Wednesday, 21 December 2011

வஞ்சம்-பகுதி 5


               பகுதி 5-வலையில் விழும் நேரம்

“ஒரு நிமிசம்”
கதவு திறக்கப்பட்டது.
கிறிஸ்டியுடன் ஆறரை அடி உயரத்தில் சிவப்பாக தடிமனாக ஒருவர் நின்று கொண்டிருந்தார்.யார் இந்த புது மனிதர் என ஐசுவர்யா நோக்க அவரே முந்திக் கொண்டு தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் “என் பெயர் அப்துல் நாசர். போலீஸ் இன்ஸ்பெக்டர்”
“வாங்க சார், உள்ள வாங்க” இருவரையும் ஐசுவர்யா வரவேற்றாள்”
“மிசஸ் ஹரிணி உங்க வீட்டுக்காரர கண்டுபிடிச்சாச்சு.இங்கதான் கவர்மெண்ட் ஆசுபத்திரில இருக்காரு.இரண்டு நாள் முன்னாடி ரோட்ல விபத்துல அடிபட்டு இருந்திருக்காரு.சார் தான் கூட்டிட்டு போய் ஆசுபத்திரில சேர்த்திருக்காரு.இப்ப அவரு ஐ.சி.யூ ல இருக்காராம்.” கிறிஸ்டி
“ஐ.சி.யூ வா? சார் உடனே என்ன அங்க கூட்டிட்டு போங்க சார் ப்ளீஸ்” கணவன் கிடைத்ததற்கு மகிழ்வதை விட அவனுக்கு நேர்ந்த விபத்து ஹரிணியை புரட்டிப் போட்டது.
“சரிங்கம்மா… ஆனா உங்க நண்பர்கள் ரூம்ல இல்ல எங்கயோ வெளில போயிருக்காங்கனு நினைக்கறேன்.அவங்க வந்ததும் போகலாமே” தன் திட்டம் சரியான திசையில் பயணிப்பதை கிறிஸ்டி உறுதி செய்து கொண்டான்.
“நான் அவங்களுக்கு ஃபோன் பண்றேன்” ஐசுவர்யா தன் கைபேசியை எடுத்து சிவாவிற்கு அழைத்தாள்.
மறுமுனையில் கணிணி குரல் கைபேசி தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாக அறிவித்தது.சுதாகர், விக்கி இருவருக்கும் அவ்வாறே பதில் வந்தது.
“நாட் ரீச்சபிள்னு வருது.3 பேருக்கும் லைன் போகல” ஐசுவர்யா குழம்பினாள்.முன்பின் தெரியாதவர்களுடன் தனியாக செல்வது அவளுக்கு சரியாகப்படவில்லை.உள்ளுக்குள் பயம் எட்டிப் பார்த்தது. ஹரிணி கலவையான உணர்ச்சிகளின் உச்சத்தில் இருந்ததால் ஒவ்வொரு நொடி தாமதமும் அவளை துன்புறுத்தியது.
“சார் எங்களை கூட்டிட்டு போங்க சார்.அவங்கள அப்புறமா ஃபோன் பண்ணி கூப்பிட்டுக்கலாம்.ப்ளீஸ் சார்” கைகூப்பி அழுதாள்.
“அவங்க வந்துடட்டும் ஹரிணி” ஐசுவர்யாவின் அறிவுரை எடுபடவில்லை.எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் கிறிஸ்டியுடன் வெளியேறினாள்.அவளைத் தனியாக விடமுடியாது என்பதால் அவளுடனே ஐசுவர்யாவும் சென்றாள்.இடையிடையே ஐசுவர்யா மூவருக்கும் மாற்றி மாற்றி கைபேசியில் முயற்சித்தாள்.ஏமாற்றமே மிஞ்சியது.

ஐசுவர்யாவும்,ஹரிணியும் கிறிஸ்டியுடன் மகிழ்வுந்தை நோக்கி செல்வதையும் கூடவே இன்னொருவன் செல்வதையும் மாடியிலிருந்து சுதாகர் கவனித்துவிட்டான்.இருவரையும் நிறுத்தி அவர்களோடு போக வேண்டாம் என எச்சரிக்க எவ்வளவோ முயன்றும் அடித்த காற்றில் அவர்கள் சத்தம் ஒன்றுமில்லாமல் போனது.விக்கி தன் கைபேசியை எடுத்து ஐசுவர்யாவிற்கு அழைத்தான்.ஐசுவர்யாவும் தற்சமயம் முயற்சி செய்து கொண்டிருந்ததால் பிஸியாகவே இருந்தது.ஹரிணியின் கைபேசிக்கு அழைத்த பொழுது மணி அடித்துக் கொண்டே இருந்த போதும் யாரும் எடுக்கவில்லை.
வெறுத்துப் போய் அவர்கள் கீழே வந்து பார்த்த போது மகிழ்வுந்து வாசலைத் தாண்டி வெகுநேரமாகியிருந்தது.
வாசலில் ஒரே ஒரு கால் டாக்ஸி மட்டும் வாசலில் நின்று கொண்டிருந்தது.சிவா வேகவேகமாக கால் டாக்ஸியை நோக்கி ஓடினான்.இருவரும் பின்தொடர்ந்தனர்.கால் டாக்ஸியில் ஏறும் முன் சிவா சுற்றும் முற்றும் அவர்கள் சென்ற மகிழ்வுந்தைத் தேடினான்.நேராய் சென்ற சாலையின் மலைமுகட்டோடு சேர்ந்து இடதுபுறம் வளைந்து சென்றதால் ஒரு மைல் தூரத்திற்கு சாலையில் செல்லும் வாகனங்கள் எல்லாம் தெரிந்தது.நேற்று இரவு சிவாவும்,சுதாகரும் ஏறி வந்த மகிழ்வுந்து சற்று தொலைவில் சென்றது.ஓட்டுனரிடம் அந்த மகிழ்வுந்தை வேகமாக பின்தொடரச் சொல்லிவிட்டு மூவரும் கால் டாக்ஸியில் ஏறினர்.அவர்களின் பதட்டத்தைப் பார்த்து ஏதோ விபரீதம் என உணர்ந்த ஓட்டுனர் வெகு வேகமாக வாகனத்தை விரட்டினார்.100 அடி இடைவெளியளவில் இரு மகிழ்வுந்துகளும் சீறிச்சென்றன. சிவா ஆருயிர் காதலியை இப்படி ஓர் நிலைக்கு வந்தது தன்னால்தான் என நினைத்து கண்களும் உதடுகளும் துடித்தது.கண்ணீர்த் துளிகள் படபடத்துக் கொட்டிய வியர்வையில் கரைந்தது.விக்கி மீண்டும் மீண்டும் முயற்சி செய்தும் பலனில்லை.இது வரை பிஸியாக இருந்த ஐசுவர்யாவின் கைபேசி இப்பொழுது முழுமையாக மணி அடித்து நின்றது.இருப்பினும் அவள் எடுத்துப் பேசவில்லை.முன்னே சென்ற கிறிஸ்டியின் மகிழ்வுந்து பாதைகள் மாறி மாறி வனங்கள் அடர்ந்த ஒற்றையடி பாதையில் சென்றது சிவா சென்ற மகிழ்வுந்தும் அவர்களை விடாமல் துரத்தியது.பாதையெங்கும் சருகுகள் மண்டியிருந்தது.சுற்றிலும் 3 பனைமர அளவு மரங்களும்,ஆளுயர புதர்களும் மண்டியிருந்தது.கிறிஸ்டியின் மகிழ்வுந்து சட்டென்று சக்கரம் வெடித்து நின்றது.என்ன ஆனது என பார்க்க கிறிஸ்டி கீழே இறங்கினான்.ஆணிப்பலகையில் குத்தி 2 சக்கரங்கள் வெடித்திருந்தது.மூவரும் கீழே இறங்கினர். பின்னே விரட்டி வந்த சிவாவின் மகிழ்வுந்தும் அவர்களை பிடித்துவிட்ட மகிழ்ச்சியில் நெருங்க அதன் சக்கரங்களும் வெடித்து முன்னிருந்த வண்டியின் மீது மோதி நின்றது.இந்த இரு வாகனங்களையும்,அதில் வந்தவர்களையும் தவிர வேறு ஆள் அரவமில்லாத இடம் அது.மகிழ்வுந்தை விட்டு இறங்கிய சிவா ஒரே பாய்ச்சலில் கிறிஸ்டியின் சட்டையைப் பிடித்து முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான்.சுதாகரும்,விக்கியும் நாசரை மடக்கி பிடித்தனர்.

“சிவா என்ன பண்ற?” ஐசுவர்யாவும் ஹரிணியும் பதறினர்.
கிறிஸ்டியை கீழே தள்ளி கையில் கிடைத்த ஒரு கட்டையை எடுத்து அவனை விளாச சிவா கையை ஓங்கினான்.எங்கிருந்தோ மின்னல் வேகத்தில் வந்த கல் ஒன்று சிவாவின் நெற்றியில் தாக்கியது.எதிர்பாராத தாக்குதலால் சிவா நிலைகுழைந்தான்.புதர்மறைவிலிருந்தும்,மரங்கள் மேலிருந்தும் குட்டையாய்,அழுக்கேறிய உடை அணிந்து வினோதமான மொழியில் கத்தியபடி ஐம்பதுக்க்கும் மேற்பட்ட காட்டுவாசிகள் வெளிப்பட்டனர்.ஈட்டி முனையில் அனைவரையும் சிறைபிடித்தனர்.கீழே விழப்போன சிவாவைத் தாங்கிப் பிடிக்க சென்ற சுதாகரையும்,விக்கியையும் தலையில் கட்டையைக் கொண்டு அடித்தனர்.
ஹரிணி,ஐசுவர்யாவின் அலறலுக்கு நடுவே மூவரும் மயக்கமடைந்தனர்.

சிறிது நேரம் கழித்து…
லேசாக மயக்கம் தெளிந்தது சிவாவிற்கு.மங்கலாக தெரிந்த பார்வையில் வானமும் கண்கூசிய சூரியனும் தெரிந்தது.உடல் குலுங்கியபடி சென்றதால் யாரோ தன்னை சுமந்து செல்வது தெரிந்தது.சட்டென ஐசுவர்யாவின் நினைப்பு வர எழ முயன்று நிமிண்டினான்.அவனை சுமந்து சென்ற காட்டுவாசிகளின் கூட வந்த ஒருவன் சிவாவின் முகத்தில் ஒரு துணியை வைத்து அழுத்தினான்.சிவா மீண்டும் மயக்கமடைந்தான்…
                                      -காத்திருங்கள்
இதுவரை நடந்தது என்னவென்று அறிய கீழே சொடுக்குங்கள்...


வஞ்சம்...

No comments:

Post a Comment