Saturday, 15 October 2011

பார்வை-ஓர் விவாதம்-பாகம் 1


பார்வை- இந்த சொல்லைப் பற்றி பல அர்த்தங்களில் நமக்கு புரிதல் உண்டு ஆனால் புரிதலுடன் கொண்ட பார்வைக்குத் தான் பஞ்சம் உள்ளது.நான் சொல்வது அரசியல் பார்வை பற்றி. நம் இளைய சமூகத்தினிடையே தற்சமயம் பரவியுள்ள சமூக அக்கறை தான் இந்த கட்டுரையை எழுதத் தூண்டுதலாக அமைந்தது.முகநூல் வலைதளத்தில் சமீப காலமாக அதிகமாக பேசப்பட்ட இந்திய அரசியல்வாதி அண்ணா ஹசாரே என்பதில் ஐயமில்லை. இவர்களின் ஆர்வம் பாராட்டுக்குரியது. சிலர் ஒருபடி மேலே சென்று காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அமலாகி உள்ள இந்திய இராணுவத்திற்கான சிறப்பு அதிகார சட்டத்தை நீக்கக் கூடாது என்று விபரீதமாக இடுகை செய்வதும் அதை பெரும்பாலோனோர் பகிர்வதும் ஒரு குழப்பமான நிலைமையை உருவாக்கி உள்ளது. உண்மையாகவே இந்த இளைய தலைமுறை விவாகாரங்களை அறிந்து கொண்டு தான் செயல்படுகின்றனரா? அல்லது நாட்டுப்பற்று என்ற பெயரில் மேம்போக்காக எதைச் சொன்னாலும் அதை நம்பி ஏமாந்து போகின்றனரா? இல்லை தேசப் பற்றுள்ளவர்களாக தங்களைக் காட்டிக்கொள்வது கவுரவத்திற்கான ஒரு சுயஅடையாளத்திற்கா?
                சற்று விரிவாக அலசலாம் வாருங்கள். முட்டாள்த்தனமான மந்தை ஆடுகளாய் இல்லாமல் இருக்க சற்று சேர்ந்து யோசிக்கலாம். இந்தியா முழுமையும் பட்டையை கிளப்பிய அண்ணா ஹசாரே போராட்டத்திற்கு இளைஞர் படையின் ஆதரவு மகத்தானது. தாத்தா சொன்னவையெல்லாம் கச்சிதமாக செய்து முடித்து, தார்மீக ஆதரவெல்லாம் தந்து உறுதுணையாய் நின்றனர்.

பல வருடங்களாக அண்ணா ஹசாரே  பல விதமான போராட்டங்களில் தனியாளாய் நின்று சாதித்தார். அத்துனை வருடங்களும் இவர் மீது இத்தகைய வெளிச்சம் இல்லை. லோக்பால் பற்றிய போராட்டத்திற்கு பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகம் ஆகியவற்றின் ஆதரவு வந்தவுடன் தான் இளைய சமுதாயம் கண் விழிக்கின்றது. அண்ணா ஹசாரே தலைப்புச் செய்திகளில் வந்தவுடன் தான் முகநூலின் பலரது ஸ்டேட்டஸ்களில் இடம் பிடிக்கிறார்.பலரும் அண்ணா பற்றி பகிரத் தொடங்கியவுடன் ஒவ்வொருவரும் லைக் மற்றும் ஷேர் செய்தனர்.

நம்முடைய கேள்வி இது தான். மீடியா வெளிச்சம் குறைந்த அளவே அண்ணாவின் மீது விழுந்துள்ளது என வைத்துக் கொள்வோம். அண்ணா தலைப்புச் செய்தியில் இல்லாமல் வெறும் பெட்டிச் செய்தியாக வந்திருந்தால் எத்தனை பேர் அதற்கு முக்கியத்துவம் அளித்திருப்பர்? எத்தனை பேர் தங்களுடைய முகநூல் ஸ்டேட்டஸில் அவருக்கு இடம் அளித்திருப்பர்? இரண்டு நிலைக்கும் மிகப்பெரும் வித்தியாசம் இருக்கும் என்பதில் ஐயமில்லை. உதாரணம் தான் வடகிழக்கில் 13 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருக்கும் இரோம் ஷர்மிளா. ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்ததினால் ஓரங்கட்டப்பட்ட போராளி அவர். சரி அண்ணாவை புரிந்து, தெரிந்து தான் இவர்கள் ஆதரவளித்தனர் என்றால் இதில் எத்தனை பேருக்கு லோக்பாலின் லாப நட்டங்களைப் பற்றி தெரியும்? ஜன் லோக்பால் நிறைவேற்றப்பட்ட பின் ஒரு சாமானிய ஏழை இந்திய உள்துறை அமைச்சர் மீது புகார் அளிக்க முடியுமா? அப்படி ஒருவர் புகார் கொடுத்துவிட்டால் அவரை மிரட்டுவதும், புகாரைத் திரும்பப் பெற வற்புறுத்தவும் ஒரு உள்துறை அமைச்சரால் முடியாதா? அப்போது எந்த இடத்தில் இருந்து அந்த மனிதன் பாதுகாப்பை எதிர்பார்க்க முடியும்? அண்ணா அதற்காக எத்தனை முறை உண்ணவிரதம் இருப்பார்? ஜன் லோக்பால் உறுப்பினர்களை தேர்வு செய்யப் போவது யார்? அவர்களின் நம்பகத்தன்மை என்ன? நீதித் துறையிலேயே ஊழல் பெருகிவிட்ட நிலையில் ஜன் லோக்பால் என்ற அமைப்பை சிதைத்து அதன் மீது இருக்கும் அபிரிமிதமான நம்பிக்கையை இழக்கச் செய்வது அரசியல்வாதிகளுக்கு கடினமான காரியம் அல்ல. அப்படி மக்கள் நம்பிக்கை இழக்கும் பொழுது எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய பல மக்கள் போராட்டங்கள் இந்த முன்னுதாரத்தினால் சிதைந்து போகும் என்பது கண்கூடு.இது பற்றிய விவாதங்கள் “சமூக அக்கறை கொண்ட” இளைய தலைமுறையினரிடையே எழுந்ததாய்த் தெரியவில்லை.
                   இதே போலத் தான் வடகிழக்கு இந்தியாவில் பல ஆண்டுகளாக அமலில் உள்ள இந்திய இராணுவத்திற்கான சிறப்பு அதிகார சட்டத்தை தொடர வேண்டும் என்ற இளைஞர்களின் வாதம். அந்த சட்டத்தின் சாரம் என்னவென்று இவர்களுக்குத் தெரியுமா எனத் தெரியவில்லை.அதாவது காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இராணுவத்தினரே மாநில பாதுகாப்புக்கு பொறுப்பு. அவர்களின் நடவடிக்கைகல் அனைத்துமே தேசத்தின் நலனுக்காக செய்யப்படுவது. அவர்கள் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைக்கும் விசாரனைக்கோ, தண்டனைக்கொ இடமில்லை. சுருக்கமாக அந்த மாநிலங்களில் இராணுவம் வைத்தது தான் சட்டம். இது தீவிரவாதிகளின் கொட்டத்தை ஒடுக்க பயன்படுவதை விட இராணுவத்தின் கொடுமை எல்லை மீறிச் செல்வதற்குத்தான் பயன்படுகிறது. தனக்கு பதவி உயர்வு வேண்டுகிற ஒரு அதிகாரி என்கவுண்டர் என்ற பெயரில் யாரை வேண்டுமானாலும் சுடுவார். சுடப்பட்டவர் தீவிரவாதி என சொல்லிவிட்டால் போதும் அவருக்கு பதக்கமும், பதவி உயர்வும், விரும்பிய இடத்திற்கு பணி மாறுதலும் கிடைக்கும்.பதட்டம் நிறைந்த கஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பணியாற்ற விரும்பாத அதிகாரிகள் தீவிரவாதிகளின் வரவுக்காக காத்திருப்பதில்லை.ஏதேனும் ஓர் இளைஞனைப் பிடித்து சுட்டு விட்டு தீவிரவாதி என கதை கட்டி விடுவர்.அவர் பதக்கத்துடன் வேறோர் மாநிலத்திற்கு மாற்றல் வாங்கி சென்று விடுவார். பணி மாறுதலுக்காக இப்படி பலியான இளைஞர்கள் பல ஆயிரம் பேர். சிறப்பு சட்டம் அமலில் இருப்பதால் இத்தகைய அதிகாரிகள் மீது எந்த அரசும் நடவடிக்கை எடுப்பதில்லை. தீவிரவாதி செத்தான் என்றதும் நாம் தான் உற்சாகமாக பாரத் மாதா கி ஜே என நம் நாட்டுப்பற்றை தெரிவிப்போமே.அதனால் அரசாங்கம் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் பொறுக்க முடியாத காஷ்மீர் மக்கள் பொங்கி எழுந்ததைத் தான் சில மாதங்களுக்கு முன்னால் பார்த்திருப்பீர்கள்.

 இது போதாதென்று பல இளம் பெண்கள் இராணுவத்தினரின் காமப் பசிக்கு இரையாகி செத்தனர். எந்த மக்களை காப்பாற்றுகிறோம் என இராணுவம் நிலை கொண்டுள்ளதோ அதே மக்கள் அவர்களால் பாதிக்கப்படுவதை எந்த நாட்டுப்பற்றோடு ஆதரிக்க முடியும்? இப்படிப்பட்ட சிறப்பு சட்டம் வேண்டாம் என்று தான் 13 வருடங்களாக உண்ணாவிரதம் இருக்கிறார் இரோம் ஷர்மிளா.

 ஆனால் நம் இளைஞர்களோ இந்த விடயங்களைப் பற்றி துளி கூட அறியாமல் சிறப்பு சட்டத்தை ஆதரிக்கின்றனர். எந்த தவறும் செய்யாத சக மனிதன் செத்தாலும் பரவாயில்லை நம் வீட்டுப் பெண்களைப் போலவே வாழ நினைக்கும் அப்பாவிப் பெண்கள் இராணுவத்தினால் சிதைக்கப்பட்டாலும் பரவாயில்லை என்றால் அது எப்படிப்பட்ட தேசப்பற்று? மனிதர்கள் சேர்ந்து வாழ்வது தான் தேசம்.சக மனிதன் மீது அக்கறை காட்டாமல் “இந்த நாட்டிலிருந்து ஒரு பிடி மண்ணகூட எடுத்துட்டு போக முடியாது” என கர்ஜிக்கும் முட்டாள்த்தனமான தேசப்பற்றை என்னவென்று சொல்வது? மக்களைக் கொன்று விட்டு மண்ணை மட்டும் வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்?
                                                   -வாதம் தொடரும்

No comments:

Post a Comment