Tuesday, 10 January 2012

சென்னையில் நான் - அருந்ததிராயின் உரை

கடந்த வாரம் முழுக்க சென்னையில் இருந்ததால் என் பதிவையும்,நான் பின்தொடர்கிற பதிவுகளையும் கவனிக்க முடியாதது மிகுந்த வருத்தத்தை அளித்தது.இருப்பினும் வாழ்வின் சில நல்ல தருணங்களை இந்த பயணம் அளித்தது மறக்க முடியாதது.அதில் முக்கியமான ஒன்று அருந்ததி ராய் அவர்களின் பேச்சை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.சனிக்கிழமை மாலை சென்னை தி.நகரில் உள்ள ஜி.ஆர்.டி அரங்கத்தில் காலச்சுவடு பதிப்பகத்தின் சார்பாக 7 புத்தகங்களை வெளியிடும் விழா நடைபெற்றது.அதில் புலம்பெயர் எழுத்தாளர் சேரன் ருத்திரமூர்த்தி அவர்களின் ‘காடாற்று’,’THE SECOND SUNRISE’, அருந்ததி ராய் அவர்களின் ‘THE BROKEN REPUBLIC’ ன் தமிழாக்கமான ‘நொருங்கும் குடியரசு’,காஷ்மீர் பிரச்சனையை மையமாகக் கொண்டு பஷரத் பீர் எழுதிய ‘ஊரடங்கு இரவு’, ஈழத்தில் இலங்கை அரசின் வெறியாட்டங்களை வெளிக்கொணரும் கார்டன் வைஸ் எழுதிய ’கூண்டு (THE CAGE)’, தலித்துகளின் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு ஸ்டாலின் இராஜாங்கம் எழுதிய “சாதியம்:கைகூடாத நீதி”,கோ.இரகுபதி எழுதிய ’தலித்களும்,தண்ணீரும்’ ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன. புலம்பெயர் எழுத்தாளர் சேரன் ருத்திரமூர்த்தி அவர்கள் என்னுடைய நண்பர் சதீஷ்குமாருக்கு முகநூல் மூலம் நண்பராகினார். ஆகையால் சதீஷ்குமார் மூலம் நான் பங்கேற்ற முதல் புத்தக வெளியீட்டு விழா இது.புத்தகங்கள் வெளியிடப்பட்டு நிகழ்ச்சி நிரல் செயல்பட்டுக் கொண்டிருக்க திடீரென்று அரங்கத்தின் உள்ளே அமர்ந்திருந்த 20 பேர் எழுந்து “காலச்சுவடு டௌன் டௌன்” “ஆண்டி தலித்,ஆண்டி ஈழம், ஆண்டி முஸ்லிம்-காலச்சுவடு டௌன் டௌன்” “R.S.S ன் கைக்கூலி காலச்சுவடு டௌன் டௌன்” என முழக்கமிட்டுக் கொண்டு பதாகைகளை பிடித்தனர். எனக்கும் சதீஷுக்கும் என்ன நடக்கிறதென புரியவில்லை.பதிப்பாளர் பெண்மணி புத்தகத்தை படித்துப் பாருங்க என சொல்லிக் கொண்டு அவர்கள் அருகில் வந்தார்.எதிர்ப்புக் குழுவிலிருந்த ஒருவர் ‘நீங்கள் ஐ.நா வின் அறிக்கையை புறக்கணிக்கின்றீர்கள்.தலித்,தமிழ்,இஸ்லாம் மீது பாசம் உள்ளது போல வேடம் போடுகிறீர்கள்’ என வாதிட்டார் காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்திய பின் அவர்கள் வினியோகித்திருந்த துண்டுப் பிரசுரத்தை பார்த்த பொழுது காலச்சுவடின் மீது பலமான குற்றச்சாட்டுக்களை தெரிவித்திருந்தனர்.இந்த பதிப்புலக அரசியலுக்கு நான் புதிது என்பதால் தொடர்ந்து நிகழ்ச்சியை கவனிக்கத் தொடங்கினோம். எங்களை வசீகரித்த அருந்ததி ராய் அவர்களின் பேச்சிலிருந்து சில துளிகள்.தன்னுடைய புத்தகத்தை பற்றி அவர் பேசியது...

“தமிழில் பேச முடியாததற்கு மன்னிக்கவும்.எனக்கு மலையாளம் தான் தெரியும் ஆனால் தற்சமயம் மலையாளம் இங்கே விரும்பப்படுவதில்லை எனத் தெரியும் ஆகையால் ஆங்கிலத்தில் தொடர்கிறேன்.உலகத்தில் எங்கெங்கெல்லாம் கார்ப்பரேட்டுகளுக்கு இலவச சந்தை தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் போரின் மூலம் ஜனநாயகம் உருவாக்கப்படுகிறது.அதன் மூலம் இலவச சந்தையும் நிர்மானிக்கப்படுகிறது.இந்தியா ஏற்கனவே கார்ப்பரேட்டுகளின் செல்லப் பிள்ளையாக இருப்பதால் அது தேவையில்லை.பணம் எப்படி ஜனநாயகத்தை விழுங்கும் என தமிழ்நாட்டு மக்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை என நினைக்கின்றேன். நம் நாட்டின் உள்துறை அமைச்சர் சிதம்பரம் அவர்கள் ஹார்வார்டில் படித்தவர் அவருக்கு எண்ணிக்கைகளும்,விடைகளும் தான் முக்கியமாக இருக்கிறது.மக்களை பற்றி அவர் கவலைப்படுவதில்லை.அவர் இந்திய கிராமங்களில் இருக்கும் 70 கோடி மக்களும் நகரத்திற்கு பெயர்ந்து விட வேண்டும் என விரும்புகிறார்.தந்தேவாடாவில் ஒரு ஆதிவாசி காட்டில் பழங்களோ,விறகோ பறித்தால் அவர் தவறு செய்ததாகக் கூட சொல்ல மறுக்கின்றனர்,அவரைக் குற்றவாளி என்று தான் சொல்கின்றனர்.அரசாங்கம் அறிவித்திருக்கிற முகாம்களுக்கு இடம் பெயராத ஆதிவாசிகளை அவர்களை நக்ஸலைட்டுகளாக பார்க்கின்றனர்,எப்பொழுது வேண்டுமானாலும் சுட்டுக் கொல்கின்றனர்.ஏற்கனவே அங்கு விமானத்தளம்,படைத்தளம் எல்லாம் கட்டி மக்களை பயமுறுத்திக் கொண்டிருக்கின்றனர்.இந்த மக்கள் அவர்களிடம் பாதுகாப்பை எதிர்பார்க்க முடியாது.ஆதிவாசி இனத்திலிருந்து முதல் முதலாக ஒருவர் நிருபராக உருவானார்.அவர் ஆதிவாசி மக்களிடம் உள்ள பிரச்சனைகளை நேரடியாகக் கேட்டு அதை பத்திரிக்கைகளில் எழுதினார்.இந்த அரசு அவரை கைது செய்தது.அவரை படிக்க வைத்த அவருடைய உறவுக்கார பெண்ணையும் தேடியது.இதை தெரிந்து கொண்ட அவர் காடுகள் வழியாக தப்பித்து டெல்லிக்கு சென்று விட்டார்.அங்கே நீதிமன்றத்தில் சரணடைந்து பாதுகாப்பு அளிக்கக் கோரினார்.நீதிமன்றம் காவல்துறையின் மீது நம்பிக்கை இருப்பதாக சொல்லி காவல்துறையினருடன் அனுப்பி வைத்தது.சில நாட்களில் நோய் வாய்பட்ட அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி அவரை தனியார் மருத்துவமனைக்குஅழைத்துச் சென்றனர்.அங்கே அவர் பலமுறை கற்பழிக்கப்பட்டிருப்பதாகவும், பெண்ணுறுப்பில் கற்களும்,குப்பைகளும் இருப்பதாகத் தெரிவித்தனர். குடியரசு என்கிற தத்துவத்தையே பொய்யாக்கும் இந்த அரசின் நடவடிக்கைகளை தான் இந்த புத்தகத்தின் கட்டுரைகளில் விளக்கியிருக்கிறேன்.பத்திரிக்கைகளும்,மீடியாக்களும்,எழுத்தாளர்களும், அறிவாளிகளும் தாங்கள் யாருக்கும் எதிரியாகிவிடக் கூடாது என்பதில் தான் கவனமாக இருக்கின்றனர்.அதனால் தான் ஈழத்தில் படுகொலைகள் நடந்த போதும்,காஷ்மீரில் போராட்டங்கள் நடந்த போதும் எல்லோரும் வேடிக்கை பார்க்க முடிந்தது.அநியாயங்களை திட்டி எழுதுபவர்களை எல்லோரும் எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள் என விமர்சிப்பது உண்டு.ஒரு அறையில் 10 பேர் இருப்பதாக வைத்துக் கொள்வோம்.அதில் 7 பேர் பசியால் வாடும் ஏழைகள்,2 பேர் ஒரளவு வசதி படைத்தவர்கள்,ஒருவர் கோடீசுவரர் என வைத்துக் கொள்வோம்.அந்த கோடீசுவரரைப் பற்றி எழுதுவது நன்மையைத் தருமா? அல்லது பசியால் வாடும் 7 பேரைப் பற்றி எழுதுவது நன்மையைத் தருமா? இதில் யார் எதிர்மறையாய் செயல்படுபவர்கள்? நாம் அனைவரும் எப்படிப்பட்டவர்கள் என்றால் மலைப்பாதையில் செங்குத்தாக கீழே இறங்கும் சாலையில் ப்ரேக் பிடிக்காத பேருந்தில் சரிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் பொழுது என்ன பாட்டு பாடலாம் என சண்டை போட்டுக் கொண்டிருப்பவர்களைப் போன்றவர்கள்.”

அன்னா ஹசாரேவின் போராட்டம் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

இந்த நாட்டில் ஊழல் தலைவிரித்து ஆட முக்கிய காரணமே கார்ப்பரேட் நிறுவனங்கள் தான்.அதை எதிர்க்காதவர் எப்படி ஊழலை எதிர்க்க முடியும்? ஆதிவாசிகளின் பிரச்சனைகளிலிருந்து மக்களின் கவனத்தை இந்த ஊழல் எதிர்ப்பு மாயை மூலம் கார்ப்பரேட் மீடியாக்கள் திசைதிருப்பிவிட்டனர். ராம்லீலா மைதானத்தில் அத்தனை பேனர்களை கட்டிய அவர்கள் கார்ப்பரேட் ஆதிக்கத்தை எதிர்த்து ஒரு பேனர் கூட கட்டவில்லை. இவர்கள் மீது நம்பிக்கையில்லை.

லோக்பால் பற்றி...?

லோக்பால் அமைப்பு எல்லா அதிகாரங்களையும் ஓரிடத்தில் குவித்துவிடுகிறது.சீரான வளர்ச்சிக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதே சிறந்ததாகும்.இப்படி குவித்து வைப்பதால் அதுவும் கடிவாளம் போலாகும் என்பதே உண்மை.லோக்பாலின் வரம்புக்குள்ளிருப்பவர்கள் நேர்மையானர்வகளாக கருதப்படுவார்கள்.அதை விட்டு வெளியில் இருப்பவர்கள் சட்டத்தை ஏமாற்றுபவர்கள் ஆவர்.அப்படி பார்த்தால் இந்த நாட்டில் ஏழை மக்கள் தான் பெரும்பாலும் சட்டத்திற்கு புறம்பானவர்களாக கருதப்படுகின்றனர்.ஏனெனில் அவர்களிடம் தாங்கள் தங்கும் இடத்திற்கோ,வாழ்வாதாரத்திற்கோ எந்த பத்திரங்களும் இருப்பதில்லை.அவர்களை அப்புறப்படுத்தி பெருநகர வளர்ச்சிக்கு வித்திடவே லோக்பால் பயன்படும்.ஏழை மக்கள் மீது நடுத்தர வர்க்கம் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவே இது பயன்படும்.

2 ஜி வழக்கு சரியான திசையில் செகிறதா?

ஊழலுக்கு காரணமான கார்ப்பரேட்டுகள் தண்டிக்கப்படாத வரை அது சரியான திசை அல்ல.

பெரும்பான்மை ஜனநாயகத்தில் இருந்து பிரதிநிதித்துவ ஜனநாயகத்திற்கு நாம் நகருவது எப்படி?

இது ஒரு மிகப்பெரிய விவாதத்திற்கு உள்ளாக வேண்டிய தலைப்பு. பெரும்பான்மை ஜனநாயகம் எப்படி பிழையாகும் என்றால் பாபர் மசூதியை இடிக்கலாமா? வேண்டாமா? என ஓட்டெடுப்பு நடத்தினால் என்ன நடக்கும்? தலித்துகளுக்கு உரிமை கொடுக்கலாமா? வேண்டாமா? என ஓட்டெடுப்பு நடத்தினால் என்னாகும்? .

இன்னும் அவர் நிறைய பேசினார்.ஆனால் எனக்கு நினைவில் இருந்த வரை எழுதியிருக்கின்றேன்.

பின்குறிப்பு: இதழ் வெளியீட்டின் போது முழக்கமிட்டவர்கள் மே 17 இயக்கத் தோழர்கள் என இப்பொழுது தான் தெரிந்து கொண்டேன். அவர்களின் குற்றச்சாட்டுகள் எனக்கு முன்னமே தெரிந்திருந்தால் சேர்ந்து கத்தியிருக்கலாம்.படிக்கிற புத்தகத்தின் எழுத்தாளர்களை நினைவு வைத்துக் கொள்ளவே தடுமாறுகிறேன் இதில் பதிப்பகம் பற்றிய விவரங்கள் நிச்சயமாய் எனக்கு புதிதுதான்.மே 17 இயக்கம் மனதிற்கு நெருக்கமான இயக்கம் என்பதால் இனி வரும் காலங்களில் சற்று கவனமாக இருப்பேன் என நினைக்கின்றேன்.

2 comments:

 1. மாற்றான் தோட்டத்து மலிக்கைக்கும் மணமிருக்கும்.

  ஒரேயடியாய் நிராகரித்தல் என்பது சரியான முடிவல்ல நண்பா.

  எதிரியை வெல்வது தான் நோக்கமாக இருக்க வேண்டுமேயொழிய, கொல்வது கூடாது.

  மருத்துவர் நீங்கள். விளங்கும் என நினைக்கிறேன்.

  ReplyDelete
 2. புரியுதுங்ணா... எழுத்துக்கு மட்டும் முக்கியத்துவம் தருவதுதான் என் வழக்கம். ஆனால் தவறான பிம்பங்கள் எதுவும் மனதில் இருத்தி வைக்கக் கூடாது என்பதால் தான் கவனமாக இருக்க வேண்டுமென கூறினேன்.

  ReplyDelete