Sunday 30 October 2011

பறிபோகும் உரிமைகள்-மீண்டும் ஓர் சதி

NEET - National Eligibility cum Entrance Test. மாநில மொழிகளை அழிக்க மத்திய அரசு ஏவி விட்டிருக்கும் மற்றுமொரு சாத்தான். 12 ம் வகுப்பு முடிந்தவுடன் பெரும் மதிப்பெண்கள் எடுத்த பல மாணவர்கள் ஆசைப்படும் முதல் விடயம் மருத்துவராக வேண்டும் என்பது தான். இந்த ஆசையும், வேகமும் ஆங்கில வழியில் படித்தவருக்கும், தமிழ் வழியில் படித்தவருக்கும் வேறு எந்த மொழி வழி படித்தவருக்கும் உண்டு. அப்படி ஆசைப்படுவதில் தவறு ஏதுமில்லை என அனைவரும் அறிவோம். இனி அப்படி மருத்துவராய் ஆவதற்கு அயல் மொழியில் தான் படித்திருக்க வேண்டும் என்பது அடிப்படைத் தகுதி ஆனால் அதை ஏற்றுக்கொள்வது தற்கொலைக்குச் சமமாய் ஆகும். NEET என்பது இந்தியா எங்கும் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கும் மாணவர்களை சேர்க்க இந்திய மருத்துவக் கவுன்சில் நடத்த இருக்கும் நுழைவுத் தேர்வு. இந்தியா முழுமைக்கும் ஒரே தேர்வு, அதன் மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் அனுமதி. இந்தத் தேர்வு 2012 ம் ஆண்டு மே மாதம் முதல் அமலுக்கு வருகின்றது. மேம்போக்காக நல்ல விசயமாகத் தெரியலாம் ஆனால் இதில் உள்ள களவானித் தனங்களைப் பார்த்தால் நெஞ்சு எரிகின்றது.  

இந்தியாவெங்கும் பல மாநிலங்களில் பயிற்று மொழி எனப்படும் MEDIUM OF INSTRUCTION பலவாக உள்ளது. பணக்கார மற்றும் உயர்நடுத்தர வகுப்பு மாணவர்கள் பயிலும் மெட்ரிக் பள்ளிகளில் ஆங்கிலம், மத்திய அரசின் பாடத்திட்ட பள்ளிகளில் ஆங்கிலம் அல்லது ஹிந்தி, கீழ் நடுத்தர மற்றும் ஏழை பிள்ளைகள் பயிலும் மாநில மொழியை பயிற்று மொழியாய் கொண்ட பள்ளிகள். ஆனால் இந்த NEET நுழைவுத் தேர்வு நடத்தப் படுவது ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே. அதாவது இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் தமிழ் வழியில் படித்திருந்தால் அவர்களுக்கு மருத்துவக் கல்வி என்பது எட்டாக் கனவு. இதே நிலை தான் மற்ற மாநில மொழியில் பயின்ற மாணவர்களுக்கும். கோவா, மகாராட்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களின் எதிர்ப்பை “its not practically possible”  என்ற ஒற்றை வரியில் ஒதுக்கித் தள்ளி விட்டது மருத்துவக் கவுன்சில். கேள்வித் தாள்களை தமிழில் மொழி மாற்றம் செய்வது நடைமுறையில் சாத்தியமில்லை என்கிற முட்டாள்த்தனமான கவுன்சிலை என்ன செய்யலாம்? 

நாடு முழுமைக்கும் ஒரே தேர்வு என்றால் அலோபதியின் தார்மீக மொழியான ஆங்கிலம் மட்டும் இல்லாமல் அதற்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத ஹிந்தி எதற்காக? நீ டாக்டர் ஆகணும்னா ஒன்னா ஹிந்தி படி இல்ல இங்கிலீஷ் படி உன் தாய் மொழிய மறந்துடு என செருப்பால் அடித்தாற் போல சொல்கிறது மத்திய அரசு. இதன் அடுத்த கட்டங்கள் என்ன தெரியுமா? படிப்படியாக மாநில மொழிவழிக் கல்வியை ஒழித்துவிட்டு ஹிந்தி அல்லது ஆங்கிலம் மட்டுமே இருக்கும். அடுத்து பிள்ளைகள் வீட்டில் தமிழை மறக்கும். அவர்கள் அடுத்த தலைமுறையாய் உருவெடுக்கும் போது தமிழும் மறையும். மாநில மொழி உணர்வை மறக்கடித்து நிரந்தர அடிமைகளாக ஆகப் போகின்றோம். விரைவில் பொறியியலுக்கும் இது நடக்கலாம்.தமிழ் புத்தகங்களை பரணில் போடுங்கள். சமச்சீர் கல்வியை குப்பையில் போடுங்கள்.தமிழக அரசு இந்த திட்டத்திற்கு தலையாட்டினால் “ஏக் காவ் மே ஏக் கிஸான் ரஹ தாத்தா”
                                                   -மரு.மு.சுந்தர பாண்டியன்

No comments:

Post a Comment