Thursday, 19 January 2012

வணக்கம் வாழவைக்கும் சென்னை

வணக்கம் வாழவைக்கும் சென்னைனு மெரினா படத்துல ஒரு பாட்ட போட்டு அத டி.வி ல போட்டாங்க.சென்னைல வாழ்ற ஒவ்வொருத்தருக்கும் அவங்களுக்கு ஏத்தபடி சென்னை பத்தின ஒரு பார்வை இருக்கு.நான் 2 வாரத்துக்கு முன்னாடி சென்னை போனேன் எனக்கும் சென்னை பத்தி சில பார்வைகள் இருக்கு.ஏனோ தெரில சென்னை என்னை ஈர்க்கல.நான் பார்த்த சில விஷயங்கள எழுதறேன் அவ்ளோதான்...சென்னைல சாயுங்காலம் மாநகர பேருந்துல போறது எவ்வளவு பெரிய அனுபவம்னு அரிதா போறவங்களுக்கு தான் தெரியும் அடிக்கடி போறவங்க அதையெல்லாம் பொருட்படுத்தறது இல்ல.நானும் நண்பனும் எங்க ஊர் நியாபகத்துல கடைசில இருக்குற நீளமான இருக்கைல நாங்க 2 பேரும் இன்னும் சில ஆண்மகன்களும் உட்கார்ந்தோம்.ஒரு 4 நிறுத்தம் தள்ளி ஒரு 40 வயசு ஆண்டி ஏறுனாங்க.நேரா எங்ககிட்ட வந்து “கொஞ்சம் எந்திருக்கறீங்களா”னு கேட்டாங்க.அப்புறம் தான் தெரிஞ்சுது இடது பக்கம் இருக்கற இருக்கைகளெல்லாம் பொம்பளைங்களுக்காம். (இந்த ரூல்செல்லாம் யாருய்யா போட்டது? )அமைதியா எந்திரிச்சோம்.2 ஆண்டிங்க எங்க இடத்துல உட்கார்ந்தாங்க.கொஞ்ச நேரத்துல இன்னும் 2 பெண்கள் வந்து அடுத்த 2 ஆண்கள எழுப்பிவிட்டுட்டாங்க.இடது பக்கம் இருக்கற சீட்டுகள் (அதாவது கடைசி சீட்டுல பாதி) எல்லாம் பெண்கள்தான் உட்காந்தாங்க.அதெல்லாம் பரவால்லங்க அடுத்து வலது பாதில இருக்குற 2 பேர எழுப்பிவிட்டு 2 பெண்கள் உட்காந்துட்டாங்க.நாங்க பெண்ணுரிமை பயங்கரமா வேலை செய்யுது போலனு நினைச்சோம்.அந்த கடைசி சீட்டுலயும் 2 பசங்கதான் இருந்தாங்க.நாங்க கூட்டத்துல பிழியப்பட்டுகிட்டு இருந்தோம்.அந்த ஸ்டாப்புல ஏறுன ஒரு காலேஜ் பொண்ணு உடனே அந்த 2 பசங்க கிட்ட போய் “எந்திரிங்க”னு சொல்லி துரத்தி விட்டுடுச்சு.அவங்க பேசாம எந்திரிச்சு வந்துட்டாங்க.இப்ப கடைசி சீட்டு முழுசுமே பெண்கள்தான் அதுலயும் அந்த காலேஜ் பொண்ணு உட்கார்ந்த கையோட கைபேசிய எடுத்து கடலை போட ஆரம்பிச்சுருச்சு.இறங்கற வரைக்கும் செம வறுவல் ஓடுச்சு.இதுக்குதான் பசங்கள எழுப்பிவிட்டாங்களானு நினைக்கும் போது செம கடுப்பா இருந்துச்சு.இவிங்க ஜாலியா ட்ராவல் பண்ண அப்பாவி பசங்க தான் கிடைச்சாங்களா? மொதல்ல ஆணுரிமைய மீட்டெடுக்கனும்யா...

அடுக்குமாடி கட்டடங்கள் எல்லாம் சென்னைல பளபளனு இருந்துச்சு இன்னும் நிறைய பிரமாண்ட கட்டிட வேலைகளும் நடந்துட்டிருந்துச்சு.ஆனா ஒரே ஒரு தகர கூரை, இரண்டு கைய பக்கவாட்டுல நீட்டுனா இடிக்கற அளவுக்கு இடம்,கிடைச்சத எல்லாம் வெச்சு ஒப்பேத்தி வெச்சிருக்கிற 4 சுவர்.இதுதான் பெரும்பாலான சென்னை வாசிகளுக்கெல்லாம் வசிப்பிடமா இருக்கு.தூக்கம்,வாழ்க்கை,பிறப்பு,இறப்பு,பூப்படைவது,காதல்,திருமணம்,குடும்பம், மாதவிலக்கு,உணவுனு 6,7 பேர் இருக்குற ஒரு குடும்பத்துக்கு இந்த இடம்தான் எல்லாம்னு சொன்னா அது கொடுமையா தெரிலயா இந்த அதிகாரவர்க்கங்களுக்கு? மழை,பனி,வெயில்னு எதுக்கும் பாதுகாப்பில்லாத கூடு கட்டி வாழ்றது சென்னை வாழ் அதிகாரிகளுக்கு உறுத்தலையா? தினமும் கண் முன்னாடி பாக்கற இந்த விசயத்தியே இவங்களால சரி பண்ண முடியலனா இவங்க என்னத்த ஆண்டு என்னத்த கிழிக்க போறாங்க?

தமிழினத் தலைவர் அவர்கள் ஏதோ திராவிட பாரம்பரியத்தோட கட்டிருக்கேனு சொல்லி பெருசா ஒரு சட்டமன்றத்த கட்டி வெச்சாரு அத ஆத்தா வந்து ஆஸ்பத்திரி ஆக்கறேன்னு சொல்லிச்சு.ஆனா 2 பேருமே இந்த கட்டிடம் நாறிப் போன கூவத்து கரைல கட்டி வெச்சிருக்கோம்ங்கிறத ஏன் வசதியா மறக்கிறாங்க? ஒரு மாநிலத்தோட ஆட்சிமன்றம் மிகவும் மோசமாக சீரழிக்கப்பட்ட ஆற்றின் கரையில் இருப்பதே இவங்க ஆட்சிகளுக்கு சாட்சியா இருக்கும்னு தோனலையா இவங்களுக்கு? அங்க மருத்துவமனை அமைஞ்சா அது உயர்சிகிச்சை மையமா இருக்காது நோய் பரப்பும் மையமா தான் இருக்கும்.இதுவே இப்படினா அந்த கரையில வாழ்ற மக்கள நினைச்சா மனசு கொதிக்குது.ஆற்றங்கரை நாகரீகம் இப்ப சாக்கடையோர நாகரீகம் ஆகிப்போனது இந்த புத்திசாலிங்களுக்கு ஏறலயா? ஒருவேளை ஆற்றை சுத்தப்படுத்தினா அந்த ஆற்றோர மக்கள விரட்டிவிட்டுட்டு  அந்த இடத்தயெல்லாம் பெருமுதலாளிகளுக்கு பங்கு போட்டு குடுத்துடுவாங்கங்கிறது உண்மைதான்.ஆனா மலேரியாவின் தாயகமா இருக்குற இந்த கூவத்த சீர் செய்ஞ்சா எத்தனையோ வியாதிகளிலிருந்து மக்கள காப்பாத்தலாம்.இதெல்லாம் செய்யாம எங்கிருந்து முதல் மாநிலமாகிறது?சென்னையோட பொருளாதார ஏற்றத்தாழ்வு எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்கனும்னா நேரா ஏதாவது பெரிய ஷாப்பிங்க் மாலுக்கு போக வேண்டியதுதான்.வீணா போற நேரத்தையும்,பணத்தையும் என்ன பண்றதுனு தெரியாம கும்பல் கும்பலா சுத்துற பணக்கார இளைஞர்கள்,பார்க்கிங்கு ஒரு மணி நேரத்துக்கு 20 ரூபாயனு வாய பொளக்குற நடுத்தர இளைஞர்கள், சென்னையை சுத்தி பாக்குறேன்னு சொல்லிட்டு குருந்தாடி,மொழுக் முகம்,கலரிங் தலை,சுமார் ஜீன்ஸ்னு ஷாப்பிங்க் மாலுக்கு உள்ளயே சென்னைய தேடுற வெளியூர் இளைஞர்கள்,துணிக்கடை,தையல் கடை,டிபார்ட்மெண்டல் ஸ்டோர்னு வாரம் முழுக்க வேலை செஞ்ச காசுல வாங்கின மலிவான ஜீன்ஸும்,ஷால் போடாத டாப்ஸும்,தலைக்கு குளிச்சு அப்படியே முடிய விரிச்சு போட்டுட்டு பரவசத்துடன் வரும் ஏழை இளைஞிகள்னு இன்னும் பல முகங்களை அந்த பெருங்கடைகளில் பார்க்கலாம்.இந்த ஏற்றத்தாழ்வு விரிந்து கொண்டே போனால் வரும் விளைவுகள் பல பெருங்கடைகளின் அஸ்திவாரங்களை இடிக்கத் தொடங்கும் என்பது வெளிச்சம்.ஏனெனில் சென்னையின் புழுக்கம் எல்லையில்லாதது.

அப்புறம் இன்னொன்னு சொல்ல மறந்துட்டனே சென்னைல நான் சாப்பிட்ட உணவு விடுதியோட முதலாளிங்க எல்லாம் மலையாளிங்க வேலை செய்யுற பசங்க எல்லாம் ஹிந்திகாரனுங்க.நம்ம இளைஞர்கள் எல்லாருமே மல்டிநேஷனல் கம்பெனிலயும்,உட்கார்ந்தே வேலை செய்யுற இடத்துலயும்தான் வேலை பாப்பேன்னு அடம்புடிச்சு உட்கார்ந்திருந்திருந்தா இருக்குற தொழில்வளம் எல்லாம் பறிபோயிட்டிருக்கு.

3 comments:

  1. வலைச்சரம் மூலம் வந்தேன் தொடர்ந்து எழுதுங்கள் தொடர்கிறேன் வாழ்த்துகள்

    ReplyDelete