Wednesday, 18 January 2012

இதுதான் வளர்ச்சி நிதியா?

நம்முடைய முதல்வர் அம்மா அவர்கள் 2 நாட்களுக்கு முன் மாநகராட்சி,நகராட்சி,பேரூராட்சிகளின் வளர்ச்சிக்காக 7,700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருக்கிறார்.மகிழ்ச்சியான விடயம் தான் ஆனால் இதன் ஆதாரமும் விளைவுகளும் தான் மனதிற்கு ஒப்ப மறுக்கிறது. நகர்ப்புறங்களில் அசுர வேகத்தில் பெருகி வரும் மக்கள் தொகையை மனதில் கொண்டு அவர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்கதான் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.அதிலும் 10 மாநகராட்சிகளுக்கு 6,600 கோடி ரூபாய் மிச்ச தொகை நகராட்சிகளுக்கும்,பேரூராட்சிகளுக்கும்.அதாவது பெருவாரியான மக்கள் கிராமப்புறங்களிலிருந்து நகரத்திற்கு வந்தாலும் அவர்களை நகரத்தின் சந்து பொந்துகளில் அடைத்து வைக்க தேவையான வசதிகளை ஏற்படுத்த முனைகிறது அரசு.ஏற்கனவே கட்டுக்கடங்காத மக்கள் தொகையால் மாபெரும் பொருளாதார ஏற்றத்தாழ்வில் உழலும் சென்னை மாநகரைப் போல எல்லா மாநகரங்களையும் மாற்ற ஏற்பாடு நடக்கின்றது.சில மாதங்களுக்கு முன் இந்திய திட்ட கமிஷன் தலைவர் மாண்டெக் சிங் அலுவாலியா அவர்கள் “மாநகரங்களின் மக்கள் தொகை அடுத்த 10 வருடங்களில் பல மடங்கு அதிகமாகும் அதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள வேண்டும்” என உரைத்தார்.அதன் தொடர்ச்சியாகவே முதல்வரின் இந்த திட்டம் இருக்கின்றது.இது பொருளாதார அடிப்படையில் எவ்வளவு முட்டாள்த் தனமான செயல்பாடு என்பது அனைவருக்கும் புரியும்.


 
நகரங்களின் உட்கட்டமைப்பு எவ்வளவு முக்கியமோ அதே போல கிராமப்புறங்களின் பொருளாதாரம் தான் பெரும்பாலான மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியது என்பதை மறந்து விடக் கூடாது.நகரங்களுக்கு பெயரக் கூடிய மக்கள் பெரும்பாலும் கிராமத்தில் தங்கள் வாழ்வாதாரத்தை முக்கியமாக விவசாயத்தை இழந்தவர்கள் அல்லது வாழ்வாதாரத்தின் வளம் குன்றி மேற்கொண்டு அதன் மூலம் வருவாய் ஈட்ட முடியாதவர்கள் ஆவர்.இவர்களெல்லாம் கிராமப்புறங்களிலிருந்து நகரத்திற்கு நகர நகர கிராமப் பொருளாதாரம் நலிவடையும் என்பது உண்மை.ஏற்கனவே மூச்சுவிடத் திணறிக் கொண்டிருக்கும் சென்னை போல எல்லா நகரங்களிலும் மக்கள் அடைந்து கிடப்பர்.மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வேலைவாய்ப்பும்,கல்வியும் தருவது பெரும் சவாலாய் இருக்கும்.வேலையில்லாத சூழ்நிலையிலும்,பொருளாதார சூழ்ச்சியால் வாழ்விழந்தவர்களும்,ஏதேனும் செய்து வாழ்க்கையை நகர்த்த வேண்டிய சூழ்நிலையில் இருப்பவர்களுமாகிய பொருளாதாரத்தின் கடைசி கட்ட ஏழை மக்களின் எண்ணிக்கை அதிகமாகும் அது வசதி படைத்தோர் மற்றும் வசதியற்றோரிடையே பிரிவினையை உண்டாக்கும் சென்னையில் வடசென்னை,தென்சென்னைக்கான வித்தியாசம் போல.இதன் மூலம் தவிர்க்க முடியாத சூழலில் குற்ற செயல்களில் ஈடுபடுவொரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கும்.ஏழை மக்கள்தான் தவறு செய்வர் என சொல்லவில்லை வசதி படைத்தோர் தங்கள் காரியங்களுக்காக ஏழை மக்களை பயன்படுத்த போகின்றனர் என்பதுதான் உண்மை.சென்னை பட்டணத்தின் பெரும்பாலான மக்களின் அடிப்படை தேவைகள் கூட இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை.4x4 அடி இடத்துக்குள் நடைபாதை வாசிகளாக பெரும்பாலான மக்கள் உள்ளனர்.மக்களின் இந்த நகர்வால் சீர்குழைய போவது கிராமங்கள்தான்.பெருகும் நகர மக்களின் தேவைகளுக்கேற்ப சந்தை என்பது கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களிலிருந்து விலகி முற்றிலும் நகரம்தான் சந்தை என்ற நிலை உருவாகிவிடும்.ஆகவே தன் பொருளை உற்பத்தி செய்யும் விவசாயி அதை விற்க முற்றிலும் நகரங்களை சார்ந்துதான் இருக்க நேரிடும்.இதனால் விவசாயிகள் வியாபாரிகளால் பெருமளவு நட்டம் அடைவர்.போக்குவரத்து உள்ளிட்ட செலவினங்கள் காரணம் காட்டி விவசாயிகள் வஞ்சிக்கப்படுவர்.பெருவியாபரிகளிடம் நகரச் சூழலில் விவசாயிகள் நியாயம் பெற முடியாத சூழல் உருவாக நேரிடும்.அது விவசாயத்தை கொஞ்சம் கொஞ்சமாக கசக்கி பிழிந்து உயிரற்ற நிலைக்கு கொண்டு செல்லும்.குறு விவசாயம் ஒழிந்து பெரு விவசாயிகளிடமே எல்லா நிலங்களும் செல்லும்.அது பின்னர் அரசாங்க உதவியுடன் கார்ப்பரேட் தொழிற்சாலைகளுக்கு செல்லும்.படிப்படியாக இன்னும் 100 வருடங்களுக்குள் தமிழக விவசாயம் பட்டுப்போகும் சூழ்நிலை இந்த நகரங்களை நோக்கிய நகர்வால் ஏற்படும்.ஆகையால் பெருகும் மக்கள் தொகைக்காக நகரங்களின் கட்டமைப்புகள் பல ஆயிரம் கோடிகள் செலவில் செழுமைபடுத்தப்படுவதை விட சில நூறு கோடிகள் செலவில் கிராமப்புற பொருளாதாரத்தை செப்பனிடுவதே இன்றியமையாதது.இடுபொருட்களின் விலை,செலவினங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயித்தல்,இடைத்தரகர்களை ஒழித்து நெல்,கரும்பு போல அரசே எல்லா விவசாய பொருட்களை கொள்முதல் செய்து வியாபரிகளுக்கு அளிப்பது,பாசன வசதிகளை சீர் செய்தல்,அடிப்படை வசதிகள் மேம்படுத்தல் ஆகியவற்றிற்கு சில நூறு கோடிகள் இருந்தால் போதும்.அதுதான் உண்மையான வளர்ச்சியாய் அமையும்.ஆடு,மாடுகளால் மட்டும் கிராமங்கள் செழுமை பெறாது.உழுதவனை காக்காது அவனை வேறெங்கோ விரட்டி அடித்தல் நம் எதிர்கால சமூகத்திற்கு மாபெரும் கேடாய் அமையும்.கிராமங்களை காத்து நகரங்களுக்கு மக்கள் நகராமல் ஆரோக்கியமான சீரான பொருளாதாரத்தை நோக்கிய பயணமாக இருப்பதுதான் நல்லாட்சி.
                                                                                                    -மு.சுந்தர பாண்டியன்.

No comments:

Post a Comment