Thursday, 15 December 2011

வஞ்சம்-பகுதி 3

                                                         பகுதி 3- தேடும் பயணம்

”எம்.டி ரொம்ப நம்பிக்கையா சொன்னாரு ஹரிணி கண்டிப்பா இன்னைக்கு பஷீர கூட்டிட்டு வந்துடுவாங்க” சுதாகர் சொன்னதைக் கேட்டு மகிழ்ச்சியும் சற்று அவநம்பிக்கையும் கலந்து தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தாள் ஹரிணி.கடந்த 1 வாரமாக அவளை சமாதானப்படுத்தியே சோம்பிப் போன ஐசுவர்யா அவளை மடியில் கிடத்தியதோடு நிறுத்திவிட்டாள். “நீங்க சொன்னா உடனே அவ அழுகைய நிப்பாட்டீடுவாளா?” என்று கேட்பது போல சுதாகரை ஐசுவர்யா பார்க்க அவன் விட்டத்தை பார்த்து சமாளித்தான்.

சிவா, ஐசுவர்யா, ஹரிணி, சுதாகர், விக்கி எல்லோரும் எந்நேரமும் பஷீர் வந்துவிடலாம் என்பதால் சிவாவின் வீட்டில் குழுமியிருந்தனர்.விக்கி மட்டும் வீட்டின் வாசலில் நின்று கொண்டு யாரிடமோ காரசாரமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தான்.
“பஷீர் வந்ததும் முதல் வேளையா எல்லாரும் ஏற்காடுக்கு ட்ரிப் அடிக்கறோம்”
சிவா எல்லோரிடமும் பொதுவாக சொன்னாலும் அவன் பார்வை மட்டும் ஐசுவர்யாவைப் பார்த்து சொன்னது.இதெல்லாம் ஒன்னும் வேலைக்காகாது என பார்வையிலேயே பதில் சொன்னாள் அவள்.அறிவாளித்தனமாக போட்ட திட்டம் தன் இலக்கை எட்ட முடியவில்லையே என சிவா நொந்தான்.

“பஷீருக்கும், ஹரிணிக்கும் இது ரெண்டாவது ஹணிமூன்னு நெனைக்கறேன்” சுதாகரின் கிண்டலால் வெகு நாட்கள் கழித்து ஹரிணி உதடு விரித்து வெட்கப் புன்னகை புரிந்தாள்.அதைக் கண்ட நண்பர்கள் அனைவரின் முகமும் ஆசுவாசமடைந்து சிரித்து மகிழ்ந்தனர்.
“பாவம் சிவா அப்பா ஆயிட்டதால நான்,சிவா,விக்கி எல்லாம் ஒரே ரூம்ல ஷேர் பன்ணிக்குவோம்.செம ஜாலியா இருக்கும்ல மச்சி” சிவாவின் தோளைக் குலுக்கி சுதாகர் உற்சாகமாக உண்மையை போட்டு உடைக்க ஹரிணி திக்கிட்டாள். “அடப்பாவிகளா ஒரே வீட்டுல இருக்கேன் என்ட கூட சொல்லலியே.நீ கூட சொல்லலியேடி” ஐசுவர்யாவின் கண்ணத்தில் கிள்ள அவள் கூச்சத்தில் நெளிந்தாள்.

“நம்ம சிவா அப்பா ஆகிட்டானா! மச்சி ஏற்காட்டுல செம பார்ட்டி வெக்கறோம் எஞ்சாய் பண்றோம்” தன் குடிக்கு அடை போட்டு விட்டு சோஃபாவில் அமர்ந்தான் விக்கி. “சுத்தி சுத்தி என்ன டார்கெட் பண்றானுங்களே, சேத்து வெச்ச சொத்தெல்லாம் ஏற்காட்டுல இருந்து உருட்டி விட்டுறுவானுங்க போல இருக்கே” நண்பர்கள் மத்தியில் ஏற்பட்ட குதூகலத்திற்கு அளவே இல்லை.

பெரும் சத்தத்தோடு ஹிப்ஹாப் பாடல் ஒலித்த தன் அலைபேசியை எடுத்த விக்கி அழைத்தவரின் பெயரை பார்த்து எரிச்சலுடன் இணைப்பை துண்டித்தான்.

“யாருடா?” சிவா

“வேற யாரு என் ஆளுதான்” சலிப்புடன் சொன்னான் விக்கி

“அத ஏன்டா கட் பண்னின?” சிவா

“அவ கூட நான் டூருக்கு குலுமனாலி வரனுமாம்.நான் முடியவே முடியாதுன்னு சொன்னேன்.அதான் இவ்ளோ நேரம் சண்டை” விக்கி.

“லவ்வர் கூட போறக்கு அவளுக்கும் ஆசை இருக்காதா? போயிட்டு வரலாம்ல டா” சிவா கூறிய அறிவுரையை கேட்ட ஐசுவர்யா புருவத்தை சுருக்கி அவனைக் கூர்மையாக பார்க்க சிவா வேறெங்கோ பார்த்து தப்பித்தான்.

“அய்யே அது டார்ச்சர் மச்சி, சும்மா நொய்யி நொய்யி நொய்யி நு நச்சிட்டே இருப்பா. இத சொன்னா தப்பு அத சொன்னா தப்பு அங்க பாக்காத இங்க பாக்காதனு ஒரே சலம்பலா தான் இருக்கும்.அதுக்கு நான் டாஸ்மாக்குல மட்டமான குவாட்டர் அடிச்சுட்டு நூறு வாட்டி வாந்தி எடுப்பேன். உங்க கூட வந்தாலாவது ஜாலியா இருக்கும்டா.வாழ்க்கைய எஞ்சாய் பண்ணி வாழனும் தோழா ” வெட்டோத்தி சுந்தரம் படத்தில் வரும் சரவணனைப் போல தோளை திமிறினான். எல்லோரும் விழிந்து விழிந்து சிரித்தனர்.

தரைவழி தொலைபேசி சிணுங்கியது.”தயவு செஞ்சு எடுத்துடாதிங்கடா.விளைவுகளுக்கு நான் பொறுப்பில்ல” தன் காதலியாகத் தான் இருக்கும் என நினைத்து விக்கி எச்சரிக்க அவனை வெறுப்பேத்த ஐசுவர்யா தொலைபேசியை எடுத்து “ஹலோ” என சிணுங்கலான குரலில் நீளமாய் சொன்னாள்.எதிர் முனையில் பேசிய குரல் கேட்டு திடுக்கிட்டாள் “பஷீர் எப்ப வரீங்க,அது...ம்ம்..” திடீரென பஷீரின் குரல் கேட்டு என்ன பேசுவது என புரியாமல் தவித்த ஐசுவர்யாவிடமிருந்து வெடுக்கென பிடுங்கி சிவா பேசினான்
“டேய் எங்கடா இருக்க?” கோபமும், பதட்டமு தொனிக்க பேசினான்.
“..........................”
“முட்டாப்பயலே இப்படியாடா பண்ணுவ? அங்கயே இரு வந்திடறேன்”
“........................”
“நீ எப்படியாவது பத்திரமா இரு.நாங்க போலீசுகிட்ட சொல்லிட்டு உடனே வரோம்”
“.........................”
“ஹலோ, ஹலோ ...” பேச்சுக்கு நடுவே இணைப்பு துண்டிக்கப்பட்டவுடன் ஏதோ விபரீதம் நடப்பதை உணர்ந்தான்.

“அவருக்கு என்னாச்சு? எங்க இருக்காரு?” ஹரிணி படபட்த்தாள்.

“ஏற்காட்டுல இருக்கானாம்.வேற எதும் சொல்றதுக்குள்ல லைன் கட் ஆயிடுச்சு” சிவா.

“நாம போயி கூட்டிட்டு வந்துடலாம் சிவா” சுதாகர் ஆயத்தமானான்.

“சரி நானும் சுதாகரும் போய் அவன தேடிப்புடிச்சு கூட்டிட்டு வந்துடறோம்” சிவாவிற்கு தொலைபேசியில் கேட்ட விசயங்களால் மூளை சூடாகி பரபரப்பானது.

“என்னையும் கூட்டிட்டு போங்க பிளீஸ்” ஹரிணியின் கெஞ்சலை ஏற்க மனமில்லாமல்லாவிட்டாலும் தற்பொழுது ஏற்காட்டுக்கு செல்ல வேண்டும் என்பது தான் அவன் முதல் குறியாக இருந்ததால் “இல்ல ஹரிணி அது......” சற்று யோசித்து “சரி நானும் சுதாகரும் இப்பவே கிளம்பி போறோம். விக்கி நீ இவங்கள கூட்டிட்டு ஆபீஸ் வண்டீல நாலைக்கு ஏற்காடு வந்துடு.முடிந்தவர நீங்க வர்றதுக்குள்ள அவனை கண்டுபிடிச்சுடுவோம்” பேச்சில் மட்டும் அவனால் உறுதியாக சொல்ல முடிந்தது.எங்கே போவது எப்படி கண்டுபிடிப்பது என்பது கேள்விக்குறிதான். இப்போதைக்கு இருக்கக்கூடிய ஒரே நம்பிக்கை பஷீர் அழைத்திருந்த தொலைபேசி எண் தான்.

“சார் ஏற்காடு எத்தன மணிக்கு போவோம்?” நடத்துனரிடம் பவ்யமாய் கேட்டான் சுதாகர்.
“காலைல 4 மணிக்கு போகும். வண்டி கிளம்பி கால் மணி நேரம் தான் ஆச்சு நீங்க 10 ஆவது தடவ இதே கேள்விய கேட்கறீங்க.இன்னொரு தடவ கேட்டா நான் மனுஷனா இருக்க மாட்டேன்” அமைதியாக எச்சரித்து விட்டு நடத்துனர் தன் வேலையைத் தொடர்ந்தார்.
நீண்ட தொலைவு வாகனம் ஓட்டி பழக்கம் இல்லாததால் இருவரும் வெகு நாட்களுக்குப் பிறகு அரசுப் பேருந்தில் பயணம் செய்தனர்.சிறிதளவு திறக்கப்பட்டிருந்த ஜன்னலின் வழியே குளிர்க்காற்று இதமாய் வருடியது அனைவரும் உறங்கிவிட்டனர் சிவா,சுதாகரைத் தவிர.

“ஃபோன்ல என்னடா சொன்னான்” சுதாகர்.

“ஏதோ கும்பல் கிட்ட மாட்டிகிட்டானாம்டா,பேசறப்ப ரொம்ப படபடப்பா இருந்தான்.எனக்கென்னமோ பயமா இருக்குடா” பயமும் சோகமும் கலந்த குரலில் அவன் சொன்ன பதிலால் சுதாகரும் கலக்கமடைந்தான்.

“கண்டிப்பா கண்டுபிடிச்சுடலாம்டா எனக்கு நம்பிக்கை இருக்கு.அந்த ஃபோன் நம்பரோட அட்ரஸ் இருக்குல்ல அங்க போனா எல்லாம் நல்லபடியா முடியும் ”வார்த்தைகளில் மட்டும் துணிவு காட்டி ஆறுதல் தேட முயற்சித்தது தோல்வியைத் தந்தது.  

இரவெல்லாம் நரகமாய் கழிந்தது.நண்பன் பத்திரமாக கிடைக்காவிட்டால் என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது.பல துக்கங்கள் தொடரும்.
ஏற்காட்டிலிருக்கும் நிகழ்வு மேலாளர் ஜோனத்தன் கிறிஸ்டிக்கு முன்னமே அழைத்து தாங்கள் இரவே வருவதாக கூறிவிட்டனர்.ஏற்காடு நெருங்க இருவருக்கும் படபடப்பும்,பயமும் ஒருசேர கலங்கடித்தது.தைரியமாக இருக்க முயற்சித்தனர்.ஒவ்வொரு ஊரின் பெயர்பலகையையும் உற்று உற்று பார்த்தனர்.

“வெல்கம் டூ ஏற்காடு” அந்த இரவு வேளையிலும் தெளிவான புன்னகையோடு உற்சாகமாக வரவேற்ற கிறிஸ்டியிடம் கைகுலுக்கினர்.
“சிரமத்துக்கு மன்னிச்சுடுங்க ஒரு அவசர வேலை இருக்கு அதான் இரவே வந்துட்டோம்” சுதாகர்.
“அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனை இல்ல சார்.உங்களை கவனிக்கத்தான என்ன நியமிச்சிருக்காங்க” கிறிஸ்டியுடன் மூவரும் காரில் ஏறி புறப்பட்டனர்.
“இப்ப நாம எங்க போறோம்?” சிவா.
“ஹோட்டல் லே கிராண்டே ல ரூம் போட்டிருக்கோம்.நீங்க அங்க தங்கிக்கலாம்” கிறிஸ்டி.
“அதுக்கு முன்னாடி ஒரு சின்ன உதவி செய்ய முடியுமா? இந்த முகவரிக்கு எங்கள கூட்டிட்டு போங்களேன் பிளீஸ்” சிவா முகவரி எழுதப்பட்ட சின்ன தாளை கிறிஸ்டியிடம் நீட்டினான்.
”தாராளமா போகலாம் ” முகவரியைப் பார்க்காமலே ஓட்டுனரிடம் கொடுத்தான் கிறிஸ்டி.
வண்டி வாசவி ஸ்டோர்ஸ் என பலகையிடப்பட்ட கடை வாசலின் முன் நின்றது. “இதான் சார் நீங்க கேட்ட அட்ரெஸ்” ஓட்டுனர் சுட்டிக்காட்டிய கடையை நோக்கி சிவாவும், சுதாகரும் விரைந்தனர்.கிறிஸ்டியின் முகம் சுருங்கியது.

இரவு நேரமாதலால் கடைப் பூட்டப்பட்டிருந்தது.கடை வாசலில் கையில் பீடியுடன் கம்பளி போர்த்தி அமர்ந்திருந்த பெரியவரிடம் கடை முதலாளியின் வீட்டை விசாரித்தனர்.
“தோ இங்கன சந்து இருக்குல்ல உள்ளார போனீங்கன்னா மூணாவது வீடு.கதவுல பிள்ளையார் படம் போட்டிருக்கும்”
நன்றி தெரிவித்து விட்டு குறுகலான சந்தில் கடை முதலாளியின் வீட்டைத் தேடினர்.வெகு நேரம் கதவைத் தட்டிய பிறகு சோர்வான கண்களுடன் லுங்கியை கட்டிக் கொண்டு கதவைத் திறந்து “யார் நீங்க? என்ன வேணும்?” எரிச்சலாய் கேட்டார்.
“சார் நீங்க வாசவி ஸ்டோர்ஸ் ஓனர் தான?” சிவா.
“ஆமா” தலையை சொரிந்து கொண்டே பதிலுரைத்தார்.
“சார் உங்க கடையிலிருந்து...” சுதாகர் பேசி முடிக்கும் முன் இடை மறுத்தார் கடைக்காரர் “சாமன்லாம் எடுக்க முடியாது காலையில வாங்க சார்” கதவடைக்க முயன்றவரை அவசரமாய் சிவா தடுத்தான்.
“அதில்ல சார்... ஒரு நிமிஷம்”
“இப்ப என்ன சார் வேணும் உங்களுக்கு?”கடைக்காரர்.
“நாங்க காணாமப் போன நண்பன தேடி வந்திருக்கோம் தயவு செஞ்சு உதவி பண்ணுங்க” கலங்கிய கண்களுடன் கைகூப்பி கெஞ்சினான் சிவா. கடைக்காரர் வெளியே வந்து கதவை சாத்திவிட்டு ஒன்றும் புரியாதது போல் பார்த்தார்.

“சார் உங்க கடைல இருந்து ஒரு 5 மணிக்கு 2376122 ங்கிற பெங்களூர் நம்பருக்கு எங்க ஃபிரண்டு கால் பண்ணினான்.அவன கொஞ்ச நாளா காணாம தேடிட்டு இருக்கோம்.பேசுறப்ப கால் கட் ஆயிடுச்சு.ஆள் நல்லா உயரமா,சிவப்பா இருப்பான்,நெத்தில ஒரு தழும்பு இருக்கும்” ஏதேனும் தகவல் கிடைக்கும் என்ற ஆர்வத்தில் முழுவதுமாக கொட்டினான்.மூவரும் பேசிக் கொண்டே நடந்தனர்.

“ஆமா சார்,ஞாபகம் இருக்கு. வந்து பேசிகிட்டு இருந்தாரு.தடுமாறி,தடுமாறி பேசினாரு.அப்புறம் ஒரு மூணு பேரு வந்து ஃபோன புடுங்கி உடைச்சிட்டு ஆள இழுத்துட்டு போயிட்டாங்க.நான் புடிக்க போனப்ப என்ன நெட்டித் தள்ளிட்டாங்க.தோ கைல கூட காயம் ஆயிடுச்சு பாருங்க” தன் புறங்கையை காட்டினார். தான் எதிர்பார்த்தது போலவே ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது என உணர்ந்து திடுக்கிட்டு சிவாவும், சுதாகரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

“அவர எங்க கூட்டிட்டு போயிருப்பாங்கன்னு ஏதாவது தெரியுமா? ஐ மீன் அவங்க பேச்சுல ஏதாவது தெரிஞ்சுதா? ” சுதாகரின் குரலில் பயம் தொணித்தது.

“அதெல்லாம் தெரில சார் ஒரு நீல கலர் கார்ல... வண்டி நம்பர் கூட பாத்தேனே... ம்... 8888 நு நினைக்கறேன். டேஷன்ல கம்பிளயிண்டு குடுக்கலாம்னு பாத்தேன் அப்புறமா  பெரிய இடமா இருந்தா பொழப்பு நாறிடுமேனு விட்டுட்டேன்” பேசிக்கொண்டே கடையின் முன் வந்து நின்றனர்.

“எந்த பக்கம் போனாங்க” சுதாகர்.

“இதோ இப்படியே வடக்கால போனாங்க...” என்று சாலையைப் பார்த்தவர் திடுக்கிட்டு முகத்தை துண்டால் மூடிக்கொண்டு இருவரிடமும் கிசுகிசுத்தார்.

“சார் மூணு பேரு அவர இழுத்துட்டு போனாங்கன்னு சொன்னேன்ல அதுல ஒருத்தன் அதா அங்க நிக்கறான் பாருங்க ”
இருவரும் சுற்றும் முற்றும் பார்த்தனர்.வண்டி ஓட்டுனர், கிறிஸ்டியைத் தவிர அங்கு வேறு யாரும் இல்லை.
“யார சொல்றீங்க? அந்த டிரைவரா? ” சிவா வினவினான்.

“இல்ல சார் அந்த கறுப்பு கோட்டு போட்டுட்டு ஒருத்தன் நிக்கறான்ல அவந்தான்”

“கிறிஸ்டியா?” இருவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

“அந்தாள உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா? நாசமா போச்சு. ஏதாவது வம்பு வழக்குன்னா என்ன மாட்டி வுட்றாதீங்க சார் நான் குடும்பஸ்தன்.உங்கள கெஞ்சி கேக்கறேன்” நன்றியைக் கூட வாங்கிக் கொள்ளாமல் வீட்டை நோக்கி ஓடியே விட்டார்.
எந்த சலனமும் காட்டாமல் பஷீரை கண்டுபிக்க கிறிஸ்டியுடன் காரில் ஏறி புறப்பட்டனர்.

                                                                                                           -காத்திருங்கள்

No comments:

Post a Comment