Thursday, 12 January 2012

பழைய கதையாகப் போகும் ஸ்பீக்கர்கள்

தொலைக்காட்சியின் வரலாறு என்பது நம் ஒவ்வொருவர் வீட்டோடு சம்பந்தப்பட்டது தான். கறுப்பு வெள்ளை,வண்ணம்,பெரிய கறுப்பு டப்பா,குட்டி தொலைக்காட்சி,எல்.சி.டி, இப்பொழுது எல்.இ.டி என காலந்தோறும் அதன் தொழில்நுட்பம் மெருகேறிக் கொண்டே இருக்கின்றது.தொலைக்காட்சியிலிருந்து துல்லியமான ஒலிக்காக சில வருடங்களாக 2.1,5.1,7.1 என ஒலிபெருக்கிகளின் படையெடுப்பு திரையரங்கு போன்ற அனுபவத்தை வீட்டிலேயே தந்து கொண்டிருந்தது. ஆனால் தற்சமயம் இதன் தொழில்நுட்பம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துவிட்டது.அது என்ன?

சென்னையில் ஒரு புகழ்பெற்ற அடுக்குமாடி விற்பனை வளாகத்தில் உள்ள ஒலிபெருக்கிகள் விற்பனை கூடத்திற்குள் நுழைந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொழுது அதன் பணியாளர் எங்களை அழைத்து உங்களுக்கு ஒரு டெமோ காட்டுகிறேன் வாருங்கள் என அழைத்து ஒரு அறைக்கும் அமர் வைத்தார்.எதிரே ஒரு 46 இன்ச் தொலைக்காட்சி அதன் இருபக்கமும்,கீழேயுமாக துணியால் மூடப்பட்ட ஸ்பீக்கர்கள்.ஒரு ஒளி/ஒலிக்காட்சியை ஓட விட்டார்.அறையே அதிரும் அளவு எல்லா சத்தங்களும் எங்களை சுற்றிச் சுற்றி வந்தது.நாங்களும் பே என பார்த்துக் கொண்டிருந்தோம்.சிறிது நேரம் கழித்து உள்ளே வந்த அவர் மூடப்பட்டிருந்த ஒலிபெருக்கிகளின் துணியை எடுத்தார்.அப்பொழுது வாயைப் பிளந்தவர்கள்தான் வெளியே வரும் வரை மூட முடியவில்லை.ஆம் அங்கே எந்த ஒலிபெருக்கியும் இல்லை.வெறும் துணிதான் இருந்தது.பிறகுதான் விளக்கினார்கள் 10 வருட ஆராய்ச்சிகளுக்கு  பிறகு ஒலிபெருக்கிகள் எதுவும் இல்லாமல் தொலைக்காட்சியிலிருந்தே DTS போன்று ஒலிகள் வெளிப்பட வைத்திருக்கின்றனர்.அதற்குப் பெயர் BOSE VIDEO WAVE ENTERTAINMENT SYSTEM. தொலைக்காட்சி பெட்டிக்குள்ளயே 16 ஒலிபெருக்கிகள் வைத்துள்ளனர்.இனி 6,7 ஒலிபெருக்கிகளை சுவரெங்கும் ஆணியடித்து மாட்ட வேண்டாம் ஒரே ஒரு தொலைக்காட்சி போதும்.





#என்ன பிரச்சனைனா இந்த நிறுவனம் சென்னை,பெங்களூரு இப்படி பெரிய ஊர்ல தான் கடை வெச்சிருக்காங்க.கோயம்புத்தூர்ல கூட இல்லன்னா பாத்துக்கங்க.
#ஒரே ஒரு அளவுல தான் பொட்டி இருக்குது. 46 இன்ச்- இதவிட சின்னது இல்லபா.
#இதன் விலை ஜஸ்ட் ரூ.4,79,000 மட்டுமே

இனி வரும் வருடங்களில் இந்த தொழில்நுட்பம் பரவலாகி ஒலிபெருக்கிகள் எல்லாம் காலாவதியாகிவிடும்.






Tuesday, 10 January 2012

சென்னையில் நான் - அருந்ததிராயின் உரை

கடந்த வாரம் முழுக்க சென்னையில் இருந்ததால் என் பதிவையும்,நான் பின்தொடர்கிற பதிவுகளையும் கவனிக்க முடியாதது மிகுந்த வருத்தத்தை அளித்தது.இருப்பினும் வாழ்வின் சில நல்ல தருணங்களை இந்த பயணம் அளித்தது மறக்க முடியாதது.அதில் முக்கியமான ஒன்று அருந்ததி ராய் அவர்களின் பேச்சை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.சனிக்கிழமை மாலை சென்னை தி.நகரில் உள்ள ஜி.ஆர்.டி அரங்கத்தில் காலச்சுவடு பதிப்பகத்தின் சார்பாக 7 புத்தகங்களை வெளியிடும் விழா நடைபெற்றது.அதில் புலம்பெயர் எழுத்தாளர் சேரன் ருத்திரமூர்த்தி அவர்களின் ‘காடாற்று’,’THE SECOND SUNRISE’, அருந்ததி ராய் அவர்களின் ‘THE BROKEN REPUBLIC’ ன் தமிழாக்கமான ‘நொருங்கும் குடியரசு’,காஷ்மீர் பிரச்சனையை மையமாகக் கொண்டு பஷரத் பீர் எழுதிய ‘ஊரடங்கு இரவு’, ஈழத்தில் இலங்கை அரசின் வெறியாட்டங்களை வெளிக்கொணரும் கார்டன் வைஸ் எழுதிய ’கூண்டு (THE CAGE)’, தலித்துகளின் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு ஸ்டாலின் இராஜாங்கம் எழுதிய “சாதியம்:கைகூடாத நீதி”,கோ.இரகுபதி எழுதிய ’தலித்களும்,தண்ணீரும்’ ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன. புலம்பெயர் எழுத்தாளர் சேரன் ருத்திரமூர்த்தி அவர்கள் என்னுடைய நண்பர் சதீஷ்குமாருக்கு முகநூல் மூலம் நண்பராகினார். ஆகையால் சதீஷ்குமார் மூலம் நான் பங்கேற்ற முதல் புத்தக வெளியீட்டு விழா இது.புத்தகங்கள் வெளியிடப்பட்டு நிகழ்ச்சி நிரல் செயல்பட்டுக் கொண்டிருக்க திடீரென்று அரங்கத்தின் உள்ளே அமர்ந்திருந்த 20 பேர் எழுந்து “காலச்சுவடு டௌன் டௌன்” “ஆண்டி தலித்,ஆண்டி ஈழம், ஆண்டி முஸ்லிம்-காலச்சுவடு டௌன் டௌன்” “R.S.S ன் கைக்கூலி காலச்சுவடு டௌன் டௌன்” என முழக்கமிட்டுக் கொண்டு பதாகைகளை பிடித்தனர். எனக்கும் சதீஷுக்கும் என்ன நடக்கிறதென புரியவில்லை.பதிப்பாளர் பெண்மணி புத்தகத்தை படித்துப் பாருங்க என சொல்லிக் கொண்டு அவர்கள் அருகில் வந்தார்.எதிர்ப்புக் குழுவிலிருந்த ஒருவர் ‘நீங்கள் ஐ.நா வின் அறிக்கையை புறக்கணிக்கின்றீர்கள்.தலித்,தமிழ்,இஸ்லாம் மீது பாசம் உள்ளது போல வேடம் போடுகிறீர்கள்’ என வாதிட்டார் காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்திய பின் அவர்கள் வினியோகித்திருந்த துண்டுப் பிரசுரத்தை பார்த்த பொழுது காலச்சுவடின் மீது பலமான குற்றச்சாட்டுக்களை தெரிவித்திருந்தனர்.இந்த பதிப்புலக அரசியலுக்கு நான் புதிது என்பதால் தொடர்ந்து நிகழ்ச்சியை கவனிக்கத் தொடங்கினோம். எங்களை வசீகரித்த அருந்ததி ராய் அவர்களின் பேச்சிலிருந்து சில துளிகள்.



தன்னுடைய புத்தகத்தை பற்றி அவர் பேசியது...

“தமிழில் பேச முடியாததற்கு மன்னிக்கவும்.எனக்கு மலையாளம் தான் தெரியும் ஆனால் தற்சமயம் மலையாளம் இங்கே விரும்பப்படுவதில்லை எனத் தெரியும் ஆகையால் ஆங்கிலத்தில் தொடர்கிறேன்.உலகத்தில் எங்கெங்கெல்லாம் கார்ப்பரேட்டுகளுக்கு இலவச சந்தை தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் போரின் மூலம் ஜனநாயகம் உருவாக்கப்படுகிறது.அதன் மூலம் இலவச சந்தையும் நிர்மானிக்கப்படுகிறது.இந்தியா ஏற்கனவே கார்ப்பரேட்டுகளின் செல்லப் பிள்ளையாக இருப்பதால் அது தேவையில்லை.பணம் எப்படி ஜனநாயகத்தை விழுங்கும் என தமிழ்நாட்டு மக்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை என நினைக்கின்றேன். நம் நாட்டின் உள்துறை அமைச்சர் சிதம்பரம் அவர்கள் ஹார்வார்டில் படித்தவர் அவருக்கு எண்ணிக்கைகளும்,விடைகளும் தான் முக்கியமாக இருக்கிறது.மக்களை பற்றி அவர் கவலைப்படுவதில்லை.அவர் இந்திய கிராமங்களில் இருக்கும் 70 கோடி மக்களும் நகரத்திற்கு பெயர்ந்து விட வேண்டும் என விரும்புகிறார்.தந்தேவாடாவில் ஒரு ஆதிவாசி காட்டில் பழங்களோ,விறகோ பறித்தால் அவர் தவறு செய்ததாகக் கூட சொல்ல மறுக்கின்றனர்,அவரைக் குற்றவாளி என்று தான் சொல்கின்றனர்.அரசாங்கம் அறிவித்திருக்கிற முகாம்களுக்கு இடம் பெயராத ஆதிவாசிகளை அவர்களை நக்ஸலைட்டுகளாக பார்க்கின்றனர்,எப்பொழுது வேண்டுமானாலும் சுட்டுக் கொல்கின்றனர்.ஏற்கனவே அங்கு விமானத்தளம்,படைத்தளம் எல்லாம் கட்டி மக்களை பயமுறுத்திக் கொண்டிருக்கின்றனர்.இந்த மக்கள் அவர்களிடம் பாதுகாப்பை எதிர்பார்க்க முடியாது.ஆதிவாசி இனத்திலிருந்து முதல் முதலாக ஒருவர் நிருபராக உருவானார்.அவர் ஆதிவாசி மக்களிடம் உள்ள பிரச்சனைகளை நேரடியாகக் கேட்டு அதை பத்திரிக்கைகளில் எழுதினார்.இந்த அரசு அவரை கைது செய்தது.அவரை படிக்க வைத்த அவருடைய உறவுக்கார பெண்ணையும் தேடியது.இதை தெரிந்து கொண்ட அவர் காடுகள் வழியாக தப்பித்து டெல்லிக்கு சென்று விட்டார்.அங்கே நீதிமன்றத்தில் சரணடைந்து பாதுகாப்பு அளிக்கக் கோரினார்.நீதிமன்றம் காவல்துறையின் மீது நம்பிக்கை இருப்பதாக சொல்லி காவல்துறையினருடன் அனுப்பி வைத்தது.சில நாட்களில் நோய் வாய்பட்ட அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி அவரை தனியார் மருத்துவமனைக்குஅழைத்துச் சென்றனர்.அங்கே அவர் பலமுறை கற்பழிக்கப்பட்டிருப்பதாகவும், பெண்ணுறுப்பில் கற்களும்,குப்பைகளும் இருப்பதாகத் தெரிவித்தனர். குடியரசு என்கிற தத்துவத்தையே பொய்யாக்கும் இந்த அரசின் நடவடிக்கைகளை தான் இந்த புத்தகத்தின் கட்டுரைகளில் விளக்கியிருக்கிறேன்.பத்திரிக்கைகளும்,மீடியாக்களும்,எழுத்தாளர்களும், அறிவாளிகளும் தாங்கள் யாருக்கும் எதிரியாகிவிடக் கூடாது என்பதில் தான் கவனமாக இருக்கின்றனர்.அதனால் தான் ஈழத்தில் படுகொலைகள் நடந்த போதும்,காஷ்மீரில் போராட்டங்கள் நடந்த போதும் எல்லோரும் வேடிக்கை பார்க்க முடிந்தது.அநியாயங்களை திட்டி எழுதுபவர்களை எல்லோரும் எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள் என விமர்சிப்பது உண்டு.ஒரு அறையில் 10 பேர் இருப்பதாக வைத்துக் கொள்வோம்.அதில் 7 பேர் பசியால் வாடும் ஏழைகள்,2 பேர் ஒரளவு வசதி படைத்தவர்கள்,ஒருவர் கோடீசுவரர் என வைத்துக் கொள்வோம்.அந்த கோடீசுவரரைப் பற்றி எழுதுவது நன்மையைத் தருமா? அல்லது பசியால் வாடும் 7 பேரைப் பற்றி எழுதுவது நன்மையைத் தருமா? இதில் யார் எதிர்மறையாய் செயல்படுபவர்கள்? நாம் அனைவரும் எப்படிப்பட்டவர்கள் என்றால் மலைப்பாதையில் செங்குத்தாக கீழே இறங்கும் சாலையில் ப்ரேக் பிடிக்காத பேருந்தில் சரிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் பொழுது என்ன பாட்டு பாடலாம் என சண்டை போட்டுக் கொண்டிருப்பவர்களைப் போன்றவர்கள்.”

அன்னா ஹசாரேவின் போராட்டம் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

இந்த நாட்டில் ஊழல் தலைவிரித்து ஆட முக்கிய காரணமே கார்ப்பரேட் நிறுவனங்கள் தான்.அதை எதிர்க்காதவர் எப்படி ஊழலை எதிர்க்க முடியும்? ஆதிவாசிகளின் பிரச்சனைகளிலிருந்து மக்களின் கவனத்தை இந்த ஊழல் எதிர்ப்பு மாயை மூலம் கார்ப்பரேட் மீடியாக்கள் திசைதிருப்பிவிட்டனர். ராம்லீலா மைதானத்தில் அத்தனை பேனர்களை கட்டிய அவர்கள் கார்ப்பரேட் ஆதிக்கத்தை எதிர்த்து ஒரு பேனர் கூட கட்டவில்லை. இவர்கள் மீது நம்பிக்கையில்லை.

லோக்பால் பற்றி...?

லோக்பால் அமைப்பு எல்லா அதிகாரங்களையும் ஓரிடத்தில் குவித்துவிடுகிறது.சீரான வளர்ச்சிக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதே சிறந்ததாகும்.இப்படி குவித்து வைப்பதால் அதுவும் கடிவாளம் போலாகும் என்பதே உண்மை.லோக்பாலின் வரம்புக்குள்ளிருப்பவர்கள் நேர்மையானர்வகளாக கருதப்படுவார்கள்.அதை விட்டு வெளியில் இருப்பவர்கள் சட்டத்தை ஏமாற்றுபவர்கள் ஆவர்.அப்படி பார்த்தால் இந்த நாட்டில் ஏழை மக்கள் தான் பெரும்பாலும் சட்டத்திற்கு புறம்பானவர்களாக கருதப்படுகின்றனர்.ஏனெனில் அவர்களிடம் தாங்கள் தங்கும் இடத்திற்கோ,வாழ்வாதாரத்திற்கோ எந்த பத்திரங்களும் இருப்பதில்லை.அவர்களை அப்புறப்படுத்தி பெருநகர வளர்ச்சிக்கு வித்திடவே லோக்பால் பயன்படும்.ஏழை மக்கள் மீது நடுத்தர வர்க்கம் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவே இது பயன்படும்.

2 ஜி வழக்கு சரியான திசையில் செகிறதா?

ஊழலுக்கு காரணமான கார்ப்பரேட்டுகள் தண்டிக்கப்படாத வரை அது சரியான திசை அல்ல.

பெரும்பான்மை ஜனநாயகத்தில் இருந்து பிரதிநிதித்துவ ஜனநாயகத்திற்கு நாம் நகருவது எப்படி?

இது ஒரு மிகப்பெரிய விவாதத்திற்கு உள்ளாக வேண்டிய தலைப்பு. பெரும்பான்மை ஜனநாயகம் எப்படி பிழையாகும் என்றால் பாபர் மசூதியை இடிக்கலாமா? வேண்டாமா? என ஓட்டெடுப்பு நடத்தினால் என்ன நடக்கும்? தலித்துகளுக்கு உரிமை கொடுக்கலாமா? வேண்டாமா? என ஓட்டெடுப்பு நடத்தினால் என்னாகும்? .

இன்னும் அவர் நிறைய பேசினார்.ஆனால் எனக்கு நினைவில் இருந்த வரை எழுதியிருக்கின்றேன்.

பின்குறிப்பு: இதழ் வெளியீட்டின் போது முழக்கமிட்டவர்கள் மே 17 இயக்கத் தோழர்கள் என இப்பொழுது தான் தெரிந்து கொண்டேன். அவர்களின் குற்றச்சாட்டுகள் எனக்கு முன்னமே தெரிந்திருந்தால் சேர்ந்து கத்தியிருக்கலாம்.படிக்கிற புத்தகத்தின் எழுத்தாளர்களை நினைவு வைத்துக் கொள்ளவே தடுமாறுகிறேன் இதில் பதிப்பகம் பற்றிய விவரங்கள் நிச்சயமாய் எனக்கு புதிதுதான்.மே 17 இயக்கம் மனதிற்கு நெருக்கமான இயக்கம் என்பதால் இனி வரும் காலங்களில் சற்று கவனமாக இருப்பேன் என நினைக்கின்றேன்.





நொய்யல்




கழிவுகளின்
பாரம்
தாளாது
நிற்கிற
நொய்யலாறு போல...
நிற்கிறது
என் மனமும்
கடந்த காலத்தை
சுமந்து...
என்னை
நகர வைக்கும்
’சிறுதுளி’
எங்கிருக்கிறது?
எதுவாயிருக்கிறது?

Wednesday, 4 January 2012

சில விந்தையான கின்னஸ் சாதனைகள்

நான் பார்த்து வியந்த சில வியப்பூட்டும் கின்னஸ் சாதனைகள் இதோ உங்களுக்காக.

உலகத்துலயே பெரிய வாய்


சில பேருக்கு வாய் நீளம் வாய் நீளம்னு சொல்லுவாங்க ஆனா இவர் அளவுக்கு முடியாது சும்மா இல்ல 17 செ.மீ.

நாக்குல நரம்பிருக்கா?



வாயால வெயிட்டா பேசலாம் ஆனா இப்பிடி வெயிட்டா தூக்க முடியுமா?

சிம்ரன் செத்தா போங்க



கொடி இடைனு சொன்னது இதத்தான்.குழைந்தைய தூக்கி வெச்சா கமுக்கமா உட்காந்துக்கும் போல.வெறும் 15 இன்ச் தான் மக்களே.

Tuesday, 3 January 2012

அரைகுறை



அரைகுறை ஆடைப்பெண்கள்
அடங்க மறுக்குது ஆண்மகன் கண்கள்
அடக்கச் சொல்லுது பெண்ணியம்
குடி குடியை கெடுக்குமென
சாராய போத்தல் சொல்வது போல...

ஆண்ட்ராய்ட் கைபேசியில் தமிழில் எழுதுவது எப்படி?

வெகுநாட்களாக என்னுடைய ஆண்ட்ராய்ட் வகை கைபேசியில் தமிழில் எப்படி தட்டச்சு செய்வது எனத் தெரியாமல் பல வகையில் குழம்பினேன்.இன்று ஓய்வாக இருந்த சமயம் செய்த சிறு முயற்சி பலனளித்துவிட்டது.அதை உங்களுடன் பகிர்கின்றேன்.



கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.

1) உங்கள் அலைபேசியில் செயலிகளை விற்பனை செய்ய ஒரு செயலியை உங்கள் அலைபேசி நிறுவனமே நிறுவியிருக்கும்.அதாவது சாம்சங் அப்ளிகேஷன்ஸ்.கூகுள் ஸ்டோர்ஸ் போன்றவை.அதை திறக்கவும்.அது இல்லாவிட்டால் MARKET,APPBRAIN செயலிகளை தரவிறக்கம் செய்து கொள்ளவும்.

2) அந்த செயலியில் உள்ள தேடுதல் பெட்டியில் tamil என எழுதி தேடுதல் பொத்தானை அழுத்தவும்.

3) தமிழ் தொடர்புடைய செயலிகள் (அகர முதலி, தட்டச்சு) பட்டியல் வரும்.அதில் உங்களுக்கு பிடித்த தமிழ் தட்டச்சு பலகையை தேர்வு செய்து பதிவிறக்கவும்.நான் தேர்வு செய்தவை தமிழ் விசை, பணிணி, கே.எம் தமிழ் கீபோர்ட், தமிழ் கீபோர்ட். இதில் ஏதேனும் ஒன்று இருந்தாலே போதுமானது.

4) உதாரணத்திற்கு சாம்சங் கைபேசியில் தமிழ் விசையை எடுத்துக் கொள்வோம்.இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கைபேசியில் நிறுவிக் கொள்ளவும்.

5) உங்கள் கைபேசியின் மெனுவை திறந்து SETTINGS  பகுதிக்கு செல்லவும்.

6) SETTINGS ல் உள்ள LOCALE AND TEXT என்னும் தேர்வை திறக்கவும்.அதன் உள்ளே நீங்கள் பதிவிறக்கம் செய்த தமிழ்விசை செயலி பட்டியலிடப்பட்டிருக்கும்.அதனை தேர்வு செய்துவிட்டு மாற்றங்களை சேமிக்கவும்.

7) SETTINGS லிருந்து வெளியேறி புதிய குறுந்தகவலை தட்டச்சு செய்யத் தொடங்கவும்.வார்த்தைப் பெட்டியில் (TEXT BOX)  விரலை வைத்து அழுத்திப் பிடித்தால் INPUT MODE என்னும் தேர்வு திரையில் வரும் அதை திறக்கவும். அதன் உள்ளே SAMSUNG KEYPAD, TAMIL VISAI ஆகியவை இருக்கும்.தமிழ் விசையை தேர்வு செய்யவும்.தமிழ் தட்டச்சுப் பலகை தோன்றும்.மகிழ்ச்சியுடன் தமிழில் தட்டச்சு செய்து தமிழை பரப்புங்கள்.

FOLLOW THIS INSTRUCTIONS TO SEE TAMIL FONTS IN ANY MOBILE

1) DOWNLOAD OPERA MINI IN YOUR MOBILE
2) TYPE "about:config" WITHOUT QUOTATION IN WEB ADDRESS TAB.
3) POWER SETTINGS PAGE WILL OPEN
4) YOU WILL FIND AN OPTION WHICH SAYS "USE BITMAP TO SEE COMPLEX FONTS" IN THAT PAGE
5) GIVE YES IN THAT OPTION AND SAVE THE SETTINGS
6) RESTART OPERA MINI.

ENJOY TAMIL FONTS IN MOBILE.  

Monday, 2 January 2012

வஞ்சம்-பகுதி 6

                                                        பகுதி 6-மாளிகை

”சிவா சிவா”
மார்பில் அழுத்தி உலுக்கியதில் கண்விழித்து எழுந்தான்.
சிவாவைச் சுற்றி நால்வரும் அமர்ந்திருந்தனர்.தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்தவன் கடைசியாக என்ன நடந்ததென யோசித்துக் கொண்டே கைகளைப் பார்த்தான்.கயிறால் இறுக்கிக் கட்டியிருந்ததால் மணிக்கட்டு சிவந்திருந்தது, வலி எடுத்ததால் லேசாக மணிக்கட்டை சுற்றினான்.தலை சுற்றலுடன் நிமிர்ந்து பார்த்தவன் முன் ஐசுவர்யாவும் மற்ற நண்பர்களும் அமர்ந்திருந்தனர்.ஐசுவர்யா அவன் தோளைப் பற்றிக் கொண்டாள்.

“தலைவலிக்குதா சிவா?” தலையை தடவிக் கொடுத்து பரிவுடன் கேட்டாள்.
”இல்ல,பரவால்ல... உனக்கு ஒண்ணும் ஆகலியே?” கொஞ்சம் சுயநலமாய் கேட்டு விட்டதால் வெட்கி “யாருக்கும் எதுவும் ஆகலல?” என வினவினான்.

“ஒண்ணும் ஆகலடா,எல்லாரும் இப்ப தான் முழிச்சோம்.அந்த காட்டுவாசிப் பயலுங்க இங்க கொண்டு வந்து போட்டுட்டானுங்க” விக்கி.

“இது என்ன இடம்னு கூடத் தெரியல ஏதோ பழைய வீடு மாதிரி இருக்கு.வெளிய போறதுக்கு ஏதாது வழி இருக்கான்னு பார்க்கணும்” சுதாகர் சொன்னவுடன் தான் சிவா தாங்கள் எங்கே அடைபட்டிருக்கிறோம் என பார்த்தான்.



ஓரெழுத்தில் சொன்னால் அது அரண்மனை.ஆனால் அதன் ஒவ்வொரு அங்குலத்தையும் பக்கம் பக்கமாய் வர்ணிக்கலாம்.ஒரே சீராய் செதுக்கப்பட்ட கருங்கற்களினால் ஆன சுவர்கள் குறைந்தபட்சம் முப்பதடி உயரமாவது இருக்கும்.ஒவ்வொரு கல்லின் நான்கு முனைகளிலும் கொடிகளைப் போல வளைவுடன் செதுக்கப்பட்ட கோடுகள் சுவற்றின் மீது முல்லைக் கொடியை படற விட்டது போல இருந்தது.ஆங்காங்கே குடம் சுமக்கும் மாந்தர்களும்,பிள்ளையை கொஞ்சும் அன்னைகளும் ஓவியங்களாய் மாட்டப்பட்டிருந்தனர்.அவர்கள் அனைவரும் அமர்ந்திருந்தது வாசற்கதவருகே.கதவின் கணம் ஒரு யானை அளவுக்கு இருக்கும் போல அனைவரும் சேர்ந்து இழுத்தும்,தள்ளியும்,முட்டியும் பார்த்து தூசி கூட அசைந்து கொடுக்கவில்லை.அறையின் இருமூலைகளும் படிக்கட்டுகள் தொடங்கி மேல்தளத்திற்கு சென்றது.ஒவ்வொரு படிக்கட்டிலும் சேர்ந்தார் போல 10 பேர் ஒன்றாக ஏறலாம்.முழுக்க முழுக்க மரவேலைப்பாடால் ஆனவை.கைபிடி சாரத்தை வடிவமைக்கவே எத்தனை ஆண்டுகள் ஆகியிருக்குமோ தெரியவில்லை அவ்வளவு நேர்த்தியான வளைவுகள் சீராக இருந்தன.படிக்கட்டுகளுக்கு நடுவே கீழ்தளத்தில் ஓர் அறை தென்பட்டது அவ்வறை கணமான பூட்டால் பூட்டப்பட்டிருந்தது.பத்தடிக்கு ஒரு சித்திரமும்,கூரையில் கூட வேலைப்பாடுகள் நிரம்பியிருந்ததும் எல்லோரையும் வாய் பிளக்க வைத்தது.வெளியே செல்ல வழி தேடி மாளிகையை சுற்றியவர்கள் பிரமித்துப் போனார்கள்.ஆளாளுக்கு ஒவ்வொரு இடத்தில் நின்று மாளிகையை இரசித்துக் கொண்டிருந்தனர்.மாளிகை அவர்களை ஈர்த்துக் கொண்டது என சொல்வது தான் பொருத்தம்.

ஐசுவர்யா மட்டும் மாளிகையை ஆராயவில்லை.சிவாவின் பின்னே அவன் கையைப் பிடித்துக் கொண்டே சென்றாள்.
“சிவா”
“ம்...” சுவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தவன் ஐசுவர்யாவின் பக்கம் திரும்பினான்.
“என்னை மன்னிச்சிரு சிவா” தலையை கவிழ்ந்தபடி கூறினாள்.
“எதுக்குடா செல்லம்?” அவள் கண்ணத்தை உள்ளங்கையில் தாங்கியபடி முகத்தை நிமிர்த்தினான்.
"என்னாலதான் இதெல்லாம்" அவள் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.
"ஹே என்ன உளர்ற”
“நான் தான ஏற்காடு போலாம்னு ஆரம்பிச்சேன் அதான் இப்ப இப்படியெல்லாம் நடக்குது” விசும்பத் தொடங்கினாள்.
“ப்ச்... அப்படி எல்லாம் இல்லமா.உண்மைய சொல்லணும்னா நாங்க தான் தப்பு பண்ணிட்டொம்.உங்க கிட்ட முன்னாடியே எச்சரிச்சிருக்கனும்.அந்த கிறிஸ்டியும்,கூட இருந்தவனும் தான் பஷிர கடத்திருக்கானுங்க.அத உங்க கிட்ட முன்னாடியே சொல்லிருந்தா நீங்களும் ஜாக்கிரதையா இருந்திருப்பீங்க” சிவா நெற்றியில் கை வைத்து சுவரில் சாய்ந்தான்.
சுவரில் சாய்ந்தவன் மாரில் ஐசுவர்யா சரிந்தாள் “சிவா ஐ லவ் யூ” என்றாள்.
“ஐ டூ லவ் யூ” என சிவாவும் அவளை அணைத்தான்.
“எப்பவுமேவா?”
“சாகற வரைக்கும்டி”.
 ஐசுவர்யாவின் முகம் கறுத்தது.சட்டென நினைவு வந்தவனாய் “ஐசு, பாப்பாக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லயே”
“உன் கொழந்த பத்திரமாத்தான் இருக்குடா” நாணத்துடன் புன்னகைத்தாள்.
”சரி வா வெளிய போற வழிய தேடுவோம்” அவளை அழைத்துக் கொண்டு சிவா வழி தேடத் தொடங்கினான்.

வீட்டினுள் ஒரு ஈ,எறும்பு கூட இல்லை,நிஜமாகத்தான்.ஒரு தூசி கூட இல்லை  மூலை,முடுக்கு உட்பட அனைத்தும் துடைத்து சுத்தமாய் பளிச்சிட்டது.படுக்கைகளும்,சாமான்களும் சீராக வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தால் யாரேனும் வீட்டினுள் இருக்க வேண்டுமெனத் தோன்றியது.முதல் தளத்திலும்,இரண்டாவது தளத்திலும் வழி தேடித் தேடி கால்  வலித்தது தான் மிச்சம்.இவ்வளவு பெரிய வீட்டில் ஒரு கதவு,ஜன்னல் கூட திறந்திருக்கவில்லை.திறக்க முயற்சித்து கை காலெல்லாம் சோர்ந்து விட்டது.

சிவா சட்டென ஏதோ நினைத்தவனாய் கால் சட்டைப் பையிலிருந்து அலைபேசியை எடுத்தான்.சிக்னல் சுத்தமாக இல்லாததால் வேலை செய்யவில்லை,”விக்கி உன்னொட மொபைல் எடேன்”
வாழ்க்கையில் ஒட்டுமொத்தமாகக் கூட இவ்வளவு தூரம் நடந்திராத விக்கி எரிச்சலடைந்தான்.

“ஹீரோ சார்,எல்லாம் நீங்க மல்லாக்க படுத்து தூங்கிட்டிருந்தப்பவே ட்ரை பன்ணியாச்சு,ஒண்ணும் வேலைக்காகல”
சிவா அசிங்கப்பட்டுவிட்டோமே என தலை குனிய அனைவரும் சிரித்துவிட்டனர்.

திடீரென்று “ஆஆஆஆ.........” வென மாளிகையே அதிர்வது போல அடித்தொண்டையிலிருந்து ஓலமிடும் ஓசை கேட்டது.ஒரு இள வயது பெண்ணின் குரலாய் இருந்தது அது.ஐவருக்குள்ளும்.ஊடுருவிச் சென்று திடுக்கிட செய்த அந்த ஓலம் மீண்டும் ஒருமுறை கேட்டது.அனைவரும் சத்தம் வந்த திசை நோக்கி ஓடினர்.இரண்டாவது தளம் நோக்கிச் செல்லச் செல்ல ஓலம் கூடிக்கொண்டே இருந்தது.கதவில்லாத ஒரு அறையில் இருந்து சத்தம் வருவதை அறிந்து அதனுள் சென்றனர்.ஓர் அழகிய இளம்பெண் அலறிக் கொண்டே ஓடியதைக் கண்டனர்.15 அல்லது 16 வயது இருக்கும்.ஓடிக் கொண்டே இருந்தவள் சட்டென்று திரும்பிப் பார்த்தாள்.புலியிடமிருந்து தப்பிக்க வழியில்லாத மானின் விழிகளைப் போல அவள் கண்களில் மிரட்சி தெரிந்தது.தங்களைத்தான் பார்த்தாளா ? எதற்காக ஓடுகிராள்? என சுற்றும் முற்றும் பார்த்தனர்.அறையின் முனையில் இருந்த உப்பரிகையில் நின்றாள்.ஏதேனும் விபரீதம் செய்துவிடப் போகிறாளோ என தடுக்க முயற்சிக்கும் முன்னரே உப்பரிகையில் இருந்து வெளியே குதித்து பள்ளத்தாக்கில் விழுந்து சிதறினாள்.அடுத்த கணமே மூவரின் பின்னிருந்து வந்த ஒரு கரிய உருவம் ஒன்று அவர்களை கடந்து சென்று உப்பரிகையில் இருந்து கீழே குதித்தது.என்ன நடக்கிறது என உணரும் முன்னரே நடந்துவிட்ட இரு தற்கொலைகளும் ஐவரையும் திடுக்கிடச் செய்தது.இதற்கு முன் மாளிகை முழுவதும் தேடிய பொழுது யாரும் இல்லையே? எப்படி வந்தார்கள்? ஏன் குதித்தார்கள்?  குழம்பிப் போன அனைவரும் மாடிப்படிகளில் சென்று அமர்ந்தனர்.

அந்த உப்பரிகை? அதன் வழியாக வெளியே செல்ல முடியுமா எனப் பார்க்க சிவா ஓடிச்சென்று பார்த்து அதிர்ச்சியடைந்தான்.சற்று உப்பரிகையுடன் இருந்த அறை நாலாபக்கமும் சுவர்களால் மூடப்பட்டிருந்தது.

                                                                                                    -காத்திருங்கள்.

இதுவரை நடந்தவற்றை தெரிந்துகொள்ள கீழே சொடுக்கவும்.

வஞ்சம்