Wednesday, 18 January 2012

இதுதான் வளர்ச்சி நிதியா?

நம்முடைய முதல்வர் அம்மா அவர்கள் 2 நாட்களுக்கு முன் மாநகராட்சி,நகராட்சி,பேரூராட்சிகளின் வளர்ச்சிக்காக 7,700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருக்கிறார்.மகிழ்ச்சியான விடயம் தான் ஆனால் இதன் ஆதாரமும் விளைவுகளும் தான் மனதிற்கு ஒப்ப மறுக்கிறது. நகர்ப்புறங்களில் அசுர வேகத்தில் பெருகி வரும் மக்கள் தொகையை மனதில் கொண்டு அவர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்கதான் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.அதிலும் 10 மாநகராட்சிகளுக்கு 6,600 கோடி ரூபாய் மிச்ச தொகை நகராட்சிகளுக்கும்,பேரூராட்சிகளுக்கும்.அதாவது பெருவாரியான மக்கள் கிராமப்புறங்களிலிருந்து நகரத்திற்கு வந்தாலும் அவர்களை நகரத்தின் சந்து பொந்துகளில் அடைத்து வைக்க தேவையான வசதிகளை ஏற்படுத்த முனைகிறது அரசு.ஏற்கனவே கட்டுக்கடங்காத மக்கள் தொகையால் மாபெரும் பொருளாதார ஏற்றத்தாழ்வில் உழலும் சென்னை மாநகரைப் போல எல்லா மாநகரங்களையும் மாற்ற ஏற்பாடு நடக்கின்றது.சில மாதங்களுக்கு முன் இந்திய திட்ட கமிஷன் தலைவர் மாண்டெக் சிங் அலுவாலியா அவர்கள் “மாநகரங்களின் மக்கள் தொகை அடுத்த 10 வருடங்களில் பல மடங்கு அதிகமாகும் அதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள வேண்டும்” என உரைத்தார்.அதன் தொடர்ச்சியாகவே முதல்வரின் இந்த திட்டம் இருக்கின்றது.இது பொருளாதார அடிப்படையில் எவ்வளவு முட்டாள்த் தனமான செயல்பாடு என்பது அனைவருக்கும் புரியும்.


 
நகரங்களின் உட்கட்டமைப்பு எவ்வளவு முக்கியமோ அதே போல கிராமப்புறங்களின் பொருளாதாரம் தான் பெரும்பாலான மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியது என்பதை மறந்து விடக் கூடாது.நகரங்களுக்கு பெயரக் கூடிய மக்கள் பெரும்பாலும் கிராமத்தில் தங்கள் வாழ்வாதாரத்தை முக்கியமாக விவசாயத்தை இழந்தவர்கள் அல்லது வாழ்வாதாரத்தின் வளம் குன்றி மேற்கொண்டு அதன் மூலம் வருவாய் ஈட்ட முடியாதவர்கள் ஆவர்.இவர்களெல்லாம் கிராமப்புறங்களிலிருந்து நகரத்திற்கு நகர நகர கிராமப் பொருளாதாரம் நலிவடையும் என்பது உண்மை.ஏற்கனவே மூச்சுவிடத் திணறிக் கொண்டிருக்கும் சென்னை போல எல்லா நகரங்களிலும் மக்கள் அடைந்து கிடப்பர்.மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வேலைவாய்ப்பும்,கல்வியும் தருவது பெரும் சவாலாய் இருக்கும்.வேலையில்லாத சூழ்நிலையிலும்,பொருளாதார சூழ்ச்சியால் வாழ்விழந்தவர்களும்,ஏதேனும் செய்து வாழ்க்கையை நகர்த்த வேண்டிய சூழ்நிலையில் இருப்பவர்களுமாகிய பொருளாதாரத்தின் கடைசி கட்ட ஏழை மக்களின் எண்ணிக்கை அதிகமாகும் அது வசதி படைத்தோர் மற்றும் வசதியற்றோரிடையே பிரிவினையை உண்டாக்கும் சென்னையில் வடசென்னை,தென்சென்னைக்கான வித்தியாசம் போல.இதன் மூலம் தவிர்க்க முடியாத சூழலில் குற்ற செயல்களில் ஈடுபடுவொரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கும்.ஏழை மக்கள்தான் தவறு செய்வர் என சொல்லவில்லை வசதி படைத்தோர் தங்கள் காரியங்களுக்காக ஏழை மக்களை பயன்படுத்த போகின்றனர் என்பதுதான் உண்மை.சென்னை பட்டணத்தின் பெரும்பாலான மக்களின் அடிப்படை தேவைகள் கூட இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை.4x4 அடி இடத்துக்குள் நடைபாதை வாசிகளாக பெரும்பாலான மக்கள் உள்ளனர்.



மக்களின் இந்த நகர்வால் சீர்குழைய போவது கிராமங்கள்தான்.பெருகும் நகர மக்களின் தேவைகளுக்கேற்ப சந்தை என்பது கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களிலிருந்து விலகி முற்றிலும் நகரம்தான் சந்தை என்ற நிலை உருவாகிவிடும்.ஆகவே தன் பொருளை உற்பத்தி செய்யும் விவசாயி அதை விற்க முற்றிலும் நகரங்களை சார்ந்துதான் இருக்க நேரிடும்.இதனால் விவசாயிகள் வியாபாரிகளால் பெருமளவு நட்டம் அடைவர்.போக்குவரத்து உள்ளிட்ட செலவினங்கள் காரணம் காட்டி விவசாயிகள் வஞ்சிக்கப்படுவர்.பெருவியாபரிகளிடம் நகரச் சூழலில் விவசாயிகள் நியாயம் பெற முடியாத சூழல் உருவாக நேரிடும்.அது விவசாயத்தை கொஞ்சம் கொஞ்சமாக கசக்கி பிழிந்து உயிரற்ற நிலைக்கு கொண்டு செல்லும்.குறு விவசாயம் ஒழிந்து பெரு விவசாயிகளிடமே எல்லா நிலங்களும் செல்லும்.அது பின்னர் அரசாங்க உதவியுடன் கார்ப்பரேட் தொழிற்சாலைகளுக்கு செல்லும்.



படிப்படியாக இன்னும் 100 வருடங்களுக்குள் தமிழக விவசாயம் பட்டுப்போகும் சூழ்நிலை இந்த நகரங்களை நோக்கிய நகர்வால் ஏற்படும்.ஆகையால் பெருகும் மக்கள் தொகைக்காக நகரங்களின் கட்டமைப்புகள் பல ஆயிரம் கோடிகள் செலவில் செழுமைபடுத்தப்படுவதை விட சில நூறு கோடிகள் செலவில் கிராமப்புற பொருளாதாரத்தை செப்பனிடுவதே இன்றியமையாதது.இடுபொருட்களின் விலை,செலவினங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயித்தல்,இடைத்தரகர்களை ஒழித்து நெல்,கரும்பு போல அரசே எல்லா விவசாய பொருட்களை கொள்முதல் செய்து வியாபரிகளுக்கு அளிப்பது,பாசன வசதிகளை சீர் செய்தல்,அடிப்படை வசதிகள் மேம்படுத்தல் ஆகியவற்றிற்கு சில நூறு கோடிகள் இருந்தால் போதும்.அதுதான் உண்மையான வளர்ச்சியாய் அமையும்.ஆடு,மாடுகளால் மட்டும் கிராமங்கள் செழுமை பெறாது.உழுதவனை காக்காது அவனை வேறெங்கோ விரட்டி அடித்தல் நம் எதிர்கால சமூகத்திற்கு மாபெரும் கேடாய் அமையும்.கிராமங்களை காத்து நகரங்களுக்கு மக்கள் நகராமல் ஆரோக்கியமான சீரான பொருளாதாரத்தை நோக்கிய பயணமாக இருப்பதுதான் நல்லாட்சி.
                                                                                                    -மு.சுந்தர பாண்டியன்.

Tuesday, 17 January 2012

சனநாயகம்



வலுத்தவனுக்கு
வாழ்க்கைப்படு
வலு குன்றியதும்
துரத்திவிடு
அடுத்தவனைத் தேடு
அவனும் போனால்
அடுத்தவன்
ஆயுள் முழுதும்
அடிமையாய் இரு-சனநாயகம்.

யாரோடு வாழ்வது?




காயங்கள் எப்பெரிதாயினும்
காலத்திடம் மருந்துண்டாம்
வேண்டாம் எனக்கு
என் காயங்கள் அற்பமானதல்ல
என் இதயத்தில் கீறிவிட்டது
உன் நகம்
குருதியாய் பொங்கிய கண்ணீர்
உன் நினைவுகள்
எதிர்கால மகிழ்ச்சிகள்
உன்னால் களவாடப்பட்டது உண்மைதான்
அதனால் என்ன?
கடந்தகால பொக்கிஷங்களை
எதிர்காலத்தில் இட்டு நிரப்புவேன்
போதவில்லையெனில்
இன்னும் ஆழமாய் தோண்டுவேன்
இடைமறிக்கின்றனர் சிலர்
காயம் முற்றினால்
சீழ் பிடித்து செத்துப் போவாய் என்றனர்
நீயே சொல்
நான் யாருடன் வாழ்வது?
உன்னோடா?
காயங்களற்ற என் சவத்தோடா?

வஞ்சம் - பகுதி 7

                                                        பகுதி 7-திருநங்கை

படிக்கட்டில் குழப்பத்துடன் அமர்ந்திருந்தனர் சிவாவும் நண்பர்களும்.வேறு என்ன செய்ய? மாளிகை முழுதும் தேடிப் பார்த்த பொழுது யாருமே தென்படவில்லை, திடீரென ஓலக்குரல் கேட்டு ஓடிப்போய் பார்த்தால் அங்கே ஒருத்தி உப்பரிகையில் இருந்து கீழே குதிக்கின்றாள்,இப்பொழுது அவள் ஓடிப்போய் குதித்த அறையும் இருந்த சுவடே தெரியாமல் தானாய் மூடிக்கொண்டது.எல்லாவற்றிற்கும் மேல் பஷீர் ஏன் கடத்தப்பட்டான்? தாங்கள் ஏன் இங்கே அடைக்கப்பட வேண்டும்? என மாறி மாறி மண்டையை குடைந்தது.ஐந்து பேரும் குழப்பத்தின் உச்சிக்கே வந்துவிட்டனர்.

”டேய் நாம இப்ப என்னதாண்டா பண்றது? இங்க சாப்பிடக் கூட ஏதும் கிடைக்காது போல,என்னென்னமோ நடக்குது.யோசிக்க கூட முடியல அவ்ளோ டயர்டா இருக்கு.என்னால முடிலடா” சுவரில் சாய்ந்தபடி விக்கி புலம்பினான்.பசி பொறுக்க முடியாது தவித்தான்.வேலை,சோறு,மது,காதல் என சராசரி குதூகலத்துடன் வாழ்ந்தவனாதலால் அவனால் இந்த அசாதாரண சூழ்நிலையையும்,பசியையும் பொறுக்க முடியவில்லை.

”நாம என்ன பிக்னிக்காடா வந்திருக்கோம் ஐஸ் பாக்ஸ்ல இருந்து அள்ளிப்போட்றக்கு” சிவாவும் அயர்வாக இருந்ததால் படிக்கட்டின் பிடியில் சரிந்தான். “சிவா” ஐசுவர்யா கெஞ்சலாய் அழைத்ததும் திரும்பினான். “பசிக்குதுடா” என அவள் பாவமான கண்களோடு கேட்ட பொழுது சிவா தவித்துவிட்டான்.தன் வாரிசை சுமக்கும் ஆருயிர் காதலிக்கு பசியை கூட போக்காவிட்டால் தான் என்ன ஆண்மகன் என அவனுக்கு உள்மனது குத்தியது. பெண் துணைக்காக வேட்டையாடப் போகும் காட்டில் வாழ்ந்த ஆணைப் போல ஆகிவிட்டான்.
”இருடா தங்கம் கொஞ்சம் பொறுத்துக்க.நான் இங்க ஏதாவது இருக்கான்னு பாத்துட்டு வரேன்” சிவா எழுந்ததும் சுதாகரும் எழுந்து உடன் சென்றான். விக்கி தன்னால் இதற்கு மேல் நடக்க முடியாது எனக் கூறி வர மறுத்து விட்டான். ’பொண்டாட்டிக்குன்னா மட்டும் எந்திரிச்சு போவானுங்க’ காதுபடும்படி விக்கி புலம்பினாலும் அதை பொருட்படுத்தாது இருவரும் சென்றனர்.
2ஆம் தளத்தில் நுழைந்த போதே நெய் போல ஏதோ வாசனை வந்தது.பசியால் நடக்க முடியாது நடந்து கொண்டிருந்த இருவருக்கும் அந்த வாசனை வாயில் எச்சில் ஊற வைத்தது.உணவு கிடைக்கப் போகும் நம்பிக்கையில் கால்கள் புதிதாய் எங்கோ ஒளித்து வைத்திருந்த சக்தியை திரட்டிக் கொண்டு வேகமாக நடந்தது.வாசனை வந்த திசையை நோக்கி விரைந்தனர்.ஒரே ஒரு அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.பரவசப்பட்டவர்கள் உதவி கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் உள்ளே நுழைந்தனர்.ஓற்றை படுக்கையின் அருகில் இருந்த சின்ன மேசையில் அகல் விளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது கூடவே ஒரு தாம்பூலத் தட்டு மூடி வைக்கப்பட்டிருந்தது.அதை திறந்து பார்த்த பொழுது உள்ளே 10 பேர் சாப்பிடக் கூடிய அளவு நெய் சாதம் இருந்தது.இருவரும் மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப் போயினர்.உடனே அந்த தட்டை எடுத்துக் கொண்டு படிக்கட்டுக்கு சென்றதும் ஐந்து பேரும் அரக்க பரக்க சாப்பிட்டனர்.சிவா தனக்கு கிடைத்த பங்கில் பாதியை ஐசுவர்யாக்கு ஊட்டி விட்டான்.யாருமில்லாத வீட்டில் தட்டில் சோறு எப்படி என யோசிக்கவெல்லாம் யாருக்கும் தோன்றவில்லை.சாப்பிட்டு முடித்ததும் தான் பூமியில் இருப்பதாய் உணர்ந்தனர்.
சேர்ந்தார் போல் அனைவருக்கும் விக்கல் எடுக்கத் தொடங்கியது.வேகமாய் சாப்பிட்டதால் வந்த விக்கலா?இல்லை உணவில் ஏதும் கலந்துவிட்டனரா? என குழப்பத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.திடீரென தண்ணீர் சலசலக்கும் சத்தம் கேட்டது.உணவு கிடைத்ததைப் போலவே தண்ணீரும் கிடைக்குமென சத்தத்தைத் தொடர்ந்து 5 பேரும் சென்றனர்.முதல் தளத்தில் ஓர் அறையில் அதே போல  விளக்கொளி தெரிந்தது.உள்ளே தண்ணீர் தழும்பிய ஒரு அண்டாவும் அதன் அருகே ஒரு சொம்பும் இருந்தது.ஐந்து பேரும் தண்ணீரை மொண்டு மொண்டு குடித்தனர்.உருகிய பனிக்கட்டி நீரில் தேன் கலந்தது போன்று சுவையில் உள்ளம் வரை நீர் இனித்தது.இவ்வளவு சுவையான நீரை அவர்கள் இதுவரை வாழ்வில் பருகியதில்லை.
தாகம் தீர்ந்ததும் சொம்பை வைத்துவிட்டு அறையை விட்டு வெளியே செல்ல முற்பட்டனர்.சிவா அறை வாசல் அருகே சென்ற பொழுது அறையின் கதவு அசுர வேகத்துடன் இடி போன்ற பலத்த ஓசையுடன் படாரென மூடியது.சிவா சற்று முன்னே நின்றிருந்தால் உடல் துண்டாய் போயிருக்கும்.அதிர்ச்சியில் உறைந்து நின்ற சிவாவின் சட்டையை பிடித்து ஐசுவர்யா பின்னிழுத்துக் கொண்டாள்.அவனுக்கு எதும் ஆகவில்லையென உறுதி செய்து கொண்டாள்.
அந்த அதிர்ச்சியில் இருந்து மீளும் முன்னர் ஐவருக்கும் பின்னால் சரக் சரக் என சத்தம் கேட்டது.இதயம் கொஞ்சம் கொஞ்சமாய் படபடக்கத் தொடங்கியது.யாருக்கும் திரும்பிப் பார்க்கும் தைரியம் இல்லை.ஐசுவர்யா சிவாவின் தோளில் முகத்தை பதுக்கி கண்களை இறுக்கி மூடிக் கொண்டாள். முக்கால் பகுதி தண்ணீர் நிரம்பியிருந்த அண்டா மெல்ல ஆடத் தொடங்கியது.மெதுமெதுவாய் அதன் வேகம் அதிகரித்து ஒரு சுற்றுப்பாதையில் சுற்றத் தொடங்கியது.சூறாவளி போல அதன் வேகமும் சத்தமும் அதிகரிக்கத் தொடங்கியது.சத்தத்தின் அளவு அதிகமாக அதிகமாக எல்லோருக்கும் வியர்த்துக் கொட்டியது.திரும்பிப் பார்த்தால் என்ன நடக்குமோ என்ற பயத்தில் உடல் வெடவெடத்தது.பயத்தின் பாரம் தாளாது சுதாகர் திரும்பிப் பார்த்தான்.காற்றே இல்லாத அறையில் கனமான அண்டா இவ்வளவு வேகமாய் சுற்றுவது கண்டு விக்கித்துப் போனான்.அவன் விழிகள் விரியவும் அண்டா சாய்ந்து விழுந்து அறை முழுதும் தண்ணீர் சிதறவும் சரியாய் இருந்தது.தங்கள் மேல் தண்ணீர் தெரித்ததும் மற்ற நால்வரும் பயத்தில் பதறிப் போய் அடிவயிற்றின் ஆழ்த்திலிருந்து கத்தினர்.ஐவரும் உடல் வியர்த்து,நெஞ்சு படபடக்க,நடுங்கியபடி திரும்பிய போது அறை முழுதும் வெள்ளம் வந்தது போல கணுக்கால் அளவு தண்ணீர் தேங்கியிருந்தது.
”எனக்கு பயமா இருக்கு சிவா,போயிடலாம் சிவா,ப்ளீஸ் என்ன வெளில கூட்டிட்டு போ” சிவாவின் தோளை இறுகப் பற்றிக் கொண்டு அலறினாள் ஐசுவர்யா.அவளை தைரியபடுத்தும் நிலையில் சிவா இல்லை.முற்றிலும் பயத்தால் உறைந்திருந்தான்.மற்ற மூவரின் நிலையும் அதுதான்.தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கதவின் அருகே செல்ல சுதாகர் முயற்சி செய்தான்.சற்று முன் கணுக்கால் அளவு இருந்த தண்ணீர் இப்பொழுது அதிகமாகிவிட்டது போல தோன்றியது அவனுக்கு.ஆம் சரிதான் தண்ணீர் ஏறத் தொடங்கியது.முட்டியளவு நீரில் நடக்க அனைவரும் தடுமாறினர்.சுதாகர் கதவை பிடித்து திறக்க முயன்றான்.எவ்வளவு இழுத்தும் முடியவில்லை.சிவாவும்,விக்கியும் சேர்ந்து கைகொடுத்தனர்.பெரும்பலம் கொண்டு இழுத்தனர்.கொஞ்சம் கூட கதவு அசையவில்லை.தண்ணீர் இடுப்பளவு ஏறிக்கொண்டது.நிரின் வேகம் அதிகரித்துக் கொண்டே இருந்தது.ஐசுவர்யாவும்,ஹரிணியும் தேம்பித் தேம்பி அழுதனர்.கழுத்தளவு வந்த நீர் நொடிப் பொழுதில் தலைக்கு மேல் ஏறிவிட்டது.



எல்லோருக்கும் ஓரளவு நீச்சல் தெரியுமாதலால் எம்பி எம்பி காற்றிருக்கும் இடைவெளியிலேயே இருக்க முயற்சித்தனர்.நீர் குறைந்தபாடில்லை.மேலும் மேலும் ஏறிக்கொண்டிருந்தது.தலை கூரையை இடித்தது.இதற்கு மேல் காற்றும் இல்லை.தண்ணீர் அறையை மூழ்கடித்தது.கிடைத்த காற்றை உள்ளிழுத்துக் கொண்டு ஐவரும் நீரினடியில் சென்றனர்.
உள்ளே சென்றவர்கள் கண்ட காட்சி அவர்களை திக்குமுக்காடச் செய்தது.
நீரின் அடியில் ஒரு பெண் எந்த சலனமுமின்றி நின்றிருந்தாள்.நீச்சலடிக்கவோ,நகரவோ அவள் முற்படவில்லை.அவளுக்கு 15 வயதிருக்கும்.பால் முகம் கலைந்து சில நாட்களே ஆன பருவ முகம்.பட்டுடை உடுத்திய சீமாட்டி.நீரில் இருந்ததால் முகம் சரியாக புலப்படவில்லை.சிவாவின் கண்களையே அவள் உத்து பார்த்துக் கொண்டிருந்தாள்.அவள் ஏதோ சொல்ல வருவது போல தோன்றியது.சிவாவால் அவளிடமிருந்து கண்களை அகற்ற முடியவில்லை.



சட்டென உடலைத் திருப்பி அவள் நீந்தத் தொடங்கினாள்.கட்டளையிட்டது போல் சிவாவும் அவள் பின்னே நீந்திச் சென்றான்.எல்லோரும் அவளுடன் நீந்தினர்.காட்டாற்று வெள்ளம் போல தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது.அந்த பெண் வளைந்து நெளிந்து நீந்தி சென்றாள்.அவள் சென்ற பாதை திடீர் திடீரென எங்கெங்கோ வளைந்ததால் பிந்தொடர்வது படு சிரமமாயிருந்தது. சிறிது தூரம் வந்ததும் ஒரு வெளிச்சம் தெரிந்தது.நெருங்க நெருங்க அது ஒரு கதவென தெரிந்தது.நீண்ட தூரம் நீந்தியதால் மூச்சு முட்டத் தொடங்கியது.கதவை நோக்கி வேகமாய் நீந்தினர். நீரில் வந்த அனைவரும் அந்த கதவின் வழியே வெளியே விழுந்தனர்.அவர்கள் முன்பு அமர்ந்திருந்த படிக்கட்டின் அருகிலேயே விழுந்தனர்.தண்ணீர் எல்லாம் வடிந்து வெளியேறியது.இறுமி இறுமி நுரையீரலில் நுழைந்த தண்ணீரை வெளியேற்றினர் ஐவரும்.வேக வேகமாக காற்றை உள்ளிழுத்தனர்.சிறிது நேரம் சென்ற பின்னரே நிதானத்திற்கு வந்தனர்.சற்று முன் அவர்களை அழைத்து வந்த பெண்ணை இப்பொழுது காணவில்லை.சுற்றும் முற்றும் பார்த்த பொழுது விக்கி அதிர்ச்சியடைந்தான்.தங்களுடன் நீந்தி வந்தவள் கையில் ஒரு தட்டும் அதில் சில கோப்பைகளையும் ஏந்திக் கொண்டு மலர்ந்த முகத்துடன்,உடலில் துளி ஈரம் இல்லாமல் நடந்து சென்று கொண்டிருந்தாள்.அந்த பெண்ணின் அருகே சென்று அழைத்தனர்.இவர்கள் பேச்சு அவளுக்கு கேட்டதாய் தெரியவில்லை.தன் போக்குக்கு அவள் நடந்து சென்றாள்.சற்று நெருக்கமாய் அவள் முகத்தை பார்த்த பொழுது ஐவரும் திடுக்கிட்டனர்.அவள் வேறு யாருமல்ல கொஞ்ச நேரத்திற்கு முன் உப்பரிகையில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாளே அவளேதான்... 
                                                                                                                       -காத்திருங்கள்

இதற்கு முன் நடந்ததை தெரிந்து கொள்ள கீழே சொடுக்கவும்.

வஞ்சம்

Sunday, 15 January 2012

அறியாமை



அறிவைத் தேடுதலினும்
அறியாமை ஒளித்தல்
கடினமாய் உள்ளது...

வேட்டை-செம ட்ரைலர்

அடிதடி,அதிரடி லிங்குசாமியிடமிருந்து மற்றுமொரு மசாலா.

செம யூத்து ஆர்யா, எஸ்.டீ.டி பூத்து மாதவன், வெடக் கோழி அமலா பால், முத்துன கோழி சமீரா ரெட்டி, மொழுக்குனு ஒரு வில்லன், பரக்கு பரக்குனு பங்களா நாய் மாதிரி ஒரு வில்லன்.இவங்க எல்லாரும் சேர்ந்து ஆளுக்கொரு சீன் மாறி மாறி வந்து ஸ்பீக்கர் கிழிய கிழிய ஆட்றதுதான் இந்த வேட்டை.



கதை என்னன்னா... ஹீரோக்கள் 2 பேரும் அண்ணன் தம்பி,ஹீரோயின் ரெண்டு பேரும் அக்கா தங்கச்சி, வில்லன்கள் 2 பேரும் எதிரிகள்.ஹீரோவாகிய அண்ணன் மாதவன் பயந்தாங்கொள்ளி, தம்பி ஆர்யா வெட்டியா இருக்குற மாஸ் ஹீரோ. ஹீரோக்களோட போலீஸ் அப்பா புட்டுகிட்ட பிறகு அப்பாவோட வேலை பசங்களுக்கு வருது.மாதவன் அதுல போலீஸ் ஆயிட்றார்.எங்க இனி நீங்களே கதைய யோசிங்க பார்ப்போம். அதாங்க... அதாங்க... அதே தான்... அட ரொம்ப அதிகமா யோசிக்காதீங்க கம்மியா ஃபீல் பண்ணுங்க போதும்.வில்லனுங்களுக்கு இடைஞ்சலா வர்ற அண்ணன் தம்பி கூட்டணிய புரட்ட நினைக்கறாங்க வில்லனுங்க.இதுல அண்ணன் மாதவன் டம்மி பீசுனு தெரிய வந்து அவர் கால உடைச்சிட்றாங்க.அவருக்கு தம்பி ஆர்யா தண்டால்,பஸ்கி,பஞ்ச் டயலாக் எல்லாம் சொல்லி குடுத்து பெரிய வீரன் ஆக்கிடறார்.அண்ணன்,தம்பிகள் வில்லனுங்கள எப்படி புரட்டி எடுக்கறாங்கங்கிறது தான் கதை.வேற எப்படி  அடிச்சு தான்.ஆர்யா தம்பி வில்லனுங்கள புரட்டுதோ இல்லையோ அமலா பால நல்லாவே புரட்டுறாரு.ஃபிட்டா இருக்கறாப்ல,நல்லா ஆட்றாப்ல,முறைக்கறாப்ல, சண்டை போட்றாப்ல,காமெடி பண்றாப்ல சரி அவரு மாஸ் ஹீரோ ஆயிட்டாரு இதுக்கு மேல என்ன எதிர்பார்க்க முடியும்? ஆனா தம்பி வேகமா தமிழ்ல டயலாக் பேசும் போது (அதுவும் க்ளைமேக்ஸ்ல) தமிழ் தான் பேசறாரானு டவுட் ஆயிடுது.



நம்ம மாதவன் இப்ப பூதவன் மாதிரி இருக்காரு.முதல் பாட்டுல அவர் டான்ஸ் ஆடறக்கு பட்ற கஷ்டத்த பாத்து நமக்கே கண்ணு கலங்குது.போலீஸ் வேசத்துக்காக தொப்பை எல்லாம் போட்டு ரிஸ்க் எடுத்திருக்காரு.பயந்தாங்கொள்ளி கேரக்டர சிறப்பா பண்ணிருக்காரு கட்ட கடசில ஹீரோயிசம் பண்ணாலும் இந்த கேரக்டருக்கு அவர் தேவையில்லங்கிறது நம்ம கருத்து.
அமலா பால் இந்த படத்துக்கு தேவையான அளவுக்கு காஸ்ட்யூம் போட்டுட்டு எந்த வேலையும் செய்யாம அமைதியா லவ்வாங்கி பண்றாங்க.தைரியமா எக்கச்சக்க லிப் கிஸ் அடிக்குது பொண்ணு. இனி டிமாண்ட் எகிறுமே.

சமீராவ அறிமுக காட்சில தாவணில பாத்ததும் பயந்துட்டோம் எங்க முழுக்க முழுக்க இப்படியே வந்திருமோனு.நல்லவேளை சட்டுபுட்டுனு மாதவனுக்கு கட்டி வெச்சு,அப்பப்ப பெரிசா டயலாக் குடுத்து கன்ட்ரோல் பண்ணி வெச்சுட்டாங்க.
வில்லன்கள் 2 பேரும் மாத்தி மாத்தி அடிச்சுக்கறாங்கோ,அவங்க 2 பேரையும் ஆர்யா அடிக்கறதால இவங்க 2 பேரும் மாதவன அடிக்கறாங்கோ, நடுவுல போர் அடிக்கறப்ப அடியாள அப்பறாங்கோ.மெயின் வில்லனா வர்ற அண்ணாச்சி ஸ்பாட்ல பே,பே,பா,பூ,இ,ஆ,ஊனு தான் டயலாக் பேசிருப்பார் போல வசனத்துக்கும் அவர் உதட்டசைவுக்கும் சுத்தமா பொருந்தல.
இரண்டாவது வில்லனுக்கு ரெண்டே டயலாக்.பாடல்கள்ல “பப்ப பப்பா” பாட்டு ஆட்டம் போட வைக்குது மத்ததெல்லாம் ஓ.கே. வசனங்கள்ல லிங்குசாமியின் ட்ரேட்மார்க் வசனங்கள் வந்துற கூடாதுனு ரொம்பவே மெனக்கெட்ருக்காங்க (அதாங்க “அவன் யாரா இருக்கட்டும்,எவனா இருக்கட்டும் எனக்கு கவலை இல்ல”,”யார்றா நீ?”,”இவன்கிட்ட என்னமோ இருக்கு!” இது மாதிரி).அதுலயும் ஒரு சில வசனங்கள் புதுசா இருக்கு.உதாரணத்திற்கு ரத்ததானம் பண்ணும் வில்லனுங்கள பாத்து ஆர்யா சொல்றார் “நீங்க குடுத்த இரத்தத்த எடுத்து வெச்சுக்கங்கடா உங்களுக்கே தேவைப்படும்”.சில வசனங்கள் டார்ச்சர் பண்ணுது உதாரணத்திற்கு ஒரு சண்டை காட்சில ஆர்யா வில்லனுங்கள அடிச்சிட்டிருக்கும் போது பிண்ணனில பெரிய பெரிய பாலித்தீன் கவர் கூடைகள்ல பஞ்ச நிரப்பி அத பறக்க விட்டுட்டு இருக்காங்க அப்ப ஒரு அடியாளோட தலை ஆர்யா குத்துன குத்துல பாலித்தீன் கூடைக்குள்ள போயி மூஞ்சியெல்லாம் பஞ்சு ஆயிடுது அப்ப ஆர்யா கேக்கறார் “செம பஞ்ச்சுல்ல(punch)” முடியலடா சாமி.



அண்ணி கொழுந்தன் சண்டை,ஆர்யா அண்ணிக்கு அடங்கி போறது,சமீராவ வெச்சே அமலா பால கல்யாணம் பண்றது,ஆர்யா-அமலா பால் ரொமான்ஸ்,அங்கங்க லைட்டா வர்ற காமெடி இதெல்லாம் தான் ஓரளவுக்கு படத்த சுவாரசியப்படுத்துது.கதை விவாதத்துக்கு நன்றினு ஒரு 5 பேரோட பெயர டைட்டில்ல போடுறாங்க அவங்க அப்படி என்னதான்யா விவாதம் பண்ணீருப்பாங்க?
நாசர்ங்கிற அருமையான திறமைசாலிய இன்னும் தமிழ் திரையுலகம் வீணடிச்சுட்டு தான் இருக்கு.நச்சுன்னு அவருக்குன்னு கதாபாத்திரம் குடுத்து பெர்ஃபார்ம் பண்ண விட்டா மனுசன் பிண்ணி பிண்ணி எடுப்பார்.

தலைப்பு விளக்கம்- ட்ரைலர்ல பாத்தத விட பெரிசா படத்துல எதுவும் இல்ல.ஹிட் ஆனாலும் ஆச்சர்யபட்றதுக்கில்ல ஆனா புதுசா எதுவும் எதிர்பார்த்து போயிடாதீங்க.

Saturday, 14 January 2012

நண்பன் - ALL IS WELL

தமிழ் திரைப்பட வரலாற்றுல இதுவரை விஜய் அடிச்ச க்ளைமாக்ஸ் தான் வந்திருக்கு ஆனா அடி வாங்குற கிளைமாக்ஸோட வந்திருக்கிற முதல் படம் இதுதான்னு நினைக்கிறேன்.

நான் 3 idiots பார்க்கல அதனால நண்பன மட்டும் விமர்சனம் பண்றேன்.இந்த படத்த விமர்சனம் பண்ணனும்னா குறைஞ்சபட்சம் 3 தடவயாவது பாக்கணும். அவ்வளவு அழகான,நேர்த்தியான விசயங்களை படம் முழுக்க தெளிச்சிருக்காரு ஷங்கர்.”இது காலேஜ் பிரஷர் குக்கர் இல்ல”னு சொல்ற நாயகனுக்கும், "லைஃப் இஸ்  எ ரேஸ், நீ ஓடலீனா தோத்துருவ"னு சொல்ற வாத்தியாருக்கும், “இந்த சிஸ்டம வெச்சே படிச்சு உங்கள விட பெரிய ஆள் ஆகிக் காட்டறேண்டா” என சொல்லும் டப்பா உருட்டி மாணவனுக்கும் இடையே நடக்கும் வாழ்வியல்,கல்வியியல் ரீதியிலான மோதலும்,கோபமும்,நட்பும்,நன்றியும் தான் நண்பன்.படத்தோட மிகப்பெரிய பலமே கதாபாத்திரங்களின் அமைப்பு தான் அதனால ஒவ்வொரு கதாபாத்திரமாவே பார்ப்போம்.



இலியானா- யாருப்பா அது எட்டாங்க் கிளாஸ் ல அசெம்ப்ளி லைன்ல கடைசில நிக்கற பொண்ண எல்லாம் ஹீரோயின் ஆக்கினது? மொசு மொசுனு இட்லி சாப்பிட்ற தமிழனுக்கு இந்த நூடுல்ஸ் சரிப்பட்டு வருமான்னு தெரில.பொண்ணுக்கு பெருசா ஒண்ணும் வாய்ப்பு இல்ல.பாட்டுல கூட பக்கத்துல ஆட்ற ஃபிகருங்கள தான் கண்ணு பாக்குது.தண்ணி அடிச்சுட்டு பேசுற சீன்ல மட்டும் அப்ளாஸ் வாங்குறாங்கோ.எனக்கொரு சந்தேகம் தெலுங்கல ஓடி முடிஞ்ச வண்டிங்கள(அனுஷ்கா,ஜெனிலியா,காஜல் அகர்வால்,இலியானா) எல்லாம் பெரிய ஃபிகர்ஸ்னு சொல்லி தமிழுக்கு கொண்டு வரீங்களே டைரடக்கர்ஸ் இவங்க எல்லாரும் தமிழ்ல ஆரம்ப காலத்துலயே இருந்தவங்க தான அப்ப வுட்டுட்டு இப்ப ஓல்டு பீஸ் ஆனப்புறம் 1 கோடி சம்பளம் குடுத்து கூட்டிட்டு வரீங்களே இதெல்லாம் அடுக்குமா? ஹீரோயின்ஸ எப்படி மெயிண்டெயின் பண்ணனும்னு தெலுங்கு படவுலக மக்கள பாத்து கத்துக்கங்கப்பா.ஸ்ரேயா,தமன்னானு எங்கள கொடுமைபடுத்தினதுக்கு இனிமேலாவது பிராயசித்தம் பண்ணுங்க.ஹன்ஸிகா பாப்பாவயாவது ஒழுங்கா மெயிண்டெயின் பண்ணுங்க.



ஷ்ரீகாந்த்- இதுவரைக்கும் வந்த படத்துலயே இதுல தான் ஸ்மார்ட்டா இருக்கார்.படிக்க முடியாம வருத்தப்படும் போதும்,நண்பன் முதலாவதா வரும் போது கடுப்பாவதும்,கேம்பஸ் இண்டர்வியூ போகாம தந்தையிடம் எப்படி தன் ஆசையை புரிய வைப்பதென தெரியாமல் மருகுவதிலும் சரி நல்ல பாவனைகளுடன் பண்ணிருக்கார்.அதுவும் ஜெயா அக்காவ கல்யாணம் பண்ணி வெச்சிருவாங்களோனு முழிக்கற சமயம் டாப்பு.

ஜீவா- எங்க எத செய்யணுமோ அங்க அத செஞ்சிருக்கார்.நல்ல முதிர்ச்சி.

சத்யன் - ஜட்டி பெல்ட்ல இருந்து டிக்‌ஷ்னரி எடுத்து தமிழ் பேசறதுல ஆரம்பிக்கற இவரோட அலப்பறை ‘நட்புல இதெல்லாம் சகஜமப்பா’னு சரண்டர்  ஆகற வரை வெளுத்து வாங்கறார்.டப்பா அடிச்சே பெரிய ஆள் ஆயிடலாம்னு சுத்திட்டிருக்குற சாம்பார் கதாபாத்திரத்துக்கு கனகச்சிதம் “I didn't do it.senthiiiil”, "sir they are still writing","வாங்கடா தோத்தாங்கோளிகளா", ”நட்புல இதெல்லாம் சகஜமப்பா”,உச்சகட்டமாக மேடைப் பேச்சு என வசன பாவத்துல (அதாங்க மாடுலேஷன்) பிச்சு எடுக்குறார்.அமெரிக்க வீடு,வேலை என பீத்திக் கொள்வது முதல் ஜீவாவிடம் பேண்ட் என்னுது என அவிழ்க்க போராடுவது  வரை இவர விட்டா இந்த கதாபாத்திரத்துக்கு சத்தியமா வேற யாரும் பொருந்த முடியாது.



சத்யராஜ் - நீண்ட இடைவெளிக்கப்புறம் சத்யராஜுக்கு சரியான வேட்டை.நாக்கு துறுத்தி வசனம் பேசும் பாங்கு,தன்னுடைய கொள்கையை விட்டுக் குடுக்காத அடம்,கண்டிப்பான வாத்தியார்னு பக்காவா செஞ்சுரி அடிச்சிருக்கார்.ரொம்ப அலட்டிக்காம மாணவர்களுக்கு தண்டனை வழங்குவது,விஜயிடம் மூக்குடைபடும்போது பொருமுவது, மகளோட பிரசவத்தப்ப பதறுவது, விஜயிடம் தன்னுடைய தோல்வியை கண்டிப்பான ஆசிரியராகவே வெளிப்படுத்துவது என சத்யராஜ்னு நினைச்சா நினைவுக்கு உடனே வரக்கூடிய கதாபாத்திரமா இதுல முத்திரை பதிச்சிருக்கார்.

விஜய் - அமீர்கான் பாத்திரத்துல விஜயா?னு புருவம் சுருக்குன ஆளுங்களுக்கெல்லாம் பலமாவே பதில் சொல்லியிருக்கார். மலங்க மலங்க முழிச்சுட்டு முதலாமாண்டு மாணவனா ராகிங் நடக்கறப்ப விடுதிக்குள்ள வராரு விஜய்.சீனியர்களின் ராகிங்கு பயந்து ரூமுக்குள்ள போய் கதவ சாத்திக்கறாரு.பத்து எண்றதுக்குள்ள வெளிய வரணும்னு சீனியர் மிரட்டுறாரு.நமக்கு உடனே மனசுல என்ன தோணிச்சுனா தலைவர் பட்டாசான ஒரு பிண்ணனி இசையோட கதவை எட்டி உதைச்சு வந்து நிக்க போறாருனு தான் சத்தியமா தோணுச்சு.ஆனா படம் முடிச்சுட்டு வெளிய வர்றப்ப விஜய் ஒரு நெருங்கிய நண்பனா தோன்றுகிறார்.அது தான் அவரோட நடிப்பின் வெற்றி.இப்படி படத்தோட உயிரோட்டமாக விஜய பாத்து ரொம்ப நாள் ஆச்சு.ஒரே ஒரு விசயம் விஜய்க்கு உங்க விருப்பப்படி உருட்டுக்கட்டை,அருவா,துப்பாக்கினு நடிச்சாலும் இப்படி எல்லாருக்கும் பிடிக்கற மாதிரி படங்கள் கண்டிப்பா பண்ணுங்க.விஜயை எந்த உறுத்தலும் இல்லாம இரசிக்க முடிஞ்சது தான் மகிழ்ச்சி (நல்லவேளை சூர்யா நடிக்கல).

ஷங்கர்- அழகான படத்த நேர்த்தியா,அதன் இயல்பு கெடாம,சிறந்த பாத்திர தேர்வோட தந்ததுக்கு நன்றி.

எஸ்.ஜே.சூர்யா, அமெரிக்க மாப்பிள்ளை,அஷ்க லஷ்கா பாட்டுல ஷங்கர் தன்னைத் தானே ஓட்டிகிட்டது எல்லாம் வானவெடியில் சில பொறிகள்.

உறுத்தல்கள்:
1)  பஞ்சவன் பாரிவேந்தன், சேவற்கொடி செந்தில்னு தமிழ் பெயர்கள் வெச்சது மகிழ்ச்சி ஆனா ”பாரிவேந்தனா? யக் (yuck)”னு இலியானா சொல்றப்ப (அப்படி சொல்லக் கூடிய சைலன்சர்கள் உண்டுனு வைங்களேன்) பொடனில ஒரு போடு போட்ருந்தா சந்தோசபட்ருப்போமே.ஒரு வாட்டி தமிழர்கள் கிட்ட கெட்ட பேர் வாங்கினது போதாதா? (அலோ பாஸ்... நான் ஐ.ஜே.கே ஆள் இல்லப்பா சங்ககால தமிழ் பெயர்ங்கிறதால் கேட்டேன்.நான் அந்த பப்ளிசிட்டி கூட்டத்துல சேர்த்தி இல்ல)

2) ஆளாளுக்கு பேண்ட் அவுக்கறது நல்லாலீங்க பாஸ்.

3) சத்யனின் மேடை பேச்சுல டபுள் மீனிங்க தவிர்த்துட்டு நேரடியாவே பலான பலான டயலாக்ஸ விளக்கத்தோட எடுத்து விட்டதுக்கு மாற்று ஏற்பாடு ஏதாவது செஞ்சிருக்கலாம் (குடும்பத்தோட போனதால வந்த ஃபீலிங்).

நண்பன் - ALL IS WELL