Friday, 7 October 2011

மாயை இல்லாத இராமாயணம்

இராமாயணம் சொல்லும் சேதிகள் ஏராளம். ஒழுக்கம், கற்பு, நட்பு, அன்பு என எக்கச்சக்கமான வாழ்க்கைப் பாடங்கள். இராமாயணம் வெறும் கற்பனை மட்டும் அல்ல உண்மையில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு என்றொரு கூற்றும் உண்டு. இராமனுக்காக கோவில் கட்ட மற்ற கோவில்களை இடிக்கும் அளவிற்கு இராம பக்தி இந்திய தேசத்தில் விரவி உள்ளது. ஏன் இராமன் மீது இவ்வளவு பக்தி? இராமன் நல்லவன், ஒழுக்கமானவன், கடவுளின் அவதாரமாக கருதப்படுபவன். தந்தை சொல் தட்டாத மகன், மனைவியை கண் போல் காத்தவன், நட்புக்கு நியாயம் செய்தவன், சகோதரனைக் கைவிடாத அண்ணன். கடவுளுக்கான அனைத்து பண்புகளும் உள்ளவன் தான்.மறுக்கவில்லை. ஆனால் உலகெங்கிலும் இராமன் கொண்டாடப்படும் பொழுது தமிழ் மன்னனாய் இருந்ததற்காக, போரில் தோற்றதற்காக இராவணன் இழிவுபடுத்தப்படுவது தான் வேதனையாக உள்ளது. புரியவில்லையா? இராமாயணத்தில் பிண்ணப்பட்டிருக்கும் மாயைகளை விலக்கிப் பார்த்தால் தான் உண்மை புரியும்.
முதலில் இராமனும் இராவணனும் போரிட்டது மாயாஜாலங்கள் நிறைந்த போர் அல்ல.இரு மன்னர்களிடையே நடந்த ஒரு சாதாரண போர்.பத்து தலைகளோ, மந்திரங்களோ இல்லை வாளும்,வேலும் கொண்டு போரிட்ட ஒரு போர். தந்தையால் வனவாசத்திற்கு அனுப்பப்பட்ட இராமன் தெற்கே வந்தான். இலக்குமணனைக் கண்டு காதல் வயப்பட்ட சூர்ப்பனகை தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்கிறாள். இது எந்த வகையில் தவறு எனப் புரியவில்லை ஆணவம் கொண்ட இலக்குமணன் பெண் என்றும் பாராமல் அவள் மூக்கை அறுக்கின்றான்.(ஒழுக்கத்தில் சிறந்த மனிதர்கள் பெண்ணை அங்ககீணப் படுத்துவது எப்படி கடவுள் தன்மையாக இருக்க முடியும்?). தன் தங்கையை அவமானப்படுத்தியது பொறுக்காமல் இராமன் வீட்டுப் பெண்ணை(சீதை) சிறையெடுத்து பழி வாங்குகிறான் இராவணன். வாணரங்களின் (தமிழ் பகுதிகளில் வாழ்ந்த குரங்குகளை வணங்கிய மலைவாழ் மக்களைத் தான் வாணரங்களாக வர்ணிக்கின்றது இராமாயணம் ) உதவியுடன் போரிடும் இராமன் போரில் வெல்கிறான்.
இது தான் உண்மையில் நடந்த இராமாயணம் ஆனால் இதில் இராமனை உயர்திக் காட்ட இராவணனை இழிவாய் சித்தரித்தது தான் வரலாற்றின் வடு. நன்றாய் சிந்தித்தீர்களானால் ஆரியர்கள் எழுதிய காப்பியங்களில் எல்லாம் தமிழனை எப்படி எல்லாம் கேவலப்படுத்த முடியுமோ அப்படி எல்லாம் செய்தார்கள். அரக்கர்கள் எனக் கூறப்படுகிற அனைவருக்கும் மீசை இருக்கும், அனைவருமே கருப்பாக இருப்பர். இவை இரண்டுமே தமிழனின் பண்பாட்டுச் சொத்து என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.கடவுளர்கள் அனைவருமே மீசை இன்றி சிவப்பாகத் தான் இருப்பர்.(கண்ணன் கருப்பு எனக் கூறிக் கொண்டாலும் நீல நிறத்தில் தான் காட்டுவர்). அப்படி ஓர் அரக்கனாக சித்தரிக்கப்பட்டவன் தான் இலங்கையிலே தமிழ் மன்னனாக இருந்த இராவணன். தமிழர்க்கே உரிய சிவ வழிபாட்டில் சிறந்தவனாய் விளங்கினான்.இசையில் தேர்ந்த வித்தகன். இவனைப் பற்றிய மாயைகளைக் களைந்தால் உண்மை புரியும். இராவணன் ஒரு பெண்ணின் விருப்பமில்லாமல் அவளைத் தொட்டால் எரிந்து விடுவானாம் அப்படி ஓர் சாபம் பெற்றானாம். எந்த பெண்ணைத் தொட்டும் எவனும் எரிந்ததாய் ஆதாரத்துடன் வரலாறு எழுதப்பட்ட காலத்திலிருந்து அறியப்படவில்லை. உண்மையில் இராவணன் சீதயை சிறை பிடித்தாலும் அவளைத் தொடாத கற்பு நெறி கொண்டவன். அந்த நற்பெயர் அவன் பெறாமல் ஒழுக்கக்கேடு கொண்டவனாகக் காட்டினர். தன் வீட்டுப் பெண்ணை அவமானப் படுத்தியதற்காக பழி வாங்க சீதையைத் தூக்கினான். அது சாதாரண எந்த மனிதனுக்கும் ஏற்படக் கூடிய மான உணர்ச்சி தான் அது இராவணனுக்கு ஏற்பட்டால் தவறா?
சூர்ப்பனகையை மூக்கறுத்ததும்,வாலியை ஒளிந்து நின்று கொன்றதுமான தெய்வீக குணங்களைத் தான் இராமனும் அவன் தம்பியும் கொன்டிருந்தனர். வாலியை ஒளிந்திருந்து கொன்றதர்க்கும் ஒரு கட்டுக் கதை இடுவர்.வாலியை நேருக்கு நேர் பார்த்தால் பாதி வலிமையை உறிந்து விடுவானாம். அறிவுடன் நம்பக் கூடிய காரணமாய் இது இல்லை.
இராவணன் செய்த தவறு ஒன்றே ஒன்று தான். போரில் தோற்றது.வென்றவன் சொன்னது இராமாயணம் ஆனது.இராமனை எப்படி வேண்டுமானாலும் வணங்கிக் கொள்ளுங்கள் ஒரு தமிழனாய் இனி இராவணனை இழிவு படுத்தாமலாவது இருப்போம். ஆரியரின் நீண்ட கால சூழ்ச்சியிலிருந்து கண் விழிப்போம்.பெரும் ஆதங்கங்களின் சிறு துளி தான் இது.தங்களுக்குத் தெரிந்ததையும் பகிரவும். 


No comments:

Post a Comment