Sunday 20 November 2011

அலைவீசும் வாழ்வு

                                                   

 சீறிச்சென்ற படகு உருண்டு வந்த அலையை கிழித்து முன்னேற சிதறிய கடல் நீர் முகத்தில் அடித்தது ஆபிரகாமிற்கு.மறையும் சூரியனின் கடைசி சுவடுகளும்,விழித்தெழும் நிலவின் இளம் ஒளியும் கலந்த அந்த மாலைப் பொழுதில் படகின் நுனியில் இந்திய தேசிய கொடி கட்டிய கம்பைப் பிடித்தபடி நின்றிருந்த ஆபிரகாமின் முகத்தில் தெளித்த கடல் நீரின் துளிகள் அவன் சிந்தனையை கலைத்தது. சிந்தித்தது போதும் போய் தொழிலைப் பார் என அன்னை தன் கண்ணத்தில் தட்டி சொன்னது போல் இருந்தது.படகைக் கட்டி கடலில் இறங்கி நிலம் மறந்து நீரில் வலை வீசும் மீனவர் அனைவருக்கும் கடல் தானே அன்னை.
அதிகாலையே தன் சகாக்கள் பழனி, ஜெயக்குமார் இருவருடனும் படகை தயார் செய்து வலையை தூக்கி போட்டு கிளம்பி விட்டான். வலையை செப்பனிட்டுக் கொண்டிருந்த பழனி அருகில் போய் அமர்ந்தான்.சீமெண்ணை அடுப்பில் போட்ட டீயை எடுத்து ஆபிரகாமிற்கு கொடுத்தான் பழனி.தலை முடியை கிளறிவிட்டு சட்டையையும்,லுங்கியையும் பிரித்து எடுத்துக் கொண்டு போக நினைப்பது போல வேகமாய் அடித்தது கடல் காற்று.எதையோ தேடிச் செல்லும் குழந்தை போல தத்தித் தத்தி கடலில் போனது படகு.
                                 “என்னடே அங்க போய் நின்னு என்ன ரோசனை?” வலையிலிருந்து கண்ணெடுக்காமல் கேட்டான் பழனி.
                                 “ஒன்னும் இல்லடே சும்மாதான்” கடலையே பார்த்துக் கொண்டிருந்தான் ஆபிரகாம்
                                  “என்ன சந்தோஷ பத்தி நினைப்பா? இல்ல எலிசா பத்தியா?” கடலுக்கு நடுவே ஓடும் ஒவ்வொரு மீனவனுக்கும் பெண்டாட்டியும்,பிள்ளையும்  தான் முதல் நினைப்பு என்பதால் அவ்வாறு கேட்டான்.
                                   “சந்தோஷ் தான்டே.பய என்னமா படிக்கிறான் தெரியுமா? என்னென்னமோ பேசரான்டே.பாட புத்தகம் போக எதேதோ புத்தகமெல்லாம் படிக்கிறான்.8 வது தான அந்த பய படிக்கிறான்.இந்த வயசுல அவன் செட்டு பசங்க வீட்டுல காச திருடிட்டு போயி சினிமா பாக்கறானுவோ,பீடி குடிக்கறானுவோ,தண்ணி அடிக்கறானுவோ ஆனா இந்த பய கிட்ட என்ன வேணும்னு கேட்டா புத்தகமா வாங்கியார சொல்றான்டே.எனக்கும்,எங்கப்பனுக்கும்,அவங்கம்மா வகையறாக்கும் படிப்பு வாசனையே இல்லடே இவனுக்கு மட்டும் எப்பிடி இப்பிடி தோணுதுனு தெரிலடே.முந்தாநேத்து ஒரு புத்தகம் வாங்கித் தர சொன்னான்டே நானும் போய் வாங்கிப் பாக்கறேன் அம்மாந்தண்டி இருக்குடே ”   என தன் கைகளை அகல விரித்து மகிழ்ச்சியும்,பெருமையும் உந்தித்தள்ளி முகத்தில் வழிந்த புன்னகையுடன் அவன் சொன்னதைப் பார்த்த பழனிக்கும் பெருமிதமாய் இருந்தது.

                                      “எடே இன்னும் மேக்க போனாத்தேன் மீனு மாட்டும் போல.சி.பி.எஸ்ஸு அப்பிடித்தேன் காட்டுது” படகை ஓட்டிக் கொண்டிருந்த ஜெயக்குமார் சொல்ல அப்படியே ஓட்டச் சொல்லி சைகை காட்டிவிட்டு பேச்சைத் தொடர்ந்தான் பழனி.

                                      “எல்லாம் நீ கும்பிடற சாமி குடுத்ததுடே, எலிசாவும் அப்பிடி வளத்திருக்கு பையன” என பழனியும் உடன் பேச அவன் கையை அமர்த்தி ஆச்சர்யம் கலந்த ஒரு குற்ற உணர்ச்சியுடன் அடுத்த சேதி சொன்னான் ஆபிரகாம்.

                                     “நேத்து போதைல அவங்கம்மாவ போட்டு மிதிச்சுட்டேன்டே.உடனே வந்து என் கையப் புடிச்சி இழுத்து அடிக்காதீங்கனு சொன்னான்.ஏதோ அதிகாரமா சொன்னான்டே.அது அப்படியே எங்கப்பு வந்து தடுத்த மாரி இருந்துதுடே” குரல் தளர்ந்து போக கண்களில் கண்ணிர் வழிந்தது.துடைத்துக் கொண்டான். “அன்னைக்கு ஒரு நாள் அவன் சின்ன பையனா இருந்தப்ப அவங்கம்மா கூட சண்டை வந்து அடிச்சு, அவ தீ வெச்சுக்க போயி ஊரே வந்து ஏசுச்சே அப்ப நான் எவன் பேச்சாவது கேட்டனாடே? ஏன் நம்ம தலைவர் ஜார்ஜ் அண்ண கூட வந்து சொல்லுச்சே கேட்டனாடே? இவன் சொன்னதும் என் மூளைக்கு எட்டுச்சோ இல்லையோ அப்படியே அடங்கிட்டன்டே” புல்லரித்த கைகளை தடவிக் கொண்டே சொன்னான்.
“அவுகள ராமநாதபுரத்துல பெரிய பள்ளிக்கூடமா கொண்டு போய் வுடனும், அப்புறம் அந்த சாராயத்தையும் தொடக்கூடாதுடே அவுகளுக்கு பிடிக்கலனா அப்புறம் எதுக்கு அந்த கருமத்த குடிச்சிட்டு”
அபிரகாம் குடியை நிறுத்தப் போவதாய் சொன்னதும் தலையை கவிழ்த்து நக்கலாய் சிரித்தான் பழனி.
“என்ன வழக்கமா குடிகாரனுக சொல்றதுதான நெனச்சு சிரிக்கீகளோ?” ஆம் என்பது போல் தலையாட்டி அடக்க மாட்டாமல் சிரித்தான்.
“நீ பாக்க தான போற” கைகளை நீட்டி நெட்டி முறித்து எழுந்தான்.

மிக அருகில் தெரிந்தது ஒரு தீவு.மீன்கள் அதிகமாய் இருப்பதாய் ஜி.பி.எஸ் காட்ட வலைகளை கடலில் வீசிவிட்டு அமர்ந்தனர்.
“இந்த தீவு இருக்கே இங்கன எல்லாம் எங்கப்பு இருக்கைல குடிசை போட்டு தங்கி ஒரு வாரம் மீன் பிடிப்பாகளாம்.இப்பல்லாம் அப்பிடியா நடக்கு? கரைகிட்டயே மீன புடிச்சுகிட்டு வீட்டுக்கு போங்கடானு சொல்றானுவ.எல்லாம் தலையெழுத்து.எவனோ எவனுக்கோ எழுதி குடுத்துட்டானாம்.பாட்டன்,பூட்டன் காலத்துல இருந்து நம்ம சொத்துடே.நம்மல வரக்கூடாதுனு எவனெவனோ சொல்லுதான்” ஜெயக்குமார் வெறுப்புடன் பேசினான்.

“இந்தத் தீவு மட்டுமா? கெழக்க கடல தாண்டி இருக்க பல நாடு நம்ம தமிழ் ராசாங்க தான் வெச்சிருந்தாகளாமா.இந்த சிங்கப்பூர் இருக்குல்லடே.நம்ம தினேசு கூட பெயிண்ட்டு வேலை பாக்க போனானே அது நம்ம ராசா கைல இருந்துச்சாம்.இதையும் என் பையந்தான்டே சொன்னான்’ பெருமிதத்துடன் கூறினான் ஆபிரகாம்.
“அதெல்லாம் இப்ப இருந்திருந்தா கடலே நம்முளுதா இருந்திருக்குமே மக்கா” பேராசையில் பொருமினான் பழனி.
“நம்மள அங்க மீன் புடிக்காத இங்க மீன் பிடிக்காதனு எந்த சிறுக்கி மவனும் சொல்லிருக்க முடியாதுல்லடே” ஜெயக்குமாரும் ஆமோதித்தான்.
முதல் வட்டம் வலையை இழுத்த பொழுது அதில் ஓர் நீண்ட ஒரு உறை போன்று இருந்தது.தங்கமோ என சோதித்துப் பார்க்க அது வெண்கலத்தால் ஆன பழங்காலத்து வாள் எனத் தெரிந்தது.வலையைப் போட்டது ஆபிரகாம் என்பதால் அந்த வாள் அவனுக்குத் தான் என முடிவானது. அதை பத்திரமாய் கொண்டு போய் படகடியில் வைத்து விட்டு வந்தான்.மீண்டும் வலையை வீசிவிட்டு அமர்ந்தனர்.அந்த வாளைக் கொண்டு போய் மகனிடம் கொடுக்கும் போது அவன் முகம் எவ்வாறு மலரும் என நினைத்து பார்க்கையிலே அவனுக்கு சிலிர்ப்பாய் இருந்தது.அந்த வாளை வைத்துக் கொண்டு இன்னும் நிறைய மன்னர்களின் கதைகளை அவன் சொல்லுவான்.அவன் அந்தக் கதை சொல்லும் பாங்கை இரசித்து இரசித்து ஊருக்கே சொல்லலாம் என கனவு கண்டான்.

“சிங்களன் வாராண்டே” எங்கிருந்தோ வந்த குரல் அவன் கனவைக் கலைத்து பரபரப்பைப் பற்ற வைத்தது.முகத்தில் கலவரம் தெறிக்க மூவரும் சுறுசுறுப்பாய் இயங்கினர்.உடன் மீன் பிடித்த மற்ற படகுகள் எல்லாம் சிட்டாய் பறந்து இந்தியாவை நோக்கி பயணித்தனர். ”குமாரு நீ படக ஸ்டார்ட் பண்ணுடே நா வலைய இழுக்குதேன்” ஜெயக்குமார் ஓடிச்சென்று என்ஜினை இயக்கினான்.இயங்க மறுத்தது.இதயம் படபடவென அடிக்க மீண்டும் இழுத்தான் என்ஜின் பழுதாகிவிட்டதாய் தோன்றியது.இம்மி அளவு கூட இயங்கவில்லையாதலால் உயிரே போனது குமாருக்கு. “இன்னும் என்னடே பண்ற?” கோபவெறியுடன் கத்திக் கொண்டு என்ஜின் இருக்கும் படகின் அடித்தளத்திற்கு வந்த பழனி குமாரை தள்ளிவிட்டு என்ஜினை பார்க்க அது ஈவு இரக்கமற்றதாய் இருந்தது.இருவருக்கும் குலையே நடுஙியது.பழனி உடனே மேலே ஓடிச்சென்று வலையை இழுத்துக் கொண்டிருந்த ஆபிரகாமிடம் சொல்ல அவன் முகம் வெளிறியது.பழனி அழத் தொடங்கி விட்டான்.சிங்கள கடற்படையின் ரோந்துப் படகு அவர்களுக்கு வெகு அருகில் வந்தது.இருவரும் ஓடிச்சென்று படகின் அடித்தளத்தில் ஒளிந்து கொண்டனர். ஜெயக்குமார் தலையில் அடித்துக் கொண்டு அழுதான்.படகின் அருகில் வந்த சிங்களர்கள் படகிற்குள் உருட்டுக் கட்டையுடன் இறங்கினர்.துப்பாக்கியை தேவைப்பட்டால் மட்டும் பயன்படுத்தும்படி அவர்கள் அரசாங்கம் சொன்னதால் உருட்டுக்கட்டை ஆயுதமானது.

வலையை அறுத்துவிட்டு படகினுள் சென்றனர்.அடித்தளத்தில் ஒளிந்து கொண்டிருந்த மூவரையும் கண்டு ஆத்திரத்துடன் அருகில் வந்தான் அவர்களில் பெரிய அதிகாரியாய் இருப்பவன்.உடனிருந்த மற்றொரு அதிகாரி படகின் எரிபொருளாக வைக்கப்பட்டிருந்த டீசலை எடுத்து தங்கள் படகில் வைக்குமாறு சிப்பாயிடம் பணித்தான்.அவனும் அவ்வாறே செய்தான்.உருட்டுக்கட்டையுடன் வந்த அதிகாரி அதை அவர்கள் முகத்துக்கு நேராய் நீட்டி “உங்களுக்கெல்லாம் எவ்வளவு தடவ சொன்னாலும் புரியாதாடா பரதேசி நாய்களா. கச்சத்தீவு எங்களோடது. இங்க எந்த தமிழ் நாயும் வரக்கூடாது.சொல்லுங்கடா சிங்கள மாதாவுக்கு தமிழன் அடிமை.மூணு பேரும் சொல்லுங்க.சிங்கள மாதாவுக்கு தமிழன் அடிமை.ம்... சொல்லுங்கடா” சிங்களத்தில் அவன் பெசியது ஏதும் புரியாமல் விழித்தனர்.ஆனால் அவன் கோபமாய் பேசியதால் என்னவோ விபரீதம் என மட்டும் புரிந்தது.பயத்தில் மூவரும் திகிலடைந்து கை தூக்கி கும்பிட்டபடி அழுதனர்.”சொல்லமாட்டிங்களாடா திமிர் புடிச்ச பன்னிகளா” என கட்டையை ஆபிரகாம் முகத்தில் வீசினான் அதிகாரி. பெரும் அடி கன நேரத்தில் விழ முகம் உடைந்து இரத்தம் தெறிக்க பழனியின் மீது சரிந்தான் ஆபிரகாம்.சற்று முன் உயிரோடிருந்த நண்பனின் இரத்தம் அரை முழுதும் தெறித்தது கண்டு அரற்றினான் பழனி.ஜெயக்குமாரோ புத்தி பேதலித்தது போல் பார்வை குத்திட்டு ஆபிரகாமையே பார்த்து வாய் பிளந்தபடி அமர்ந்தான்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு ஆபிரகாம் வலையில் கண்டெடுத்த அவன் இரத்தம் தோய்ந்த  வாளை சந்தோஷிடம் தந்தான் பழனி.
                                         
“கச்சத்தீவு முடிந்து போன விடயம் அதற்கும் இந்தியாவிற்கும் சம்பந்தமில்லை.அது இலங்கையின் ஒரு பகுதி.தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்கக் கூடாது”- பாரதப் பிரதமர்

எவன் சொத்துக்கு எவன் நாட்டாமை?

                                                                                                    -மு.சுந்தர பாண்டியன்

No comments:

Post a Comment