Thursday, 6 October 2011

தந்தை மகற்குஆற்றும் நன்றி

”கிளம்பிட்டியாப்பா?”
“ம்...வந்துட்டே இருக்கேன்மா”
”பதட்டப்படாம வாப்பா”
“நான் தான்மா அந்த பொண்ண கொன்னுட்டேன்”
அப்படியெல்லாம் நினைக்காத கண்ணா எப்படியும் ஒரு நாள் போற உசுரு தான.எதையும் நினைச்சுக்காம பத்திரமா வாப்பா”
மனம் மல்லிகாவை பற்றிய நினைவுகளில் மூழ்கியது.சின்னஞ்சிறிய வீடுகள் நிறைந்த அழகிய இந்திரா நகர் எங்களுடையது.வீதிக்கே அழகூட்டியது மல்லிகா தான்.தெருவிலே எங்கள் வீடு சற்று பெரியது.எதிர் வீட்டு தேவதைதான் மல்லிகா.தாய் தந்தை இறந்துவிட தாத்தா பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வந்தாள்.கருப்பு நிறம்,முட்டைக் கண்கள்,தலையில் இரண்டு சுண்டிகள்,பாவாடை சட்டை எனத் துள்ளித் திரிந்த 2 வயது வண்ணத்துப்பூச்சி என்னை தினமும் தன்பால் வசீகரித்தாள்.
ஒரு நாள் மின்சாரம் இல்லாத அந்தி வேளை தன் தாத்தா பாட்டியின் மேற்பார்வையில் அவள் ஓடி, குதித்து விளையாடியதைக் கண்டு இரசித்துக் கொண்டிருந்த நான் நேராகச் சென்று அவள் முன்னால் நின்றேன். சட்டென்று ஓடுவதை நிறுத்தி விட்டு என்னைப் பார்த்து மலங்க மலங்க விழித்தவள் குடுகுடுவென ஓடிப் போய் பாட்டியின் முந்தானையை பிடித்து வாயில் கவ்விக் கொண்டு ஒளிந்தாள்.கையில் இருந்த மிட்டாயை நீட்டிய போது வாங்க மறுத்து தலையசைத்தாள்.
”நம்ம பாஸ்கர் அண்ணாதான கண்ணு வாங்கிக்க பாப்பா என பாட்டியின் வற்புறுத்தலுக்குப் பின் வாங்கிக் கொண்டு வீட்டிற்குள் சென்று ஒளிந்து கொண்டாள்.ஓரிரு சந்திப்புகளுக்குப் பின்னர் நெருங்கிய நண்பர்களாகி விட்டோம்.
இருவரும் எதிரெதிரே அமர்ந்து ஒளிந்து விளையாடுவது வேடிக்கையாக இருக்கும். நான் என் முகத்தை மூடிக் கொண்டு ஒளிந்து கொண்டதாக சொல்வேன். அவள் “பாத்கத் அண்ணா” என மழலை மொழியில் அழைக்க “ச்சூ” என கைகளை விரித்துப் பார்த்தால் கைதட்டி சிரிப்பாள். தான் ஒளிந்து கொள்வதாக சொல்லிவிட்டு முகத்தை மூடத் தெரியாமல் சின்னஞ்சிறு கைகளால் கண்களை பொத்திக் கொள்ளும் அப்பாவித்தனத்திற்கு முற்றிலும் அடிமையானேன்.
மற்ற வீட்டுக் குழந்தைகள் எங்கள் வீட்டில் தொலைக்காட்சி பார்க்கும் போது இவள் மட்டும் அதைப் பார்க்கப் பிடிக்காமல் வீட்டைச் சுற்றிச் சுற்றி ஓடுவாள். நானும் அவள் பின்னால் ஓட கலகலவென சிரித்துக் கொண்டே ஓடுபவள் ஒரு கட்டத்தில் ஓட முடியாமல் நின்று இடுப்பில் கை வைத்துக் கொண்டு முட்டைக் கண்களை விரித்து மூச்சு வாங்கும் அழகு வார்த்தைகளில் அடங்காது.
மாதம் ஒருமுறை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுமாத்திரை வாங்கி வருவார் பாட்டி. சாப்பிடாமல் அடம் பிடிப்பவள் என்னிடம் விளையாட வரும்படி உறுதி வாங்கிவிட்டு பிறகுதான் சாப்பிடுவாள்.
நான் படித்துக் கொண்டிருந்தால் அமைதியாக கைகட்டி அமர்ந்திருப்பாள். படித்து முடித்து புத்தகத்தை மூடும் போது அவள் முகத்தில் தெரியும் புன்னகைக்காகவே பலமுறை படிப்பை பாதியிலேயே மூடியிருக்கின்றேன்.
இரண்டு மாதங்களுக்கு முன் என் வீட்டுத் திண்ணையில் அவளுடன் விளையாடும் போது என்னைப் பிடிக்கத் தாவியவள் பாவாடை தடுக்கிக் கீழே விழ தாடையில் அடிபட்டு முன்பற்கள் இரண்டு பெயர்ந்து இரத்தம் கொட்டியது.வீதியே துடிதுடித்துப் போனது. மருத்துவமனைக்குத் தூக்கிக் கொண்டு ஓடினோம். ஒரு வாரம் மருத்துவமனையில் காய்ந்த மலர் போல வாடிப் படுத்திருந்தாள். முட்டைக் கன்களும், மலர்ந்த சிரிப்புமாய் பார்த்தவளை பாதிக் கண்கள் கூடத் திறக்க முடியாத நிலையில் காய்ச்சலும், இருமலும், 2 வாய் சாப்பிட முடியாமல் திணறுவதும் பசி பொறுக்க முடியாமல் பாட்டியிடம் அழுவதும் என்னால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. தினம் தினம் அழுதேன். 2 முறை வலிப்பு வேறு வந்தது.பரீட்சைக்காக வேறு வழியில்லாமல் கல்லூரிக்குச் சென்றேன்.கிளம்பும் போது “பாத்கத் அண்ணா, டாட்டா” எனக் கூறிய அந்த பரிதாப முகம் தான் இன்னும் நினைவில் உள்ளது. நினைவு மட்டும் தான் மிச்சம் உள்ளது. நீண்ட நாட்கள் மருத்துவமனையில் இருந்தும் முன்னேற்றம் இல்லாமல் உடல் முழுதும் கிருமிகள் பரவி விட்டதாகச் சொன்னார்கள்.மல்லிகாவை இழந்து விட்டோம். தந்தை மகற்குஆற்றிய நன்றி-HIVNo comments:

Post a Comment