Saturday 8 October 2011

வானவேடிக்கை

வந்துட்டு….
தினமும் வர்ற
வானவேடிக்கை…
தம்பிய கூட்டி வரணும்…
அவன் கை தட்டி கை தட்டி
பார்ப்பான்…

இன்னும் சில பிள்ளைகள்
ஒன்றாய்க் கண்டனர்…
தீப்பிழம்பாய் வெடிகள்
குதித்து மகிழ்ந்தன பிஞ்சுகள்…

வெடிகள் எங்கிருந்து வந்ததென
பெரும் குழப்பம்..
தினமும் வெடிக்கிறதே
எங்கே திருவிழா?
புது வருசம் போய்
5 மாசம் ஆச்சே?
யாரோ இறந்தததுக்கு
வெக்கற வெடியா?
இந்த பெருங்குழப்பம் தீருமுன்
அடுத்த குழப்பம்…-வெடின்னா
கீழ வெச்சு கொளுத்தி
மேல போய் வெடிக்கணும்…-இது ஏன்
மேல இருந்து கீழ வந்து வெடிக்குது?

அடுத்த கருத்துக் களம் ஆரம்பம்….
பாட்டி கதை சொன்ன மாதிரி
தேவதை எல்லாம் இப்படித்தான்
கீழ இறங்கி வருவாங்களாம்
அவ்வறிஞர்களுக்கு திருப்தி இல்லை…
சாமிக்கு இப்பதான்
தீபாவளியாம்
3 வயது மாணிக்கம் சொன்னதை
ஒருமனதாய் ஏற்றனர்…

அடுத்து வந்த
ஒவ்வொரு வெடியையும்
பயபக்தியுடன்
கன்னத்தில் போட்டுக் கொண்டு
கண்டனர்….

தங்களை நோக்கி ஓர் வெடி
வந்தது…
சாமி தங்களை பார்த்து விட்டதாய்
கைதட்டி ஆராவரித்து
வரவேற்றனர்…

நெருக்கமாய் வந்து
நெருப்பாய் வெடித்தது
……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


நீண்ட மெளனம்…
வெடித்து முடித்த புகைக்கு
நடுவே வானிலிருந்து
வேடிக்கை பார்த்த ஐ.நா வின்
செயற்கைக்கோளில் ஆவணப் படமாய்
பதிந்தனர்.

                                        -மரு.மு.சுந்தர பாண்டியன்



No comments:

Post a Comment