வஞ்சம்
இன்று முதல் உங்களுடைய பார்வைக்காக ஏதோ எனக்கு தோன்றிய ஒரு கதையை முன்வைக்கின்றேன். பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டதுதான் இந்த கதை. சாத்தியமில்லா நிகழ்வுகள் நிறைய வரலாம். அதனால் முன்பே சொல்லிவிடுகிறேன் இது முழுக்க முழுக்க கற்பனைக் கதை தான்.
பகுதி 1- நட்பும் காதலும்
பெங்களூரு நகரம்- உலகின் மற்ற எல்லா நகரங்களையும் போல பணக்காரர்களுக்கு மட்டுமே வளர்ந்து நிற்கும், வளைந்து கொடுக்கும் நகரம். இந்த ஊரில் வெளிநாட்டவரின் பட்டறைகள் அதிகம். அங்கே கணிணியை பற்றி மெத்தப் படித்த கூலியாட்களும் அதிகம். அப்படி ஓர் பட்டறை தான் வின்க்ராக்ஸ் டெக் இன்ஃபோ லிமிட்டட்.
கடந்த 10 நாட்களாக இந்தியா முழுக்க இந்த நிறுவனத்தின் பெயர் அடிபடாத செய்தி சேனல்களே இல்லை என சொல்லலாம். கரீனா கபூருக்கு கால் வலி, ராத்திரி 10 மணிக்கு தூங்கிய ராகுல் காந்தி காலைல 7 மணிக்கே எழுந்து விட்டார் போன்ற செய்திகளுக்கு நடுவே வின்க்ராக்ஸ் அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் 3 பேர் கடந்த 10 நாட்களுக்குள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டதும் 2 நாட்களுக்கு முன் பஷீர் என்னும் அதே நிறுவனத்தை சேர்ந்த கணிப்பொறி பொறியாளர் காணாமல் போனதும் மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது ஒன்றும் ஆச்சரியம் இல்லை. ஏனெனில் உடனடி பணம் பார்க்க ஆசைப்படும் பெற்றோர் அனைவரும் மூலை முடுக்கில் உள்ள பொறியியல் கல்லூரியில் எல்லாம் சேர்த்து விட்டு எப்படா மகன்/மகள் வேளைக்கு போவார்கள் என காத்துக் கொண்டிருக்கையில் இப்படி ஓர் செய்தி வந்தால் எப்படி இருக்கும்? ஏற்கனவே பிள்ளைகளை கணிணிக்குக் கட்டிக் கொடுத்த பெற்றோர்கள் அனைவரும் பொங்கி எழுந்து போராட்டம், மறியல் என இறங்கி விட்டனர். அதற்கு தூபம் போடும் விதமாக மனநல மருத்துவர்களின் பேட்டியும் அமைந்தது “தொடர் பணிச்சுமை காரணமாக மன அழுத்தத்தினால் தான் தற்கொலை செய்வதும், காணாமல் போவதும் நடக்கின்றன” என அவர்கள் கூற “கணிப்பொறி நிறுவனங்கள் தொழிலாளர் சட்டங்களை மதிப்பதில்லை, பணி நேர வரன்முறை இல்லாமல் ஈவு இரக்கமின்றி உழைப்பை உறிஞ்சுகின்றன” என கம்யூனிஸ்டுகள் சொல்ல மாநிலமே பற்றியது. தற்கொலைக்கு கடிதங்களும், காரணங்களும் சிக்காததால் இதையே திரும்பத் திரும்ப அரைத்துக் கொண்டிருந்தன செய்தி நிறுவனங்கள்.
காவல் துறையினர் நிறுவனத்தையே புரட்டிப் போட்டு விசாரணை செய்தும் ஒன்றும் கிட்டவில்லை. இன்று இரண்டாவது முறையாக அனைவரையும் விசாரித்துக் கொண்டிருந்தனர். மேலாளர் அறை விசாரணை அறையாக மாற்றப் பட்டிருந்தது. அலுவலக நேரம் முடிந்தும் விசாரணை நீண்டது...
விசாரனை அதிகாரி ஜெகராஜன் எதிரில் அமர்ந்திருந்தான் சிவா. காணாமல் போன பஷீரின் நெருங்கிய நண்பன். 2 நாட்களாக அவனைக் காணாமல் தேடித் திரிந்த அலுப்பும், அயர்வும் கண்களில் தெரிந்தது. காவலர்களிடமிருந்தாவது ஏதாவது தெரியவரும் என காத்திருந்தான். விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் மண்டைவலியுடன் மேசையை உற்றுப் பார்த்தபடி வினவினார் ஆய்வாளர்.
“பஷீர் காணாம போனப்ப நீங்க எங்க இருந்தீங்க? என்ன பண்ணிட்டு இருந்திங்க?”
“ 2 நாள் முன்னாடி ஆபீஸ் ல வேலை பாத்துட்டு இருந்தப்ப ஹரிணி கால் பண்ணி சொன்னா. அப்ப தான் எனக்கு தெரிய வந்தது”
“ஹரிணி பஷீரோட மனைவி தான?”
“ஆமா”
“அவங்களுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்?”
“ஹரிணி ஸ்கூல்ல படிக்கறப்ப இருந்தே என்னோட தோழி தான்”
“பஷீர எவ்வளவு நாளா உங்களுக்கு தெரியும்?”
“ஒரு 3 வருஷமா. இங்க வேலைல சேந்த அப்புறம் தான் அவன எனக்கு தெரியும்”
“ஹரிணி, பஷீர்க்குள்ள ஏதாவது பிரச்சனை?”
“எனக்கு தெரிஞ்சு இல்ல. அதெல்லாம் நான் கேட்டுக்கறதும் இல்ல”
“ஹரிணி இப்ப எங்க இருக்காங்க?”
“எங்க வீட்டுலதான்”
“நீங்களும் ஹரிணியும் மட்டும் ஒரே வீட்டுலையா?” ஜெகராஜன் புருவம் உயர்த்த அந்த கேள்வியின் அர்த்தத்தை சகிக்க முடியாத சிவா பதிலில் எரிச்சலைக் கூட்டினான்.
“நான், என் மனைவி, ஹரிணி மூணு பேரு இருக்கோம், அவ அவங்க வீட்டில தனியா விட மனசில்ல அதான் எங்க வீட்டுக்கு கூட்டி வந்துட்டோம்” அதற்கு மேல் அவனுக்கு அங்கே உட்காரப் பிடிக்கவில்லை. இருந்தாலும் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் விட்டால் பஷீர் கிடைப்பது தாமதமாகி விடுமோ என்ற அச்சத்தில் அப்படியே அமர்ந்திருந்தான்.
“நாளைக்கு அலுவலகத்துக்கு வரும் போது ஹரிணிய கூட்டிட்டு வாங்க. அவங்க கிட்ட நிறைய விசாரிக்கணும். நீங்க போலாம் ” சிவா மேல் குற்றம் ஏதும் இருக்க வாய்ப்பில்லை என்றே அவருக்கும் தோன்றியதால் அனுப்பி விட்டார்.வேகமாக எழுந்து விரைவாக வெளியேறி கதவை படார் என வேகமாக சாத்தினான். அதையெல்லாம் ஜெகராஜன் பொருட்படுத்தவில்லை. தற்கொலை செய்து கொண்ட மூவருக்கும், தொலைந்து போன பஷீருக்கும் இடையே எந்த ஒற்றுமையும் இல்லை, ஒரு சின்ன தகவலோ, கடிதமோ இல்லை. ஆகையால் ஜெகராஜனுக்கு இருந்து இருந்த கவலைகளில் எதிலுமே கவனம் செலுத்த முடியாமல் தடுமாறினார்.
மணி 6 அடித்து விட்டதால் மகிழ்வுந்தை விரட்டிக் கொண்டு காந்தி நகரில் உள்ள தன் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றான். மகிழ்வுந்துக்கு வீடுகளைக் கூரையாக்கி வைத்திருக்கும் அடித்தளப் பகுதியில் நிறுத்தி விட்டு மூன்றாவது தளத்தில் உள்ள தன் வீட்டிற்கு விரைந்தான்.
சிவா- ஆறடி உயரம், தொப்பை எட்டிப் பார்க்காத வாலிப தேகம், தெளிவான பேச்சு, தின்னமான பார்வை என ஒரு கதாநாயகனுக்குரிய தோற்றம் கொண்டவன்.கண்ணை உறுத்தாத மாநிறமும் அதற்கேற்ற ஆளுமையுடனும் இருப்பவனிடம் ஐசுவர்யா மனதைப் பறி கொடுத்ததில் அச்சர்யம் ஏதுமில்லை.
ஐசுவர்யா சிவாவின் அழகுக் காதலி.அவனுக்கு ஏற்ற உயரம், பளிங்கு தேகம்,ஈர்க்கும் புன்னகை என ஒவ்வொரு அம்சமும் சிவாவின் காதலை சிதறாமல் அணைத்தது.இருவரும் காதலின் எல்லைகளைத் தாண்டி எங்கோ சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றனர் எனினும் திருமணம் செய்து கொள்ளவில்லை. சிறிது காலம் போகட்டும் எனக் காத்திருக்கின்றனர் உல்லாசப் பறவைகள். காலணிகளைக் கழற்றிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தவுடன் இன்முகத்துடன் வரவேற்றாள் காதலி. கையில் வைத்திருந்த பையை வாங்கி விட்டு “போய் கை,கால் கழுவிட்டு வா” துண்டை கையில் கொடுத்து கழிவறைக்கு அனுப்பினாள். உடை மாற்றிக் கொண்டு சோபா வில் வந்து அமர்ந்தான். அவனருகில் வந்து அமர்ந்த ஐசுவர்யா துண்டு சீட்டில் மடிக்கப் பட்டிருந்த விபூதியை நெற்றியில் இட்டாள்.
”கோவிலுக்கு போனியா?”
“ஆமா, ஹரிணி ரொம்ப டிப்ரெஸ்டா இருந்தா அதனால நாந்தான் ஒரு மாறுதலா இருக்குமேனு கோவிலுக்கு கூட்டிட்டு போனேன். அங்கையும் அழுதுட்டே இருந்தா.பாவம்”
“இப்ப ஹரிணி எங்கே?” வெறுமையாய் கேட்டான்
“தூங்கிட்டு இருக்கா”
“இன்னைக்காவது தூங்கினாளே” இரண்டு நாளாக அவள் தூங்காதது நினைத்து வருத்தப்பட்டான். வாடிய முகத்துடன் இருந்த காதலனை தேற்றுவதற்காக அவன் மார்பில் சாய்ந்தாள். சில நாட்களாய் விட்டுப் போயிருந்த ஸ்பரிசம் மீண்டும் கிடைத்த போது புதிதாய் உணர்வது போல் மேனி சிலிர்த்தது.அப்படியே அவளை இறுக்கி அணைத்தான்.
“டேய், என்ன இது பையன் முன்னாடி இப்படியெல்லாம்?” பொய்க்கோபம் காட்டி அவனை விலக்கி விட்டாள்.சட்டென்று அவள் சொன்னதை விளங்கிக் கொள்ள முடியாமல் தவித்தவன் முகம் மலர்ந்து அவள் உதடுகளில் அழுத்தமாய் முத்தமிட்டான். ஆழமான முத்தத்தை விலகவே வேண்டாமென அவனை தன்னருகே இழுத்து பிடித்து அனுபவித்தாள்.
உதடுகள் ஓய்ந்த பின் வெட்கச்சிரிப்புடன் அவன் மார்பில் சரிந்தாள் “சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கடா, ஏமாத்திடாத” என அவன் கண்களை ஏறிட்டுப் பார்த்தாள்.
“பார்க்கலாம்” ஒற்றை வரியில் சிரத்தையே இல்லாதது போல் கள்ளத்தனமாய் பதில் சொன்னதற்காக இரண்டு கொட்டு வாங்கினான்.
“ஹரிணிகிட்ட இன்னும் சொல்லல, சொல்லவா வேணாமா?” ஐசுவர்யா
“வேணாம் ஐசு, பஷீர் கிடைக்கட்டும் ட்ரீட் வெச்சு சொல்லிடலாம்” அதுதான் இருவருக்கும் சரியெனப் பட்டது.
ஐசுவர்யாவிற்கு முன்னரே ஹரிணியை சிவாவிற்குத் தெரியும். இருவரும் 6 வருடமாய் நண்பர்கள்.இவர்கள் வாழ்வில் ஐசுவர்யா நுழைவதற்கு முன்பு ஹரிணியின் மனதில் முழுதாய் அமர்ந்திருந்தான் சிவா. சிவாவிற்கோ நட்பைத் தவிர வேறு எண்ணமில்லை. அவளும் அழகிலும்,அன்பிலும் அளவற்றவள் எனினும் காதல் சிவாவிற்குள் எட்டிப் பார்க்கவில்லை ஆனால் ஹரிணியை வதைத்தது. திடீரென்று வந்தாள் ஐசுவர்யா, சிவாவிடம் காட்டிய அன்பு,அக்கறை எல்லாமே அவனை சிறைபிடித்தது.காதலை கலங்கடித்து விட்டு தனிமை விரும்பியான ஹரிணியை பஷீரின் அன்னை ஒப்ப அன்பு கட்டிப்போட்டது. தன்னை விரும்புபவனிடம் தன்னை ஒப்படைத்துவிட்டாள் இன்றோ அவனையும் இழந்து தவிக்கின்றாள்.
- காத்திருங்கள்
No comments:
Post a Comment