப்ரெஷ் அப் பண்ணிட்டு ரெடியா இருங்க.நான் சிவாவ பாத்துட்டு வரேன்” இருவரிடமும் சொல்லிவிட்டு கிறிஷ்டியிடம் தங்கள் அறையைப் பற்றி கேட்டான்
“ஜெண்ட்சுக்கு 3 வது ஃப்ளோர்ல டீலக்ஸ் சூட் 203, லேடீஸ் கு 2 வது ஃப்ளோர்ல டீலக்ஸ் சூட் 110” கிறிஸ்டி.
“சார் இது என் கணவர் பஷீர்.கொஞ்ச நாள் முன்னாடி காணாம போயிட்டார்.நேத்து இந்த ஊர்ல இருந்து தான் ஃபோன் பண்ணினார்.நீங்க எங்காவது பாத்திருந்தா தயவு செஞ்சு சொல்லுங்க சார் ” பஷீரின் புகைப்படத்தை கிறிஸ்டியிடம் கொடுத்து கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.
“அழாதீங்கம்மா நீங்க குளிச்சு ரெடி ஆயிடுங்க நானே உங்கள கூட்டிட்டு போறேன்.ஊரையே கவுத்து போட்டு கண்டுபிடிச்சுடலாம்” கிறிஸ்டியின் வார்த்தைகளால் விக்கி எரிச்சல் அடைந்தான் இருந்தாலும் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு “கவலைப்படாத ஹரிணி சார் தான் சொல்லிட்டாருல்ல அவர புடிச்சா பஷீர் கிடச்ச மாதிரி தான்” என்றான்.கிறிஸ்டியின் முகம் சுருங்கியது.
மூவரும் உள்ளே சென்றதும் திட்டத்தை விரைவுபடுத்த அப்துல் நாசரைத் தேடி முதல் தளத்திற்கு கிறிஸ்டி ஓடினான்.
நண்பர்கள் மூவரும் மொட்டை மாடியில் சந்தித்தனர். ஹோட்டலின் சிப்பந்திகள் அனைவரும் கிறிஸ்டிக்கு நெருக்கம் என்பதால் பாதுகாப்பாக பேச மொட்டை மாடிக்கு வந்தனர்.
“என்னடா ஆச்சு? கிறிஸ்டிதான் கடத்துனானா?” விக்கி பதைபதைத்தான்.
“அவன் மட்டும் இல்ல இன்னும் 2 பேர் இருக்கானுங்க” மாடியின் விளிம்பில் அமர்ந்தபடி சிவா விளக்கமளிக்கத் தொடங்கினான்.
“அவந்தான்னு எப்பிடி கன்ஃபார்மா சொல்றீங்க?” விக்கி
“பஷீர் நமக்கு ஃபோன் பண்ணினான்ல அங்க விசாரிச்சப்ப தெரிஞ்சுது.நீ போலீசுக்கு சொல்லிட்டு தான வந்த?” சுதாகர்.
“சொல்லத்தான் போனேன் இன்ஸ்பெக்டர் வெளியூர்ல இருக்காராம் அதனால அங்க ஏட்டு கிட்ட சொல்லிட்டு வந்தேன் அவங்க எதும் பெரிசா எடுத்துகிட்ட மாதிரி தெரில”
விக்கியின் பதிலில் இருவரும் ஏமாற்றமடைந்தனர்.
“ம்… அப்ப நாம இங்க லோக்கல் போலீசுலதான் பேசணும்.ஹரிணிக்கு சொல்லிட்டியா?” சிவா.
“ம்… அப்புறம்… அப்படியே ஒரு கத்தியையும் அவ கையில குடுத்துட்டம்னா நேரா போயி கிறிஸ்டிய குத்தி கொன்னுடுவா அப்புறம் எல்லா காரியமும் வெளங்கிடும்.அவ அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிடக் கூடாதுன்னு தான் எதும் சொல்லல.ஆனா பாவம்டா அவ அந்த நாய்கிட்ட போயி கெஞ்சிட்டிருந்தா ” விக்கி.
“சரி இப்ப நாம என்ன செய்யறது?” சுதாகர்
“நேரா போலீசுக்கு போறோம் இந்த பயல அப்படியே பொளக்கறோம்” விக்கி
“லூசு மாதிரி பேசாதடா, இவன் கூட இன்னும் 2 பேர் இருக்கானுங்க.பஷீர் வேற எங்க இருக்கான்னு தெரில,அவன எதுக்காக கடத்திருக்காங்கன்னும் தெரில.நாம போலீசுக்கு போனத தெரிஞ்சு பஷீர ஏதாவது பண்ணிட்டாங்கன்னா?.மொதல்ல பஷீர கண்டுபிடிக்கனும் அப்புறம் இவனுங்கள கவனிச்சுக்கலாம்” சிவாவின் தெளிவான திட்டத்துக்கு இருவரும் தலையாட்டினர்.

அதே நேரம் பெண்களின் அறையில்….

“இந்நேரம் சிவா பஷீர் இருக்குற எடத்த கண்டுபிடிச்சுருப்பாரு.உதவிக்கு கிறிஸ்டி வேற இருக்காரு அப்புறமென்ன எல்லாம் நல்லபடியா முடியும் ஹரிணி” ஜன்னல் வழியாக சாலையை பார்த்துக் கொண்டிருந்த ஹரிணியிடம் பேச்சுக் கொடுத்தாள் ஐசுவர்யா.
கதவு தட்டும் ஓசை கேட்டு இருவரும் கதவருகே சென்றனர்.
“யாரு?” ஐசுவர்யா.
“நாந்தான் கிறிஸ்டி”
                                 -காத்திருங்கள்

நாங்க தான் ஃபர்ஸ்ட்


ஆத்தா ஆட்சியில் என்ன அறிவுப்பு செய்தாலும் நாங்கள் தான் அதை முதலில் செய்தோம்னு அடிச்சு விட்ற தலைவர் நாளைக்கு இப்படி அறிக்கை விட்டாலும் விடலாம்.

வெடித்த அணுஉலை-தவிக்கும் அரசு.



ஒரு அணுஉலை வெடித்ததால் தவித்துக் கொண்டிருக்கிறது அரசு.மக்களுக்காக நம்ம அரசாங்கம் தவிக்குதா என்று ஆச்சரியப்பட வேண்டாம் நடப்பது இங்கே அல்ல ஜப்பானில்.கடந்த மார்ச் மாதம் ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் புகுஷிமா டாய்ச்சி அணு உலை விபத்துக்குள்ளானது நம் அனைவருக்கும் தெரியும்.அந்த விபத்திலிருந்து தான் உலக நாடுகள் தங்களுடைய அணுசக்தி தொடர்பான கொள்கைகளை மறுபரிசீலனை செய்யத் தொடங்கினர்.இந்த விபத்தை முன்னிட்டு தான் கூடங்குளத்திலும் அணு உலை வேண்டாம் என்று அனுதினமும் போராட்டங்களும்,ஆர்ப்பாட்டங்களும்,உண்ணாவிரதங்களும் நடைபெற்று வருகின்றன.சரி அந்த அணுஉலை விபத்திற்கு பிறகு என்ன நிலை என்பதை சற்று பார்ப்போம்.

ஒரு அணுஉலை சரியாக செயல்பட அதைச் சுற்றி சீரான தட்பவெட்பம் தேவை அதற்காகத் தான் அணுஉலையை சுற்றி குளிர்ந்த நீர் தொடர்ந்து பாய்ச்சப்பட்டு சீரான சூழ்நிலை பராமரிக்கப்படும்.ஜப்பானில் மார்ச் மாதம் அடித்த சுனாமி முதலில் உடைத்தது இந்த குளிர்நீர் பகுதியைத் தான்.மேலும் மின்சார வசதிகளும் தூள்தூளானது.இதனால் தான் கட்டுப்படுத்த முடியாத அணுவினை வெடித்து சிதறியது.அப்போது ஜப்பான் அரசு 20 கி.மீ சுற்றளவில் உள்ள மக்களை உடனடியாக வெளியேற்றியது சில நாட்கள் கழித்து 30 கி.மீ சுற்றளவில் உள்ள மக்களையும் அப்புறப்படுத்தியது.அந்த பகுதியின் மண் உட்பட அனைத்து விடயங்களும் கதிர்வீச்சு தாக்குதலுக்கு உள்ளானது. 

பிறகு நாள் கணக்காக பொறியாளர்களும், உழைப்பாளிகளும் உயிரைப் பணயம் வைத்து கதிர்வீச்சு அளவைக் குறைக்க படாதபாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.தற்சமயம் ஓரளவு கதிர்வீச்சை குறைக்கவும் செய்துள்ளனர்.வேலை முடியவில்லை மக்களே இன்னும் அந்த இடத்தை பழைய நிலைக்கு கொண்டுவர 40 வருடங்கள் ஆகும் என அந்நாட்டு அரசே அறிவித்துள்ளது.அது மட்டுமல்ல நிலைமையை சீராக்க இனிமேல் தான் புதிய புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.சரி இதே போன்றதொரு விபத்து நம் நாட்டில் முக்கியமாக கூடங்குளத்தில் நடந்தால் என்னாகும்? சற்று கற்பனைகளை விரித்தால் கொடூரமான காட்சிகள் தான் தாண்டவமாடுகிறது. அணுஉலை வெடித்தவுடன் நடவடிக்கை வருகிறதோ இல்லையோ நஷ்டஈடு தான் வரும். மக்களைக் காக்கும் முன் அணுஉலையில் பணி செய்யும் வெளிநாட்டினர் இலவச பயணச்சீட்டில் அவரவர் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவர். அதெல்லாம் கூட பரவாயில்லை ஜப்பான் அரசைப் போல இந்திய நாட்டு அரசாங்கம் அவ்வளவு வேகமாக நிலைமையை சீர் செய்யுமா? கண்டிப்பாக இல்லை. 40 ஆண்டு காலம் ஒரு தரிசில் நிலத்தை கதீர்வீச்சு இல்லாத இடமாக மாற்ற செலவு செய்யும் காசுக்கு காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடத்தலாம் என கொள்கை முடிவெடுத்து கூடங்குளத்தை அபாயகரமான பகுதியாக அறிவித்துவிட்டு தமிழ்நாட்டுக்கு டெல்லியில் இருந்தே அஞ்சலி செலுத்திவிடும். சரி நடக்கப் போவது இருக்கட்டும் அணுஉலையில் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதா என வினவினால் நிச்சயமாக உண்டு என சொல்லத்தான் முடிகிறது.

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் விளைவுகளை நாம் இன்றும் மறக்க முடியாது.அத்தகைய ஒரு சுனாமி தான் ஜப்பான் அணுஉலையை புரட்டிப் போட்டது.2004 ஆம் ஆண்டுக்கு முன் சுனாமி என்றால் என்னவென்றே இங்கு பலருக்கும் தெரியாது வந்த பின்பு பட்ட அவஸ்தை சொல்லிமாளாது.அத்தகையதோர் நிலநடுக்கமோ சுனாமியோ மீண்டும் வரவே வராது என அப்துல் கலாம் உட்பட எந்த விஞ்ஞானியாலும் அடித்துச் சொல்ல முடியாது என்பது தான் உண்மை.அதை விட வீரியமான நிலநடுக்கங்கள் இந்தியாவில் வர அதிக வாய்ப்புள்ளது என புவியியலாளர்கள் எச்சரித்துள்ளது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. 

அடுத்து தீவிரவாதம் கடல் வழியே வந்து மும்பை நகரத்தை துவம்சம் ஆக்கியது போல கடல் அருகே உள்ள அணுமின் நிலையங்களை வெடிக்கச் செய்தால் நம் நிலைமை என்ன? அணுஉலைக்கு உச்சபட்ச பாதுகாப்பு வழங்கப்படும் என நினைத்தோமானால் தன் பாராளுமன்றத்தையே தீவிரவாதிகளிடமிருந்து பாதுகாக்க முடியாத சூழ்நிலை தான் இந்திய உளவுத் துறையின் லட்சனம். சரி நம் அப்துல் கலாம் சொல்வது போல நவீன தொழில்நுட்பத்துடன் உருவான இந்த அணுஉலையில் உலகிலேயே இரண்டாவது முறையாக (முதல் உலை சீனாவில் உள்ளது) ”கோர் கேட்சர்(core catcher)” எனப்படுகிற தொழில்நுட்பம் நிறுவப்பட்டுள்ளதாம். அந்த கோர் கேட்சர் என்ன தெரியுமா? வழவழவென இருக்கும் செராமிக் கான்கிரீட் தான் இந்த அதிநவின தொழில்நுட்பம்.விபத்து ஏற்பட்டால் இந்த கான்கிரீட் அப்படியே அணுவின் மீது விழுந்து கதிரியக்கத்தை வெளியேற விடாதாம்.இந்த தொழில்நுட்பத்தின் நம்பகத்தன்மை எந்த அளவுக்கு உள்ளது என்பது இதுவரை நிரூபிக்கப்படவில்லை.எரிகிற நெருப்பை பரோட்டா மாவைப் போட்டு அணைப்பது போன்றது தான் இது.அணுவை இந்த தொழில்நுட்பம் தற்காலிகமாக மூடிமறைக்குமே தவிர அணு இயக்கத்தை நிறுத்திவிடாது. நெருப்பு எல்லை மீறினால் எந்த தொழிநுட்பத்தாலும் அதைக் கட்டுப்படுத்த முடியாது.அவ்வாறு அணுவைக் கட்டுப்படுத்தலாம் என யாராவது சொன்னால் அது சூரியனை சுவிட்ச் ஆஃப் செய்யலாம் என சொல்வதைப் போலத் தான்.

இந்தியாவின் மின்சாரத் தேவைக்கு அணுமின்சாரம் அத்தியாவசியம் அது இல்லாவிட்டால் நாடே இருளில் மூழ்கிவிடும் என பதறுவது வடிகட்டிய கயமைத்தனம். உண்மையை சொன்னால் மரபு வழி மின்சாரங்களான சூரிய ஒளி,காற்று ஆகியவற்றை இந்திய அரசு எந்த அளவுக்கு பயன்படுத்த முனைந்திருக்கிறது என பார்த்தால் அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.ஒரே ஒரு அணுஉலையை கட்டி முடிக்க 15 முதல் இருபது வருடங்கள் வரை ஆகின்றது.அதற்கு 15,000 முதல் 20,000 கோடி வரை செலவு செய்யப்படுகிறது.இந்த காலகட்டத்தில் சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் பெறுவதை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.ஒரு சராசரி புத்தகத்தை விட சற்று சிறியதாக உள்ள ஒரு சூரியஒளி செல்லிலிருந்து 45 மில்லி வாட்ஸ் மின்சாரம் கிடைக்கிறது.இதை நவீன தொழில்நுட்பங்கள் மூலம் செழுமைப்படுத்தினால் நாட்டின் பெருவாரியான மின்சாரத் தேவைகளை அளவில்லாத,மாசற்ற சூரியஒளி மூலமே பெற்றுவிடலாம்.வருடந்தோரும் உட்சபட்ச வெப்பத்தை உள்வாங்கும் தார் பாலைவனம் இதற்கு ஒரு வரபிரசாதம்.ஆனால் இத்தகைய முயற்சிகளுக்கு அரசு பிடிவாதமாக மறுத்து வருகிறது.யார் என்ன சொன்னாலும் என்ன உறுதிப்பாடு கொடுத்தாலும் அணுவினை என்பது மனிதனால் கட்டுப்படுத்த முடியாத ஒன்று.அத்தகைய விபத்திலிருந்து நம்மை காத்துக் கொள்வது நம் கையில் தான் உள்ளது என்பதே நிதர்சனம்.மேலும் பல அணு உலைகளை நிறுவப்போவதாக அரசு அறிவித்துள்ளது.அவற்றை எல்லாம் தடுத்து நிறுத்தி, செயல்படும் அணுஉலைகளை செயலிழக்கச் செய்ய மத்திய அரசை நிர்பந்திக்க வேண்டும்.
அணுஉலை அவசியம் வேண்டும் என தூபம் போடும் தினமலர் போன்ற போலி தேசியவாதிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும். நம் சந்ததிகளை காக்க மத்திய அரசை தீவிரமாக எச்சரிக்க வேண்டும்.

பின்குறிப்பு: எனக்கும் அமெரிக்காவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.அவ்வப்பொழுது ஹாலிவுட் திரைப்படங்கள் மட்டும் பார்ப்பேன்.