Saturday, 15 October 2011

பார்வை-ஓர் விவாதம்-பாகம் 2கடந்த பாகத்தில் இளைஞர்கள் யோசிக்காமல் செயல்பட்ட இரு விடயங்களைப் பற்றி பேசினோம்.வாதத்தை தொடர்வோம்…
அண்ணாவைப் போன்றே பல போராட்டங்களை வரலாறு கண்டிருக்கின்றது.சில வெற்றிகளும், பல தோல்விகளும் உண்டு. வெற்றிக்கும் தோல்விக்கும் வித்தியாசம் என்னவெனில் வெற்றியடைந்த போராட்டங்களில் மக்களுக்கு தனக்கு என்ன தேவை? அதை எவ்வாறு செயல் படுத்துவது? அதன் சாதக பாதகங்கள் என்ன? என்பதை அறிந்திருந்தனர். அறிந்திருந்தனர் என்பதை விட அவர்கள் சம்பந்தப்பட்ட தலைவர்களால் படிப்பிக்கப்பட்டனர். தெருவுக்குத் தெரு மக்களிடம் சென்று அவர்கள் நிலையை விளக்கினர், அதற்கு மாற்றை முன் வைத்தனர், அதை மக்கள் சிந்தித்தனர்.அதற்கு உதாரணங்கள் தான் தந்தை பெரியார், லெனின், மா வோ ஆகியோர். அவர்கள் காலத்திற்குப் பிறகு மக்களிடம் எடுத்துச் சொல்ல மறந்ததால் அவ்வறிஞர்களின் கனவுகள் எல்லாம் பாழாயின. (எ.டு) முகநூலில் கூட சாதி சங்கங்கள் உள்ளன. தற்போதைய நிலவரம் என்ன? தலைவர்கள் மக்களிடம் பேசுவது எப்படி உள்ளது? “நான் சொல்வதைக் கேட்டால் நீ என் கட்சி இல்லையேல் எதிர்க் கட்சி” என்ற ரீதியில் தான் உள்ளது.களத்தில் இருந்தோரில் ஒரு சிலருக்கு மட்டுமே அண்ணாவின் போராட்டத்தின் உள்ளும் புறமும் தெரியும். மீதி உள்ள மக்களில் ஊழலை ஒழிப்போம் என்றவுடன் ஏதோ ஒரு மயக்கத்தில் என்னவென்றே தெரியாமல் ஆட்டு மந்தை போல் இணைந்தனர், சிலர் “லோக்பால் வந்தால் 1000000,00,00,000 கோடி கறுப்பு பணம் மீட்கப்படும்.அப்படி மீட்கப்பட்டால் 30 வருடத்திற்கு வரி இல்லை,எழுவது முதல் உறங்கும் வரை அனைத்தும் இலவசமாக கிடைக்கும்” என்பது போன்ற தேர்தல் வாக்குறுதிகளுக்கு இணையான குருஞ்செய்திகளில் மனம் பறிகொடுத்தனர்.மீதி சில பேர் அண்ணாவின் பரபரப்பான அரசியல் பிரவேசத்தில் தன்னை அவர் அனுதாபி ஆக்கிக் கொண்டு தனக்கான ஒரு குறுகிய கால அடையாளத்தை தேடிக் கொண்டனர். Anna Hazare became a trend rather then a leader among youngsters. இங்கே ரத்தன் டாட்டாவின் ஐ.ஐ.டி மாணவர்களுடனான கலந்துரையாடலையும் கருத்தில் கொள்ள வேண்டும்.”என்னைப் போன்ற வியாபாரிகள் அரசியலுக்கு வர முடியாது.முன்னெல்லாம் லைசென்சுக்கு மட்டும் தான் லஞ்சம் தர வேண்டி இருந்தது ஆனால் இப்பொழுது ஒவ்வொரு படிக்கும் லஞ்சம் தர வேண்டியுள்ளது.அதனால் உங்களைப் போன்ற இளைஞர்கள் அண்ணா ஹசாரேவுக்கு ஆதரவளித்தால் எவ்வளவு நிதியுதவி வேண்டுமானாலும் செய்கிறோம்” என சொன்னார். லஞ்சம் குறைவாக இருந்திருந்தால் ரத்தன் டாட்டாவின் ஆதரவு இந்த போராட்டத்திற்கு இருந்திருக்குமா என்பது சந்தேகமே. ஆனால் அண்ணா ஹசாரே போன்ற யாரையாவது வைத்துக் கொண்டு அவருக்கு கேள்வி கேட்காமல் தலையாட்டும் இளைஞர் கூட்டத்தையும் வைத்துக் கொண்டு லஞ்சத்தின் அளவுகோலை அவருக்குத் தகுந்தார் போல் குறைத்துக் கொள்ள முடியும். ஏனெனில் மக்கள் அண்ணா ஹசாரேவை போராட்டத்திற்கு பின்னான காலங்களில் எளிதில் மறந்து விடுவர்.அவர் செய்யும் தவறுகளையும் சேர்த்து. அண்ணா அவர்கள் டாட்டாவின் ஆதரவுடன் தான் செயல்படுகிறார் என நான் சொல்லவில்லை.அது உண்மையா எனவும் தெரியவில்லை. அவ்வாறு அண்ணா செயல்பட்டார் என்று வைத்துக் கொள்வோம் அப்பொழுது இந்த ஆட்டுமந்தை என்ன செய்யும்? டாட்டாவிற்கு தேவையான நேரத்தில் போராட்டத்தை நிறுத்திக் கொண்டால்? மக்களில் ஒருவரை தெளிவான சிந்தனையுடன் முன்னிறுத்த முடியுமா? அப்படி நிறுத்தினால் மக்கள் சிதறிவிடுவார்கள். ஏனெனில் புதிதாய் வந்தவர் பற்றி யாருக்கும் நம்பிக்கை இருக்காது ஒரு சிலரைத் தவிர. அந்த ஒரு சிலர் தன்னுடைய தேவை என்ன அதை அடைவது எவ்விதம் என புரிதலுடன் உள்ளவராய் இருப்பர். அந்த புரிதலைத் தான் அரசியல் பார்வை என்கிறோம். அனைத்து மக்களும் புரிதலுடன் இணைந்தால் தான் தலைவரைப் பற்றி கவலைப்படாமல் தங்கள் இலக்கை நோக்கி பயணிப்பர். எத்தனை தலைவர்கள் மாறினாலும் தங்கள் போராட்டத்தில் கண்ணாக இருப்பர். அப்படி இருந்திருந்தால் இது அண்ணா ஹசாரேவின் போராட்டமாக இருந்திருக்காது மக்கள் போராட்டமாக மாறியிருக்கும்.அதன் வலு லிபியாவைப் போல பல மடங்கு இருந்திருக்கும்.
அத்தகைய போராட்டங்கள் தான் பெரியாரின் சாதி ஒழிப்பும், லெனின் மற்றும் மா வோ வின் மக்கள் புரட்சியும், ஈழ மக்களின் விடுதலைப் போரும்.தங்கள் தலைவர் மறைந்ததாய் சொல்லப்பட்ட பின்பும் அவர்கள் தங்கள் இலக்கிலிருந்து பின்வாங்கவில்லை அது தான் மக்கள் போராட்டம். இது பிரபகரனின் போராட்டமாக மட்டும் இருந்திருந்தால் 2 வருடங்களுக்கு முன்பே தமிழ் ஈழம் என்பது சரித்திரத்தின் ஒரு பகுதியாக முடிந்து போயிருக்கும்.
நாம் கேட்பதெல்லாம் இது தான் உங்கள் கருத்துக்கள் எங்கேயும் எப்போதும் வரவேற்கப்படுகின்றன ஆனால் பிரச்சனைகளின் ஆழமோ, வீரியமோ தெரியாமல் மேம்போக்காக எதிலும் இறங்க வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றோம்.நிச்சயம் தேவை ஆழமான அரசியல் பார்வை.
                                            -மரு.மு.சுந்தர பாண்டியன்.

No comments:

Post a Comment