Thursday, 15 December 2011

வஞ்சம்-பகுதி 3





                                                         பகுதி 3- தேடும் பயணம்

”எம்.டி ரொம்ப நம்பிக்கையா சொன்னாரு ஹரிணி கண்டிப்பா இன்னைக்கு பஷீர கூட்டிட்டு வந்துடுவாங்க” சுதாகர் சொன்னதைக் கேட்டு மகிழ்ச்சியும் சற்று அவநம்பிக்கையும் கலந்து தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தாள் ஹரிணி.கடந்த 1 வாரமாக அவளை சமாதானப்படுத்தியே சோம்பிப் போன ஐசுவர்யா அவளை மடியில் கிடத்தியதோடு நிறுத்திவிட்டாள். “நீங்க சொன்னா உடனே அவ அழுகைய நிப்பாட்டீடுவாளா?” என்று கேட்பது போல சுதாகரை ஐசுவர்யா பார்க்க அவன் விட்டத்தை பார்த்து சமாளித்தான்.

சிவா, ஐசுவர்யா, ஹரிணி, சுதாகர், விக்கி எல்லோரும் எந்நேரமும் பஷீர் வந்துவிடலாம் என்பதால் சிவாவின் வீட்டில் குழுமியிருந்தனர்.விக்கி மட்டும் வீட்டின் வாசலில் நின்று கொண்டு யாரிடமோ காரசாரமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தான்.
“பஷீர் வந்ததும் முதல் வேளையா எல்லாரும் ஏற்காடுக்கு ட்ரிப் அடிக்கறோம்”
சிவா எல்லோரிடமும் பொதுவாக சொன்னாலும் அவன் பார்வை மட்டும் ஐசுவர்யாவைப் பார்த்து சொன்னது.இதெல்லாம் ஒன்னும் வேலைக்காகாது என பார்வையிலேயே பதில் சொன்னாள் அவள்.அறிவாளித்தனமாக போட்ட திட்டம் தன் இலக்கை எட்ட முடியவில்லையே என சிவா நொந்தான்.

“பஷீருக்கும், ஹரிணிக்கும் இது ரெண்டாவது ஹணிமூன்னு நெனைக்கறேன்” சுதாகரின் கிண்டலால் வெகு நாட்கள் கழித்து ஹரிணி உதடு விரித்து வெட்கப் புன்னகை புரிந்தாள்.அதைக் கண்ட நண்பர்கள் அனைவரின் முகமும் ஆசுவாசமடைந்து சிரித்து மகிழ்ந்தனர்.
“பாவம் சிவா அப்பா ஆயிட்டதால நான்,சிவா,விக்கி எல்லாம் ஒரே ரூம்ல ஷேர் பன்ணிக்குவோம்.செம ஜாலியா இருக்கும்ல மச்சி” சிவாவின் தோளைக் குலுக்கி சுதாகர் உற்சாகமாக உண்மையை போட்டு உடைக்க ஹரிணி திக்கிட்டாள். “அடப்பாவிகளா ஒரே வீட்டுல இருக்கேன் என்ட கூட சொல்லலியே.நீ கூட சொல்லலியேடி” ஐசுவர்யாவின் கண்ணத்தில் கிள்ள அவள் கூச்சத்தில் நெளிந்தாள்.

“நம்ம சிவா அப்பா ஆகிட்டானா! மச்சி ஏற்காட்டுல செம பார்ட்டி வெக்கறோம் எஞ்சாய் பண்றோம்” தன் குடிக்கு அடை போட்டு விட்டு சோஃபாவில் அமர்ந்தான் விக்கி. “சுத்தி சுத்தி என்ன டார்கெட் பண்றானுங்களே, சேத்து வெச்ச சொத்தெல்லாம் ஏற்காட்டுல இருந்து உருட்டி விட்டுறுவானுங்க போல இருக்கே” நண்பர்கள் மத்தியில் ஏற்பட்ட குதூகலத்திற்கு அளவே இல்லை.

பெரும் சத்தத்தோடு ஹிப்ஹாப் பாடல் ஒலித்த தன் அலைபேசியை எடுத்த விக்கி அழைத்தவரின் பெயரை பார்த்து எரிச்சலுடன் இணைப்பை துண்டித்தான்.

“யாருடா?” சிவா

“வேற யாரு என் ஆளுதான்” சலிப்புடன் சொன்னான் விக்கி

“அத ஏன்டா கட் பண்னின?” சிவா

“அவ கூட நான் டூருக்கு குலுமனாலி வரனுமாம்.நான் முடியவே முடியாதுன்னு சொன்னேன்.அதான் இவ்ளோ நேரம் சண்டை” விக்கி.

“லவ்வர் கூட போறக்கு அவளுக்கும் ஆசை இருக்காதா? போயிட்டு வரலாம்ல டா” சிவா கூறிய அறிவுரையை கேட்ட ஐசுவர்யா புருவத்தை சுருக்கி அவனைக் கூர்மையாக பார்க்க சிவா வேறெங்கோ பார்த்து தப்பித்தான்.

“அய்யே அது டார்ச்சர் மச்சி, சும்மா நொய்யி நொய்யி நொய்யி நு நச்சிட்டே இருப்பா. இத சொன்னா தப்பு அத சொன்னா தப்பு அங்க பாக்காத இங்க பாக்காதனு ஒரே சலம்பலா தான் இருக்கும்.அதுக்கு நான் டாஸ்மாக்குல மட்டமான குவாட்டர் அடிச்சுட்டு நூறு வாட்டி வாந்தி எடுப்பேன். உங்க கூட வந்தாலாவது ஜாலியா இருக்கும்டா.வாழ்க்கைய எஞ்சாய் பண்ணி வாழனும் தோழா ” வெட்டோத்தி சுந்தரம் படத்தில் வரும் சரவணனைப் போல தோளை திமிறினான். எல்லோரும் விழிந்து விழிந்து சிரித்தனர்.

தரைவழி தொலைபேசி சிணுங்கியது.”தயவு செஞ்சு எடுத்துடாதிங்கடா.விளைவுகளுக்கு நான் பொறுப்பில்ல” தன் காதலியாகத் தான் இருக்கும் என நினைத்து விக்கி எச்சரிக்க அவனை வெறுப்பேத்த ஐசுவர்யா தொலைபேசியை எடுத்து “ஹலோ” என சிணுங்கலான குரலில் நீளமாய் சொன்னாள்.எதிர் முனையில் பேசிய குரல் கேட்டு திடுக்கிட்டாள் “பஷீர் எப்ப வரீங்க,அது...ம்ம்..” திடீரென பஷீரின் குரல் கேட்டு என்ன பேசுவது என புரியாமல் தவித்த ஐசுவர்யாவிடமிருந்து வெடுக்கென பிடுங்கி சிவா பேசினான்
“டேய் எங்கடா இருக்க?” கோபமும், பதட்டமு தொனிக்க பேசினான்.
“..........................”
“முட்டாப்பயலே இப்படியாடா பண்ணுவ? அங்கயே இரு வந்திடறேன்”
“........................”
“நீ எப்படியாவது பத்திரமா இரு.நாங்க போலீசுகிட்ட சொல்லிட்டு உடனே வரோம்”
“.........................”
“ஹலோ, ஹலோ ...” பேச்சுக்கு நடுவே இணைப்பு துண்டிக்கப்பட்டவுடன் ஏதோ விபரீதம் நடப்பதை உணர்ந்தான்.

“அவருக்கு என்னாச்சு? எங்க இருக்காரு?” ஹரிணி படபட்த்தாள்.

“ஏற்காட்டுல இருக்கானாம்.வேற எதும் சொல்றதுக்குள்ல லைன் கட் ஆயிடுச்சு” சிவா.

“நாம போயி கூட்டிட்டு வந்துடலாம் சிவா” சுதாகர் ஆயத்தமானான்.

“சரி நானும் சுதாகரும் போய் அவன தேடிப்புடிச்சு கூட்டிட்டு வந்துடறோம்” சிவாவிற்கு தொலைபேசியில் கேட்ட விசயங்களால் மூளை சூடாகி பரபரப்பானது.

“என்னையும் கூட்டிட்டு போங்க பிளீஸ்” ஹரிணியின் கெஞ்சலை ஏற்க மனமில்லாமல்லாவிட்டாலும் தற்பொழுது ஏற்காட்டுக்கு செல்ல வேண்டும் என்பது தான் அவன் முதல் குறியாக இருந்ததால் “இல்ல ஹரிணி அது......” சற்று யோசித்து “சரி நானும் சுதாகரும் இப்பவே கிளம்பி போறோம். விக்கி நீ இவங்கள கூட்டிட்டு ஆபீஸ் வண்டீல நாலைக்கு ஏற்காடு வந்துடு.முடிந்தவர நீங்க வர்றதுக்குள்ள அவனை கண்டுபிடிச்சுடுவோம்” பேச்சில் மட்டும் அவனால் உறுதியாக சொல்ல முடிந்தது.எங்கே போவது எப்படி கண்டுபிடிப்பது என்பது கேள்விக்குறிதான். இப்போதைக்கு இருக்கக்கூடிய ஒரே நம்பிக்கை பஷீர் அழைத்திருந்த தொலைபேசி எண் தான்.

“சார் ஏற்காடு எத்தன மணிக்கு போவோம்?” நடத்துனரிடம் பவ்யமாய் கேட்டான் சுதாகர்.
“காலைல 4 மணிக்கு போகும். வண்டி கிளம்பி கால் மணி நேரம் தான் ஆச்சு நீங்க 10 ஆவது தடவ இதே கேள்விய கேட்கறீங்க.இன்னொரு தடவ கேட்டா நான் மனுஷனா இருக்க மாட்டேன்” அமைதியாக எச்சரித்து விட்டு நடத்துனர் தன் வேலையைத் தொடர்ந்தார்.
நீண்ட தொலைவு வாகனம் ஓட்டி பழக்கம் இல்லாததால் இருவரும் வெகு நாட்களுக்குப் பிறகு அரசுப் பேருந்தில் பயணம் செய்தனர்.சிறிதளவு திறக்கப்பட்டிருந்த ஜன்னலின் வழியே குளிர்க்காற்று இதமாய் வருடியது அனைவரும் உறங்கிவிட்டனர் சிவா,சுதாகரைத் தவிர.

“ஃபோன்ல என்னடா சொன்னான்” சுதாகர்.

“ஏதோ கும்பல் கிட்ட மாட்டிகிட்டானாம்டா,பேசறப்ப ரொம்ப படபடப்பா இருந்தான்.எனக்கென்னமோ பயமா இருக்குடா” பயமும் சோகமும் கலந்த குரலில் அவன் சொன்ன பதிலால் சுதாகரும் கலக்கமடைந்தான்.

“கண்டிப்பா கண்டுபிடிச்சுடலாம்டா எனக்கு நம்பிக்கை இருக்கு.அந்த ஃபோன் நம்பரோட அட்ரஸ் இருக்குல்ல அங்க போனா எல்லாம் நல்லபடியா முடியும் ”வார்த்தைகளில் மட்டும் துணிவு காட்டி ஆறுதல் தேட முயற்சித்தது தோல்வியைத் தந்தது.  

இரவெல்லாம் நரகமாய் கழிந்தது.நண்பன் பத்திரமாக கிடைக்காவிட்டால் என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது.பல துக்கங்கள் தொடரும்.
ஏற்காட்டிலிருக்கும் நிகழ்வு மேலாளர் ஜோனத்தன் கிறிஸ்டிக்கு முன்னமே அழைத்து தாங்கள் இரவே வருவதாக கூறிவிட்டனர்.ஏற்காடு நெருங்க இருவருக்கும் படபடப்பும்,பயமும் ஒருசேர கலங்கடித்தது.தைரியமாக இருக்க முயற்சித்தனர்.ஒவ்வொரு ஊரின் பெயர்பலகையையும் உற்று உற்று பார்த்தனர்.

“வெல்கம் டூ ஏற்காடு” அந்த இரவு வேளையிலும் தெளிவான புன்னகையோடு உற்சாகமாக வரவேற்ற கிறிஸ்டியிடம் கைகுலுக்கினர்.
“சிரமத்துக்கு மன்னிச்சுடுங்க ஒரு அவசர வேலை இருக்கு அதான் இரவே வந்துட்டோம்” சுதாகர்.
“அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனை இல்ல சார்.உங்களை கவனிக்கத்தான என்ன நியமிச்சிருக்காங்க” கிறிஸ்டியுடன் மூவரும் காரில் ஏறி புறப்பட்டனர்.
“இப்ப நாம எங்க போறோம்?” சிவா.
“ஹோட்டல் லே கிராண்டே ல ரூம் போட்டிருக்கோம்.நீங்க அங்க தங்கிக்கலாம்” கிறிஸ்டி.
“அதுக்கு முன்னாடி ஒரு சின்ன உதவி செய்ய முடியுமா? இந்த முகவரிக்கு எங்கள கூட்டிட்டு போங்களேன் பிளீஸ்” சிவா முகவரி எழுதப்பட்ட சின்ன தாளை கிறிஸ்டியிடம் நீட்டினான்.
”தாராளமா போகலாம் ” முகவரியைப் பார்க்காமலே ஓட்டுனரிடம் கொடுத்தான் கிறிஸ்டி.
வண்டி வாசவி ஸ்டோர்ஸ் என பலகையிடப்பட்ட கடை வாசலின் முன் நின்றது. “இதான் சார் நீங்க கேட்ட அட்ரெஸ்” ஓட்டுனர் சுட்டிக்காட்டிய கடையை நோக்கி சிவாவும், சுதாகரும் விரைந்தனர்.கிறிஸ்டியின் முகம் சுருங்கியது.

இரவு நேரமாதலால் கடைப் பூட்டப்பட்டிருந்தது.கடை வாசலில் கையில் பீடியுடன் கம்பளி போர்த்தி அமர்ந்திருந்த பெரியவரிடம் கடை முதலாளியின் வீட்டை விசாரித்தனர்.
“தோ இங்கன சந்து இருக்குல்ல உள்ளார போனீங்கன்னா மூணாவது வீடு.கதவுல பிள்ளையார் படம் போட்டிருக்கும்”
நன்றி தெரிவித்து விட்டு குறுகலான சந்தில் கடை முதலாளியின் வீட்டைத் தேடினர்.வெகு நேரம் கதவைத் தட்டிய பிறகு சோர்வான கண்களுடன் லுங்கியை கட்டிக் கொண்டு கதவைத் திறந்து “யார் நீங்க? என்ன வேணும்?” எரிச்சலாய் கேட்டார்.
“சார் நீங்க வாசவி ஸ்டோர்ஸ் ஓனர் தான?” சிவா.
“ஆமா” தலையை சொரிந்து கொண்டே பதிலுரைத்தார்.
“சார் உங்க கடையிலிருந்து...” சுதாகர் பேசி முடிக்கும் முன் இடை மறுத்தார் கடைக்காரர் “சாமன்லாம் எடுக்க முடியாது காலையில வாங்க சார்” கதவடைக்க முயன்றவரை அவசரமாய் சிவா தடுத்தான்.
“அதில்ல சார்... ஒரு நிமிஷம்”
“இப்ப என்ன சார் வேணும் உங்களுக்கு?”கடைக்காரர்.
“நாங்க காணாமப் போன நண்பன தேடி வந்திருக்கோம் தயவு செஞ்சு உதவி பண்ணுங்க” கலங்கிய கண்களுடன் கைகூப்பி கெஞ்சினான் சிவா. கடைக்காரர் வெளியே வந்து கதவை சாத்திவிட்டு ஒன்றும் புரியாதது போல் பார்த்தார்.

“சார் உங்க கடைல இருந்து ஒரு 5 மணிக்கு 2376122 ங்கிற பெங்களூர் நம்பருக்கு எங்க ஃபிரண்டு கால் பண்ணினான்.அவன கொஞ்ச நாளா காணாம தேடிட்டு இருக்கோம்.பேசுறப்ப கால் கட் ஆயிடுச்சு.ஆள் நல்லா உயரமா,சிவப்பா இருப்பான்,நெத்தில ஒரு தழும்பு இருக்கும்” ஏதேனும் தகவல் கிடைக்கும் என்ற ஆர்வத்தில் முழுவதுமாக கொட்டினான்.மூவரும் பேசிக் கொண்டே நடந்தனர்.

“ஆமா சார்,ஞாபகம் இருக்கு. வந்து பேசிகிட்டு இருந்தாரு.தடுமாறி,தடுமாறி பேசினாரு.அப்புறம் ஒரு மூணு பேரு வந்து ஃபோன புடுங்கி உடைச்சிட்டு ஆள இழுத்துட்டு போயிட்டாங்க.நான் புடிக்க போனப்ப என்ன நெட்டித் தள்ளிட்டாங்க.தோ கைல கூட காயம் ஆயிடுச்சு பாருங்க” தன் புறங்கையை காட்டினார். தான் எதிர்பார்த்தது போலவே ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது என உணர்ந்து திடுக்கிட்டு சிவாவும், சுதாகரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

“அவர எங்க கூட்டிட்டு போயிருப்பாங்கன்னு ஏதாவது தெரியுமா? ஐ மீன் அவங்க பேச்சுல ஏதாவது தெரிஞ்சுதா? ” சுதாகரின் குரலில் பயம் தொணித்தது.

“அதெல்லாம் தெரில சார் ஒரு நீல கலர் கார்ல... வண்டி நம்பர் கூட பாத்தேனே... ம்... 8888 நு நினைக்கறேன். டேஷன்ல கம்பிளயிண்டு குடுக்கலாம்னு பாத்தேன் அப்புறமா  பெரிய இடமா இருந்தா பொழப்பு நாறிடுமேனு விட்டுட்டேன்” பேசிக்கொண்டே கடையின் முன் வந்து நின்றனர்.

“எந்த பக்கம் போனாங்க” சுதாகர்.

“இதோ இப்படியே வடக்கால போனாங்க...” என்று சாலையைப் பார்த்தவர் திடுக்கிட்டு முகத்தை துண்டால் மூடிக்கொண்டு இருவரிடமும் கிசுகிசுத்தார்.

“சார் மூணு பேரு அவர இழுத்துட்டு போனாங்கன்னு சொன்னேன்ல அதுல ஒருத்தன் அதா அங்க நிக்கறான் பாருங்க ”
இருவரும் சுற்றும் முற்றும் பார்த்தனர்.வண்டி ஓட்டுனர், கிறிஸ்டியைத் தவிர அங்கு வேறு யாரும் இல்லை.
“யார சொல்றீங்க? அந்த டிரைவரா? ” சிவா வினவினான்.

“இல்ல சார் அந்த கறுப்பு கோட்டு போட்டுட்டு ஒருத்தன் நிக்கறான்ல அவந்தான்”

“கிறிஸ்டியா?” இருவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

“அந்தாள உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா? நாசமா போச்சு. ஏதாவது வம்பு வழக்குன்னா என்ன மாட்டி வுட்றாதீங்க சார் நான் குடும்பஸ்தன்.உங்கள கெஞ்சி கேக்கறேன்” நன்றியைக் கூட வாங்கிக் கொள்ளாமல் வீட்டை நோக்கி ஓடியே விட்டார்.
எந்த சலனமும் காட்டாமல் பஷீரை கண்டுபிக்க கிறிஸ்டியுடன் காரில் ஏறி புறப்பட்டனர்.

                                                                                                           -காத்திருங்கள்

வன்முறை


அடக்குமுறை ஏவப்படும்போது
வன்முறை
அடிப்படை உரிமையாகிறது...!

Saturday, 10 December 2011

பள்ளியறை

நாம் சேர்ந்து பயின்ற பள்ளியறை
கல்வி பயின்ற அறையைத் தான் சொல்கின்றேன்
கலவி பற்றி சொல்லவில்லை
ஒரு சொல்லுக்கு
முரண்பாடான இரு பொருள்கள்
காதல் என்ற ஒற்றைச் சொல்லுக்கு
நம் இருவரில் அன்று முளைத்த
இருவேறு அர்த்தங்களைப் போல...

தெய்வீகம் என்பது என் சூளுரை
சத்தியமாய் சினிமாவில் சுட்டதுதான்
இனக்கவர்ச்சி
உன் நண்பிகள் சொன்னதை நீ ஒப்பித்தது...

நீ வந்து சென்ற பாதைகள்...
உன் கொலுசும், நிழலும் கூட தவறாய் காட்டும்
என் கண்களை கேட்டிருந்தால்
அங்குல இடைவெளியின்றி அளந்து சொல்லியிருக்கும்...



நொடி தவறாமல்
உனையே பார்த்திருந்தேன்
வீட்டிற்கு செல்லும் வரை
நீயே என் வகுப்பறை...
மணியோசைக்கு ஒருமுறை
நான் பார்ப்பது கண்டு நீ சலிப்பாய்
என் பார்வைக்கு நேராய் உன் கருவிழிகள்
சங்கமத்தின் விகிதம் நாளுக்கு நாள் கூடியது
என் இதயத்துடிப்பும் தான்...

உன் வீட்டை மிதிவண்டியில்
கடந்து செல்லும் பொழுது
உன்னைக் கண்டால் உள்ளம் படபடக்கும்
உன் தந்தையை மாடியில் கண்டால்
மண்டைக்குள் மணியடிக்கும்...

வகுப்பறை முன்
உன்னை வம்படியாய் அழைத்து பேசுகையில்
தத்தித்தவித்து ஏதேதோ பேசினேன்
“லஞ்ச் பிரேக்ல என்ன சாப்பிட்ட?” உட்பட
என்னைத் தவிர்க்காமல் நீயும் பேச
உள்ளங்கை வியர்த்துக் கொட்டிப் பிசைந்து நின்றேன்...



உன் அமைச்சரவை சகாக்கள் அறிவுரையால்
என் காதல் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம்
எளிதில் நிறைவேரியது...

அதற்கு பின்னான காலங்களில்
எந்த பெண்ணுக்கும்
பெரிதாய் இதயம் துடிக்கவில்லை
பிடித்திருக்கின்றது என
மூளை மட்டும் சொல்கிறது
பைக்கில் எந்த அப்பனுக்கும்
பயமில்லாமல் சுற்றுகிறேன்
கை வியர்ப்பது
வெயிலில் மட்டும்தான்...

காதலின் ஆழமான உணர்வுகளை
உண்மையாய்
அழகாய்
புதிதாய்
உணர்த்திய உனக்கு நன்றி...




Thursday, 8 December 2011

சீனா தானா டோய்





”கிங்கிசா மங்கீசா, மங்கீசா பாயாசா”

இன்னும் கொஞ்ச வருசத்துல நம்ம புள்ளகுட்டிகளும் நாமளும் இப்படி சைனீஸ் பாஷை பேசி சுத்திகிட்டிருக்கறக்கு பிரகாசமான வாய்ப்பு இருக்கு மக்களே. புரியலியா? மேற்கொண்டு நம்ம தலையெழுத்த படிங்கோ. சீனா-இந்தியா போர் இன்னும் 10 வருசத்துக்குள்ள எப்ப வேணும்ணாலும் வரலாம்.நம்ப மாட்டிங்களே! இனிமேல் களத்தில் நேரடிப் போர்ல எந்த நாடும் ஈடுபடாதுனு சொல்றவங்க கண்டிப்பா படிங்கோ. மொதல்ல இரு நாடுகளுக்குள்ள போர் வரணும்னா ஏதாவது  பிரச்சனை இருந்தா தான வரும்.சீனாவுக்கும் நமக்கும் அப்பிடி ஏதாது வாய்க்கா தகராறு இருக்கா என கேட்போருக்கு சரத்குமார்,விசயகாந்த்,விஜயகுமார்,வினு சக்கரவர்த்தி,பாலகிருஷ்ணானு எந்த நாட்டாமை வெச்சு பேசினாலும் தீக்க முடியாத அளவுக்கு பிரச்சனை இருக்கு மக்களே.

1) இந்தியாவில் சுதந்திரத்துக்கு அப்புறம் இணைந்த சிக்கிம், அருணாச்சலபிரதேசம் எல்லாம் சீனாவுக்கு சொந்தமானதுன்னு அந்த நாட்டு அரசாங்கம் ரொம்ப நாளா சொல்லிட்டிருக்கு. வெறும் பேச்சோட நிப்பாட்றதுக்கு அவங்க என்ன மன்மோகன் சிங் கவர்மெண்டா? சிக்கிம், அருணாச்சல பிரதேச பகுதிகள் எல்லாம் தங்கள் நாட்டோட பகுதி மாதிரி வரைபடம் வெளியிட்டது பெரிய சர்ச்சை ஆனது நினைவிருக்கலாம் (நினைவுல இருக்கா இல்லையானு ரொம்ப யோசிக்காதீங்க.அப்பிடி நியாபகம் வெச்சுக்க இதென்ன ஐசுவர்யா ராய் டெலிவரி டேட்டா?).அதுமட்டுமில்லிங்கோ சிக்கிம் மக்களுக்கு எல்லாம் விசா தேவை இல்ல அவங்க எங்க நாட்டு மக்கள்னு விசா குடுக்காமயே அவங்கள சீனாக்குள்ள அனுமதிச்ச சம்பவங்களும் இருக்கு. இதே மாதிரி காரணத்துக்கு தான் இந்தியா- சீனா 1962 ல அடிச்சுகிட்டாங்க. அப்ப சண்டைக்கு காரணமான பகுதிகள் பேரு காஷ்மிர் பக்கத்துல இருக்கற அக்சின் சின் அப்புறம் அருணாச்சல பிரதேசம். சரியான எல்லைகள தீர்மாணிச்சதுக்கு அப்புறம் சீனா தானாவே போர நிப்பாட்டிடுச்சு.

2) அடுத்தது தலாய் லாமா. இவரு திபெத் நாட்டோட மதத்தலைவர். 1950 ல இருந்து சீனா திபெத்தின் தலாய் லாமா அரசாங்கத்துகிட்ட ஒரு பேச்சுவார்த்தை நடத்தி திபெத்துக்கு சுயாட்சி குடுக்கறோம் ஆனா அது எங்க கட்டுப்பாட்டுல இருக்கணும்னு சொன்னாங்க.ரோசக்கார தலாய் லாமா அதுக்கு ஒத்துக்காதனால கலகம் உண்டாச்சு.திபெத்துல இருந்து தப்பிச்சு இந்தியாக்கு வந்து அரசியல் தஞ்சம் அடைஞ்சாறு லாமா. அவருக்கு அடைக்கலம் குடுக்கக் கூடாதுனு சீனா சொல்ல நம்ம அப்பிடித்தான் குடுப்போம்னு கொக்காணி காமிச்சோம். வொய்? தலாய் லாமாவ வெச்சு சீனா திபெத் மேல செலுத்தற ஆதிக்கத்த குறைக்கணும்னு ஒரு இராஜதந்திரம் தான்.  சில வருடங்களுக்கு முன்னாடி சீனாகிட்ட இருந்து சுதந்திரம் கேட்டு திபெத் புத்த பிக்குகள் இந்தியாவில போராட்டம் நடத்தினாங்க.

 இது இரண்டும் வெளிப்படையான காரணங்கள் இது போக மாபெரும் அபாயம் இருக்கு அத கடசில பாப்போம்.

சரி இந்த காரணமெல்லாம் இருக்கட்டும் போர் இப்பவே வரும்னு எத வெச்சு சொல்றோம்னா அதாகப்பட்டது உலகமயமாக்கலுக்கு முன்னாடி நாடுகளுடைய வலிமைங்கிறது அவங்க கையில எவ்வளவு அளவு நிலம் இருக்கு,படைபலம் என்ன? போரை சமாளிக்கத் தேவையான தளவாடங்கள் இதப் பொறுத்து தான் இருந்துது. தங்களுடைய செலவுக்கு தேவையான பொருட்கள தங்களுக்கு கீழ அடிமையா இருந்த நாடுகள் கிட்ட கொள்ளையடிச்சுகிட்டாங்க.உதாரணத்துக்கு நம்ம கிழக்கிந்தியக் கம்பெனி மாதிரி.அதனாலதான் எல்லா நாடுகளும் போட்டி போட்டு சண்டை பண்ணி நிலப்பரப்புகள ஆக்கிரமிச்சாங்க.2 உலகப் போர்கள் நடந்து முடியற வரையும் அதற்கு பின்னான காலங்களும் இப்படித் தான் இருந்துச்சு. உலகமயமாக்கலுக்கு பின்னாடி அதாவது நீ எங்கிருந்து எங்க வேணாலும் போயி வியாபாரம் பண்ணி யார் குடிய வேணும்னாலும் கெடுக்கலாம்னு உலக நாடுகள் எல்லாம் ஒண்ணு சேர்ந்து ஓ.கே சொன்னதுக்கு அப்புறம் எல்லா நாட்டுலயும் இருக்கற மிகப்பெரிய நிறுவனங்கள் எல்லாம் தங்களோட பொருட்களுக்கு புதிய புதிய சந்தைகள தேடி மற்ற நாடுகள் கூட ஒப்பந்தம் போட ஆரம்பிச்சாங்க. அதனாலதான் அமெரிக்காவில என்னென்ன குப்பை கூளம் எல்லாம் பயன்படுத்தறங்களோ அதெல்லாம் நம்ம மக்களுக்கும் சுடச்சுட கிடைக்க ஆரம்பிச்சது.இந்த நிலை கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்து இப்ப ஒரு நாட்டோட பொருளாதாரம் அதோட வெளிநாட்டு சந்தை அளவைப் பொறுத்து தான் அமையுது. இன்னிக்கு சர்வதேச அளவுல இந்தியாவ முதல் பெஞ்சுல உட்கார வெக்கறதுக்கு காரணம் அதோட மாபெரும் சந்தையும், என்ன சொன்னாலும் தலை ஆட்டும் அரசாங்கமும் தான்.அதுக்கு மேல நமக்கு மரியாதை கிடையாது. சரி இதுக்கும் சீனா போர் தொடுக்கவும் என்ன சம்பந்தம்? அத கடைசியா சொல்றேன்.

கடந்த சில வருடங்களா இந்தியா சீனாவோட எல்லைப் பகுதிகளில் மிகப்பெரிய மாற்றம் நடந்துகிட்டிருக்கு.அவை...
1) சீனா அதன் எல்லைப் பகுதியில பிரம்மாண்டமான சாலைகள் எக்கச்சக்கமா கட்டிகிட்டிருக்குனு சமீபத்துல உதறலா ஒரு அறிக்கை வந்துச்சு. ஒரு நாடுன்னா ரோடு போடத்தான் செய்யும்னு சொல்றேளா? அவங்க ரோடு போடுறது மக்கள் வசிக்கிற நகரங்களில் இல்ல. ஆள் அரவமே இல்லாத இந்திய எல்லையோர மலைப் பகுதிகள்ல கட்டுறாங்க.இராணுவத்துக்கு தேவையான பொருட்கள கொண்டு போறதுக்கு தான் இந்த சாலைகள்னு சொல்லித் தெரிய வேண்டியதில்ல.
2) இந்திய எல்லை நெடுக கண்காணிப்பு கோபுரங்கள் கட்டி அதுல சீன இராணுவத்த நிறுத்தி வெச்சிருக்காங்க.அது எதுக்குனு தெரியும்ல?
3) பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்ல விஜயகாந்த் மீட்டது போக மிச்ச பகுதி எல்லாத்தையும் சீனாக்கு குத்தகைக்கு விட்டுடுச்சு பாகிஸ்தான்.அங்க இருந்தபடி சீனா தனக்கு என்னென்ன தேவையோ எல்லாத்தையும் செஞ்சுக்கலாம்னு சொல்லிட்டாங்க.
4) இந்தியாவ சுத்தி இருக்கிற பாகிஸ்தான், பர்மா, இலங்கை எல்லாம் இப்ப சீனாவோட நட்பு நாடுகள்.போர்னு வந்தா இவங்க சீனா கூடத்தான் பழம் விடுவாங்க.
5) இந்தியாவோட கடுமையான பாதுகாப்போட இருக்கற இராணுவ கணிணிகள்ல பொறியியல் வல்லுனர்கள வெச்சு திருட்டுத் தனமா நுழைஞ்சு பல முக்கிய இரகசியங்கள ஆட்டயப் பொட்டிருக்காங்க.
 இதெல்லாம் நான் சொல்லலீங்கோ. நம்ம உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சொன்னாருங்கோ.

இப்ப மேல விட்ட மேட்டருக்கு வருவோம். சீனா இந்தியா மேல போர் தொடுக்க அருணாச்சல பிரதேசமோ, தலாய் லாமோவோ வெறும் வெளிப்படையான காரணங்கள் தான்.அதுக்கும் மேல முக்கியமான காரணம் இந்தியாவோட சந்தை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் எல்லாம் இந்திய சந்தைய பிடிக்க துடியா துடிக்கறாங்க.அதுக்கு மத்திய அரசும் உறுதுணையா இருக்கு ஒரே ஒரு உதாரணம்-FDI. காரணம் இங்க மக்கள் எதுக்கு வேணும்னாலும் செலவு பண்ணுவாங்க.தனக்கு ஒரு பொருள் பிடிச்சிருந்தா அது தேவையில்லன்னா கூட வாங்கக் கூடிய பணக்காரங்களும், உயர் நடுத்தர வர்க்கமும்; ஒரு பொருளோட தரத்த அதோட விளம்பரத்த வெச்சு முடிவு பண்ற கீழ் நடுத்தர வர்க்கமும் இணைந்து புளங்கற இந்திய பொருளாதாரம் அவங்க வியாபாரத்துக்கு அட்சய பாத்திரம். உலகத்தின் பொருளாதார வல்லரசுகளா இருக்கற நாடுகள் எல்லாம் தடுமாறிட்டிருக்கற சமயம் சீனாவுக்கு உலக வல்லரசா மாற அதாவது அமெரிக்காவோட இடத்த பிடிக்க இது மிகச்சரியான தருணம். இந்தியாவோட சந்தை இப்ப அமெரிக்கா கையில இருக்கு அது சீனாவோட கைக்கு மாறினா பொருளாதார ரீதியா சீனா உலகத்துல அசைக்க முடியாத சக்தியா மாறிடும்.அதுக்கு இந்திய அரசு சீனாவுக்கு அடிபணிய வேண்டி இருக்கும்.அதுக்கு ஒரே வழி போர் தான்.சீனா போற வேகத்த பாத்தா அது எப்ப வேணும்னாலும் வரலாம்.

போர் வந்தா என்ன ஆகும்?
இந்தியா கிட்ட பெரிய படை இருக்கு சீனா வந்தாலும் ஒண்ணும் பண்ண முடியாதுன்னு நினைக்கறீங்களா? ஏற்கனவே சொன்ன மாதிரி இந்தியாவின் அண்டை நாடுகள் எல்லாம் சீனா பக்கம் இருக்கறதால எந்நேரமும் சீனாவுக்கு எல்லா உதவியும் கிடைக்கும்.சுருக்கமா சொன்னா ரவுண்டு கட்டி அடிப்பாய்ங்க.
சரி இந்தியாவுக்கு ஃபிரண்ட்ஸ் இல்லையா? சாமி சத்தியமா இல்லீங்க. ஏன்னா போர்ல இந்தியாவுக்காக களம் இறங்குற அளவுக்கு நெருக்கமான நாடுகள் எதுவுமே இல்லைங்கிறதுதான் உண்மை. அமெரிக்கா இருக்குல்லனு மீசைய முறுக்காதீங்க. தன்னோட மிக மிக மிக மிக மிக நெருக்கமான நாடான இங்கிலாந்துக்கு கூட அமெரிக்கா எப்ப உதவி செஞ்சுது தெரியுமா? பிரிட்டன் சிக்கி சேதாரமானப்ப பாசத்துல பாய்ஞ்சு போகல.முதல் உலகப் போர்ல தன்னோட போர்க் கப்பல் தாக்கப்பட்டு கவிழ்ந்தப்பவும், இரண்டாம் உலகப் போர்ல பியர்ல் ஹார்பர் தாக்கப்பட்டப்பவும் தான் வேட்டிய மடிச்சு கட்டிட்டு போனாங்க. சொந்த பங்காளி பிரிட்டனுக்கே இந்த நிலைமைனா நாலு விட்ட பங்காளியான நமக்கு என்னாகும்? பெப்பரப்பே தான்... 1962 சீனா போர் நடக்கறப்ப நம்ம பிரதமர் நேரு மாமா போர் விமானங்கள் வேணும்னு கேட்டு அமெரிக்க ஜனாதிபதி நிக்சனுக்கு கடிதம் எழுதுனாரு.அதெல்லாம் குடுக்க முடியாதுன்னு கைய விரிச்சுட்டாரு நிக்சன்.அதுக்கு அப்புறம் தான் சோவியத் ரசியா கிட்ட இந்தியா நெருக்கம் காட்ட ஆரம்பிச்சுது. போர் வந்தா இந்தியாவோட பொருளாதாரம் எந்தளவுக்கு பாதிப்படையும்னு எல்லாருக்கும் தெரியும் நம்ம போரில் வென்றாலும் அந்த பொருளாதார சுமைல இருந்து மீள்றதுக்கு ரொம்ப ஆண்டுகள் ஆகும்.அந்த சுமை எல்லாம் நம்ம தலைல தான் விடியும். இந்த ஊழல் தலைவர்கள வெச்சு இப்பவே சமாளிக்க முடியலியே அப்படி ஒரு நிலைமை வந்தா என்னாகும்? போர்ல தோத்துட்டா? பெருசா ஒண்ணும் இல்ல வீதிக்கு வீதி சீனா நிறுவனங்கள் தான் இருக்கும்.மட்டமான சீனா பொருட்கள வாங்க வேண்டி இருக்கும்.அதுக்கு அவன் சொல்றதுதான் விலை. FDI மாதிரி எத்தனை ஒப்பந்தங்கள நீட்டுனாலும் பதில் பேசாம கையெழுத்து போட வேண்டி இருக்கும்.மொத்ததுல சங்கிலியில கட்டாத சீன அடிமைகளா இருப்போம்.
அப்படி போர் வந்தாலும் முதல்ல அடிபடப் போறது தமிழன் தான்.ஏன்னா நமக்கு 30 மைல் தொலைவில் இருக்குற இலங்கை சீனாக்கு திக் ஃபிரண்டு.இலங்கைக்கு இந்தியா கொடுக்குற பணம் எல்லாம் ராஜபக்‌ஷே வாய்குள்ள போயிட்டிருக்கு அதே சமயம் சீனா அங்க கடற்படைத் தளங்கள் கட்டிட்டிருக்காங்க.கப்பல தூக்கிட்டு வந்தான்னா குண்டு விழுகப்போறது தமிழ்நாட்டுல தானுங்கோ! அப்பவே இலங்கைக்கு உதவி பண்ணாதிங்கடான்னு சொன்னமே சொன்னமே அவனுங்க கேட்கலியே!!!

பின்குறிப்பு: 13.12.11 அன்று வெளியான செய்தி இந்திய பெருங்கடலில் உள்ள செசலிஸ் என்கிற தீவில் சீனா தன் கடற்படை தளத்தை கட்டி முடித்துள்ளது.அதற்கு சீனா சொல்லும் காரணம் ”கடற்கொள்ளையர்களைப் பிடிக்க இந்த தளம் பயன்படும்”. இந்தியாவிற்கும் ஆப்பிரிக்காவிற்கும் நடுவில் இந்த தீவு உள்ளது.

Wednesday, 7 December 2011

காணவில்லை: இந்திய இறையாண்மை

என் இனிய இந்திய பெருங்குடி மக்களே! அருமைமிகு காந்தி தாத்தாக்களே! நேரு மாமாக்களே! சுருக்கமா சொல்லணும்னா காங்கிரசு பேரியக்கமே!



நாட்டாமை படத்துல பொன்னம்பலம் சொல்ற மாதிரி “இப்பிடி ஒரு சந்தர்பத்துக்காகத் தான் 18 வருசமா காத்துகிட்டிருந்தேன்”னு சொல்லத் தோணுது இந்த காங்கிரசுகாரங்கள பாத்து. சொல்லப் போனா வார்த்தைகள ரொம்ப கட்டுப்படுத்திதான் எழுதிட்டிருக்கேன்.2009 ல ஈழப்போர் இறுதி கட்டத்துல இருந்தப்ப பல லட்சம் தமிழர்கள் சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்டாங்க.அப்ப தமிழகமே பொறுக்க முடியாம கதறினோம். இன்னும் மனசுல அந்த காயம் வலிச்சுகிட்டே இருக்கறது நம்ம ஒவ்வொருத்தருக்கும் தெரியும்.அப்படி உச்சகட்ட உணர்ச்சியோட தமிழகமே கொந்தளிச்ச நிலையில கூட நாம வன்முறைல இறங்கல அதுக்கு பதிலா நம்ம தோழர்கள் தங்களைத் தாங்களே கொழுத்திகிட்டாங்க.அப்பவெல்லாம் இந்த காங்கிரசு என்ன பண்ணுச்சு நம்ம உணர்ச்சிகளை எல்லாம் நம்ம தலைவர்கள் மேடைல பேசினப்ப இவரு இந்திய இறையாண்மைக்கு எதிரா பேசினாருனு சொல்லி ‘தேசிய பாதுகாப்பு சட்டத்துல’ தூக்கி சிறைக்குள்ள போட்டுச்சு.அதுமில்லாம வெளிநாட்டு பிரச்சனைல மத்திய அரசு தலையிட முடியாதுன்னும் சொல்லுச்சு. இது ஒரு பக்கம் இருக்கட்டும். கடந்த 3 நாளா கேரளாவுக்குள்ல நுழையுற தமிழ்நாட்டு வண்டிகள எல்லாம் அடிக்கறாங்க,இரண்டு மாநிலத்துக்குள்லயும் போக்குவரத்து சுத்தமா நின்னுடுச்சு. எதுக்காக? முல்லைப் பெரியாறு குறுக்க புது அணை கட்டணுமாம்.பழைய அணை உடைய போகுதாம் (1979 ல இருந்து உடைய போகுது உடைய போகுதுனு தான் சொல்றானுங்களே ஒழிய உடையற பாட்ட காணமேப்பா). சத்தியமா அணை உடையாதுனு ஊர் உலகமே ஆதாரத்தோட சொன்னாலும் கேட்காம கடப்பாறைய தூக்கிட்டு அனைய உடைக்க கிளம்பிட்டானுங்க கேரளாக்காரனுங்க. ஈழப்போர்ல இந்திய இறையாண்மை பத்தி பேசுன வாயெல்லாம் இப்ப எங்க போச்சுங்கிறது தான் நம்ம கேள்வி. கேரளால காங்கிரசு அரசு நடக்குதுங்கிறதுக்காக இறையாண்மைய சங்கிலி போட்டு கட்டிடீங்களா? இல்ல பாதிக்கப்படுறது எதிர்க்கட்சி (அ.தி.மு.க) அரசுதான,அதுவும் தமிழனுங்கதானேனு அலட்சியமா? ஒரு இனஅழிப்ப தடுத்து நிறுத்தச் சொன்ன சீமானால உங்க தேசத்துக்கு ஆபத்துன்னு தூக்கி உள்ள போட்டிங்களே இரு மாநிலத்துக்கு பொதுவான அணைய உடைச்சே தீருவேன்னு சொல்ற உம்மன் சாண்டினால உங்க தேசத்துக்கு ஆபத்தில்லையோ? இலங்கை பிரச்சனை வெளி நாட்டு பிரச்சனை தலையிட முடியாதுனு சொன்னீங்க ரைட்டு விடு, கேரளாவும், தமிழ்நாடும் இந்தியாவுல தான இருக்கு? (அந்த உருமா கட்டுன தாத்தாவுக்கு யாராவது இந்தியா மேப்ப காட்டுங்கப்பா) கேரளா அண்டப்புளுகு விடுதுன்னு தெரிஞ்சும் ஏன் இந்த அரக்கத்தனமான அமைதி? தெரிஞ்ச பதில் தான்பா இவனுங்கள நம்புனா புல்லு வெட்டக் கூட முடியாது .இனிமேல் நம்ம நாட்டு மக்கள் எல்லாரும் மத்திய அரசுகிட்ட காரியம் ஆகணும்னா நேரா ஒபாமாக்கு கடுதாசி போடுங்கோ.அவரு பாத்து கையெழுத்து போட்டு அணுப்பினா தான் இங்க வேலைக்காகும்.ஏன்னா இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் மாதிரி மன்மோகன் சிங் அவர்கள் இந்தியாவுக்கான அமெரிக்கப் பிரதமர்.அங்க அடிச்சா தான் அவருக்கு இங்க வலிக்கும்.