Sunday 20 November 2011

வஞ்சம்-பகுதி 2




                                              வஞ்சம் பகுதி 2- நல்ல விசயம்

காதலோடு உறவாடியது போதும் இனி கணிணியோடு உறவாடலாம் என சன்னமாய் விடிந்த அந்த காலைப் பொழுதில் அலுவலகம் நோக்கி விரைந்தனர் சிவாவும், ஐசுவர்யாவும்.365x24 மணிநேரமும் வாகனங்கள் புதுவெள்ளமாய் பெருக்கெடுக்கும் பெங்களூரு சாலைகளில் முடிந்தவரை வேகமாய் ஊர்ந்தனர் இருவரும்.

ஒருவழியாக கரை கண்டு அலுவலகத்தை அடைந்தனர். சிலநூறு கணிணிக் காதலர்கள் நிரம்பிய இடத்தில் தன்னுடைய மேசை அலுவலகத்தின் ஒரு மூலையில் இருந்தது சற்று அசௌகரியமாய் இருந்தது.தெரிந்த முகங்களுக்கு புன்னகையும், உயர் அலுவலர்களுக்கு காலை வணக்கமும் சொல்லிச் சொல்லியே அலுத்தான்.சம்பளம் வாங்காத வேலையாக அது ஒரு சங்கடம்.ஒரு வழியாக மேசையை அடைந்து இருக்கையில் அமர்ந்தான்.

“குட்மார்னிங் சிவா” சுதாகரின் குரல் அவனை அழைத்தது. கறுப்பு நிறம், தடித்த உருவம்,பெரிய கண்கள், அளவான உயரம் என பார்ப்பதற்கு கறுப்பு கமலஹாசனைப் போல இருப்பான். சிவாவின் உண்மையான நண்பன் அவனுடைய நாட்குறிப்பு என்றே சொல்லலாம் அதே போலத்தான் சுதாகருக்கும் சிவா இருந்தான்.

“குட்மார்னிங் மச்சி, விக்கி வந்துட்டானா?” பதில் தெரிந்தே கேட்டான் சிவா.

“அவனா, நேத்து அவன் ஆளுக்கு பிறந்தநாள்னு சொல்லிட்டு ஸ்டார் ஹோட்டல்ல சரக்கு பார்ட்டி வெச்சிருக்காப்ல. நல்லா தண்ணி அடிச்சிட்டு இப்ப ஹேங்ஓவர்ல தலைவலினு படுத்துட்டு ஆபீஸ் வரல” இருவரும் ஒரே வீட்டைப் பகிர்ந்திருப்பதால் விக்கியால் சுதாகர் படும் தொல்லை கொஞ்சம் நஞ்சம் இல்லை.

“தெரியும், நாயி நேத்து இராத்திரி 2 மணிக்கு போன் பண்ணி ஒளறு ஒளறுனு ஒளறினான்.அவன சமாளிச்சுட்டு போன வெக்கறக்கு 3 மணி அயிடுச்சு” சிவா அலுத்துக் கொள்ள வழக்கமாய் நடக்கும் இந்த கூத்தை நினைத்து இருவரும் சிரித்தனர்.

“ஹரிணி எப்படி இருக்கா?” சற்று தணிந்த குரலில் சுதாகர் கேட்ட பொழுது பெருமூச்செறிந்து தங்களுடைய இயலாமையுடன் கலந்து பரவாயில்லை என்பது போல தலையாட்டினான்.

சிறிது நேரம் கணிணியை நோண்டியவன் சட்டென்று சுதாகரிடம் திரும்பி வாய் நிறைய புன்னகையுடன் “உனக்கு ஒரு சர்ப்ரைஸ் மச்சி” என்றான். சிவாவை நோக்காமலே அசிரத்தையாக ”என்னடா அப்பாவாக போறியா?” என சுதாகர் கேட்க “ஆமா” என குதூகலத்துடன் பதில் சொல்லிவிட்டு தன் பணியை தொடர்ந்தான் சிவா. “டேய் நான் கிண்டலுக்கு கேட்டேண்டா, நிஜமாவே டாடி ஆகிட்டியா?” இன்ப அதிர்ச்சியில் அலுவலகத்துக்கே கேட்கும்படி கத்தினான் சுதாகர்.இப்படி ஒரு எதிர்வினையை எதிர்பார்க்காத சிவா சுற்றி இருக்கும் அனைவரும் தன்னை கலவையான பார்வையுடன் பார்த்து சிரிக்க கேணை போல் ஓரவாய் மட்டும் கோணும்படி ஒரு சிரிப்பை உதிர்த்து விட்டு கடித்து விடுவது போல் சுதாகரைப் பார்த்தான். “இப்பிடியாடா கத்துவ?” சிவா நெளிந்ததில் சுதாகரும் தலையை சொரிந்து கொண்டே ”சாரிடா” என்க சிவா சிறிய புன்னகையுடன் சமாளித்தான். ”சிரிக்கறதெல்லாம் இருக்கட்டும் ட்ரீட் எப்படா?”

“பாக்கலாம்” கிண்டலாக பதிலளித்தான் சிவா.

“டேய் குறைமாசத்துல பொறந்தவனே, கல்யாணத்துக்கு முன்னாடியே அப்பா ஆயிட்டு பாக்கலாம்னு சொல்றியா? டபுள் ட்ரீட் வெச்சே ஆகணும்”

“தாராளமா”

“லீலா பேலஸ்?”

“டீல்”

இருவரின் பேச்சுவார்த்தை முடியவும் அலுவலக ஒலிபெருக்கியில் பொது மேலாளர் விசயராகவன் குரல் ஒலிக்கவும் சரியாக இருந்தது.

“குட்மார்னிங் மை டியர் ஸ்டாஃப்ஸ் உங்களுக்கு சில நல்ல விசயங்கள் சொல்லணும்னு விரும்பறேன்.எல்லாரும் லஞ்ச் ப்ரேக்ல கான்ஃபரன்ஸ் ஹால்ல கூடிடுங்க, சரியா 1:15 மணிக்கு, தேங்க் யூ”

“நல்ல விசயமா? இந்தாள் வாயிலிருந்தா?” சுதாகர் நக்கலடிக்க மெலிதாய் சிரித்துவிட்டு தன்னுடைய அன்றைய டார்கெட்டை முடிக்க வேகமாய் வேலை செய்யத் தொடங்கினான்.

கண்கள் கணிணி திரையை நோட்டமிட்டுக் கொண்டிருக்க விரல்கள் கீ-போர்டில் தாளம் தட்டியது.மனம் மட்டும் ஏதேதோ நினைவுகளைத் தேடி சுற்றிக் கொண்டிருந்தது. 3 பேர் இறந்ததற்கும் பஷீர் காணாமல் போனதற்கும் தொடர்பு இருக்குமோ? அவங்களுக்கும் யாருக்காவது பிரச்சனை இருக்குமோ? கடன் அந்த மாறி ஏதாவது? அப்படி இருந்தா சொல்லியிருப்பானே... என சிந்தனை சுழற்றி வீச மேலும் அவ்வப்போது அவன் பார்த்த ஆங்கில திகில் படக்காட்சிகள் நினைவுக்கு வந்தது.ஒரு சைக்கோ வில்லன் வரிசையாக சிலரை கொடூரமாக சித்திரவதை செய்து கொலை செய்யும் காட்சிகள் பளீரிட சட்டென கண்மூடி நிதானித்தான்.

“தேவயில்லாததெல்லாம் ஏண்டா நினைக்கற பஷீருக்கு ஒன்னும் ஆயிருக்காது.எங்காவது வெளியூர் போயிட்டு எதுலயாவது மாட்டிருப்பான். எப்படியும் வந்திடுவான் இல்ல எப்ப வேனா போன் பண்ணுவான்” என தனக்குத்தானே சமாதானப்படுத்திக் கொண்டான்.

கைபேசி மணி அடித்தது. பஷீராக இருக்குமோ என வேகவேகமாக எடுத்தவன் ஐசுவர்யா அழைப்பது கண்டு தளர்ந்தான்.வழக்கமாய் தேன் போல் ஒலிக்கும் குரல் தற்பொழுது சாதாரணமாய் பட்டது அவனுக்கு.

“டே அத்தான்ஸ், இங்க ஒரு புள்ளத்தாச்சி பசியோட காத்திட்டிருக்கா அங்க கம்ப்யூட்டர வெச்சிகிட்டு என்ன பண்ணிட்டிருக்க?”
அதற்குள்ளாகவா மதியமாகி விட்டது என கடிகாரத்தைப் பார்த்த போது மணி 12:30 ஆகிவிட்டிருந்தது.நினைவுகள் நேரத்தை வேகமாக விழுங்கி விட்டதை உணர்ந்தான்.அரைகுறை பசிதான் இருந்தது, உணவகம் சென்று காதலியைக் கண்டதும் இருந்த பசியும் அடங்கிவிட கெஞ்சல்களுக்காகவும் கொஞ்சல்களுக்காகவும் கொஞ்சமாய் சாப்பிட்டான்.தன் இடது கை புஜத்தை ஆதரவாய் பிடித்து தன் மார்புடன் சேர்த்துக் கொண்டு தோள் மீது தலை சாய்த்து படுத்தபடி கொஞ்சம் கொஞ்சமாய் சாலட் ஐ கடித்த  அழகில் எங்கிருந்து அவனுக்கு பசி வரும்?
“பாஸ் எதுக்காக கூப்பிட்டிருப்பாருன்னு நினைக்கற?” ஐசுவர்யா.
“4 பேர் மேட்டரா இருக்கலாம்” சிவா
“நானும் அதான் யோசிச்சேன் ஆனா ஏதோ நல்ல விசயம்னு சொன்னாரே?”
“மே பி ஏதாவது தகவல் கிடைச்சிருக்கலாம், பாப்போம்”

மணி 1:15 தாண்டி கால் மணி நேரம் ஆனது.சிவா உட்பட அவன் தோழர்கள் அனைவரும் சுற்றி அமர்ந்து அரட்டையடித்துக் கொண்டிருந்தனர்.பாதி பொறியாளர்கள் இன்னும் வரவில்லை பொது மேலாளர் உட்பட.ஒரு வழியாக 1:45 மணிக்கு அனைவரும் ஆஜராகிவிட பொது மேலாளரும் வந்தார்.சலசலவென இருந்த பேச்சு சத்ததிற்கு இடையே விசயராகவன் தன்னுடைய சன்னமான குரலில் பேச ஆரம்பித்தார்.

“குட் ஆஃப்டர்நூன் மை டியர் ஸ்டாஃப்ஸ். உங்க எல்லாரையும் சந்திக்கறதுல ரொம்ப சந்தோசம்.நம்ம நிறுவனம் கடந்த 10 வருசமா மிகச்சிறப்பா இயங்கிட்டிருக்கு.அதுக்கு மேலும் மகுடம் வெக்கற மாதிரி...”

எதையோ மறந்தவர் மேலங்கியின் பையில் இருந்த காகிதத்தை எடுத்துப் பார்த்தார்.கூடத்தில் இருந்து சிரிப்பொலி கிளம்பியது.தொண்டையை கனைத்துக் கொண்டு மீண்டும் பேச்சைத் தொடங்கினார்.

“ஃபிரான்சிலிருந்து வெளிவரக்கூடிய டெக்ஃபோர்ப்ஸ் என்கிற பத்திரிக்கை ’க்விக்கஸ்ட் சாஃப்ட்வேர் சொல்யூசன்ஸ் 2010’ விருதை நமக்கு குடுத்திருக்காங்க.இதுக்கு மூல காரணம் நீங்கதான்.இந்த கூட்டத்தின் மூலமா உங்களுக்கும் டெக்ஃபோர்ப்சுக்கும் நன்றியை தெரிவிச்சுக்கறேன்”

கூட்டத்தினர் கைதட்டி ஆர்ப்பரித்தனர் ஐசுவர்யாவைத் தவிர...

“உனக்கு இதுல சந்தோஷம் இல்லையா?” சிவா

“அப்படினு இல்ல நான் இங்க வேலைக்கு சேர்ந்தது 2011 சனவரில” ஐசுவர்யாவின் அசட்டு நேர்மையை எண்ணி சிரித்தவனை லேசாக கண்ணத்தில் தட்டினாள்.ஆர்ப்பரிப்பில் பூத்த நீளமான புன்னகையை சுருக்கிக் கொண்டு மீண்டும் பேச்சைத் தொடர்ந்தார்.

“இது நமக்கு சந்தோசமான விசயம் தான் இருந்தாலும் இதை விட முக்கியமான விசயம் இருக்கு. சமீபத்துல நம்ம நிறுவனத்துல நடந்த கசப்பான விசயங்கள் உங்களுக்கு தெரியும்.அதுக்குக் காரணம் கம்பெனியில அதிக பணிச்சுமையும் மனழுத்தமும் தான்னு பலர் முக்கியமா மீடியா தவறா பிரச்சாரம் பண்றாங்க.அதுல உண்மையில்லனு உங்களுக்கே தெரியும்.உங்க உழைப்பை மட்டுமல்ல உணர்வையும் நாங்க மதிக்கறோம்னு புரிஞ்சுக்கங்க.பஷீர போலீஸ் கிட்டத்தட்ட நெருங்கிட்டதா காலையில எனக்கு கால் பண்ணி சொன்னாங்க” எனப் புளுகினார்.
சிவா மற்றும் நண்பர்களின் முகம் சட்டென்று மலர்ந்தது உடனே அவரிடம் பேசி மேலும் விபரங்கள் கேட்க வேண்டும் எனத் துடித்தான் சிவா.
”கம்மிங் டு த பாயிண்ட். அரசாங்கத்தோட அறிவுறுத்தலின்படி இனிமேல் இரண்டு மாசத்துக்கு ஒருமுறை மூன்று வொர்க்கிங் டேஸ்ல கம்பெனி ஸ்பான்சர்டு ட்ரிப் உண்டு ” பேச்சை நிறுத்தும் முன்னரே விசில் சத்தமும் கை தட்டலும் காதைப் பிளந்தது.

“நீங்க எங்க போகனும்னு விரும்பறிங்களோ உங்க சிஸ்டம்ல லோட் ஆகியிருக்குற ‘ரிக்ரியேஷன் டேஸ்’ ங்க்கிற அப்ளிகேஷன்ல எண்டர் பண்ணிடுங்க.வி வில் அரேஞ்ச் பார் இட்.தட்ஸ் இட் பார் நவ், தேங்க் யூ”

சிரிப்பும் பேச்சுமாக அனைவரும் கலைந்து செல்ல சிவா மட்டும் விசயராகவனை நோக்கி முன்னேறினான்.
“சார் பஷீர எங்க இருக்கன்னு ஏதாவது சொன்னாங்களா? ஏதாவது பிராப்ளம்ல மாட்டிருக்கானா? சொன்னீங்கன்னா நாங்களே போய் கூட்டிட்டு வந்துடறோம் சார்” நண்பனை பிடிக்க வழி தெரிந்ததில் ஆர்வமாய் பொங்கினான் சிவா.

“நீங்க சிவா? ரைட்?”
“ஆமா சார்” தேவையில்லாத கேள்வி எனத் தோன்றியதால் வேகமாய் பதிலளித்துவிட்டு தன் கேள்விக்கான பதிலை எதிர் பார்த்தான்.
“லொக்கேஷன் எல்லாம் எதுவும் அவங்க சொல்லல இன்னைக்கு சாயங்காலம் கண்டிப்பா பஷீரோட வந்திருவோம்னு சொன்னாங்க” சாவாதானமாய் பதிலளித்தார்.”பை தி வே, பஷீர் விசயம் சால்வ்ட்.அத எங்ககிட்ட விட்டுடுங்க நீங்க உங்க வெக்கேஷன பிளான் பண்ணுங்க.ஹூ நோஸ் பஷீரும் கூட வந்தாலும் வருவார்” தோளில் தட்டிக் கொடுத்துவிட்டு நகர்ந்தார்.தனக்குத் திருப்தியான பதில் கிடைக்காததால் மெலிதான புன்னகையோடு நிறுத்திக் கொண்டான்.

ஐசுவர்யாவிற்கும்,சிவாவிற்கும் சற்று மனத்தாங்கல்.சுற்றுலாவிற்கு ஏற்காடு செல்ல வேண்டுமென்பது ஐசுவர்யாவின் அவா. பஷீர் தான் கிடைக்கப் போகின்றானே பிறகு ஏன் தயங்க வேண்டுமென்பது அவள் வாதம். தன் காதலனோடு 3 நாள் ஆனந்தமாய் கழிக்க எந்தப் பெண்ணுக்கும் ஆவலாய் இருக்கும் அதுவும் கணிணித் துறையில் கிடைக்கும் இந்த அபூர்வமான வாய்ப்பை இழக்க ஐசுவர்யா தயாராக இல்லை.பஷீர் கிடைக்காமல் எந்த முடிவும் எடுப்பதாய் இல்லை என சிவா உறுதியாக இருக்க இருவரும் விட்டுக்கொடுத்த பாடில்லை. நடுஇரவு வரை முதுகைக் காட்டிக் கொண்டு படுத்திருந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் நெருங்கி கட்டி அணைத்துக் கொண்டு படுத்தனர்.

அதே நேரம்....
விசயராகவன் இல்லம்...
தன் படுக்கையில் மடிக்கணிணியை வைத்துக் கொண்டிருந்த விசயராகவன் தன் திட்டப்படி சிவா இன்னும் ஏற்காடை சுற்றுலாவிற்காக தேர்வு செய்யவில்லையே என பதற்றமாய் இருந்தார்.யாருக்கோ அழைக்க அலைபேசியை எடுத்தவர் இது உகந்த நேரமல்ல என விட்டுவிட்டு அடுத்தது செய்ய வேண்டியது குறித்து யோசித்தார்.
                                                                                                     -காத்திருங்கள்

No comments:

Post a Comment