Saturday, 31 December 2011

காதலும் கடவுள் போல

தன்னால் புரிந்து கொள்ள முடியாத
அறிதலுக்கு அப்பாற்பட்ட
புலப்படாத விடயங்களை
தனக்கு மீறிய சக்தியாய் எண்ணி
ஆராதிப்பது மானிட சுபாவம்...



நானும் அப்படித்தான்
உன்னை
தூரத்தில் மட்டுமே தரிசித்து
புரிந்து கொள்ள விழையாது ரசித்து
காதலால் ஆராதித்தேன்...
தற்பொழுது நாத்திகனானேன்...





Wednesday, 28 December 2011

2011 ஆம் ஆண்டு அரசியல் விருதுகள்

2011 ஆம் ஆண்டு காலண்டர தூக்கி போட்டுட்டு 2012 காலண்டர மாட்ட போற உன்னதமான செயலுக்கு வழி வகுக்கும் புத்தாண்டு வேளையிலே இந்த ஆண்டுக்கான அரசியல் விருதுகள் வழங்கும் விழாவுக்கு உங்களை வருக வருக என வரவேற்கிறேன்...

”வந்தாச்சு வந்தாச்சு விருது” 


கடல்லயே கிடைக்காத ஜாமீனை கோர்ட்டில் வாங்கி திராவிட இனத்தின் போர்வாளாக எண்ணிய கம்பிகளை எட்டி உதைத்துவிட்டு வெளியே வந்து ஐ.சி.யூ வில் இருந்த தி.மு.க விற்கு புது இரத்தம் பாய்ச்சிய கனி அக்காவுக்கு “வந்தாச்சு வந்தாச்சு விருது”.



கனி: ”ஜாமீனில் வெளில வந்ததுக்காகவே ஊரெல்லாம் ஃபிளக்ஸ் கட்டி,மோளம் அடிச்சு,கூட்டத்த கூட்டி அகில இந்திய அளவில் அசிங்கப்பட்ட தி.மு.க வினருக்கு இந்த விருது சமர்ப்பனம் செய்கிறேன்”

”சிறந்த ’அப்பா’டக்கர் விருது” 


கூடங்குளத்துல குண்டு வெடிச்சாலும்,முல்லைப் பெரியாறு நாசமா போனாலும்,கட்சிக்காரன் எத்தன பேர் ஜெயிலுக்கு போனாலும் கண்டுக்காம கனிக்கு ஜாமீன் கிடைக்கறது தான் முக்கியம்னு தினமும் டி.வி ஃபிளாஷ் நியூஸ் பார்த்துக் கொண்டே காலத்தை கழித்த தமிழினத் தலைவர் கருணாநிதி அவர்களுக்கு ”சிறந்த ’அப்பா’டக்கர் விருது”


கரு: “இந்த விருது பெற்றமைக்காக ’அப்பாடக்கரான அன்புத் தலைவன்’ என ஒரு பாராட்டு விழா தம்பி ரஜினி,கமல் தலைமையில் ஜெகத்ரட்சகன் நடத்த இருப்பது கேட்டு பேருவகை கொள்கிறேன்”

ஜெகத்: ”தலைவா ஆட்சி போயி ஆறு மாசம் ஆச்சு.”




”தாத்தா பிஸ்கோத்து விருது”


முதல் இன்னிங்சுல வெறித்தனமா ஆடிட்டு இரண்டாவது இன்னிங்சுல மொக்கை அடி வாங்குற இந்திய கிரிக்கெட் அணி மாதிரி.ஊர் முழுக்க கூடி உண்ணாவிரதம் இருந்து அடுத்த காந்தினு பேர் வாங்கி “சரத்பவாருக்கு ஒரு அடிதான் விழுந்துச்சா?”னு கேட்டு தான் டெரர் காந்தினு நிரூபிச்சு இப்ப உண்ணாவிரதம் இருந்து உடனே வாபஸ் வாங்கி. இப்படி பல ட்விஸ்டுகள குடுத்து பிஸ்கோத்தாகிப் போனா ஹசாரே தாத்தாவுக்கு “தாத்தா பிஸ்கோத்து விருது”


ஹசாரே: ”ஏக் காவ் மே ஏக் கிஸான் ரஹ தாத்தா”

”இது வாயா? கால்வாயா? விருது”


’காங்கிரச எதுத்து யார் பேசினாலும் அவங்க நாசமா போயிடுவாங்க,புள்ள குட்டி எல்லாம் நாசமா போயிடும்,ரத்த வாந்தி எடுத்து சாவாங்க’ என ஒவ்வொரு பேட்டியிலும் காங்கிரசை எதிர்க்குறவங்கல சாமகோடங்கி ரேஞ்சுக்கு சாவடிக்கும் திக்விஜய் சிங்கிற்கு “இது வாயா? கால்வாயா? விருது”


திக்விஜய்: இந்த ப்ளாக் எழுதறவருக்கும் ஆர்.எஸ்.எஸ் கும் சம்பந்தம் இருக்கு. இவருக்கு நாட்டுபற்று இல்ல.

நான்: அததாண்டா நானும் சொல்றேன் எனக்கு நாட்டுப்பற்று இல்ல.

“பல்பு வாங்கலியோ பல்பு விருது”

எந்த ஸ்டேட்டுல எலக்‌ஷன் நடந்தாலும் உடனே போயி ஆஜராகி அங்க உள்ள ஏழை பாழைங்க வீட்டுல இருக்குற சோத்தையெல்லாம் புடுங்கி தின்னு,ஊர் கிணத்துல கலீஜ் பண்ணி,ஹெலிகாப்டர்ல போய் இறங்கி விவசாயம் பண்ணி எதிர்கட்சிக்காரங்கள நாராசமா திட்டிட்டு திரும்பி வரப்ப மறக்காம பல்பு வாங்கிட்டு வர்ற ராகுல் காந்திக்கு “பல்பு வாங்கலியோ பல்பு விருது” 


ராகுல்: “மாயாவதி எல்லா கசையும் பிக்பாக்கட் அடிச்சுட்டார் எங்க கைல ஆட்சிய குடுங்க உங்க பணத்தையெல்லாம் இத்தாலி பேங்குல பத்திரமா போட்டு வெக்கறோம்”

கபில் சிபல்: “ராகுலுக்கு பிரதமராகும் முழுதகுதி வந்திவிட்டது”
பிரணாப்: “வெளிநாட்டு வங்கிகளில் வட்டி அதிகம் என்பதால் ராகுலின் இந்த முடிவு பொருளாதார மறுமலர்ச்சியை உண்டு பண்ணும்”
நிருபர்: “யாருக்கு?”
பிரணாப்: “யாருக்கோ.....”

“வாயில புண்ணு விருது”

எத்தன வருசம் ஆனாலும் சரி பல்லு விளக்கறக்கும்,பக்கோடா திங்கறக்கும் மட்டுமே வாய திறக்கும் மன்மோகன் சிங்குக்கு ”வாயில புண்ணு விருது”


மன்மோகன்: “................................................................”

நிருபர்:”எதிர்பார்க்காதீங்க”

”ஆத்தா முறைச்சு பாத்தா விருது”


”ஜெயிப்பாங்கன்னு தெரியும் ஆனா இவ்ளோ பெரிசா ஜெயிப்பாங்கன்னு எதிர்பார்க்கலபா” என சட்டமன்ற மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் எதிர்கட்சிகளுக்கு ரிவிட் அடித்தவர் இவர். ஒரு கட்சிக்கு பக்கத்து மாநிலத்துல கிளை ஆரம்பிக்கலாம் தேசிய அளவுல கிளைகள் ஆரம்பிக்கலாம் ஏன் ஃபாரின் ல கூட ஆரம்பிக்கலாம் ஆனா வரலாற்றில் முதல் முறையா தி.மு.க வுக்கு ஜெயிலில் கிளை ஆரம்பிக்க வெச்சவர் இவர்.கட்சத்தீவு,ஈழம்,3 பேரின் தூக்கு தண்டனை என எல்லா விசயத்துலயும் மத்திய அரசை புரட்டி போட்டு கும்மியடித்தவர் இவர். ”விரோதிய கூட மன்னிச்சுடுவேன் ஆனா கூடவே இருந்து குழி பறிக்கறவன மன்னிக்கவே மாட்டேன்” என இத்தன நாளா ஒன்னுமன்னா ஆட்டய போட்ட தோழிய விரட்டி விட்ட நம் முதல்வர் அம்மா அவர்களுக்கு “ஆத்தா முறைச்சு பாத்தா விருது”



ஜெ:  “அண்ணா நாமம் வாழ்க,புரட்சித் தலைவர் நாமம் வாழ்க, மக்களுக்கு போட்ட நாமம் வாழ்க”


இவ்வளவு நேரம் நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவருக்கும் மிக்க நன்றி.





Tuesday, 27 December 2011

தமிழக அரசியல்:திசை மாறும் பயணங்கள்-பாகம் 2

தமிழகத்தின் 2 பிரதான கட்சிகளான தி.மு.க, அ.தி.மு.க என்ற இரு கட்சிகளின் எதிர்காலம் எப்படி இருக்குமென பார்த்தோம்.இனி அடுத்த தலைமுறை அரசியலுக்காக முன்னணியில் இருக்கும் கட்சிகளைக் காண்போம்.

தே.மு.தி.க

வெள்ளித்திரையில் வாசிம் கான் உட்பட பாகிஸ்தான் தீவிரவாதிகளை பந்தாடி பந்தாடி இந்தியாவிற்கு பெருமை சேர்த்த கேப்டனின் கட்சி. இந்த கட்சியின் சுருக்கமான வரலாற்றைக் காண்போம்.தி.மு.க, அ.தி.மு.க என்ற இரு கட்சிகளுமே மாறி மாறி தமிழ்நாட்டை உருட்டி விளையாடிக் கொண்டிருந்த காலம் அது.இருவரிடமும் எந்த வித்தியாசத்தையும் உணராத ஒரு பகுதி மக்கள் ஒரு மாற்று கிடைக்காதா என ஏங்கிக் கொண்டிருந்த சமயம்.



ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என பொதுஅறிவுமிக்க பொதுஜனம் விரும்பிக் கொண்டிருந்த போது அவர் வானத்தை நோக்கி ஆள்காட்டி விரலை காட்டி விட்டு இமயமலைக்கு ஓடிக் கொண்டிருந்த நேரம்.ரசிகர் மன்றத்தில் பிரியாணி,தையல் இயந்திரம், மூன்று சக்கர சைக்கிள் என சிறிய அளவில் அரசியல் செய்து கொண்டிருந்த விஜயகாந்த ரசிகர் மன்ற உறுப்பினர்களை உள்ளாட்சித் தேர்தலில் களமிறக்கினார்.ஓரளவு ஆதரவும் பெற்றார்.திடீரென செப்டம்பர் மாதம்,2005 ஆம் ஆண்டு மதுரையில் மாநாடு நடத்தி கட்சியை துவங்கினார்.தலைவர் கட்சியின் பெயரையே மாநாடு அன்று காலையில் தான் முடிவு செய்தார் என்பது கொசுறு.தேசியத்தையும்,திராவிடத்தையும் கட்சியின் பெயரில் ஒன்று சேர்த்தது மாபெரும் சாதனை (முடியலடா சாமி).தமிழகத்தில் புதிய கட்சி அதுவும் பிரபலமான நடிகர் என்பதால் மீடியாக்கள் வளைத்து வளைத்து செய்தி வெளியிட்டன.மக்களோடும்,தெய்வத்தோடும் தான் கூட்டணி என எம்.ஜி.ஆரின் வேனில் ஏறி தமிழகம் முழுக்க சுற்றிச் சுற்றி மாற்று தேடிக் கொண்டிருந்த மக்களிடம் ஒரு சிறிய அபிப்ராயத்தை உருவாக்கியதால் 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஓட்டு சதவிகித அளவில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தார்.



தி.மு.க, அ.தி.மு.க ஆகியவை செய்யாத அரசியலை நான் செய்து காட்டுகிறேன் என சொன்னவர் அச்சு அசல் அவர்களைப் போலவே இவரும் எதிர்க்கட்சி வரிசையில் இருந்ததால் சட்டசபைக்கு செல்லவில்லை இன்று வரை.மேடைப் பேச்சில் திராவிட கட்சிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்களைப் போல பேசுவது இவருக்கு கூட்டம் கூட்டியது.ஆனால் மாற்றாக உருவாகியிருக்க வேண்டியவர் இன்று ஓட்டு சதவிகிதத்தை தக்க வைத்துக் கொள்ளவே அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கிறார் என்பது கடந்த உள்ளாட்சித் தேர்தலில் வெட்ட வெளிச்சமானது.மக்களுக்கு நல்லது செய்வது தான் கொள்கை என கூறி வந்தாலும் தெளிவான கொள்கை இல்லாமல் பிற கட்சிகளை சாடுவதே தன் முழுநேர வேலையாக வைத்துக் கொண்டிருக்கின்றார்.




அவரின் மேடைப் பேச்சைக் கேட்டவர்கள் ஒரு வரியாவது புரிந்தது என்று சொன்னால் அது அவர்கள் செய்த பாக்கியம்.முழுக்க முழுக்க விஜயகாந்தின் பிரபலமும், சினிமா பாணி பேச்சும் தான் இக்கட்சியின் பலமாக உள்ளது.தொண்டர்கள் பெரும்பாலும் ரசிகர் மன்றத்தினர் தான்.ஆனால் தலைவர்களாக உள்ளவர்கள் யாரென பார்த்தால் விஜயகாந்தால் ஊழல் கட்சி என பட்டம் சூட்டப்பட்ட திராவிடக் கட்சிகளில் இருந்து ஒரம்கட்டப்பட்டவர்களும்,உள்ளுரில் இரு கட்சிகளிலும் சேர முடியாத ஆனால் அரசியல் பலம் பெற விரும்பியவர்களும் தான்.குடும்ப அரசியலை சாடும் இவர் கட்சியிலும் மனைவியும்,மச்சானும் தான் முக்கிய சக்திகளாக விளங்குகின்றனர்.பண்ருட்டி இராமச்சந்திரன் மட்டுமே இந்த கட்சியில் தமிழக அரசியலின் நீண்ட கால வரலாற்றை உள்வாங்கி அதன் பாரம்பரியத்தில் திளைத்தவர் அவரின் வழிகாட்டுதல் இல்லாமல் போனால் கட்சி கண்டபடி தள்ளாடுவது உறுதி.மற்ற அனைவருமே தமிழக அரசியலின் வரலாற்றில் ஆனா ஆவன்னா கூட அறியாதவர்கள் என்பதே உண்மை.அதற்கு ஒரு எடுத்துக்காட்டு கட்சிக் கூட்டம் ஒன்றில் பிரேமலதாவின் பேச்சு “தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடந்ததென்றால் அது பெரியாரின் ஆட்சி தான்”.



விஜயகாந்தின் அரசியல் முதிர்ச்சியின்மை சமீபத்தில் மதுரையில் நடந்த அவர் கட்சிக் கூட்டங்களில் வெளிப்பட்டது.மதுரை மக்களிடம் மிகச்சிறப்பான செயல்பாடுகளால் நற்பெயர் பெற்றிருக்கும் ஆட்சியர் சகாயம்,காவல்துறை ஆணையர் ஆஸ்ரா கார்க் ஆகிய இருவரையும் மேடையில் விளாசி எடுத்தார்.அதற்குக் காரணம் தன் கட்சிக் காரர்களை ஃபிளக்ஸ் பேனர் கட அனுமதிக்கவில்லை என்பதால்.குறைந்தபட்சம் இவர்களுக்கு தமிழர் நலன் சார்ந்த விடயங்களிலாவது கொள்கை இருக்குமா என்றால் ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது.2009 ஆம் ஆண்டு தமிழகமே ஈழப் பிரச்சனைக்காக கொந்தளித்துக் கொண்டிருந்த போது தலைவர் ‘விருத்தகிரி’ திரைப்பட படப்பிடிப்பில் தான் முழு கவனம் செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. அச்சமயம் ஒரே ஒரு கூட்டம் மட்டும் போட்டு ஒபாமாவிற்கு தந்தி அனுப்புங்கள் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.அதை அவர்கள் கட்சிக்காரர்கள் கூட செய்யவில்லை.தி.மு.க விற்கு எதிரான அலையில் எதிர்க்கட்சி அந்தஸ்து தற்சமயம் கிடைத்தாலும் தொடர்ந்த உள்ளாட்சித் தேர்தலில் குறைந்தபட்ச இடங்களைக் கூட பிடிக்கவில்லை என்பது இவருடைய கட்சி பலத்திற்கு எடுத்துக்காட்டு.கட்சி தொடங்கிய 6 வருடங்களில் இப்பொழுது தான் முதன்முறையாக போராட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.அதுவும் பிரதமருக்கு எங்கோ கறுப்புக் கொடி காட்டியதற்காக.விஜயகாந்தின் வளர்ச்சிக்குக் காரணம் சரியான நேரத்தில் அவர் கட்சியை தொடங்கியது மட்டும் தான் என கூறப்படுவதிலும் உண்மை இருக்கத் தான் செய்கிறது.

எதிர்காலம்

#ஆளுங்கட்சி அசுர வலிமையுடன் இருந்த போதே கோவையில் கூட்டிய ஒரு கூட்டத்தில் அரசியலில் மாபெரும் திருப்புமுனையை உருவாக்கியது அ.தி.மு.க. இப்பொழுது ஆளுங்கட்சி அத்தகைய வலிமையுடன் திகழுமானால் அதற்கு எதிராக நின்று நிலைக்க தேவையான வலு இந்த கட்சிக்கு இல்லை.
#இன்று வரை மக்களின் ஏகபோக நம்பிக்கையை வெல்ல முடியாததால் இனி வரும் காலங்களில் அதன் செயல்பாடுகளைப் பொறுத்தே அரசியலில் நிலைக்க முடியும்.
#ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாவிட்டாலும் பதவியை மட்டுமே இலக்காக கொண்ட இரண்டாம் கட்டத் தலைவர்களால் ஒரு வலுவான அடிப்படைக் கட்டமைப்புக்கு உதவ முடியாது.மேலும் தோல்விகள் தொடருமாயின் அவர்களும் கட்சியை விட்டுச் செல்ல வாய்ப்புகள் அதிகமாகும்.
#திராவிட கட்சிகளுக்கு தான் மாற்று என சொல்லும் அளவுக்கு இன்னும் எந்த காரியத்தையும் விஜயகாந்த் செய்யவில்லை.அதே திராவிட கட்சிகளை பிரதி எடுத்தது போல் தான் இன்று வரை செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

இவரை பற்றி பேசவே நிறைய எழுத வேண்டியதாகி விட்டது.அடுத்த பாகத்தில் முடித்துக் கொள்ளலாம்.
                                                                                                 -தொடரும்.

Sunday, 25 December 2011

தமிழக அரசியல்:திசை மாறும் பயணங்கள்-பாகம் 1

உத்திரபிரதேசம்,தமிழகம் இந்த இரு மாநிலங்களில் நடக்கும் மாற்றங்கள் இந்திய அரசியலில் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணுகிறது என்றால் அதுதான் உண்மை,வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தின் அரசியல் இந்தியாவின் முக்கியமாக பார்க்கப்படும் அரசியல் தளங்களில் ஒன்று.பலமுறை இந்திய அரசியலை ஆட்டிப்படைத்திருக்கின்றது தமிழக அரசியல் என்று சொன்னால் அது கொசுறுதான்.அந்த அரசியலின் நிகழ்வுகள் எல்லாம் பெரும்பாலும் தி.மு.க, அ.தி.மு.க என்ற இரு அசுர பலம் கொண்ட கட்சிகளை மையப்படுத்தித்தான் நடந்து கொண்டிருக்கின்றது. ஆனால் இன்று தமிழகத்தின் அரசியல் போக்கின் எதிர்காலம் வேகமாக பல மாற்றங்களை நோக்கி செல்கிறது.அதற்கு முக்கியமான கட்சிகளின் எதிர்காலம் என்னவென பார்த்தல் அவசியம்.

தி.மு.க





1949 ஆம் ஆண்டு தி.மு.க அறிஞர் அண்ணாதுரையால் கொட்டும் மழையில் துவக்கப்பட்ட பொழுது அளப்பரிய தொண்டர்கள் உணர்ச்சிவயப்பட்டு கூடியிருந்தனர்.அன்று கூடிய தொண்டர் பெருமக்கள் தான் இன்று வரை தி.மு.க வின் அடித்தளம்.அண்ணாவின் ஆணை ஏற்று ஆளும்வர்க்கத்தை அடித்து துவம்சம் செய்ய திசை தோறும் தளபதிகள் இருந்தனர்.நெடுஞ்செழியன்,கருணாநிதி,எம்.ஜி.ஆர்,ஈ.வி.கே.சம்பத்,கண்ணதாசன்,அன்பழகன் என அந்த பட்டியல் வெகு நீளம்.அண்ணாவின் கட்டளையை சிரமேற்கொண்டு இவர்கள் முன் செல்ல இவர்கள் பின்னால் தன்னலம் மறந்து, தான் வாழும் தமிழ்குடி மேன்மையடைய வேண்டும்,ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேற வேண்டும் என்னும் வெறி கொண்ட தொண்டர்படை செல்லும்.தி.மு.க வின் போராட்டம் நடக்கின்றது என்றால் அது ஆளும் காங்கிரசு கட்சிக்கு பெரும் நெருக்கடியாக இருந்தது.தி.மு.க வை அடக்குவதாகத் தெரிந்தால் மாணவர்கள்,கலைஞர்கள்,பொதுமக்கள், பத்திரிக்கைகள் என பல முனையிலிருந்து கண்டன அம்புகள் பாயும்.


அத்தகையதோர் மாற்று சக்தியாக தி.மு.க சீறிப்பாய்ந்து 1967 ல் ஆட்சியைப் பிடித்தது தமிழை உயிரென சுவாசித்து இந்தி எதிர்ப்புப் போரட்டத்தில் தமிழுக்காக உயிர் நீத்த மாணவர்களால்.தி.மு.க வின் தொடக்க காலத்தில் அதன் சமூக நீதிப் பயணங்கள் ஒடுக்கப்படோரை தலைநிமிர வைத்தது.மத்திய அரசு இடஒதுக்கீடு 50% க்கும் மேல் செல்லக் கூடாது என சொன்ன போது 69% குடுத்தே தீருவோம் என உறுதியாய் நின்று வென்று காட்டிய கட்சி தி.மு.க.அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் நிமிர்ந்து நின்று தொண்டாற்றிய இயக்கம் அது.தன் பிள்ளைகளுக்கு உதயசூரியன்,கருணாநிதி,அண்ணாதுரை,செழியன் என பெயர் வைப்பது மிக சாதாரணமாக நடந்தது. எது வரை? கருணாநிதி என்னும் மனிதர் அதன் தலைவராகும் வரை.


 பதவி சுகமும்,அதிகார வாய்ப்பும் கிடைத்ததும் அதை விடாமல் ருசிக்கத் துடித்தவர் அதற்குத் தேவையான காரியங்களை இயற்றி தன்னையே நிரந்தர தலைவராக நிலை நிறுத்தியிருக்கிறார்.அவருடைய இந்த கபட நாடகம் தொண்டர்களுக்கும் வழிகாட்டுதலாக அமைந்தது.பணம் சேர்க்க தலைவர் பல வழிகளில் பூந்து விளையாடிய பொழுது அதில் சில வழிகளை தொண்டர்களும் பின்பற்றினர்.சந்தர்ப்பம் கிடைத்த இடத்தில் எல்லாம் திருடுவதில் தொடங்கி அதிகாரத்தை பயன்படுத்தி திருடுவதற்கான வழிகளை தாங்களே உருவாக்கத் தொடங்கினர்.எம்.ஜி.ஆரால் 14 ஆண்டு காலம் வனவாசம் கண்ட பின்பு மீண்டும் அத்தகைய நிலை தனக்கு வந்துவிடக்கூடாதென தமிழகம் முழுக்க தன் கட்சியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க தன் பிள்ளைகளையே தனக்கு தளபதியாக்கினார்.வை.கோ என்னும் மாபெரும் சக்தி இதனால் கட்சியிலிருந்து விலக்கப்பட்ட போது தி.மு.க வே கிடுகிடுத்தது. வடக்குக்கு ஒருவர் தெற்குக்கு ஒருவர் என பிரித்து வைத்துத் தொடங்கிய பின் கொஞ்சம் கொஞ்சமாக மருமகன்,மகள்,மனைவிகள் என விடாமல் அனைவரையும் கட்சிக்குள் திணித்தார்.அதிகார மையங்கள் பல இடங்களில் உருவானது. தலைவரின் இதே பாணியை மாவட்ட அளவில் அனைவரும் பின்பற்றினர்.தமிழினம் மீட்கப்படும் என நம்பி கட்சிக் கொடியை தூக்கிப் பிடித்த தொண்டர்கள் எல்லாம் மனமொடிந்து ஒதுங்கினர்.





தொடக்கத்தில் தமிழர் வாழ்வே தன் இலட்சியம் என ஆணைகள் பிறப்பித்த அரசு கருணாநிதியின் காலத்தில் தன் மீது எழும் விமர்சனங்களையும்,குற்றச்சாட்டுகளையும் திசைதிருப்பும் ஓர் கேடயமாக தமிழர் நலனுக்கான அறிவிக்கப்புகளை பயன்படுத்திக் கொண்டது.கட்சியின் அடிமட்ட தொண்டர்களின் உழைப்பால் வளர்ந்த கட்சியாகையால் அத்தொண்டர்களும் கருணாநிதியின் சந்தர்ப்பவாத தமிழர் பாசத்தால் மதிமயங்கி அவரை தமிழினத் தலைவராக கொண்டாடி மகிழ்ந்தனர்.கருணாநிதியின் தமிழாலும்,அவரின் புனை பேச்சுக்களிலும் மயங்கிய தமிழறிஞர்களும் அவ்வாறே அவரை ஏற்றுக் கொண்டனர். தி.மு.க வின் ஆட்சியில் எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என்னும் தோற்றப்பாடு வந்து விட்ட பின் பண வெறி கொண்ட ரவுடிகள்,முதலாளிகள்,முறைகேடுகளில் ஈடுபடுவோர் அனைவரும் முடி முதல் அடி வரை உள்ள அனைத்து அதிகார மையங்களில் இணைந்து தங்களை கட்சி விசுவாசி போல காட்டி பணத்தை கொள்ளை கொள்ளையாக சுருட்டினர்.அதிகார மையங்களும் பணமே குறிக்கோள் என இருந்ததால் அத்தகையோரின் இருப்பை விரும்பினர்.கொள்கைக்காக பதவியை துச்சமென உதறிய தி.மு.க, கருணாநிதி காலத்தில் எப்பாடு பட்டாவது பதவியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு வந்தது.ஈழ விவகாரத்தில் தி.மு.க வின் செயல்பாடு இதற்கு உதாரணம். கொள்கைக்கு வாக்கப்பட்ட தொண்டர்கள் எல்லாம் ஒதுங்கிவிட்ட படியால் அதிகார மையங்களில் ஒட்டிக் கொண்ட தொண்டர்கள் தான் இப்பொழுது தி.மு.க வில் பல்கி பெருகியிருக்கின்றனர்.பெயிலில் வந்த கனிமொழிக்கு கிடைத்த வரவேற்பு ஒரு உதாரணம்.மெதுவாக விழித்துக் கொண்ட தமிழுணர்வாளர்கள் கருணாநிதியின் துரோகத்தை தோலுரித்துக் காட்டிக் கொண்டிருப்பது கண்கூடு.உண்மையான தொண்டர்களை இழந்ததால் இக்கட்சி எப்படிப்பட்ட நிலையை அடைந்திருக்கிறது என பார்த்தோமானால் தொடக்க காலத்தில் தி.மு.க ஆளுங்கட்சியையோ,மத்திய அரசையோ எதிர்க்க வேண்டுமானால் எதிர்ப்போடு நிறுத்த மாட்டார்கள் அரசாங்கத்தையே அதிர வைக்கும்படி போராட்டங்களை நடத்துவார்கள்.ஆனால் தமிழரின் உயிராதார பிரச்சனையான முல்லைப் பெரியாறு விவகாரத்தில் அரை நாள் உண்ணாவிரதம்,மனித சங்கிலியோடு முடித்துக் கொண்டிருக்கின்றது.கட்சியின் தலைமைக்கு தொண்டர்கள் மேல் நம்பிக்கை இல்லை.காசுக்கும்,பதவிக்கும் கட்சியில் சேர்ந்தவர்கள் போராட்டம் எல்லாம் செய்யமாட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் தான்.மாவட்ட தலைமைகளும் ஆளுங்கட்சியின் நடவடிக்கை பாயுமோ என்ற பயத்தில் பதுங்கிக் கொண்டிருப்பது வெட்ட வெளிச்சம்.

எதிர்காலம்:
#தி.மு.க வின் அடிநாதமான விசுவாசமான தொண்டர்கள் இப்பொழுது இல்லை.
#குறைந்தபட்சம் 10 அதிகார மையங்கள் இருப்பதால் கருணாநிதிக்குப் பிறகு அந்த கட்சி ஒற்றுமையாய் இருப்பது போல தோற்றத்தை உருவாக்க முயன்று  தோற்கும்.கட்சி உடையாமல் ஒற்றுமையாய் இருந்தாலும் அது இன்னுமொரு தமிழக காங்கிரசு கட்சி போல கோஷ்டி அரசியலில் சீரழியும்.தலைமையிடத்துக்கு போட்டி தொடங்கி பின் அது மாவட்ட செயலாளர் நியமனம்,வேட்பாளர் தேர்வு,போராட்டம் நடத்துதல் என பல்வேறு நிலைகளில் வெளிப்படையான மோதல் நடக்கும்.
#இருக்கும் கொஞ்ச நஞ்ச சுயநல தமிழுணர்வாளர்களின் ஆதரவும் கருணாநிதிக்குப் பின் இருக்காது.
#தேசிய அரசியலில் 15 வருடங்களாக தி.மு.க செலுத்தி வரும் ஆதிக்கம் கருணாநிதிக்குப் பின் நடக்காது.
#கருணாநிதி மேல் குறைந்த பட்ச பாசத்தோடு இருக்கும் பெரியவர்களும்,முதலாளிகளும் அவருக்குப் பின் கழன்று கொள்வர்.
#கருணாநிதிக்குப் பின் ஒரு தலைமையில் தொண்டர்கள் ஒருங்கினைவது எக்காலத்திலும் நடக்காது.தான் சார்ந்த ஒரு மரத்தை விட்டு இன்னொரு மரத்திற்கு எந்த மிருகமும் அவ்வளவு எளிதில் தாவாது அப்படியே தாவினாலும் மரியாதை இருக்காது என்பது அதற்குத் தெரியும்.ஆகையால் தன்னுடைய மரத்தை கொம்பு சீவி விட்டு தன்னுடைய இருப்பை உறுதி செய்து கொள்ளவே எல்லா மிருகங்களும் முனையும்.அதற்குப் பெயர் தான் SURVIVAL OF THE FITTEST.

அ.தி.மு.க

நிகழ்காலம்-ஜெயலலிதா
எதிர்காலம்-ஜெயலலிதா

ஜெயலலிதாவுக்குப் பின்?

பார்ப்பன கும்பல் தலைமையில் ஆரிய சமாஜமாக மாறலாம் அல்லது தேவரின மக்களின் ஜாதி சங்கமாக சுருங்கலாம். ஆனால் ஒரு கட்சியாக வெகுஜன ஆதரவோடு இயங்க வைப்பது நிச்சயம் வாய்ப்பில்லை.ஏனெனில் எம்.ஜி.ஆருக்குப் பின் ஜானகியா? ஜெயலலிதாவா? என்னும் கேள்வி எழுந்தது ஆனால் ஜெயலலிதா உள்ள வரை வாரிசு என யாரும் உருவாகப் போவதில்லை.அவருக்குப் பின் யார் என கேள்வியில் பொருத்திப் பார்க்கக் கூட மக்கள் ஆதரவு பெற்ற தலைவர்கள் அங்கே இல்லை இனியும் வரப்போவதில்லை.

அப்படியானால் இவர்கள் இருவருக்கு பின்னால் என்ன நடக்கும்?

அடுத்த பாகத்தில் பார்ப்போம்.
                                                                                                                       -தொடரும்

சுனாமியின் 7 ஆம் ஆண்டு நினைவு நாள்




ராஜபாட்டை-ஒன்ஸ்மோர்!!!

தெய்வத்திருமகள் என்னும் விக்ரமின் அசத்தலுக்குப் பின், அழகர்சாமியின் குதிரை என்னும் அழகான சுசீந்திரனின் படைப்பிற்குப் பின் இருவரும் மாறுதலான பாதையில் பயணிக்க முயற்சித்து பஞ்சர் ஆன பாதை தான் ராஜபாட்டை.



இது கமர்ஷியல் மாஸ் மசாலா படம் என அழைக்கப்படுவதால் அந்த வகையறாவைக் கொண்டே விமர்சிப்பதுதான் பொருத்தமாக இருக்கும். திரைப்படத் துறையில் ஜிம் பாயாக (வில்லனோட அல்லக்கைக்கு அல்லக்கை) வேலை பார்ப்பவர் தான் நம்ம கதாநாயகன் அனல் முருகன்.சினிமாவில் மாபெரும் வில்லனாக வர வேண்டும் என்பது அவர் இலட்சியம். நீண்ட நாட்களாக தான் தங்கும் மேன்ஷனுக்கு எதிரில் மகளிர் விடுதியில் தங்கி இருக்கும் தர்ஷினியை (தீக்‌ஷா சேத்) தூரத்தில் இருந்தே டாவடிக்கிறார்.



இதற்கிடையில் தஷினாமூர்த்தி என்னும் நகைக்கடை உரிமையாளர் தன் மனைவியின் நினைவாக நடத்தி வரும் அனாதை இல்லத்தை அவருடைய மகன் அரசியல் ஆசை காரணமாக நில அபகரிப்பு துறை மந்திரியாகிய அக்கா என்னும் ரங்கநாயகியாக்கு தாரைவார்க்க முயல்கிறார்.அதற்கு தாத்தா மறுத்து வீட்டை விட்டு வெளியேற அனல் முருகன் அவருக்கு அடைக்கலம் தருகிறார்.தாத்தாவை ஏமாற்றி சொத்தை பறித்தார்களா? “நான் முடிவு பண்ணிட்டா அக்கா இல்ல அந்த ஆண்டவனே வந்தாலும் விட மாட்டேன்” என சீறிக் கிளம்பும் அனல் முருகன் நில அபகரிப்பால் தவிக்கும் தமிழகத்தை காப்பாற்றினாரா? என்பது தான் கதை.ஸ்ஸ்ஸ்... அப்பாடா கதைய சொல்லி முடிச்சுட்டேன்...


 கமர்ஷியல் சினிமா எடுக்க வேண்டும் என்கிற ஆசை எல்லா இயக்குனர்களுக்கும் நிச்சயம் இருக்கும்.ரசிகர்களிடம் சீனுக்கு சீன் கை தட்டலும், விசிலும் வாங்கி சூப்பர் தலைவா என்று பாராட்டப்பட எந்த இயக்குனருக்கு தான் ஆசை இருக்காது.அதை இந்த திரைப்படத்தில் நிறைவேற்ற முயற்சித்திருக்கிறார் சுசீ. ஆசை எல்லாம் சரி தான் நம்ம ஊர்ல பெருசா ஒரு படம் எடுக்கனும்னா அது சம்பந்தமா எல்லா இங்கிலீஷ் படத்தையும் பாத்துட்டு அதிலிருந்து ரெஃபரன்ஸ் எடுப்பாங்க.அதாவது இந்த சீன் இப்படி இருந்தா ஒர்க் அவுட் ஆகும்னு மனசுல நிர்மானிச்சுடுவாங்க. நம்ம சுசீ இந்த ரெஃபரன்ஸ எல்லாம் தமிழ் திரையுலக மசாலா படங்கள்ல இருந்தே எடுத்து படம் எடுத்துருக்கிறது தான் பிரச்சனை. ஹீரோ கிட்ட முதல் காட்சிலயே அடி வாங்கிட்டு ”அண்ணா நீங்க இருப்பீங்கன்னு தெரிஞ்சா இந்த ஏரியா பக்கமே வந்திருக்க மாட்டேனுங்கன்னா” என்று பம்மி கிளைமாக்ஸ் வரை அதை அப்படியே மெயிண்டெயின் பண்ணி அப்பீட்டாகிற அடியாள் இதிலும் உண்டு. வில்லன் ஆவேசமாக கிளம்பும் போது “உனக்கு வெக்க போறாண்டி ஆப்பு” ரீதியிலான வசனங்கள் சாட்சாத் மேற்படியார் வாயிலிருந்து உதிர்கிறது.வழக்கமாக காதலுக்கு ஐடியா குடுக்கும் நண்பன்,சித்தப்பா,மாமா இடத்தில் இந்த முறை தாத்தா இருப்பது தனிச்சிறப்பு.வில்லனை மிரட்ட வில்லனின் குடும்பத்த கடத்தி அவனுக்கே ஆப்பு வைக்கும் ஷாக் ட்ரீட்மெண்ட் முறை தமிழக கமர்ஷியல் படங்களின் குலவழக்கம் என்பதால் அதையும் மறக்காமல் சேத்திருக்காரு.





 பீச் ல ஒரு பாட்டு. ஃபாரின்ல ஹீரோயினுக்கு சிக்குன்னு சேலை,ஹீரோக்கு டீக்கா சூட்டு போட்டுட்டு ஃபாரின் மரம்,ஃபாரின் தூண் எல்லாத்தையும் பிராண்டி,பிராண்டி ஒரு பாட்டு. குத்து பாட்டு வெக்காட்டி சாமி கண்ண குத்திருமேன்னு எங்க வெக்கறதுன்னு குழம்பி போயி தியேட்டரிலிருந்து எல்லாரும் எந்திரிச்சு போனப்புறம் ஒரு பாட்டு (இதுவும் ஃபாரின்ல நடுரோட்ல தான்).சாமி சத்தியமா எல்லா பாட்டும் சிட்வேஷனுக்கு சம்பந்தமே இல்லாம தான் வருது.தப்பு பண்ணும் மந்திரி (அக்கா) மேல ஆதாரம் இருந்தா நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்னு சொல்ற நேர்மையான முதலமைச்சர்.மந்திரி மேல வழக்கு நடந்ததும் மக்கள் எல்லாம் “அக்காவ தூக்கிட்டாங்க போல”, “இனி அக்கா அவ்ளோதான்’ என பத்து,பதினைஞ்சு லொக்கேஷன்ல பேசுறதும் உண்டு(ஆமா இஸ்திரி கடைக்காரர், பொட்டி கடைக்காரர் எல்லாம் வர்றாங்க).கிளைமேகஸ்ல வில்லிய கொலை பண்றக்கு கத்திய தூக்கிட்டு ஓடி வர்ற பரிதாப பொதுஜனம் உண்டு.இவரோட பையன முதல் பாதில வில்லனுங்க கொன்னுடறாங்க.ஏன்னா அவர் உண்மைய நேர்மையா வெளில சொன்னாரு.இதே பொன்னா இருந்தா கற்பழிச்சு கொன்னிருப்பாங்க.(ஒரு செண்டிமெண்டல் வேல்யூவ இயக்குனர் தவறவிட்டுட்டார்).இப்படி நாம 10 வருசமா என்னென்ன எழவ பாத்து வளர்ந்தோமோ அது எல்லாத்தையும் இதுலையும் கொட்டிருக்காங்க. நல்ல வேளை கிளைமேக்ஸ்ல மக்கள் எல்லாரும் மைக்க கடிச்சு திங்கப் போற மாதிரி உணர்ச்சிவசப்பட்டு பேசற டி.வி பேட்டி இதுல இல்ல சாமி. புதுசா எதுவுமே இல்லையானு நினைக்காதீங்க மேல சொன்ன விசயங்களுக்கு இடைப்பட்ட கேப்புல சில புதிய விசயங்களும் இருக்கு. கரண்ட கட் பண்ணி கடத்தப்பட்ட ஹீரோயின கண்டுபிடிக்கறது, சி.பி.ஐ என்கொயரி உண்மைதானோனு நினைக்கும் போது அது சினிமா செட்னு காமிக்கறது இப்படி சில இடங்கள்ல சுவாரசியப்படுத்தறாங்க.ஆனா இதெல்லாம் பத்தலயே மக்களே.இந்த சுவாரசியத்த படத்தோட கதைய சிந்திக்கறதுல காமிச்சிருந்தா நல்லாயிருந்திருக்கும்.



விக்ரம் குடுத்த பாத்திரத்த நியாயப்படுத்தியிருக்கார். அடிதடி தூள். மூஞ்சில சுருக்கம் நல்லா தெரியும் போது இன்னும் நானும் லவ் பன்றேன் நானும் லவ் பன்றேன்னு சுத்தறாரு.சி.பி.ஐ ஆபீசரா விசாரனை பண்ணும் போது ஃபேன்ஸி ட்ரெஸ் காம்பிடீஷன் நடத்தறாரு.சிங் வேஷம் நச். ஆனா காமெடி பண்றக்கு அவர் பண்ற முயற்சிகள் படு காமெடி ஆயிடுது. தீக்‌ஷா சேத் பொண்ணுக்கு டயலாக்க எல்லாம் கட் பண்ணிருந்தா கூட ஒண்ணும் வித்தியாசம் இருந்திருக்காது.விஸ்வநாதன் தாத்தா தான் முதல் பாதிக்கு எஞ்சின் ஆயில்.டீக்கா ட்ரெஸ் பண்ணி தமிழ்நாட்டையே எழுதி வாங்குற சனா (அக்கா) அவங்களுக்காக வாதாடற வக்கீல் உட்பட எல்லாரையும் முறைச்சுகிட்டே இருக்காங்க.கஜினி வில்லன் பிரதீப் ராவத்கு 2 ஃபைட்ட தவிர பெருசா ஒண்ணும் இல்லாதனால அவரே தற்கொலை பண்ணிக்கறாரு.மைனாவ கலகலக்க வெச்ச தம்பி ராமையா வர்றாரு.

இயக்குனர் கிட்ட என்ன கேட்கனும்னா நம்ம ஆளுங்க எல்லாம் யதார்த்த படங்கள்ல அடுத்தடுத்த நிலைக்கு போறாங்க.காட்சி அமைப்பு,கதை சொல்லும் விதம் எல்லாத்துலயும் பட்டைய கிளப்புறாங்க சுசீந்திரனும் அப்படி பட்டைய கிளப்பினவர் தான்.ஆனா கமர்ஷியல் படம் எடுக்கும் போது மட்டும் ஏன்யா இந்த கோட்ட தாண்டி வர மாட்டேன்னு அடம் புடிக்கறீங்க? இதுலயும் வேற தளத்துக்கு போங்களேன்யா.

தலைப்புக்கும் விமர்சனத்துக்கும் சம்பந்தம் இல்லையேனு யோசிக்க வேணாம்.புளிச்சு போன மாவ தான் ஒன்ஸ்மோர் அரைச்சிருக்காங்க அப்படிங்கறத தான் பொதுக்குழுவில பேசி இப்பிடி தலைப்பா வெச்சோம்.

Friday, 23 December 2011

பெரியாருக்கு வீரவணக்கம்



எங்கள் பகுத்தறிவு பகலவனோடு
எம் மக்களின் பகுத்தறிவும் சேர்ந்து மறைந்த தினம் இன்று...

பார்ப்பனன் எம் எதிரி,அவன் சொன்ன சாதி மட்டுமல்ல
சாமியே தேவையில்லை என வீசி எறிந்த வீரன்...

எவனாயிருந்தால் எனக்கென்ன?
என பட்டதைப் பேசும் பகுத்தறிவாளி...

திராவிட நாடு இல்லையேல் நீயும்,நானும் அடிமை
என உண்மையை உறக்கச் சொன்ன உத்தமன்...

சாதி என்னும் வஞ்சத்தை
தன் சினம் கொண்டு எரித்த சிங்கம்...

மலையாளி கோவிலுக்குள் செல்ல வைக்கம் சென்றார்
இன்று அவர் இருப்பின் மலையாளியை
கேரளாவிலிந்து விரட்டியிருப்பார்...

பணமும் பதவியும் பிச்சைக்காரனுக்கு என
இறுதி வரை போராடியே வாழ்ந்த போராளி...

நீயும் நானும் சாணி அள்ளாமல் கணிணி தட்ட
தன் வாழ்வை ஈந்த வள்ளல்...

இந்த சமூகத்தின் ஆணிவேர் அவர்
அதன் கிளைகள் இன்று பட்டுப்போய் சீரழிகிறது
அது வேரின் தவறல்ல
வேருக்கு வெந்நீர் ஊற்றிய நம் தவறு...