Monday, 10 October 2011

தேவனுக்கே வரம்......???



சொர்க்கலோகம்...
புராணங்கள்
தரிசனங்கள்
துதிகள்
தவங்கள்
போர்கள்
பூசைகள்
எதிலும் மனம் செல்லவில்லை
தேவரோடு தேவராய்
களி நடனம் காணவும் விரும்பவில்லை...

மற்ற தேவரிடமிருந்து பிரிந்தேன்
பூமியை நோக்கி ஒடினேன்
அடர்த்தியான மேகங்களிடையே
குதித்தோடி களித்தேன் 
தனியாய்...

உள்ளம் சருகாய் லேசாக-மனம் மோகத்தில் 
ஒரு கணம் சரிந்தேன் ஓர் மேகத்தில்...

திடீரென ஓர் மணம்
பழகிய மணமென தவித்தது மனம்...

கீழே பார்த்தால்
மேகத்தை விட தூய்மையாய் சிரித்தாய்...

நிச்சயமாய் எங்கள் சொர்க்கத்துக்காரி அல்லவே
அங்கே இப்பேரழகைக் கண்டதும் இல்லயே...
மானிடப் பெண்ணிடம் மையல் கொண்டேன்...

மேகத்திலிருந்து உடனே குதித்து
உனை நோக்கி வந்தேன்
இரண்டொரு மேகங்களுக்கு கீழே
ஒரு குறுமுனி தவம் செய்யக் கண்டேன்…
அவர் உன்னைக் காணாமல்
கண் மூடி அமர்ந்ததால்
உன்னை முதலில் காணும் பேறு
எனக்கு வாய்த்தது…
குறுமுனியை வென்றதோர் களிப்புடன்
உன் முன் தோன்றினேன்...
ஒளி கொண்ட உடலும்
சிரசிற்குப் பின் ஒளிவட்டமும்,
முதுகில் சிறகும் கொண்ட தேவனாய் 
வந்து காதல் சொன்னதும்...
பயப்படுவாய் என நினைத்தேன்...
நடக்கவில்லை...
ஆச்சர்யப்படுவாய் என ஊகித்தேன்...
இல்லை...
குறைந்தபட்சம் வெட்கப்படுவாய் என எதிர்நோக்கினேன்...
ம்ஹூம்...
தோழிகளிடம் மட்டும் 
பெருமிதமாய் ஒரு பார்வை சிதறிவிட்டு
உன் வழியே சென்றாய்...
தேவனென,அழகனென 
சொர்க்கத்தில் என்னைப் போற்றிய வாய்களெல்லாம்
பஸ்பமாய் போகட்டும் என சாபமிட்டேன்...



அன்றிரவே மீண்டும் வந்தேன்
சிறகுகளை வெட்டி விட்டு மானிடனாய் வா 
என்றாய்...
பறந்துவிடுவேனோ என்ற பயம்
கட்டளையாய் வந்தது கண்டு வியப்பேதும் கொள்ளவில்லை...

நேரே சொர்க்கம் சென்றேன்...
தேவ பதவியினின்று 
விடுதலை கோரும் வரம் கேட்டேன்...
பரமாத்மா பெரிதாய் அலட்டாமல் வரமளித்தார்
ஓர் எச்சரிக்கையோடு...

மகிழ்ச்சியாய் உன் முன் வந்தேன்
சொர்க்கத்திலிருந்து பொடிநடையாக...

நாளும் பொழுதும் கண் கொட்டாமல் உன்னை 
பத்திரமாய் பார்த்துக் கொள்ள சொன்னாய்...
செய்தேன்...
பார்த்துக் கொண்டே இருப்பதால் 
பொறுப்பில்லாதவன் என்றாய்...
திகைத்தேன்...
வேலையோடு வந்தால்தான்
விவாகம் முடியுமென்றாய்...
அந்த வேலைக்கென்று கவுரவமும் வேண்டுமென்றாய்...
ஊர் முழுக்க தேடிய பின் தான் தெரிந்தது
பணத்தின் மறுபெயர் தான் கவுரவம் என்று...
முழு மூச்சாய் பணியில் இருந்தேன்...
வேலையில் சேர்ந்ததும் உனை 
மறந்து விட்டதாய் சொன்னாய்...
தவித்தேன்...
காதல் குன்றிவிட்டதாய் அழுதாய்
துடித்தேன்...
பணியை விட்டொழித்துவா காதலிப்போம்என்றதும்
முட்டாள் என வசை வீசினாய்...
வெடித்தேன்...
உன்னுடன் இருக்கையில்
புறத்திணையில் குறை சொன்னாய்...
ஊருடன் இருக்கையில்
அகத்திணையில் குறை சொன்னாய்…
என்ன செய்வதென்றே தெரியாது குழம்பினேன்…
இனி என்ன செய்து உன்னை
மகிழ்விக்கவென சிந்திக்கையில்…
ஒரே கேள்வி கேட்டாய்
எனக்காக நீ என்ன செய்தாய் என்று…



மானிடனாய் மாற வரம் கேட்கையிலே
பரமாத்மா எச்சரித்தது நினைவுக்கு வந்தது
“நீ கோருவது வரமல்ல”…

குறுமுனியை நானே எழுப்பி விட்டிருந்தால்
நலமென நினைத்தேன்…
சாபம் வாங்கி கல்லாய் மண்ணாய் போயிருக்கலாம்…







4 comments: