Saturday, 29 October 2011

சொட்டுது சொட்டுது...



சொட்டுது சொட்டுது துளித்துளியாய்...
விண்ணிலிருந்து ஓர் ஆரவாரம்
வெந்து போன விழிகளில் ஓர் பரவசம்
வெகுகாலம் விடுதி சென்ற மகன்
வீடு வரக்கண்ட அன்னையைப் போல...

இன்னும் இருதினத்தில்
நன்னீர் வரும்
குடங்கள் தரித்து போருக்குத் தயார்
பெண்மணிகள்...

பொங்கலுக்கு பேத்திக்கு கொலுசு
மாபெரும் திட்டத்துடன்
விதைநெல் வாங்க ஓட்டைப் பேருந்தில்
நிரந்தரக் கடனாளி-விவசாயி

வானத்தை முறைத்தபடி
திண்ணையில் பூக்கோலம்...
வாங்கிய பட்டாசுகளை வெடிக்க முடியா பிஞ்சுகள்...

ஒரு 3 மணி நேரம் கழிச்சு பேயக் கூடாதா?
மழை காரணமாய் இந்தியா தோல்வியடையுமோ?
என வரலாற்றுக் கவலையில் மட்டைப் பற்றாளன்
மன்னிக்கவும் தேசப்பற்றாளன்...

புயல் வந்ததற்கு ஆண்டவனுக்கு நன்றி சொன்னாள்
மீனவனின் மனைவி...
இன்னும் ஒரு சில நாட்கள் அவன்
உயிரோடிருப்பது உத்திரவாதம்....

இன்னும் சில கவலைகள் உண்டு
30 மைல் தொலைவில்...



"இஞ்ச மழைக்கு என்ட பிள்ளை உயிர் தப்ப வேணும்..."
ஓட்டைத் தார்ப்பாய் வீட்டில்
ஒற்றைப் பிள்ளையுடன் விதவை...

"இஞ்ச மழைக்கு எண்ட மண்ணு 1000 மூட்டை நெல்லு தருமே"
தன் நிலத்தில் சிங்களவன் கட்டிய முகாமில்
அகதியாய் விவசாயி...

"மழைக்கு தண்ணி போட்டுக்கொண்டு ஆர்மிக்காரனுக
கும்பலா வந்திடக் கூடாது..."
நாய்களால் குதறப்பட்ட பொம்மை போல்
13 வயது சிறுமி...

மழை ஒன்றுதான்
இனமும் ஒன்றுதான்
கவலைகள் வேறானதேன்?
நம்மைப் போல் அவர்களுக்கு புத்தியிருக்கவில்லை
எங்களைப் பாருங்கள்
அடிமையாய் இருப்பதே தெரியாமல்
நாங்கள் அடிமையாய் வாழவில்லையா?
என்ன கெட்டுவிட்டோம்?
எங்கள் சங்கிலிகள் தங்கத்தால் ஆனாது
எங்கள் தட்டுகள் வைரம் பதித்தவை
கத்தாமல் வாலாட்டினால் முதலாளி எலும்பை வீசுவார்...
அதிகமாய் கத்தினால்
இறையாண்மை என்னும் தடி கொண்டு அடிப்பார்...
முதலாளிகளோடு விளையாடுவது அலாதியானது...
இன்னும் கொஞ்சம் எலும்பு வீசினால்
மொழியாவது? வரலாறாவது?
அப்பன் பேரைக் கூட மறக்கத் தயார் நாங்கள்...




2 comments:

  1. :-) Nandraaga ullathu.Oru edathil,kavignar sollum NANNEER mattum puriyavillai. Ozone ottaiyil varum mazhaiyae suththam illayaam, ithil 2naal kazhiththu, nanneer corporatn aala nanraagavae irukkumaa? :-) :-) aduththu, naaigalaal kutharappatta bommai pol nu ezhuthinathukku (idaththukku yetha uvamai-siruminu solrappa bommaiya payanpaduththunathu arumai) naaigalaal kutharappatta bommaichchirumi endrae ezhuthiyirunthaal innum pala arththangalaiyum solirukkum :-)

    ReplyDelete
  2. thangalin karuthukkaluku mikka nandri...

    ReplyDelete