Thursday 6 October 2011

அகதி முகாம் நிலை


தமிழ்நாட்டில் உள்ள ஈழ அகதி முகாம் ஒன்றுக்குள் வெளியாட்கள் நுழைவது என்பது மிகக் கொடுமையானது.
அதையும் மீறிய நுழைவு என்பது பல கட்ட பலத்த பாதுகாப்புக்கும் மனதை புண்படுத்தும் விசாரணைகளுக்கும் உட்பட்டது.
கட்டுநாயக்காவில் நுழைந்த கரும்புலி வீரனின் மனநிலைக்கு ஒப்பானது.
இவற்றையும் தாண்டி முகாம்களுக்குள் நுழைந்தால் முகாமில் வசிக்கும் ஈழத்தமிழர்களிடம் நான்கு கேள்வி கேட்க பழக முடியாது... புகைப்படம் எடுக்க முடியாது....
இப்படியாக நவீனத்துவமான வதை முகாம்கள் தான் தமிழகத்திலுள்ள ஈழத்தமிழர் அகதி முகாம்கள்.
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள உச்சம்பட்டி ஈழத்தமிழர்கள் அகதி முகாம் ஒன்றுக்கு தமிழ் சி.என்.என் இனது விசேட புலனாய்வுச் செய்திப் பிரிவினர் சென்றனர்.

மதுரையில் உள்ள மூன்று முகாம்களிலேயே பெரிய முகாமாக இது காணப்படுகின்றது. இங்கு 600 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் அகதிகளாக உள்ளனர். இவர்கள் அனைவரும் 1990 ஆம் ஆண்டே தமிழகத்துக்கு அகதியாக வந்தவர்கள்...
ஆனால் சாக்கடை ஓடும் இடத்துக்கு அருகில் உள்ள சின்னம் சிறு ஓலைக் குடிசைகளில் தான் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.
முகாம் வாசலில் தமிழக விசேட பொலிஸ் பிரிவான கியூ பிரிவு பொலிசாரின் அலுவலகம் காணப்படுகின்றது.
அதற்கு வலது பக்கமாக கொஞ்சம் தள்ளி ஈழத் தமிழ் அகதி ஒருவரினால் நடத்தப்படும் தேநீர், சிற்றுண்டிக் கடை ஒன்றும் காணப்படுகின்றது.
நாங்கள் மெதுவாக தேநீர் குடிக்கச் செல்வது போல தேநீர் கடைக்குச் சென்றோம்.. அங்கு வயதான ஐயா ஒருவர் இருந்தார்.. நாங்கள் அவரிடம் பேச்சுக் கொடுத்தோம்...
ஐயா இலங்கையில எந்த இடம்? "நான் தம்பி வவுனியா... 90 இல அகதியாக தமிழ்நாட்டுக்கு வந்தனாங்கள்... இப்ப வரை இங்க தான் இருக்கிறோம்... இலங்கையில இப்ப சமாதானம் என்று சொல்லுறாங்கள்... ஆனால் எங்களுக்கு அங்க போக விருப்பம் இல்லை... ஏதோ கிறிஸ் மனிதன் என்றும் பயமுறுத்துறாங்கள்.. என்று தனது ஆதங்கத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.. "
அடுத்ததாக ஐயாவிடம் அம்மா புதுசா அறிவிச்ச திட்டங்கள் உதவிகள் கிடைச்சுதோ? முகாமில எப்படி வசதிகள் இருக்கு..?? என்று கேட்டோம்..
"இல்லை தம்பி... ஈழத் தமிழர்களுக்கு உதவிய கடவுள் தங்கத் தாரகை எங்கள் அம்மா என்று எல்லாம் பேப்பரில பக்கம் பக்கமாக விளம்பரங்கள் வந்து நான்கு மாசத்துக்கு மேல ஆகுது... ஆனா கூடுதலாக எந்த உதவிகளும் கிடைக்கல... முகாமில எங்களுக்கு நாத்தத்துக்க இருந்து பழகிப் போச்சு... இப்பவும் கொட்டில் வீட்டில தான் வாழுறோம்...முகாம் பொறுப்பதிகாரி வரும் நாட்களில் முகாமிலிருந்து யாரும் வெளியில் செல்ல முடியாது... "
தம்பி இப்ப கொஞ்சத்தில வந்திடுவாங்கள் கியூ பிராஞ்... அவங்கள் உங்களை யார் என்று கேட்டு எங்களை நோண்டி எடுப்பார்கள்... அதுக்கு முதலில வெளிக்கிடுங்கோ என்று அவசரம் காட்டினார் அந்த பெரியவர்..
அவரின் கோரிக்கையை ஏற்று அங்கு இன்னும் சிறிது நேரம் நின்றால் எங்களுக்கும் ஆப்பு தான் என்ற நிலையில் திரும்பினோம்...
முகாமில் ஒருவரைச் சந்திக்கச் சென்றால் கியூ பிராஞ்சுக்கு அவரின் பூர்வீகம், தொழில், விசா, பாஸ்போர்ட் போன்ற தனிப்பட்ட விடயங்களை துளாவும் அருகதை இல்லையே.... தனி மனித சுதந்திரத்தை மீறிய செயலாகவே இது பார்க்கப்படுகின்றது.
சில பொலிஸ்காரர்கள் பிச்சை எடுக்கும் பெருமாளிடம் பிடுங்கித் தின்னும் அனுமார் கணக்காக அவர்களிடம் உள்ள காசையும் பிடுங்குகிறார்கள்..
உண்மையில் திறந்த வெளிச் சிறைச்சாலையாக தான் தமிழக அகதி முகாம்கள் உள்ளன என்பது நிதர்சனமானது...

அங்கு வெளியாட்கள் பெரிதாக போக முடியாது.. அதுவும் பத்திரிகை, மீடியாக்களைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக அனுமதி இல்லை... அங்கு புகைப்படங்கள் எடுக்க முடியாது... இப்படியாக கடுமையான கட்டுப்பாடுகளுடன் தனித் தீவாக முகாம்கள் மாற்றப்படுள்ளன.
அங்குள்ள சிறுவர்களின் எதிர்காலம் தான் உண்மையில் கவலை கொள்ள வைக்கின்றது.
நம்மூர்களில் ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் தரவை வெளியில் உள்ள சுடுகாடுகளைப் போன்று காணப்படுகின்றன தமிழக முகாம்கள்.. முகாம்களைச் சுற்றி காடு போல் பற்றைகள் வளர்ந்து காணப்படுகின்றன....
முகாம்களுக்கு இடையில் சிற்றாறு போல குறுக்கு மறுக்காக கழிவு நீர் பாய்ந்து செல்கின்றது.. சில இடங்களில் தேங்கியும் உள்ளது...
இவை நாளடைவில் பாரிய சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை...
இவ்வாறு பல்வேறு உளவியல், உடலியல் தாக்கங்களுக்கு மக்கள் உள்ளாகின்றனர்.
மெக்கானிக் வேலையிலிருந்து இந்திய எஜமானார்களின் கக்கூசு கழுவுகிற வேலைகள் வரை கஸ்ரமான பொருளாதார நிலை காரணமாக முகாமில் வாழும் ஈழத்தமிழ் மக்கள் செய்து வருகின்றார்கள்.
இந்தியாவில் இருந்து கொண்டு தமிழீழம் கிடைக்க அரும்பாடுபட்டு வரும் வெத்து வேட்டுக் கட்சிகள் கொஞ்சம் உங்களை நம்பி வந்தவர்களின் கொட்டில்களையும் அவர்களின் சீரழிந்த வாழ்க்கையையும் போய் பார்க்கலாமே...கடைசி அவர்களுக்காவது உதவலாமே..
தமிழக முகாம்களோடு ஒப்பிடுகையில் வன்னி முகாம்கள் எவ்வளவோ மேல் எனத் தோன்றுகிறது...
-தமிழ் சி.என்.என் இன் விசேட புலனாய்வுச் செய்திப் பிரிவு-
                                                                 நன்றி-தமிழ் சி.என்.என்.காம்

No comments:

Post a Comment