Monday 2 January 2012

வஞ்சம்-பகுதி 6

                                                        பகுதி 6-மாளிகை

”சிவா சிவா”
மார்பில் அழுத்தி உலுக்கியதில் கண்விழித்து எழுந்தான்.
சிவாவைச் சுற்றி நால்வரும் அமர்ந்திருந்தனர்.தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்தவன் கடைசியாக என்ன நடந்ததென யோசித்துக் கொண்டே கைகளைப் பார்த்தான்.கயிறால் இறுக்கிக் கட்டியிருந்ததால் மணிக்கட்டு சிவந்திருந்தது, வலி எடுத்ததால் லேசாக மணிக்கட்டை சுற்றினான்.தலை சுற்றலுடன் நிமிர்ந்து பார்த்தவன் முன் ஐசுவர்யாவும் மற்ற நண்பர்களும் அமர்ந்திருந்தனர்.ஐசுவர்யா அவன் தோளைப் பற்றிக் கொண்டாள்.

“தலைவலிக்குதா சிவா?” தலையை தடவிக் கொடுத்து பரிவுடன் கேட்டாள்.
”இல்ல,பரவால்ல... உனக்கு ஒண்ணும் ஆகலியே?” கொஞ்சம் சுயநலமாய் கேட்டு விட்டதால் வெட்கி “யாருக்கும் எதுவும் ஆகலல?” என வினவினான்.

“ஒண்ணும் ஆகலடா,எல்லாரும் இப்ப தான் முழிச்சோம்.அந்த காட்டுவாசிப் பயலுங்க இங்க கொண்டு வந்து போட்டுட்டானுங்க” விக்கி.

“இது என்ன இடம்னு கூடத் தெரியல ஏதோ பழைய வீடு மாதிரி இருக்கு.வெளிய போறதுக்கு ஏதாது வழி இருக்கான்னு பார்க்கணும்” சுதாகர் சொன்னவுடன் தான் சிவா தாங்கள் எங்கே அடைபட்டிருக்கிறோம் என பார்த்தான்.



ஓரெழுத்தில் சொன்னால் அது அரண்மனை.ஆனால் அதன் ஒவ்வொரு அங்குலத்தையும் பக்கம் பக்கமாய் வர்ணிக்கலாம்.ஒரே சீராய் செதுக்கப்பட்ட கருங்கற்களினால் ஆன சுவர்கள் குறைந்தபட்சம் முப்பதடி உயரமாவது இருக்கும்.ஒவ்வொரு கல்லின் நான்கு முனைகளிலும் கொடிகளைப் போல வளைவுடன் செதுக்கப்பட்ட கோடுகள் சுவற்றின் மீது முல்லைக் கொடியை படற விட்டது போல இருந்தது.ஆங்காங்கே குடம் சுமக்கும் மாந்தர்களும்,பிள்ளையை கொஞ்சும் அன்னைகளும் ஓவியங்களாய் மாட்டப்பட்டிருந்தனர்.அவர்கள் அனைவரும் அமர்ந்திருந்தது வாசற்கதவருகே.கதவின் கணம் ஒரு யானை அளவுக்கு இருக்கும் போல அனைவரும் சேர்ந்து இழுத்தும்,தள்ளியும்,முட்டியும் பார்த்து தூசி கூட அசைந்து கொடுக்கவில்லை.அறையின் இருமூலைகளும் படிக்கட்டுகள் தொடங்கி மேல்தளத்திற்கு சென்றது.ஒவ்வொரு படிக்கட்டிலும் சேர்ந்தார் போல 10 பேர் ஒன்றாக ஏறலாம்.முழுக்க முழுக்க மரவேலைப்பாடால் ஆனவை.கைபிடி சாரத்தை வடிவமைக்கவே எத்தனை ஆண்டுகள் ஆகியிருக்குமோ தெரியவில்லை அவ்வளவு நேர்த்தியான வளைவுகள் சீராக இருந்தன.படிக்கட்டுகளுக்கு நடுவே கீழ்தளத்தில் ஓர் அறை தென்பட்டது அவ்வறை கணமான பூட்டால் பூட்டப்பட்டிருந்தது.பத்தடிக்கு ஒரு சித்திரமும்,கூரையில் கூட வேலைப்பாடுகள் நிரம்பியிருந்ததும் எல்லோரையும் வாய் பிளக்க வைத்தது.வெளியே செல்ல வழி தேடி மாளிகையை சுற்றியவர்கள் பிரமித்துப் போனார்கள்.ஆளாளுக்கு ஒவ்வொரு இடத்தில் நின்று மாளிகையை இரசித்துக் கொண்டிருந்தனர்.மாளிகை அவர்களை ஈர்த்துக் கொண்டது என சொல்வது தான் பொருத்தம்.

ஐசுவர்யா மட்டும் மாளிகையை ஆராயவில்லை.சிவாவின் பின்னே அவன் கையைப் பிடித்துக் கொண்டே சென்றாள்.
“சிவா”
“ம்...” சுவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தவன் ஐசுவர்யாவின் பக்கம் திரும்பினான்.
“என்னை மன்னிச்சிரு சிவா” தலையை கவிழ்ந்தபடி கூறினாள்.
“எதுக்குடா செல்லம்?” அவள் கண்ணத்தை உள்ளங்கையில் தாங்கியபடி முகத்தை நிமிர்த்தினான்.
"என்னாலதான் இதெல்லாம்" அவள் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.
"ஹே என்ன உளர்ற”
“நான் தான ஏற்காடு போலாம்னு ஆரம்பிச்சேன் அதான் இப்ப இப்படியெல்லாம் நடக்குது” விசும்பத் தொடங்கினாள்.
“ப்ச்... அப்படி எல்லாம் இல்லமா.உண்மைய சொல்லணும்னா நாங்க தான் தப்பு பண்ணிட்டொம்.உங்க கிட்ட முன்னாடியே எச்சரிச்சிருக்கனும்.அந்த கிறிஸ்டியும்,கூட இருந்தவனும் தான் பஷிர கடத்திருக்கானுங்க.அத உங்க கிட்ட முன்னாடியே சொல்லிருந்தா நீங்களும் ஜாக்கிரதையா இருந்திருப்பீங்க” சிவா நெற்றியில் கை வைத்து சுவரில் சாய்ந்தான்.
சுவரில் சாய்ந்தவன் மாரில் ஐசுவர்யா சரிந்தாள் “சிவா ஐ லவ் யூ” என்றாள்.
“ஐ டூ லவ் யூ” என சிவாவும் அவளை அணைத்தான்.
“எப்பவுமேவா?”
“சாகற வரைக்கும்டி”.
 ஐசுவர்யாவின் முகம் கறுத்தது.சட்டென நினைவு வந்தவனாய் “ஐசு, பாப்பாக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லயே”
“உன் கொழந்த பத்திரமாத்தான் இருக்குடா” நாணத்துடன் புன்னகைத்தாள்.
”சரி வா வெளிய போற வழிய தேடுவோம்” அவளை அழைத்துக் கொண்டு சிவா வழி தேடத் தொடங்கினான்.

வீட்டினுள் ஒரு ஈ,எறும்பு கூட இல்லை,நிஜமாகத்தான்.ஒரு தூசி கூட இல்லை  மூலை,முடுக்கு உட்பட அனைத்தும் துடைத்து சுத்தமாய் பளிச்சிட்டது.படுக்கைகளும்,சாமான்களும் சீராக வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தால் யாரேனும் வீட்டினுள் இருக்க வேண்டுமெனத் தோன்றியது.முதல் தளத்திலும்,இரண்டாவது தளத்திலும் வழி தேடித் தேடி கால்  வலித்தது தான் மிச்சம்.இவ்வளவு பெரிய வீட்டில் ஒரு கதவு,ஜன்னல் கூட திறந்திருக்கவில்லை.திறக்க முயற்சித்து கை காலெல்லாம் சோர்ந்து விட்டது.

சிவா சட்டென ஏதோ நினைத்தவனாய் கால் சட்டைப் பையிலிருந்து அலைபேசியை எடுத்தான்.சிக்னல் சுத்தமாக இல்லாததால் வேலை செய்யவில்லை,”விக்கி உன்னொட மொபைல் எடேன்”
வாழ்க்கையில் ஒட்டுமொத்தமாகக் கூட இவ்வளவு தூரம் நடந்திராத விக்கி எரிச்சலடைந்தான்.

“ஹீரோ சார்,எல்லாம் நீங்க மல்லாக்க படுத்து தூங்கிட்டிருந்தப்பவே ட்ரை பன்ணியாச்சு,ஒண்ணும் வேலைக்காகல”
சிவா அசிங்கப்பட்டுவிட்டோமே என தலை குனிய அனைவரும் சிரித்துவிட்டனர்.

திடீரென்று “ஆஆஆஆ.........” வென மாளிகையே அதிர்வது போல அடித்தொண்டையிலிருந்து ஓலமிடும் ஓசை கேட்டது.ஒரு இள வயது பெண்ணின் குரலாய் இருந்தது அது.ஐவருக்குள்ளும்.ஊடுருவிச் சென்று திடுக்கிட செய்த அந்த ஓலம் மீண்டும் ஒருமுறை கேட்டது.அனைவரும் சத்தம் வந்த திசை நோக்கி ஓடினர்.இரண்டாவது தளம் நோக்கிச் செல்லச் செல்ல ஓலம் கூடிக்கொண்டே இருந்தது.கதவில்லாத ஒரு அறையில் இருந்து சத்தம் வருவதை அறிந்து அதனுள் சென்றனர்.ஓர் அழகிய இளம்பெண் அலறிக் கொண்டே ஓடியதைக் கண்டனர்.15 அல்லது 16 வயது இருக்கும்.ஓடிக் கொண்டே இருந்தவள் சட்டென்று திரும்பிப் பார்த்தாள்.புலியிடமிருந்து தப்பிக்க வழியில்லாத மானின் விழிகளைப் போல அவள் கண்களில் மிரட்சி தெரிந்தது.தங்களைத்தான் பார்த்தாளா ? எதற்காக ஓடுகிராள்? என சுற்றும் முற்றும் பார்த்தனர்.அறையின் முனையில் இருந்த உப்பரிகையில் நின்றாள்.ஏதேனும் விபரீதம் செய்துவிடப் போகிறாளோ என தடுக்க முயற்சிக்கும் முன்னரே உப்பரிகையில் இருந்து வெளியே குதித்து பள்ளத்தாக்கில் விழுந்து சிதறினாள்.அடுத்த கணமே மூவரின் பின்னிருந்து வந்த ஒரு கரிய உருவம் ஒன்று அவர்களை கடந்து சென்று உப்பரிகையில் இருந்து கீழே குதித்தது.என்ன நடக்கிறது என உணரும் முன்னரே நடந்துவிட்ட இரு தற்கொலைகளும் ஐவரையும் திடுக்கிடச் செய்தது.இதற்கு முன் மாளிகை முழுவதும் தேடிய பொழுது யாரும் இல்லையே? எப்படி வந்தார்கள்? ஏன் குதித்தார்கள்?  குழம்பிப் போன அனைவரும் மாடிப்படிகளில் சென்று அமர்ந்தனர்.

அந்த உப்பரிகை? அதன் வழியாக வெளியே செல்ல முடியுமா எனப் பார்க்க சிவா ஓடிச்சென்று பார்த்து அதிர்ச்சியடைந்தான்.சற்று உப்பரிகையுடன் இருந்த அறை நாலாபக்கமும் சுவர்களால் மூடப்பட்டிருந்தது.

                                                                                                    -காத்திருங்கள்.

இதுவரை நடந்தவற்றை தெரிந்துகொள்ள கீழே சொடுக்கவும்.

வஞ்சம்


4 comments:

  1. தொடர்கிறேன்!

    ReplyDelete
  2. மிக்க நன்றி விக்கி அண்ணா... பதிவுலகில் பட்டயை கிளப்பும் தாங்கள் என் பதிவை தொடர்வது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது... மீண்டும் நன்றி அண்ணா...

    ReplyDelete
  3. சிறப்பு நானும் தொடர்கிறேன்

    ReplyDelete
  4. மிக்க நன்றி மாலதி அக்கா...

    ReplyDelete