Saturday, 19 November 2011

மேலோரும் கீழோரும்

சீர்மிகு கலாச்சாரம்


பன்னெடுங்காலத்திற்கு முன் இந்த உலகின் ஒரு மூலையில் ஒரு மனித குழு வாழ்ந்து கொண்டிருந்தது. கல்,ஈட்டி என குறுகிய விஞ்ஞானத்தோடு வேட்டைக்காரர்களாய் அந்த மனிதர்கள் வாழ்ந்தனர். இயற்கையோடு வாழ்ந்த பொழுது அம்மக்களின் வழிபாட்டு முறைகள் எளிமையானதாகவும், அடிப்படை நியாயங்கள் உடையதுமாய் இருந்தது. அந்த முறையில் கடவுளாக வழிபடப் பட்டவர்கள் யார் என காண்கையில் உளவியல் ரீதியான உண்மைகள் வெளிவரும்.தான் கண்டு பயந்த விடயங்களிடமே தனக்கு பாதுகாப்பு கோரினான், தன்னை காப்பதாய் உணர்ந்த விடயங்களை போற்றி வணங்கினான். நெருப்பு, ஒளியின் ஆதார்மான சூரியன், இரவில் ஒளி தரக் கூடிய நிலவு, வாழ்க்கை ஆதாரமான பூமி,கால்நடைகள்,கடல்,ஆதி காலத்தில் மனிதனின் உறைவிடமாய் இருந்த ஆலமரம் உள்ளிட்ட மரங்கள், தன்னை பயமுறுத்திய இடி,மழை ஆகியவற்றிற்கு தன்னை அடிமை ஆக்கிக் கொண்டான், உனக்கு வேண்டியதெல்லாம் நான் தருகிறேன் என்னை தீமை அண்டாமல் காப்பாற்று என வேண்டினான்.தன்னுடைய தேவைகள் நிறைவேற வேண்டும் என்ற ஆசைக்கு நம்பிக்கை பிடிப்பினையாக அந்த சக்திகளை வணங்கத் தொடங்கினான்.தனக்கு தேவயானதை கேட்டு வேண்டுதல்களை வைக்கத் தொடங்கினான்.இவ்வாறு அவன் வழிபட்ட இயற்கை சக்திகள் பரிமாணம் பெற்று வளர்ந்து கடவுள்களாக உருவம் பெற்றன.தான் உயர்ந்ததாக கருதியவற்றை கடவுளுக்கும் படைத்தான். மேலும் குழு குழுவாக பிரிந்து வாழ்ந்த மக்கள் தங்களுடைய மக்களுக்காக வாழ்ந்து அளப்பரிய செயல்கள் புரிந்த முன்னோர்களையும் வணங்கத் தொடங்கினர்.அவர்களே அந்தக் குழுவின் காவல் தெய்வங்கள் ஆயினர்.அந்த மக்களில் தொழில் ரீதியான பிளவுகள் பெரிதும் இல்லை. குழுவில் வீரத்தில் சிறந்தவன் தலைவன் ஆனான், வேட்டையாடவும்,போர் புரியவும் தெரிந்தவன் போர் வீரன் ஆனான்,பானை முதலியவற்றை செய்யத் தெரிந்தவன் அதை செய்தான்.ஒருவன் பானை பிடிக்கும் தந்தைக்குப் பிறந்து போரில் சிறந்து விளங்கினால் அவன் போர் வீரன் ஆனான்.அதற்கு எந்தத் தடையும் இருந்ததில்லை.தகுதிகள் அடிப்படையில் தான் தொழில் செய்தான்.திருமணங்களுக்கும் பெரிதாய் கட்டுப்பாடுகள் இல்லை.பெற்றோர்கள் பார்த்தும் நடந்தது,ஒரு ஆண் ஒரு பெண்ணை விரும்பி பெண்ணுக்கும் விருப்பம் இருப்பின் அவளை அழைத்து ஊருக்கு அறிவித்துவிட்டும் குடும்பம் நடத்தலாம்.இவ்வாறு வாழ்ந்த அந்த பெரும் பண்புடைய மக்கள் வானியல்,கடல் பயணம், மருத்துவம் போன்ற பல கலைகளை உணர்ந்து தெரிந்து கொண்டனர்.இதே ரீதியில் தான் எல்லா நாகரீகமும் வளர்ந்திருந்தாலும் மற்ற எல்லா நாகரீகத்திற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சீரிய சமுதாயமாய் வாழ்ந்த அந்த மக்கள் யார் தெரியுமா? தமிழர் தான்,நம்புங்கள் தமிழர் தான்.

ஏனிந்த வெறி?

எதற்காக இதை எல்லாம் இப்பொழுது சொல்ல வேண்டும் எனக் கேட்டால் எல்லாம் ஒரு ஆதங்கமும்,கோபமும் தான். எனக்குத் தெரிந்த சில நண்பர்களின் வீட்டில் நடந்த விடயங்கள் தான் அதற்குக் காரணமும். ஒன்றுமில்லை வழக்கம் போல காதல் தான் பிரச்சனை.சாதி மாறி காதலிப்பது அதை விட பெரும் பிரச்சனை அல்லவா.மகனோ,பேரனோ வேறு சாதி பெண்ணைக் காதலித்தால் அவன் முகத்தில் கூட முழிக்க மாட்டேன் என வாழ்கின்ற பெற்றோரைக் கண்டேன், அவனிடம் பேசக் கூட மாட்டேன் என அவன் வீட்டில் இருக்கின்ற நேரத்தையெல்லாம் நரகமாக்கிவிடுகின்ற பெற்றோரையும் கண்டேன்.இவ்வளவுக்கும் மேலாக “அவன் சத்தியாமா நல்லாவே இருக்க மாட்டான்” என வயிறெரிந்து சாபமிடும் பெரியோரையும் நேரில் கண்டேன். அதே மக்கள் தங்கள் பிள்ளைகள் மீது அளவற்ற பாசம் பொழிந்ததையும் கண்டிருக்கின்றேன். அதனால் அர்த்தமில்லாத சாதி என்னும் பெயரால் தங்கள் அன்பையெல்லாம் அடியோடு கரைத்துவிட்டு ஒரு வெறியோடு கரைத்துக் கொட்டியது எனக்கு அதிர்ச்சி தரக் கூடியதாய் இருந்தது.காலங்கள் கடந்தால் காயங்கள் மாறும் என நினைத்ததும் பொய்யாய் போனது.(சாதிக்காக பிள்ளைகளை கொன்று எறிந்தவர்கள் பற்றிக் கூட கேள்விப்பட்டிருப்பீர்கள்.) அந்த சாதியின் மீது அவர்களுக்கு ஏன் அவ்வளவு பாசம்? ஏன் இவ்வளவு வெறி? அந்த காதல் திருமணத்தின் மூலம் பேரப்பிள்ளைகள் கிடைத்த பின் கூட அவர்கள் கோபம் குறைவதில்லை ஏன்? வார்த்தைகளால் சித்திரவதை செய்யும் போக்கு ஏன்? இளைய தலைமுறையினர் பலர் காதல் திருமணம் செய்ய வீட்டினை நாடும் பொழுது 100 ல் 80 பேர் இந்த பிரச்சனைகளை எதிர்கொள்வர் அல்லது எதிர் கொண்டிருப்பீர்கள். அவர்கள் சொல்லும் ஒரு காரணம் ”சொந்தக்காரங்க யாரும் நம்மல மதிக்க மாட்டாங்க”. ஒரு மனிதனை ஏமாற்றுவதும்,குழி பறிப்பதும்,துரோகம் செய்வதும் யார் என உற்று நோக்கினால் அதில் பெரும்பான்மையினர் சொந்தக்காரர்களாக இருப்பார்கள் என்பது தான் உண்மை. அப்படியிருக்க அவர்களுக்காக பிள்ளைகளை எதிர்ப்பது முழுமுதல் முட்டாள்த்தனமான செயல் என்பதே உண்மை.ஆழமான காரணம் வேறு உள்ளது “கீழ்சாதியை சேந்தவங்களா இருந்தா ஒழுக்கம் இருக்காது,நம்ம பழக்கவழக்கம் இருக்காது”. 

வரலாற்று குற்றவாளிகள்
இப்படி சொல்பவர்களை என்ன சொல்லலாம்? மனசாட்சியற்ற குற்றவாளிகள் என்று தான் சொல்ல வேண்டும். சாதாரண குற்றவாளிகள் அல்ல வரலாற்று குற்றவாளிகள்.முதல் பத்தியில் விட்ட இடத்திலிருந்து தொடருவோம். அவ்வாறு சீரும் சிறப்புமாய் பிரிவினையின்றி வாழ்ந்த சமுதாயத்தில் வந்து சேர்ந்தனர் ஆப்கானிசுத்தானுக்கானில் பிழைப்புத் தேடி வந்த ஆரியர்கள்.புதிதாய் வந்த இடத்தில் நிலையாய் பிழைக்க ஓர் வழியோடு தான் வந்தனர்.மன்னர்களை சந்தித்து தாங்கள் கடவுளின் பிரதிநிதிகள் என பறைசாற்றினர். இயற்கையை வணங்கி தமிழ் மக்கள் கட்டி வைத்திருந்த கோவில்களில் தீயசக்திகள் இருப்பதாக கதை கட்டினர்.அவற்றை விரட்ட யாகங்கள் நடத்த வேண்டும் என முறையிட்டனர்.சாத்திரம்,சடங்கு என அவர்கள் காட்டிய கண்கட்டு வித்தையில் மன்னர்கள் மயங்கினர்.மேலும் பல பல யாகங்கள் செய்தால் போர்களில் இணையில்லாத வெற்றிகள் பெற்று மாபெரும் சக்கரவர்த்தி ஆகலாம் என ஆசை காட்டி மன்னர்கள் அருகிலேயே நிரந்தரமாக அடைக்கலம் புகுந்தனர்.வேதங்கள்,உபநிடதங்கள் என பலவற்றை போதித்தனர்.தங்களுக்கு நிரந்தரமாய் அடிமைகள் வேண்டும் என பிறப்பால் சாதிகளைப் பிரித்தனர்.நாடாளும் மன்னனே மணியாட்டும் பார்ப்பானுக்குக் கீழ்தான் என விதிகள் வகுத்தனர்.அடிமைகள் விழித்துக்கொள்ளக் கூடாது என அவர்களுக்குக் கல்வியை மறுத்தனர்.அடிமைகள் அடிமைகளாகவே இருந்தனர்.இது தான் சீர்மிகு தமிழ் சமுதாயம் பார்ப்பன கும்பலால் சீர்குலைக்கப்பட்டது.அன்று பிழைப்புக்காக அந்த அட்டைப் பூச்சிகள் செய்த சாதி என்னும் சூழ்ச்சியால் இன்று நம் மக்கள் ஒருவரை ஒருவர் விரும்பக் கூட முடியாத நிலை, விரும்பினால் பாசமாய் வளர்த்த பெற்றோர் தன்னை எதிரியாய் கருதும் வேதனை.பெரியாரும்,அண்ணாவும் வளர்த்த பெருந்தீயில் பார்ப்பனப் பூச்சிகளின் ஆதிக்கம் பொசுங்கியது. ஆனால் அவர்கள் வளர்த்த சாதி என்னும் சனியன் இன்னும் நம் மக்களைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்க நாமே தானே காரணம்.ஆதிக்க சாதியினரை வரலாற்றுக் குற்றவாளிகள் என்று சொன்னேனல்லவா. ஆம், ஒரு பெரும் சனத்தின் பரம்பரைக்கே காலம் காலமாய் கல்வியை மறுத்த இழிவான புத்தி யாருக்கு? கோவிலிருக்கும் வீதியின் அருகே கூட வரக் கூடாது என தடுத்து நிறுத்திய மட்டமான புத்தி யாருக்கு? ஒரு மனிதனை தொடுவது கூட பாவம் என சொல்லி, தான் மனிதனா இல்லை வெறும் புழுவா என அவனுக்கே புரியாத அளவுக்கு தீண்டாமை செய்த அயோக்கியர்கள் யார்? சக மனிதனை மனிதனாகக் கூடப் பார்க்காத இழிவானவர் யார்? மாடு போல உழைப்பதும்,அரை வயிறு உண்பதும்,உயர் சாதிக்கு முறைவாசல் செய்வதுமே உன் பனி என 5000 ஆண்டுகளாய் ஒரு சமுதாயத்தையே அடக்கி வைத்த கொடூர புத்தி கொண்ட பாவிகள் யார்? வேறு யாருமில்லை சாதி பற்றிப் பெரிதாய் பேசும் ஒவ்வொருவனும் தான். கீழ்சாதி என நீங்கள் சொல்பவர்களுக்கு உங்களைப் போலவே 5000 ஆண்டு கல்வி,இறை வழிபாடு,பண்பாட்டு கல்வி போன்றவை கிடைத்திருந்தால் உங்கள் ஆதிக்க முகம் என்னும் கொடூர சனியன் இந்த இனத்தைப் பீடித்திருக்காது. அவ்வாறு கிடைக்கவிடாமல் தடுத்த வரலாற்று குற்றவாளிகள் நீங்கள் தானே? இன்று இந்த இனமே ஒன்றினைய முடியாமல் தடுமாறிப் போவதற்கு சத்தியமாய் நீங்கள் தான் காரணம். உங்கள் உயர்சாதியில் மட்டும் என்ன ஒழுக்கம் கண்டீர்கள்? 2 படி நெல் கூடுதலாய் கூலி கேட்டதற்காக 52 பேரை ஒரே குடிசையில் வைத்து எரித்தீர்களே கீழ்வெண்மணியில்.நினைவிருக்கிறதா?இந்த ஒரு சோறு பதம் என நினைக்கின்றேன். இது தான் நீங்கள் வளர்த்துக் கொண்ட ஒழுக்கம்.இன்னும் சாதியை பிடித்து வைத்துக் கொண்டு பிள்ளைகளை இழக்காதீர்கள்.சாதி உங்களுக்கு சொந்தமானது அல்ல ஆனால் உங்கள் பிள்ளைகள் உங்களுக்குப் பிறந்ததற்காக வெட்கப்படும்படி வைத்துக் கொள்ளாதீர்கள்.உங்கள் அறிவை நீங்களே வளர்த்துக் கொள்ளுங்கள். மேலும் மேலும் குற்றம் புரியாதீர்கள். எதிர்காலத்தில் உங்கள் முகம் வரலாற்றின் மோசமான பக்கங்களில் பதிவு செய்யப்படும் ஜாக்கிரதை!
                                                                                 -கோபத்துடன் சுந்தர பாண்டியன்

No comments:

Post a Comment