Wednesday 26 October 2011

ஏழாம் அறிவு- திறம்பட ஒரு பதிவு


ஏழாம் அறிவு- இன்று தீபாவளிக்கு மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளிவந்திருக்கும் திரைப்படம் பற்றி ஒரு ரசிகனாக என் விமர்சனத்தை உங்கள் பார்வைக்குத் தருகின்றேன். படத்திற்கு செல்லும் முன்னே சில விமர்சகர்களின் எதிர்மறை விமர்சனங்களை பார்த்துவிட்டு ஒரு நம்பிக்கை இல்லாத நிலையில் தான் படம் பார்க்கச் சென்றோம். முதல் 20 நிமிடங்கள் வந்த போதிதர்மன் பற்றிய பதிவுகள் மிக ஆழமாக செதுக்கப்பட்டிருப்பதற்கு பாராட்டுக்கள். அந்த பிரமிப்பு விலகும் முன்னர் வரும் சூர்யா-ஸ்ருதி இடையிலான காதல் காட்சிகள் ஈர்க்கவில்லை. போதிதர்மனே இன்னும் கொஞ்சம் வந்திருந்தால் நன்றாக இருக்குமோ என்று தோன்றியது. ஸ்ருதியின் நடிப்பு அளவாக, கச்சிதமாக இருந்தது. ஆராய்ச்சி, ஆபரேஷன் ரெட் என மற்றவர்கள் பேசும் போது ஒன்றுமே புரியாமல் விழித்தோம் ஆனால் இரண்டாம் பகுதியில் போதிதர்மனையும் இணைத்து தெளிவான விளக்கம் தந்து அசத்தினார் முருகதாஸ். முதல் பாதியில் நொண்டியடிக்கும் திரைக்கதையை இரண்டாம் பகுதி எங்கேயோ கொண்டு போய் விடுகிறது. ஆபரேஷன் ரெட் பற்றி தெரிந்தவுடன் சூடு பிடிக்கின்றது இறுதி வரை. சண்டைக் காட்சிகளில் கடின உழைப்பு தெரிகின்றது. சண்டைக் குழுவிற்கு மனமார்ந்த பாராட்டுக்கள். வசனங்கள் ஒரு சில இடங்களில் மட்டும் ஈர்க்கின்றன. சூழ்நிலைக்கு கட்சிதமாக பொருந்தக் கூடிய பாடலாக “இன்னும் என்ன தோழா” பாடல் மட்டுமே அமைந்தது.மற்றவை 1/2 மணி நேர நிரப்பல் மட்டுமே. தமிழனாக முருகதாசின் ஆதங்கம் பல இடங்களில் தெளிவாக வெளிப்படுகிறது. படத்திற்கு பின்னடைவுகள் முதல் பாதியின் சுவாரசியமின்மை, துருத்திக் கொண்டு நிற்கும் பாடல்கள், அழுத்தமில்லாத வசனங்கள், வில்லனின் ஒரே முக பாவம். சிறப்பு அம்சங்கள்- போதிதர்மன், சண்டைக் காட்சிகள், வில்லனாக வரும் டாங்க் லீ, இரண்டாம் பகுதி. நிச்சயமாய் பார்க்க வேண்டிய படம். இந்த படத்தைப் பார்த்த பிறகு ஒவ்வொரு தமிழனுக்கும் ஒரு திமிர் வரும் என முருகதாஸ் சொன்னதை செய்து காட்டிவிட்டார். தமிழ் சினிமாவின் மற்றொரு மைல்கல் முருகதாஸிடமிருந்து மறுபடியும்.

No comments:

Post a Comment