Friday, 7 October 2011

அண்ணாவும் கிரிக்கெட்டும்

அண்ணா ஹசாரே.... இந்த தாத்தாவ பார்த்து வாயப் பொளந்தவங்கள்ல நானும் ஒருத்தன்.காங்கிரஸ் ஆட்சிக்கு பெருசா சவுக்கடி குடுத்த பெரிய மனுசர். நல்ல வேளை அவருக்கு மக்கள் ஆதரவும் முக்கியமா மீடியா ஆதரவும் இருந்துது.அதனால போராட்டம் களை கட்டி பட்டைய கிளப்புச்சு. இல்லாட்டி இவரும் இரோம் சர்மிளா மாதிரி கவனிக்கப்படாமயே போயிருப்பார். சரி எல்லாம் முடிஞ்சுது வழக்கம் போல கவர்மெண்டு கம்பி நீட்டிடுச்சு.ஆனா தாத்தா விட்றதா இல்ல மறுபடியும் உண்ணாவிரதம்னு அறிவிச்சுருக்காரு.

யார நம்பி தாத்தா இப்பிடி ஒரு ஸ்டெப் எடுத்தீங்க? நம்ம மக்களையா? முதல் போராட்டத்துக்கு ஆதரவு தந்தாங்கன்ற நம்பிக்கைதான? நம்ம மக்கள் எல்லா விசயத்துலயும் ஒரு பரபரப்பு, விறுவிறுப்பு இருந்தா தான் கவனிப்பாங்க. முழுக்க முழுக்க மீடியா ஆதரவோட பல பரபர திருப்பங்களோட உண்ணாவிரதம் இருந்தா தான் மக்கள் நியூஸ் அ பாப்பாங்க இல்லாட்டி அசால்ட்டா சேனல மாத்திருவாங்க.அதனால முன்னாடியே ஸ்க்ரிப்ட்ட ரெடியா வெச்சுக்கங்க.
ஏன்னா நம்ம மக்கள் கிரிக்கெட்ட திருப்பி திருப்பி பழைய மேட்ச கூட பாப்பாங்க ஆனா தன் ஊர் விவசாயிய பத்தி செய்தி வந்தா கூட தனக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லாத மாதிரி போய்டுவாங்க. ஏன்னா தங்களுடைய மொத்த தேச பக்தியையும் கிரிக்கெட்டுல முதலீடு பண்ணிருக்குற தேசம் தான இது. அப்புறம் நம்ம மீடியா.... மக்கள் பிரச்சனைக்காக வெளிச்சம் காட்டாம தங்களோட கருத்துக்கு ஆதரவான போராட்டங்களை மட்டும் தான் காட்டுவாங்க.ஒரு இனப் படுகொலையை நிறுத்த சொல்லி தமிழ்நாடே கதறுனப்ப கண்டுக்காத மீடியாக்கு திடீர்னு இந்த இந்தியன் தாத்தா மேல பாசம் வந்ததுல அவங்களுக்கு அரசியல் லாபம் இல்லாம இருக்காது.அவங்களுக்கு பிடிக்கலனா உங்களையும் கண்டுக்க மாட்டாங்க கவனம்.


மாயை இல்லாத இராமாயணம்

இராமாயணம் சொல்லும் சேதிகள் ஏராளம். ஒழுக்கம், கற்பு, நட்பு, அன்பு என எக்கச்சக்கமான வாழ்க்கைப் பாடங்கள். இராமாயணம் வெறும் கற்பனை மட்டும் அல்ல உண்மையில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு என்றொரு கூற்றும் உண்டு. இராமனுக்காக கோவில் கட்ட மற்ற கோவில்களை இடிக்கும் அளவிற்கு இராம பக்தி இந்திய தேசத்தில் விரவி உள்ளது. ஏன் இராமன் மீது இவ்வளவு பக்தி? இராமன் நல்லவன், ஒழுக்கமானவன், கடவுளின் அவதாரமாக கருதப்படுபவன். தந்தை சொல் தட்டாத மகன், மனைவியை கண் போல் காத்தவன், நட்புக்கு நியாயம் செய்தவன், சகோதரனைக் கைவிடாத அண்ணன். கடவுளுக்கான அனைத்து பண்புகளும் உள்ளவன் தான்.மறுக்கவில்லை. ஆனால் உலகெங்கிலும் இராமன் கொண்டாடப்படும் பொழுது தமிழ் மன்னனாய் இருந்ததற்காக, போரில் தோற்றதற்காக இராவணன் இழிவுபடுத்தப்படுவது தான் வேதனையாக உள்ளது. புரியவில்லையா? இராமாயணத்தில் பிண்ணப்பட்டிருக்கும் மாயைகளை விலக்கிப் பார்த்தால் தான் உண்மை புரியும்.
முதலில் இராமனும் இராவணனும் போரிட்டது மாயாஜாலங்கள் நிறைந்த போர் அல்ல.இரு மன்னர்களிடையே நடந்த ஒரு சாதாரண போர்.பத்து தலைகளோ, மந்திரங்களோ இல்லை வாளும்,வேலும் கொண்டு போரிட்ட ஒரு போர். தந்தையால் வனவாசத்திற்கு அனுப்பப்பட்ட இராமன் தெற்கே வந்தான். இலக்குமணனைக் கண்டு காதல் வயப்பட்ட சூர்ப்பனகை தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்கிறாள். இது எந்த வகையில் தவறு எனப் புரியவில்லை ஆணவம் கொண்ட இலக்குமணன் பெண் என்றும் பாராமல் அவள் மூக்கை அறுக்கின்றான்.(ஒழுக்கத்தில் சிறந்த மனிதர்கள் பெண்ணை அங்ககீணப் படுத்துவது எப்படி கடவுள் தன்மையாக இருக்க முடியும்?). தன் தங்கையை அவமானப்படுத்தியது பொறுக்காமல் இராமன் வீட்டுப் பெண்ணை(சீதை) சிறையெடுத்து பழி வாங்குகிறான் இராவணன். வாணரங்களின் (தமிழ் பகுதிகளில் வாழ்ந்த குரங்குகளை வணங்கிய மலைவாழ் மக்களைத் தான் வாணரங்களாக வர்ணிக்கின்றது இராமாயணம் ) உதவியுடன் போரிடும் இராமன் போரில் வெல்கிறான்.
இது தான் உண்மையில் நடந்த இராமாயணம் ஆனால் இதில் இராமனை உயர்திக் காட்ட இராவணனை இழிவாய் சித்தரித்தது தான் வரலாற்றின் வடு. நன்றாய் சிந்தித்தீர்களானால் ஆரியர்கள் எழுதிய காப்பியங்களில் எல்லாம் தமிழனை எப்படி எல்லாம் கேவலப்படுத்த முடியுமோ அப்படி எல்லாம் செய்தார்கள். அரக்கர்கள் எனக் கூறப்படுகிற அனைவருக்கும் மீசை இருக்கும், அனைவருமே கருப்பாக இருப்பர். இவை இரண்டுமே தமிழனின் பண்பாட்டுச் சொத்து என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.கடவுளர்கள் அனைவருமே மீசை இன்றி சிவப்பாகத் தான் இருப்பர்.(கண்ணன் கருப்பு எனக் கூறிக் கொண்டாலும் நீல நிறத்தில் தான் காட்டுவர்). அப்படி ஓர் அரக்கனாக சித்தரிக்கப்பட்டவன் தான் இலங்கையிலே தமிழ் மன்னனாக இருந்த இராவணன். தமிழர்க்கே உரிய சிவ வழிபாட்டில் சிறந்தவனாய் விளங்கினான்.இசையில் தேர்ந்த வித்தகன். இவனைப் பற்றிய மாயைகளைக் களைந்தால் உண்மை புரியும். இராவணன் ஒரு பெண்ணின் விருப்பமில்லாமல் அவளைத் தொட்டால் எரிந்து விடுவானாம் அப்படி ஓர் சாபம் பெற்றானாம். எந்த பெண்ணைத் தொட்டும் எவனும் எரிந்ததாய் ஆதாரத்துடன் வரலாறு எழுதப்பட்ட காலத்திலிருந்து அறியப்படவில்லை. உண்மையில் இராவணன் சீதயை சிறை பிடித்தாலும் அவளைத் தொடாத கற்பு நெறி கொண்டவன். அந்த நற்பெயர் அவன் பெறாமல் ஒழுக்கக்கேடு கொண்டவனாகக் காட்டினர். தன் வீட்டுப் பெண்ணை அவமானப் படுத்தியதற்காக பழி வாங்க சீதையைத் தூக்கினான். அது சாதாரண எந்த மனிதனுக்கும் ஏற்படக் கூடிய மான உணர்ச்சி தான் அது இராவணனுக்கு ஏற்பட்டால் தவறா?
சூர்ப்பனகையை மூக்கறுத்ததும்,வாலியை ஒளிந்து நின்று கொன்றதுமான தெய்வீக குணங்களைத் தான் இராமனும் அவன் தம்பியும் கொன்டிருந்தனர். வாலியை ஒளிந்திருந்து கொன்றதர்க்கும் ஒரு கட்டுக் கதை இடுவர்.வாலியை நேருக்கு நேர் பார்த்தால் பாதி வலிமையை உறிந்து விடுவானாம். அறிவுடன் நம்பக் கூடிய காரணமாய் இது இல்லை.
இராவணன் செய்த தவறு ஒன்றே ஒன்று தான். போரில் தோற்றது.வென்றவன் சொன்னது இராமாயணம் ஆனது.இராமனை எப்படி வேண்டுமானாலும் வணங்கிக் கொள்ளுங்கள் ஒரு தமிழனாய் இனி இராவணனை இழிவு படுத்தாமலாவது இருப்போம். ஆரியரின் நீண்ட கால சூழ்ச்சியிலிருந்து கண் விழிப்போம்.பெரும் ஆதங்கங்களின் சிறு துளி தான் இது.தங்களுக்குத் தெரிந்ததையும் பகிரவும். 


Thursday, 6 October 2011

அகதி முகாம் நிலை


தமிழ்நாட்டில் உள்ள ஈழ அகதி முகாம் ஒன்றுக்குள் வெளியாட்கள் நுழைவது என்பது மிகக் கொடுமையானது.
அதையும் மீறிய நுழைவு என்பது பல கட்ட பலத்த பாதுகாப்புக்கும் மனதை புண்படுத்தும் விசாரணைகளுக்கும் உட்பட்டது.
கட்டுநாயக்காவில் நுழைந்த கரும்புலி வீரனின் மனநிலைக்கு ஒப்பானது.
இவற்றையும் தாண்டி முகாம்களுக்குள் நுழைந்தால் முகாமில் வசிக்கும் ஈழத்தமிழர்களிடம் நான்கு கேள்வி கேட்க பழக முடியாது... புகைப்படம் எடுக்க முடியாது....
இப்படியாக நவீனத்துவமான வதை முகாம்கள் தான் தமிழகத்திலுள்ள ஈழத்தமிழர் அகதி முகாம்கள்.
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள உச்சம்பட்டி ஈழத்தமிழர்கள் அகதி முகாம் ஒன்றுக்கு தமிழ் சி.என்.என் இனது விசேட புலனாய்வுச் செய்திப் பிரிவினர் சென்றனர்.

மதுரையில் உள்ள மூன்று முகாம்களிலேயே பெரிய முகாமாக இது காணப்படுகின்றது. இங்கு 600 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் அகதிகளாக உள்ளனர். இவர்கள் அனைவரும் 1990 ஆம் ஆண்டே தமிழகத்துக்கு அகதியாக வந்தவர்கள்...
ஆனால் சாக்கடை ஓடும் இடத்துக்கு அருகில் உள்ள சின்னம் சிறு ஓலைக் குடிசைகளில் தான் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.
முகாம் வாசலில் தமிழக விசேட பொலிஸ் பிரிவான கியூ பிரிவு பொலிசாரின் அலுவலகம் காணப்படுகின்றது.
அதற்கு வலது பக்கமாக கொஞ்சம் தள்ளி ஈழத் தமிழ் அகதி ஒருவரினால் நடத்தப்படும் தேநீர், சிற்றுண்டிக் கடை ஒன்றும் காணப்படுகின்றது.
நாங்கள் மெதுவாக தேநீர் குடிக்கச் செல்வது போல தேநீர் கடைக்குச் சென்றோம்.. அங்கு வயதான ஐயா ஒருவர் இருந்தார்.. நாங்கள் அவரிடம் பேச்சுக் கொடுத்தோம்...
ஐயா இலங்கையில எந்த இடம்? "நான் தம்பி வவுனியா... 90 இல அகதியாக தமிழ்நாட்டுக்கு வந்தனாங்கள்... இப்ப வரை இங்க தான் இருக்கிறோம்... இலங்கையில இப்ப சமாதானம் என்று சொல்லுறாங்கள்... ஆனால் எங்களுக்கு அங்க போக விருப்பம் இல்லை... ஏதோ கிறிஸ் மனிதன் என்றும் பயமுறுத்துறாங்கள்.. என்று தனது ஆதங்கத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.. "
அடுத்ததாக ஐயாவிடம் அம்மா புதுசா அறிவிச்ச திட்டங்கள் உதவிகள் கிடைச்சுதோ? முகாமில எப்படி வசதிகள் இருக்கு..?? என்று கேட்டோம்..
"இல்லை தம்பி... ஈழத் தமிழர்களுக்கு உதவிய கடவுள் தங்கத் தாரகை எங்கள் அம்மா என்று எல்லாம் பேப்பரில பக்கம் பக்கமாக விளம்பரங்கள் வந்து நான்கு மாசத்துக்கு மேல ஆகுது... ஆனா கூடுதலாக எந்த உதவிகளும் கிடைக்கல... முகாமில எங்களுக்கு நாத்தத்துக்க இருந்து பழகிப் போச்சு... இப்பவும் கொட்டில் வீட்டில தான் வாழுறோம்...முகாம் பொறுப்பதிகாரி வரும் நாட்களில் முகாமிலிருந்து யாரும் வெளியில் செல்ல முடியாது... "
தம்பி இப்ப கொஞ்சத்தில வந்திடுவாங்கள் கியூ பிராஞ்... அவங்கள் உங்களை யார் என்று கேட்டு எங்களை நோண்டி எடுப்பார்கள்... அதுக்கு முதலில வெளிக்கிடுங்கோ என்று அவசரம் காட்டினார் அந்த பெரியவர்..
அவரின் கோரிக்கையை ஏற்று அங்கு இன்னும் சிறிது நேரம் நின்றால் எங்களுக்கும் ஆப்பு தான் என்ற நிலையில் திரும்பினோம்...
முகாமில் ஒருவரைச் சந்திக்கச் சென்றால் கியூ பிராஞ்சுக்கு அவரின் பூர்வீகம், தொழில், விசா, பாஸ்போர்ட் போன்ற தனிப்பட்ட விடயங்களை துளாவும் அருகதை இல்லையே.... தனி மனித சுதந்திரத்தை மீறிய செயலாகவே இது பார்க்கப்படுகின்றது.
சில பொலிஸ்காரர்கள் பிச்சை எடுக்கும் பெருமாளிடம் பிடுங்கித் தின்னும் அனுமார் கணக்காக அவர்களிடம் உள்ள காசையும் பிடுங்குகிறார்கள்..
உண்மையில் திறந்த வெளிச் சிறைச்சாலையாக தான் தமிழக அகதி முகாம்கள் உள்ளன என்பது நிதர்சனமானது...

அங்கு வெளியாட்கள் பெரிதாக போக முடியாது.. அதுவும் பத்திரிகை, மீடியாக்களைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக அனுமதி இல்லை... அங்கு புகைப்படங்கள் எடுக்க முடியாது... இப்படியாக கடுமையான கட்டுப்பாடுகளுடன் தனித் தீவாக முகாம்கள் மாற்றப்படுள்ளன.
அங்குள்ள சிறுவர்களின் எதிர்காலம் தான் உண்மையில் கவலை கொள்ள வைக்கின்றது.
நம்மூர்களில் ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் தரவை வெளியில் உள்ள சுடுகாடுகளைப் போன்று காணப்படுகின்றன தமிழக முகாம்கள்.. முகாம்களைச் சுற்றி காடு போல் பற்றைகள் வளர்ந்து காணப்படுகின்றன....
முகாம்களுக்கு இடையில் சிற்றாறு போல குறுக்கு மறுக்காக கழிவு நீர் பாய்ந்து செல்கின்றது.. சில இடங்களில் தேங்கியும் உள்ளது...
இவை நாளடைவில் பாரிய சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை...
இவ்வாறு பல்வேறு உளவியல், உடலியல் தாக்கங்களுக்கு மக்கள் உள்ளாகின்றனர்.
மெக்கானிக் வேலையிலிருந்து இந்திய எஜமானார்களின் கக்கூசு கழுவுகிற வேலைகள் வரை கஸ்ரமான பொருளாதார நிலை காரணமாக முகாமில் வாழும் ஈழத்தமிழ் மக்கள் செய்து வருகின்றார்கள்.
இந்தியாவில் இருந்து கொண்டு தமிழீழம் கிடைக்க அரும்பாடுபட்டு வரும் வெத்து வேட்டுக் கட்சிகள் கொஞ்சம் உங்களை நம்பி வந்தவர்களின் கொட்டில்களையும் அவர்களின் சீரழிந்த வாழ்க்கையையும் போய் பார்க்கலாமே...கடைசி அவர்களுக்காவது உதவலாமே..
தமிழக முகாம்களோடு ஒப்பிடுகையில் வன்னி முகாம்கள் எவ்வளவோ மேல் எனத் தோன்றுகிறது...
-தமிழ் சி.என்.என் இன் விசேட புலனாய்வுச் செய்திப் பிரிவு-
                                                                 நன்றி-தமிழ் சி.என்.என்.காம்

தந்தை மகற்குஆற்றும் நன்றி

”கிளம்பிட்டியாப்பா?”
“ம்...வந்துட்டே இருக்கேன்மா”
”பதட்டப்படாம வாப்பா”
“நான் தான்மா அந்த பொண்ண கொன்னுட்டேன்”
அப்படியெல்லாம் நினைக்காத கண்ணா எப்படியும் ஒரு நாள் போற உசுரு தான.எதையும் நினைச்சுக்காம பத்திரமா வாப்பா”
மனம் மல்லிகாவை பற்றிய நினைவுகளில் மூழ்கியது.சின்னஞ்சிறிய வீடுகள் நிறைந்த அழகிய இந்திரா நகர் எங்களுடையது.வீதிக்கே அழகூட்டியது மல்லிகா தான்.தெருவிலே எங்கள் வீடு சற்று பெரியது.எதிர் வீட்டு தேவதைதான் மல்லிகா.தாய் தந்தை இறந்துவிட தாத்தா பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வந்தாள்.கருப்பு நிறம்,முட்டைக் கண்கள்,தலையில் இரண்டு சுண்டிகள்,பாவாடை சட்டை எனத் துள்ளித் திரிந்த 2 வயது வண்ணத்துப்பூச்சி என்னை தினமும் தன்பால் வசீகரித்தாள்.
ஒரு நாள் மின்சாரம் இல்லாத அந்தி வேளை தன் தாத்தா பாட்டியின் மேற்பார்வையில் அவள் ஓடி, குதித்து விளையாடியதைக் கண்டு இரசித்துக் கொண்டிருந்த நான் நேராகச் சென்று அவள் முன்னால் நின்றேன். சட்டென்று ஓடுவதை நிறுத்தி விட்டு என்னைப் பார்த்து மலங்க மலங்க விழித்தவள் குடுகுடுவென ஓடிப் போய் பாட்டியின் முந்தானையை பிடித்து வாயில் கவ்விக் கொண்டு ஒளிந்தாள்.கையில் இருந்த மிட்டாயை நீட்டிய போது வாங்க மறுத்து தலையசைத்தாள்.
”நம்ம பாஸ்கர் அண்ணாதான கண்ணு வாங்கிக்க பாப்பா என பாட்டியின் வற்புறுத்தலுக்குப் பின் வாங்கிக் கொண்டு வீட்டிற்குள் சென்று ஒளிந்து கொண்டாள்.ஓரிரு சந்திப்புகளுக்குப் பின்னர் நெருங்கிய நண்பர்களாகி விட்டோம்.
இருவரும் எதிரெதிரே அமர்ந்து ஒளிந்து விளையாடுவது வேடிக்கையாக இருக்கும். நான் என் முகத்தை மூடிக் கொண்டு ஒளிந்து கொண்டதாக சொல்வேன். அவள் “பாத்கத் அண்ணா” என மழலை மொழியில் அழைக்க “ச்சூ” என கைகளை விரித்துப் பார்த்தால் கைதட்டி சிரிப்பாள். தான் ஒளிந்து கொள்வதாக சொல்லிவிட்டு முகத்தை மூடத் தெரியாமல் சின்னஞ்சிறு கைகளால் கண்களை பொத்திக் கொள்ளும் அப்பாவித்தனத்திற்கு முற்றிலும் அடிமையானேன்.
மற்ற வீட்டுக் குழந்தைகள் எங்கள் வீட்டில் தொலைக்காட்சி பார்க்கும் போது இவள் மட்டும் அதைப் பார்க்கப் பிடிக்காமல் வீட்டைச் சுற்றிச் சுற்றி ஓடுவாள். நானும் அவள் பின்னால் ஓட கலகலவென சிரித்துக் கொண்டே ஓடுபவள் ஒரு கட்டத்தில் ஓட முடியாமல் நின்று இடுப்பில் கை வைத்துக் கொண்டு முட்டைக் கண்களை விரித்து மூச்சு வாங்கும் அழகு வார்த்தைகளில் அடங்காது.
மாதம் ஒருமுறை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுமாத்திரை வாங்கி வருவார் பாட்டி. சாப்பிடாமல் அடம் பிடிப்பவள் என்னிடம் விளையாட வரும்படி உறுதி வாங்கிவிட்டு பிறகுதான் சாப்பிடுவாள்.
நான் படித்துக் கொண்டிருந்தால் அமைதியாக கைகட்டி அமர்ந்திருப்பாள். படித்து முடித்து புத்தகத்தை மூடும் போது அவள் முகத்தில் தெரியும் புன்னகைக்காகவே பலமுறை படிப்பை பாதியிலேயே மூடியிருக்கின்றேன்.
இரண்டு மாதங்களுக்கு முன் என் வீட்டுத் திண்ணையில் அவளுடன் விளையாடும் போது என்னைப் பிடிக்கத் தாவியவள் பாவாடை தடுக்கிக் கீழே விழ தாடையில் அடிபட்டு முன்பற்கள் இரண்டு பெயர்ந்து இரத்தம் கொட்டியது.வீதியே துடிதுடித்துப் போனது. மருத்துவமனைக்குத் தூக்கிக் கொண்டு ஓடினோம். ஒரு வாரம் மருத்துவமனையில் காய்ந்த மலர் போல வாடிப் படுத்திருந்தாள். முட்டைக் கன்களும், மலர்ந்த சிரிப்புமாய் பார்த்தவளை பாதிக் கண்கள் கூடத் திறக்க முடியாத நிலையில் காய்ச்சலும், இருமலும், 2 வாய் சாப்பிட முடியாமல் திணறுவதும் பசி பொறுக்க முடியாமல் பாட்டியிடம் அழுவதும் என்னால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. தினம் தினம் அழுதேன். 2 முறை வலிப்பு வேறு வந்தது.பரீட்சைக்காக வேறு வழியில்லாமல் கல்லூரிக்குச் சென்றேன்.கிளம்பும் போது “பாத்கத் அண்ணா, டாட்டா” எனக் கூறிய அந்த பரிதாப முகம் தான் இன்னும் நினைவில் உள்ளது. நினைவு மட்டும் தான் மிச்சம் உள்ளது. நீண்ட நாட்கள் மருத்துவமனையில் இருந்தும் முன்னேற்றம் இல்லாமல் உடல் முழுதும் கிருமிகள் பரவி விட்டதாகச் சொன்னார்கள்.மல்லிகாவை இழந்து விட்டோம். தந்தை மகற்குஆற்றிய நன்றி-HIV



Wednesday, 5 October 2011

பொம்மை பொம்மை பொம்மை பார்...

ராகுல் தான் எங்களை வழி நடத்தப் போகும் தலைவர்-பிரணாப்
வெற்றிகரமாக 8 வருடங்கள் கொலுவில் உட்கார்ந்திருந்த மன்மோகனுக்கு அடுத்ததாக வருபவர் ராகுலாம்....
இருவருக்கும் பலத்த ஒற்றுமை மன்மோகனும் இது வரை வாயை திறந்து உருப்படியா எதுவும் பேசினதில்ல அதே போல ராகுலும் போபால் முதல் 2ஜி வரை எதுக்குமே வாயைத் திறந்து பேசல... சட்டியில் இருந்தா தானே அகப்பையில் வரும்.
ஒரு சந்தேகம்: ஆக்ஸ்ஃபோர்டுல பாஸ் ஆன மன்மோகனே ஒண்ணும் பண்ண முடியல,பெயில் ஆன ராகுல் என்னப்பா பண்ணப் போறாரு? 
எவ்வளவோ பாத்துட்டோம் இதப் பாக்க மாட்டமா?


மொழி

மொழி-just for communication.இன்றைய தலைமுறையினராகிய நம்மில் பலர் கொண்டுள்ள கருத்து.இதை அலச வேண்டும் என்பது என் விருப்பு.விலங்குகளின் மொழி சத்தம் அச்சத்தம் மட்டும் போதும் என்று நின்றதால்(just for communication) அவை உடல் ரீதியான பரிணாம வளர்ச்சி மட்டுமே பெற்றன.உடலால் மாறிக் கொண்டிருந்த மனிதன் மனதால் வளர்ச்சி பெறத் தொடங்கியது மொழியுடன் தான்.ஒலிகள் வார்த்தைகளாகி வார்த்தைகள் வாக்கியங்களாகி அவை கருத்துக்களாகவும் காவியங்களாகவும் உருவாயின.வரையறுக்க முடியாத வரலாற்றுக் காலத்திலிருந்து முன்னோர் கொண்ட அனுபவங்கள் தான் குறள் தொடங்கிய “மனப்பாட செய்யுள்கள்”.தமிழகம் ஆண்ட மூவேந்தர்கள் காலத்தில் குறளும்,தமிழும் தான் கல்வியாக இருந்தது .அதைப் படித்தவர்கள் முன்னோர்களின் அறிவும் பெற்றனர் தன் காலமும்,வரலாறும்,பெருமையும் அறிந்திருந்தனர்.ஆதிக்கம் செலுத்த அந்நியர்கள் வந்த போது முன்னின்று மூச்செறிந்து இனம் காத்தனர்.வாளுக்கும் துப்பாக்கிக்குமான வித்தியாசத்தில் அடிமையாகத் தொடங்கினான் தமிழன்.இன்று வரை முதலாளிகளை மாற்றுகிறானே ஒழிய அடிமைத்தனம் ஒழியவில்லை.வெள்ளையர் தான் கொண்ட பரந்த நிலப்பரபை ஆட்சி புரியத் திணறி தன்னுடன் communication செய்ய ஆங்கிலம் அறிந்த அடிமைகளை உருவாக்கினான்.அவர்கள் சீரும் சிறப்புமாக தன் மக்களையே வெள்ளையனுக்காக மேய்க்கத் தொடங்கினர்.வெள்ளையனிடம் வேலை பெற ஆங்கிலம் கற்றவன் வெள்ளையனுக்குப் பின்னும் ஆங்கிலத்தைக் கைவிடாமல் காப்பற்றினான்.இன்றும் வெள்ளையனுக்காக ஆங்கிலத்தை கணிணியில் விடிய விடிய தட்டிக் கொண்டு தூக்கமில்லாமல் மன அழுத்தம் கொண்டு அதிரும் இசை நடுவே சாராயம் ஊற்றி மனசாந்தி அடைகிறான் “மனப்பாட செய்யுள்” மறந்த தமிழன்.ஆங்கிலத்துக்கு சற்றும் சளைக்காமல் பெரும்பாண்மை என்ற போர்வையில் வந்து கதவை இடித்துக் கொண்டிருக்கின்றது ஹிந்தி.வெள்ளைக்காரனுக்கு பதிலாக ஹிந்திக்காரன்(உடன் இத்தாலிக்காரியும்) இந்தியா முழுமைக்கும் ஒரு மொழி வேண்டும் என்பது வாதம்... இந்தியா முழுமையும் ஓர் இனம்,ஓர் வரலாறும் இருந்தால் இவர்கள் சொல்வது நியாயம். But this is not reupblic of india,this is republic of indian union. இந்தியா என்பது வெள்ளைக்காரன் விட்டுச் சென்ற வரைபடத்தில் உருவான ஒரு கூட்டாட்சி.இதில் தமிழ்நாடும்,தமிழனும் பங்கு கொண்டதால் வந்தது முதலுக்கே மோசம்.கூட்டாட்சியில் அனைவருக்கும் பிரதிநிதித்துவம் தருவதே நியாயம் என்பதை மறந்து நான் சொல்வதைப் படி எனத் திமிர் பிடித்துச் சொன்னான் ஹிந்திக்காரன்.கேட்க மறுத்தோம் நாம்.விளைவு இன்று தாக்குதல் வேறு வழியாக வந்து கொண்டிருக்கின்றது. முதலில் நமக்கு நம் வரலாறு மறக்கடிக்கப்பட்டது. நாம் படித்த வரலாற்று புத்தகங்களில் lodi dynasty,akbar,ashoka என்ற மன்னர்களை பற்றித்தான் சொன்னார்கள்.தென்னிந்தியாவையே ஆண்ட ராசராச சோழனோ, கம்போடியா வரை வென்ற ராசேந்திர சோழனோ அப்புத்தகதில் எந்த மூலையிலும் இல்லை.  நாம் யார் என்றே மறந்த போது மொழியைப் பற்றி நமக்கென்ன கவலை? ஆங்கிலமும், ஹிந்தியும் வேலைக்கான தகுதிகள் ஆயின. பணம் பெறுவதே முதல் பணி எனத் திரிந்தவன் பொருளுக்காக மொழிகளைக் கற்றான். பணம் தராதவை எல்லாம் அவனுக்கு வெற்றுப் பிண்டங்களாகத் தெரிந்தது பெற்றோர் உட்பட தமிழும். உபயம்: முதியோர் இல்லங்கள். சங்க காலத்திலும் எந்தக் காலத்திலும் முதியோர் இல்லங்களைத் தமிழன் அறிந்ததில்லை.இன்று நுனி நாக்கில் ஆங்கிலம் பேசிக் கொண்டு ஹெட்செட்டில் ஹிந்தி பாட்டு கேட்டுக் கொண்டு “tamil's value in the world is 0”என்கிறனர். தமிழ்வழிக் கல்வியை “worthless” என்கின்றனர்.”compulsory hindi is essential ” என்கிறனர். அவர்களின் அளவீடெல்லாம் பணக்கட்டைப் பொறுத்தே அமைகின்றது.வெட்கத்தோடு ஒத்துக்கொள்வோம் நாம் அடிமைகள் என்று. 
சரிப்பா central government job கு hindi படிக்கணும்ல?   தாராளமாகப் படிக்கலாம் நண்பா ஹிந்தி அவசியம் என்ற நிலையில் படிக்கலாம் ஆனால் ஹிந்தி அத்தியாவசியத் தேவை என்று சொன்னால் அதைத் தான் தவறு என்கிறோம்.உன் பணி சவுகரியத்திற்காக படிப்பதை விட்டு ஹிந்திக்காரன் இங்கே வந்து வாழைப்பழம் வாங்க வசதியாக நாம் ஹிந்தி படிக்க வேண்டும் எனப் பேசுவது முட்டாள்த்தனம்.
குறள படிச்சா campus la place ஆக முடியுமா?
தகுதியையும் அறிவையும் போட்டு குழப்ப வேண்டாம். நீ கற்கும் கல்வி உன் பணிக்கான தகுதி.உன் இலக்கியத்தில் நீ படிக்கும் அறிவு வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் முடிவெடுக்க உனக்கு உற்ற தோழனாய் இருக்கும் என்பதை அனுபவித்தால் உணர்வாய்.
world டோட flow ல போக வேணாமா?
கண்டிப்பாக போக வேண்டும்.தமிழர் ஆதி காலம் தொட்டே ரோம்,எகிப்து,பர்மா உடன் எல்லாம் வர்த்தகம் கொண்டனர்.ஆனால் தமிழராய் தான் இருந்தனர்.அதே போல் தான் ஊரோடு போவதென்றால் உன் ஆடையை உடுத்திக் கொண்டு போ அது தான் உன் அடையாளம்.அதை விடுத்து அடுத்தவன் ஆடையில் இருந்து நூலை உரித்து உடம்பை மறைக்க நினைத்தால் அரை நிர்வாணமாகத் தான் சுற்றவேண்டும் அடையாளத்தை இழந்து.




Sunday, 2 October 2011

காதல்?

காதல் பத்தி நிறைய பேர் நிறைய விதமா சொல்லிருக்காங்க ஆனா எல்லாருக்கும் இதுல தெளிவு வரல.காதல் எப்போ உன்மையா மனசுக்கு தோணும்? இந்த கேள்விய காதலர்களோட சுயபரிசோதனைக்கு விட்டுடறேன்.எனக்கு இருக்குற சந்தேகங்கள தெளிவு படுத்துங்க அனுபவம் உள்ள யாராவது. நம்ம காதலர்க்கு பிடிச்சதுதான் நமக்கும் பிடிக்கணும்னு அவசியமா? எப்பவுமே அவங்க பின்னாடியே சுத்திட்டு இருக்கணுமா? அவங்க பிரண்டு கிட்ட அவங்க கெத்து காட்றதுக்கு நம்ம அவங்க பின்னாடி அலையணுமா?  நம்ம நினைச்சத செய்யறக்கு முன்னாடி அவங்க சொல்றத செய்யணுமா?எழுந்ததும் கால் பண்ணனும் தூங்கறக்கு முன்னாடி 3 மணி நேரம் பேசணும் இதெல்லாம் செய்யாட்டி அவாய்ட் பண்றேன்னு சொல்லுவாங்க ஆனா அவங்களுக்கு எதாவது வேலை இருந்தா உடனே பக்கத்துல அப்பா இருக்காரு அம்மா வராங்கணு உதார் விடுவாங்க இது நியாயமா? அவங்க போட்ற பர்பிள் கலர்,ஆரஞ்சு கலர் ட்ரெஸ்க்கு மேட்ச்சா நாமளும் போடணுமா?  நாம் அவங்கள ஒரு உறவா பார்க்கும் போது அவங்க நம்மள ஒரு சொத்தா[property] பாக்கறாங்களே அது நியாயமா? sympathy உருவாக்க எக்கச்சக்கமா பொய் சொல்றாங்களே அது தேவையா? மூச்சுக்கு முன்னூறு தடவ i love you சொல்ல சொல்றாங்களே அது எதுக்கு? ஒரு நாள் நாம அவங்கள கண்டுக்கலனா அவங்களுக்கு ஒரு insecure feeling வருதே அது ஏன்? எவ்ளோ உண்மையா காதலிச்சாலும் அவங்களுக்கு திருப்தி வர மாட்டேங்குதே அது ஏன்? பெண்கள் ஆண்களிடம் கண்டிப்பா இதெல்லாம் செய்யணும்னு எதிர் பார்க்கற எதுலயும் உண்மையான காதல் இல்லயே அப்புறம் ஏன் அத செய்ய சொல்றாங்க?